Published:Updated:

விண்வெளி வீரர்களுக்கு நாசா தரும் ஜீரோ கிராவிட்டி பயிற்சி இப்படித்தான் நடக்கும்!

விண்வெளி வீரர்களுக்கு நாசா தரும் ஜீரோ கிராவிட்டி பயிற்சி இப்படித்தான் நடக்கும்!
விண்வெளி வீரர்களுக்கு நாசா தரும் ஜீரோ கிராவிட்டி பயிற்சி இப்படித்தான் நடக்கும்!

அது என்ன ஜீரோ கிராவிட்டி? ஈர்ப்பு விசைக் கொஞ்சமே கொஞ்சம் இருக்கும் நிலை. இதை மைக்ரோ கிராவிட்டி என்றும் அழைப்பார்கள். விண்வெளி முழுக்க இந்த நிலைதான். எனவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வேலை செய்யவிருப்பவர்கள், விண்வெளி பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் இந்த ஜீரோ கிராவிட்டியில் எப்படிச் செயல்படவேண்டும் என்று புரிந்து கொள்வது அவசியம். அதற்காகவே நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் அவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்கின்றன

Photo courtesy: jurvetson

“எப்படி உணர்கிறீர்கள்?”

“எ...என் உடலின்.. எடையே எ...எனக்குத் தெரியவில்லை!” மிதந்து கொண்டே சற்று பதற்றத்துடன் கூறினார் அந்தப் பெண்மணி.   

“உங்கள் முன் மிதந்து கொண்டிருக்கும் அந்தப் பொருளை இங்கே கொண்டு வர முடியுமா?”

செய்கிறார். சுலபமாகக் கொண்டு வருகிறார். அதன் எடை எப்படியும் 200 கிலோவிற்கு மேல் இருக்கும். ஆம். ஜீரோ கிராவிட்டியில் இது சாத்தியம்.

ஜீரோ கிராவிட்டி எந்தப் பாரபட்சமும் பார்க்காது. அது எல்லாப் பொருள்களும் ஒரே நிறை கொண்டது என்று நினைத்துக் கொள்ளும். அதாவது, இயல்பான ஈர்ப்பு விசையுள்ள சூழலில் ஒரு பந்தையும், கோழி இறகையும் மேலிருந்து கீழ் வீசினால் பந்து வேகமாகத் தரையை அடைந்து விடும், கோழி இறகு கீழே வர நேரம் எடுத்துக் கொள்ளும். இதற்குக் காரணம், பந்து கோழி இறகை விட கனமானது. ஆனால், இதே நிகழ்வு ஜீரோ கிராவிட்டியில் நிகழும்போது இரண்டு பொருட்களுமே ‘தடையின்றி தானே விழல்’ என்ற வினையின் படி, ஒரே முடுக்கத்தில், ஒரே நேரத்தில் தான் தரையைத் தொடும். அதற்குப் பொருட்களின் நிறை ஒரு பொருட்டே இல்லை.

பூமியில் ஜீரோ கிராவிட்டி

அது சரி, பூமியில் தான் புவிஈர்ப்பு விசை இருக்கிறதே? பிறகு எப்படி விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும்? நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பூமியிலேயே பிரத்தியேகமாக ஜீரோ கிராவிட்டியை உருவாக்கி பயிற்சி அளிக்கின்றன. அதற்காக இந்தக் கடினமான முறையைக் கையாள்கின்றன.

உயரப் பறக்கும் விமானம்

Photo courtesy: NASA

பயிற்சி பெறப்போகும் வீரர்களை இதற்காகவே தயார் செய்த விமானம் ஒன்றில் ஏற்றி விடுவார்கள். அது 24,000 அடி உயரம் சென்ற பின்பு, 45 டிகிரி கோணத்தில் வானை நோக்கி, காற்றைக் கிழித்து கொண்டு உயரப் பறக்க தொடங்கும். சரியாக 32,000 அடிகளைத் தொட்டவுடன், சம நிலையில் பறக்க தொடங்கும். அதாவது 180 டிகிரியில். 20ல் இருந்து 25 வினாடிகள் இந்த நிலையிலேயே இருக்கும். இப்போது விமானத்தின் உள்ளே இருப்பவர்கள் புவிஈர்ப்பு விசைக் குறைவாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இது விண்வெளியில் மிதக்கும் நிலையைப் போன்றது தான். இந்தக் கால இடைவெளியைப் பயன்படுத்தி ஜீரோ கிராவிட்டியின் தன்மையை உணர்ந்துகொள்வார்கள்.

20-25 வினாடிகளுக்குப் பிறகு, அதே 45 டிகிரி கோணத்தில், விமானம் கீழே இறங்கத் தொடங்கும். இதுவரை அந்த விமானம் பயணித்த வடிவம் ஒரு பரவளையம் (Parabola) போல இருக்கும். கீழே 24,000 அடிகளை மீண்டும் தொட்டவுடன், திரும்ப அதே 45 டிகிரி கோணத்தில் மேலே ஏறத் தொடங்கும். 32,000 அடிகள் வந்தவுடன் மீண்டும் அதே புவிஈர்ப்பு விசை இல்லாத நிலை. இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் பறக்கும் இந்த விமானம் மூலம், இதே போல் 30ல் இருந்து 40 முறைகள் புவிஈர்ப்பு விசை இல்லாத நிலைக்கு அழைத்துச் செல்வார்கள். இப்படித் தொடர்ந்து பயிற்சி எடுத்தால் விண்வெளி பயணம் எளிதாகி விடும். ஜீரோ கிராவிட்டியும் நண்பனாகி விடும். மிகவும் ஆபத்தான பயிற்சியான இது, பலரின் உடல்நிலையைப் பாதித்து இருக்கிறது. இதனாலே இந்த வகை பயிற்சிக்கு ‘Vomit Comet’ என்று ஒரு பெயர் உண்டு.

என்ன விமானம் பயன்படுத்துகிறார்கள்?

photo courtesy: jurvetson

நாசா முதன் முதலில் இவ்வகை பயிற்சியை 1959ம் ஆண்டு ஆரம்பித்தது. தற்போது ஜீரோ ஜி கார்ப் (Zero G Corp) என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பயிற்சியை வீரர்களுக்கு அளித்து வருகிறது. இதற்காக அந்த நிறுவனம் பயிற்சிக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்ட போயிங் 727, ஜி ஃபோர்ஸ் ஒன் விமானத்தைப் பயன்படுத்துகிறது. 1990களில் ‘அப்போலோ 13’ (Apollo 13) என்ற ஆங்கில படத்திற்காக டாம் ஹாங்க்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் இவ்வாறுதான் பயிற்சி பெற்றனர். மொத்த படமும் விண்வெளியில் என்பதால், இவ்வாறு ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து ஆறு மாதங்கள் முப்பது முப்பது வினாடிகளாகப் படம் எடுத்தனர்.

இதே போல், இந்த ஜீரோ கிராவிட்டி அனுபவத்தை நீங்களும் பெற வேண்டும் என்றால் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது ஜீரோ ஜி கார்ப் நிறுவனம். ஒரு முறை விமானத்தில் சென்று வர ஆகும் செலவு ஒருவருக்கு 4,950 டாலர்களாம். இதில் 15 முறை பரவளைய உணர்வைப் பெற முடியும்.

ரைடுக்கு நீங்கள் ரெடியா?