Published:Updated:

நள்ளிரவு 12 மணி ரங்கநாதன் தெரு சென்னை புத்தாடை வாசம் வீசும் தெருவில் ஒரு விசிட்! #NightVisit

நள்ளிரவு 12 மணி ரங்கநாதன் தெரு சென்னை  புத்தாடை வாசம் வீசும் தெருவில் ஒரு விசிட்! #NightVisit
நள்ளிரவு 12 மணி ரங்கநாதன் தெரு சென்னை புத்தாடை வாசம் வீசும் தெருவில் ஒரு விசிட்! #NightVisit

திருவிழாக்கூட்டம் என்ற வார்த்தையை உயிர்ப்போடு பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டியது சென்னை, ரங்கநாதன் தெருவுக்கு. அதுவும் இப்போது தீபாவளிப் பண்டிகை வேறு. நூறு மீட்டர் தூரத்தைக் கடப்பதற்குள் ஆயிரம் மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 

சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளம் ரங்கநாதன் தெரு.  குண்டூசி முதல் தங்கம், வைர நகை வரை கிடைக்கும் கடைகள். வாசலைக் கடக்கும்போதே ஏசியின் குளிரை அள்ளித் தரும் கடைக்கு அங்கு இடமுண்டு; நாள் முழுக்க வியர்வையோடு பொம்மைகளை விற்றுக்கொண்டிருப்பவரின் கடைக்கும் இடமுண்டு. 

ரங்கநாதன் தெருவுக்கு அநேகரின் வருகை உடைகள் வாங்குவதற்காகத்தான். கூட்டத்தில் மெள்ள ஊர்ந்துசென்று தனக்குப் பிடித்தமான கடையைத் தேர்வு செய்வதற்குள், கீற்றுக் கீற்றாகக் கீறப்பட்டு மிளகாய் பொடி தூவிய  மாங்காய், ஒரு பூவைப் போல நறுக்கி வைக்கப்பட்டிருக்கும் கொய்யா, தர்பூசணிப் பழத்த்தில் நான்கைந்து துண்டுகள் பிளாஸ்டிக் கப்பில் வைத்து... என நம்மை ஏதேனும் ஒன்றையாவது வாங்க வைத்துவிடும். குழந்தைகளைத் தங்கள் பக்கம் ஈர்க்க பலூன், விசில் வியாபாரிகளின் அழைப்பும் இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும். 

வியர்வை வழிய அந்தத் தெருவுக்குள் நீந்தினால், புதிய ஆடையின் வாசம் மிதப்பதை நாம் உணர முடியும். ஏசியின் குளிரும் சீருடைப் பெண்களின் இன்முகப் புன்னகையும் நம்மை வரவேற்கும். புத்தாடைகளின் நிறத்தை வெளிச்சம் இன்னும் சற்று பிரகாசமாக்கித் தர, வீட்டினர் ஒவ்வொருக்கும் ஆடைகளைத் தங்கள் பட்ஜெட்டுக்குள் தேர்வுசெய்து முடித்து வருவதற்குள் நெடு நேரம் ஆகியிருக்கும். புத்தாடை வாங்கிய மகிழ்ச்சியில் வீடு திரும்புவோம்.  

வண்ணமயமான, பிரகாசமான ஒளியோடு நாம் பார்த்த ரங்கநாதன் தெரு, நள்ளிரவில் எப்படி இருக்கும். ஒரு விசிட் அடித்தோம். 

பாண்டி பஜாரிலிருந்து தி.நகர் செல்ல திரும்பினால் அது ஒன்வே. ஆனால், எங்களின் எதிரே ஒரு கார் வேகமாக வந்துகொண்டிருந்தது. நள்ளிரவில் எல்லாம் சாலை விதிகளைப் பார்க்க வேண்டுமா என்ன என்று நினைத்திருப்பார்களோ!


வடக்கு உஸ்மான் மேம்பாலத்தின் கீழே உள்ள சாலையோரக் கடைகளை தார்ப்பாய்களால் மூடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவன் மரப் பெட்டியின் அடிப்பகுதிபோல இருந்ததைச் சுத்தியால் அடித்து, சட்டங்களாகப் பிரித்துகொண்டிருந்தான். அவனிடம் பேச்சுக்கொடுத்தால், எதிரே இருக்கும் அண்ணனைக் கைக்காட்டுகிறான். 'ஆணி வெளியே நீட்டிட்டு இருக்கு சார். அதைத்தான் தட்டிவிட்டுட்டு இருக்கான்' என்கிறார். 

ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்ததுமே மழையின் வெள்ளைநிற நுரைபோல தெருவெங்கும் படர்ந்திருக்கும் பாலித்தீன் பைகளே கண்களில் பட்டன. 'அங்காடித் தெரு' படத்தில் காட்டப்படுவதைப் போலவே தெருவெங்கும் அட்டைப் பெட்டிகளாக நிரம்பிக் கிடந்தன. 
'மணி பன்னெண்டு ஆயிடுச்சா?' எனக்கேட்டவாறே தன் பணிகளை விரைவுப்படுத்துகிறார் தெருவின் தொடக்கத்தில் இருந்த கையேந்தி பவன் கடைக்காரர். அதிலிருந்து சற்றுத் தள்ளி, அட்டைப் பெட்டி, பாலித்தீன் பை எனத் தனித்தனியே பிரித்துக் கட்டிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரின் தோள் உயரத்துக்கு இருந்த மூட்டையை ஒரே எக்கில், முதுகில் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினார். அருகில் சென்று அவரோடு நடந்தபோது, சிநேகமுடன் சிரித்தார். 

"கிடைக்கிறதைப் பொறுக்கி, மூட்டைக் கட்டி வெச்சிப்பேன். காலையில ஏதாச்சும் வண்டி வந்தாப் பார்ப்பேன். இல்லாட்டி, தலையிலேயே தூக்கிட்டுக் கண்ணம்மா பேட்டைக்குப் போயிடுவேன். பிளாஸ்டிக்குக்கு ஒரு ரேட், அட்டைப் பொட்டிக்கு ஒரு ரேட்..." என்று சொல்லும் அவரின் பெயர் முருகன். பிறந்து, வளர்ந்து, இப்போ பொழைப்பது வரை எல்லாமே சென்னைதான். இரண்டு பிள்ளைகளின் தந்தை. 
'பகல்ல வேற வேலைக்குப் போறதுக்கெல்லாம் நேரம் இருக்காது. காயிலாங்க் கடையில் இதையெல்லாத்தையும் போட்டுக் காசை வாங்கறதுக்கே நேரம் சரியா இருக்கும்" என்று சொல்லிவிட்டு, வேகமாக நடந்து முன்னே சென்றார். 

பிரபலமான துணிக் கடையிலிருந்து சீருடையுடன் பெண்கள் கடந்துசென்றனர். இந்நேரம் வரைக்குமா பெண்களுக்கு வேலை இருக்கும் என, செக்கியூரிட்டி ஒருவரிடம் கேட்க, 'பண்டிகை நாளு இல்லையா... அதான்" என்றவரின் கால்களை உரசியபடி நின்ற நாயை விரட்ட, கம்பைத் தேட, அதற்குள் நாய் தானாகவே விலகிச் சென்றது. அந்தத் தெருவின் பல கடைகளிலிருந்து பெண்கள் அப்போதுதான் வேலை முடிந்து வீட்டுக்கு அல்லது அறைக்குத் திரும்பிகொண்டிருந்தார்கள். 

துணிக் கடை ஒன்றி வாசல்படிகளை அகற்றி, சுத்தம் செய்து, சேதமானதைச் சரிசெய்துகொண்டிருந்தார். அக்கடைக்கு எதிரே சிறிய மலைபோலக் குவிந்திருந்த அட்டைப் பெட்டிகளை இரண்டு பெண்கள் எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தனர். சற்றுத் தள்ளி டாடா ஏஸ் வண்டி அவற்றை ஏற்றிச் செல்லத் தயாராக நின்றது. 'சீக்கிரம் எடுத்து வையுங்க' என ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

"ஒவ்வொரு கடைக்கும் ஒரு ஏஜென்ட் இருக்காங்க. நாங்க இரண்டு கடையிலேர்ந்து வெளியே போடுற அட்டைப் பொட்டிகளை எடுப்போம். அதுக்காக மாசம், மாசம் அந்தக் கடைக்குப் பணம் கொடுக்கணும்." என்றவரிடம், "எவ்வளவு கொடுக்க வேண்டும்?"  எனக் கேட்டதும், 'அது மாச, மாசத்துக்கு மாறும்" என்று நழுவிக்கொண்டார். 

அதற்கு அடுத்து, குல்பி ஐஸ் விற்பவரிடம் நான்கு இளைஞர்கள் ஐஸ் வாங்கிகொண்டிருந்தார்கள். "டிபன் எல்லாம் முடிச்சிடுச்சு. முட்டை இருக்கு. ஆம்லேட், ஆப்பாயில் வேணும்னா போடலாம்" என தன்னிடம் வந்த வாடிக்கையாளர்களிடம் அங்கு இருந்த கையேந்தி பவன் கடைக்காரர் சொல்லிவிட்டு, தோசைக்கல்லில் மிகப் பெரிய ஆம்லேட்டை வார்த்துக்கொண்டிருந்தார். 


தெருவைச் சுத்தம் செய்யும் பணியில் பெண்கள் புழுதிப் பறக்க, வேகம் வேகமாகப் பெருக்கிக்கொண்டிருந்தனர். அருகில் செல்வோரைத் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லை அல்லது விரும்பவில்லை. 

இன்னொரு கடையின் வாசலில் கிடந்த அட்டைப் பெட்டிகளை ஆளுயரத்துக்கு அடுக்கிக் கட்டிக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் 'அண்ணா... போட்டோவுல எங்க முகம் தெரியமாதிரி போட்டுடாதீங்க' என எச்சரிக்கையோடு சொல்ல, மற்றொருவர், " விடுடா... போட்டோவைப் பார்த்துட்டு சினிமா சான்ஸ் ஏதாச்சும் கிடைக்கும்டா" என்கிறார் சிரித்துக்கொண்டே.
அட்டைப்பெட்டிகளும் கறுப்பு நிற குப்பைப் பைகளுமாகச் சூழ்ந்திருந்த அந்தத் தெருவில் இறுதியிலுள்ள சுவரில் சாய்ந்துநிற்கையில், ரயில் ஒன்று கடந்துசெல்வதன் அதிர்வு எழும்பி, அடங்கியது. 

இந்த நள்ளிரவில் சிரிப்பும், அலுப்பும், புழுதியும் வாசனையும் துர்நாற்றமும் இருட்டுமாகச் சூழ்ந்திருக்கும் இந்த ரங்கநாதன் தெரு இன்னும் சில மணிநேரத்தில் குப்பைகள் அகற்றப்பட்டு, உங்களை வரவேற்கக் காத்திருக்கும். இந்த மனிதர்கள் நாளைய குப்பைகளை அகற்ற, பகலில் சற்றே ஓய்வெடுப்பார்கள்.