கல்லையும் கரையச் செய்யும் திருவாசகத்தால் ஈசனைப் பாடிப் பரவியவர் மாணிக்கவாசகர். இவர் பாடலைச் சொல்லச் சொல்ல, இறைவனே தம் கைப்பட எழுதித் தந்தாராம், இந்த ஞானபச்ர் பொக்கிஷத்தை! இதைவிடவும் மாணிக்கவாசகரின் மாண்பை விவரிக்க வேறென்ன வேண்டும்?
ஆதியந்தம் இல்லாத அந்தச் சிவப்பரம்பொருள் மானுடனாய் உருவேற்று வந்ததும், நரிகளைப் பரிகளாக்கி அற்புதம் நிகழ்த்தியதும், பின்னர் பரிகள் மீண்டும் நரிகளாகி வனம் ஏக, பாண்டியன் மாணிக்கவாசகரைத் தண்டிக்க முற்பட்டபோது வைகையில் வெள்ளப் பெருக்கை உருவாக்கியதும், பிட்டுக்கு மண் சுமந்ததும், பாண்டியனிடம் பிரம்படி பட்டதுமான இறையின் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனை?! இவை அத்தனையும் தம் அடிய வர்களுக்காக அவன் நடத்தியவை அல்லவா? ஆம்... அவன் அடியார்க்கும் அடியவன். அந்த அடியவர்களைப் போற்றி வணங்கும் அன்பர்களுக்கு என்றென்றும் இனியவன்.
இந்த அடிப்படையில் மணிவாசகரை வணங்கி, மகேசனின் திருவருளைப் பூரணமாகப் பெற்றிட, மதுரைக்கு அருகே திருவாதவூரில் மாணிக்க வாசகருக்கென்று தனிக்கோயில் உண்டு என்பது நமக்குத் தெரியும். அதேபோல், தேனி மாவட்டம், சின்னமனூரிலும் அவருக்கு ஓர் ஆலயம் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப் பட்டதாம் இந்தத் திருக்கோயில். ஒருமுறை, கடும் பஞ்சத்தால் ஊர் பரிதவித்தபோது, அன்பர்கள் ஒன்றிணைந்து இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தவும், பெருமழை பெய்து ஊர் செழித்ததாம்.ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீகாசி விசாலாட்சி ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீ துர்கை, ஸ்ரீஒற்றை சனீஸ்வரர், தேவியருடன் ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசித்திரகுப்தர் ஆகியோரும் இந்தக் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும், மக நட்சத்திரத்தன்று இங்கு வந்து மாணிக்கவாசகருக்கு அர்ச்சனை செய்து வணங்கினால், ஞானம் பெருகும், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். அதேபோல், மாணிக்கவாசகரிடமும், சித்திர குப்தரிடமும் எழுது பொருள்களை வைத்து வணங்கிச்சென்றால், மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெறுவர் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

வருடம்தோறும் மாசி மகம் திரு நாளில் இங்கு மாணிக்கவாசகருக்கு குருபூஜையும், அதையொட்டி திருவாசகம் முற்றோதுதலும் நடைபெறுகிறது. ஆனி மாதம், மக நட்சத்திரத் திருநாளில் திருவாசகம் திருஅம்மானை பாராயணம் நிகழ் கிறது. இதில் கலந்துகொண்டு மாணிக்கவாசகரை வழிபட்டுச் செல்ல, மேடைச் சொற் பொழிவுகளில் மேன்மை பெற முடியும் என்கிறார்கள்.

அதேபோல் 'திருச்சாழல்’ பதிகம் பாடி வழிபடுவதும் சிறப்பான ஒன்று. ஒருமுறை, இலங்கையில் இருந்து தில்லைக்கு வந்த பெளத்தர்கள் சிலர் சிவநிந்தையில் ஈடுபட, அதன் விளைவாக பேசும் திறனை இழந்தனர். பின்னர், தங்கள் தவற்றுக்காக மனம் வருந்திய அவர்களுக்கு இறையருளால் மீண்டும் பேச்சுத் திறனை அளித்தாராம் மாணிக்கவாசகர். இதையறிந்து வியந்த இலங்கை வேந்தன், பேச்சுத்திறன் இல்லாத தன்னுடைய மகளை தில்லைக்கு அழைத்து வர, 'திருச்சாழல்’ பதிகத்தின் மகிமையால் அவளுக்கும் பேச்சுத்திறன் கிடைத்ததாகத் திருக்கதை உண்டு.
ஆக, மாணிக்கவாசகரை வணங்க வரும் பக்தர்கள், இந்தப் பதிகத் தைப் பாடி இறைவனையும், அவன் அடியவரையும் மனமுருக வழிபட... பேச இயலாதவருக்கும் பேசும் திறன் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறவும் இறையருள் கைகூடும்.
ம.மாரிமுத்து
படங்கள்: சே.சின்னத்துரை