Published:Updated:

"மலையுச்சியில் மரணத்துக்குக் காத்திருக்கும் கவிஞர்!" - சூழலியல் கவிஞர் ரஃபேல் #RaphaelBlock

"மலையுச்சியில் மரணத்துக்குக் காத்திருக்கும் கவிஞர்!" - சூழலியல் கவிஞர் ரஃபேல் #RaphaelBlock
"மலையுச்சியில் மரணத்துக்குக் காத்திருக்கும் கவிஞர்!" - சூழலியல் கவிஞர் ரஃபேல் #RaphaelBlock

அந்தக் காற்றில் ஈரப்பதம் நிறைந்திருந்தது. அது நல்ல குளிரைக் கொடுக்கிறது. அதே சமயம் அந்த மலையுச்சியில் நிற்கும்போது, இளவெயில் நம் மீது படுகிறது. அந்தக் காற்றின் சத்தத்தோடு இதைப் படியுங்கள்... இது ஒரு கவிதையின் சிறு பகுதியாக பிய்த்து எடுக்கப்பட்டது. 

"ஒரு நூறாண்டு தவம் இருந்தாய் -

அந்த இலைகள் உன் மேனியில் மச்சங்களாய் இருக்கின்றன,

அந்தக் கிளைகள் கிடாரின் நரம்புகளாய் நிற்கின்றன,

 நீ ஆயிரம் ஜீவன்களுக்கான ஜீவன இடம் - 

ஒரு நூறாண்டு தவம் இருந்தாய் -

எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு,

ஒரு நூறாண்டு தவம் இருந்தாய் - 

எல்லாவற்றையுமே பொறுத்துக் கொண்டு,

இதோ இந்த இனிப்பான பழங்களை எங்களுக்கு வழங்கிட..."  

முதுகில் சிறிய பை. அதில் சில பேனாக்களும், நோட்டு புத்தகங்களும். கூடவே கொஞ்சம் தண்ணீர். அந்த வனங்களில் அவர் நடப்பதே அத்தனை அழகாக இருக்கிறது. அவர் சற்று உயரம். ஒல்லியான தேகம். தலையில் அந்தத் தொப்பி. பழைய கண்ணாடி கண்களில். சருகுகள் மீது நடக்கும் போது ஏற்படும் ஒலியை அவ்வளவு இன்பமாக ரசிக்கிறார். மரப் பட்டைகளைத் தொட்டு பூரித்துப் போகிறார். பூக்களை தேவதைகளாகவே பாவிக்கிறார். வேகமாகவும், மெதுவாகவும் நடக்கிறார். அவ்வப்போது பேனாவையும், பேப்பரையும் எடுத்து எதையோ கிறுக்கல்களாக எழுதிக் கொள்கிறார். சில மணி நேர நடைக்குப் பிறகு ஓர் உச்சியை அடைகிறார். அங்கோர் ஒற்றைப் பாறை இருக்கிறது. அதன் மேல் அமைதியாய் உட்காருகிறார். கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடித்துக் கொள்கிறார். அந்தப் பாறையில் சற்று நேரம் சாய்ந்தபடி, கண்களை மூடி எதையோ காதுகளின் வழி கவனிக்கிறார். அந்தச் சத்தங்கள் அவருக்கு அத்தனை அலாதியான இன்பத்தை அளித்திருக்க வேண்டும். மெலிதாக புன்னகைக்கிறார். அரை மணி நேரம் சென்றிருக்கும். மெதுவாக எழுந்து நிமிர்ந்து உட்காருகிறார். தன் பையிலிருக்கும் கோடு போட்ட அந்த நோட்டை வெளியே எடுக்கிறார். அது பழைய பேப்பர்களைக் கொண்டு அவரே தைத்தது போல் இருக்கிறது. சில பக்கங்கள் கோடு போட்டவையாகவும், சில கோடில்லாத பக்கங்களாகவும் இருக்கின்றன. 

ஒருமுறை அந்த ஈரக்காற்றை அனுபவித்து பெரிதாக மூச்சை இழுத்து விட்டபடி எழுதத் தொடங்குகிறார். அவரின் எழுத்துக்கள் அந்த காட்டைப் பற்றியதாயும், மரங்களைப் பற்றியதாயும், பூக்களைப் பற்றியதாயும், வேர்களைப் பற்றியதாயும், ஓடைகளைப் பற்றியதாயும், கற்களை, கூழாங்கற்களை, சுள்ளிகளை, சருகுகளை, புற்களை, பனித்துளியை, காற்றைப் பற்றியதாயும், மழையைப் பற்றியதாயும் இருக்கின்றன. உலகில் அதிகம் முகம் தெரிந்திடாத சூழலியல் கவிஞர்களில் ரஃபேல் ப்ளாக் (Raphael Block) முக்கியமானவர். ரஃபேலின் வாழ்க்கையைக் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளலாம். ஆனால், அது கொஞ்சம் வலி மிகுந்ததாகவும், வேதனைக் கொண்டதாகவும் இருக்கும். 

ரஃபேல் பிறந்தது இஸ்ரேலின் ஹைஃபா (Haifa) மலையடிவார கிராமத்தில். தன்னுடைய 9வது வயதில் குடும்பத்தோடு இங்கிலாந்திற்கு இடம்பெயர்கிறார். இங்கிலாந்திற்குப் போகும்போது ஒரு வார்த்தைக் கூட ஆங்கிலம் தெரியாது அவருக்கு. ஆரம்ப காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார், மொழி தெரியாமல். இதனால் பிறர் பேசுவதைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். ஆங்கிலம் பேசத் தொடங்கியதும் கூட, அவர்களின் அந்த உச்சரிப்பு நடை கொஞ்சம் கஷ்டம் தான். அதனால், அந்த ஒலிகளை கவனமாக கவனிப்பது இயல்பாகவே மாறிவிட்டது. 1993யில் தன் மனைவியோடு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு குடிபெயர்கிறார்.

அன்பான காதல் மனைவி. அழகான குடும்பம். நிலையான வருமானம். அற்புதமான சுற்றுச்சூழல் என வாழ்க்கை கொஞ்ச காலத்திற்கு ரம்மியமாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், இதையெல்லாம் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்பே ஒரு பெரிய இடி அவரின் தலையில் இறங்கியது. அவரின் காதல் மனைவிக்கு கேன்சர் நோய் தாக்கியது. உடல் ரீதியில் அவர் மனைவி வலியை அனுபவித்த ஒவ்வொரு நொடியும் ரஃபேலுக்கு பெரும் மன வலியைக் கொடுத்தது. வாழ்க்கை நிர்மூலமாகத் தொடங்கியது. 2002யில் அவர் மனைவி இறந்த போது ரஃபேலின் மனம் கல்லாகிப் போனது. அது உணர்ச்சிகளற்ற ஜடமாகிப் போனது. மனம் மரத்துப் போனது. அந்த வலி அவருக்குப் பெரும் வலிமையையும் கொடுத்தது. மொத்தத்தையும் இழந்தார். இயற்கையை மட்டும் நம்பினார்.

வேலை, வீடு, கார், டிராபிக், ஆபிஸ், டார்கெட்ஸ், சம்பளம், சொந்தம், உறவுகள், நண்பர்கள், மீட்டிங், இது, அது என எல்லாவற்றையும் விடுத்து ஒரு மலை உச்சிக்குப் போனார். அங்கு ஒரு சிறு வீட்டில் குடியேறினார். தன்னை எப்போதும் ஒரு வலி அழுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தார். அதை ஏதாவதொரு வடிகாலின் வழி வெளியேற்ற வேண்டுமென்று நினைந்தார். ஆனால், அது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஒரு வருடம் அந்த மலையின் உச்சியிலேயே சிதறுண்டு போய் கிடந்தார். ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு உந்துதலில் எழுதத் தொடங்கினார். அந்த இயற்கை அவரை ஆசிர்வதித்தது.

" இந்தக் கவிதைகள் ஒரு குழந்தை போலத் தான். அவன் தன்னுடைய இரண்டு கால்களில் தானாகவே எழுந்து நிற்க ஆசைப்படுவான். அவனை அவசரப்படுத்த முடியாது. அவன் போகும் வழியில் படகை நாம் ஓட்டிச் செல்ல வேண்டும். அவன் விதியை, வழியை பின் தொடர்ந்து போக வேண்டும். அப்படிச் சென்றோமானால் மக்களின் ஆழ் மனங்களை வருடும் படைப்புகளைப் படைக்க முடியும்." 

கவிதையை ஒரு குழந்தையாய் பாவிக்கும் ரஃபேல் இப்படித் தான் சொல்கிறார். அவர் மனதில் கவிதைப் பிறக்கும் நொடியே கூட அத்தனை அழகானதாய் இருக்கிறது.

"இந்த இயற்கை எனக்குப் பல விஷயங்களைக் கொடுக்கிறது. அந்த ஈரக் காற்று என் முகத்தில் படும் ஒவ்வொரு நொடியும் நான் சொர்க்கத்தை தரிசித்துவிட்டு வருகிறேன். சமயங்களில் என் கனவில் வரும், ஆழ்ந்த அமைதியில் வரும்... பெரும்பாலும் வனங்களில் நான் வனாந்திரமாக நடந்துக் கொண்டிருக்கும் போது தான் என்னுள் நிறைய கவிதைகள் பிறக்கும். அப்படி வரும் என் கவிதைகள் உணர்வுகளின் உண்மைத் தன்மையோடு இருப்பதாக நான் உணர்கிறேன்."

"ஸ்ட்ரிங்க்ஸ் ஆஃப் ஷைனிங் சைலன்ஸ்" (Strings of Shining Silence), "ஸ்பேங்கலிங் டார்க்னெஸ்" (Spangling Darkness), "சாங்க்ஸ் ஃப்ரம் ஏ ஸ்மால் யூனிவர்ஸ்" (Songs From A Small Universe) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை இதுவரை அவர் வெளியிட்டுள்ளார்.

"சாவும், சாவும் சார்ந்த இழப்புகளும், அது தரும் வலியும் தான் என் கவிதைகளுக்கான அடிநாதமாக இருக்கின்றன. வலிக்க, வலிக்க இந்த வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நான் அனுபவித்து வாழ்கிறேன். அந்த மலைகளின் பின்னே சூரியன் மாலையில் மறையும் நேரமமென் கண்களை அகல விரித்துப் பார்ப்பேன். அதை உளப்பூர்வமாக ரசிப்பேன். எல்லாவற்றையும் தான். அந்தத் தேனீக்களின் ரீங்காரங்களையும், ஓடைகளின் சத்தங்களையும், மழைப் பெய்யும் போது என் கூரையின் மேல் அதன் துளிகள் படும்போது வருமே ஒரு சத்தம்... அதை ஓர் இசையாக பாவித்து நான் கேட்பதுண்டு. ஏனென்றால் எந்த நொடியும் நான் இங்கு இல்லாமல் போகலாம் என்ற நிலையில் தான் என் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது..."

பின் கதை : 

ஒரு நாள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்தார் ரஃபேல். மிக சமீபத்தில் தான் கடந்தது அந்த ஒரு நாள். ரஃபேலுக்கு கேன்சர் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது சிகிச்சை கொடுத்து காப்பாற்றும் கட்டத்தைக் கடந்துவிட்டது. அவரின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

பின் - பின் கதை :

இந்த நொடி ரஃபேல் உயிரோடு இருக்கிறார். ஒரு நொடி வரும்... அந்த நொடி அவரின் உயிரைப் பறித்துவிடும். அவர் கவிதைகளில் இருந்த மரங்களும், வேர்களும், செடிகளும், பூக்களும், சருகுகளும், புற்களும், கற்களும் அவரைத் தேடி ஏங்கும். அப்போது வானிலிருந்து ஒரு இடி முழக்கம் கேட்கும். இவை யாவும் வானை நோக்கி தலையை உயர்த்திப் பார்க்கும். அங்கு அந்த அழகான மேகக் கூட்டங்களோடு ரஃபேலும், அவரின் காதல் மனைவியும் கைகோர்த்தபடி இவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்போது அவர்கள் இருவருக்குமே வலிக்காது...