Published:Updated:

உலகம் முழுக்க ‘ஒன்லி சேலை’ சுற்றுலா செல்லும் தமிழ்ப் பெண்! #Smruthi #SareeLove

உலகம் முழுக்க ‘ஒன்லி சேலை’ சுற்றுலா செல்லும் தமிழ்ப் பெண்! #Smruthi #SareeLove
உலகம் முழுக்க ‘ஒன்லி சேலை’ சுற்றுலா செல்லும் தமிழ்ப் பெண்! #Smruthi #SareeLove

‘அப்பப்பா... இந்தச் சேலையைக் கட்டிக்கிட்டு எப்படி ஆபீஸ் போறாங்க?’, ‘சேலையைக் கட்டிக்கிட்டெல்லாம் ஒருநாள் முழுக்க இருக்க முடியாது’, 

இந்தக் காலத்துப் பெண்களிடமிருந்து இப்படியான டயலாக்குகளை பலமுறை கேட்டிருப்போம். ஆனால், சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி என  உலகம் முழுவதும் இந்திய கலாசாரத்தை சுமந்தபடி பயணித்துக்கொண்டிருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த, ஸ்மிருதி கெளரிசங்கர் (Shmruthi Gowrisankar). அவரின் வித்தியாசமான முயற்சி குறித்து கேட்டோம். 

''உங்களைப் பற்றி சொல்லுங்க மேடம்?''

“பிறந்து வளர்ந்தது எல்லாமே ஈரோடு. பத்தாவது வரை, ஈரோடு பி.வி.பி பள்ளியில் படிச்சேன். அப்பாவுக்கு கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் ஆச்சு. கோவையில் அவிலா கான்வென்டில் பிளஸ் டூ முடிச்சுட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிச்சேன். எனக்கு மேனேஜ்மென்ட் படிப்பில் ஆர்வம். அதற்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க, பிரான்ஸுக்குப்போய் பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சேன். இப்போ, சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருக்கேன்.''

எப்போது ஆரம்பித்தது உங்களுடைய சேலைக் காதல்?'' 

“சின்ன வயசிலிருந்தே சேலை மேல் ஒரு ஈர்ப்பு.வெளிநாட்டில் சேலை கட்டிக்கிறதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மியா இருந்துச்சு. படிப்பு, வேலைனு அஞ்சு வருஷத்தில், ஏழு நாடுகளுக்கு பயணிச்சிருக்கேன். ஒவ்வொரு நாட்டிலும் எட்டு மாசமோ, ஒரு வருஷமோ தங்குவேன். புதுச் சூழலையும் சீக்கிரமே பழகிக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் என் அடையாளம் இந்தியன்தானே. அதை ரொம்பவே மிஸ் பண்ற மாதிரி தோணுச்சு. அதனால், இந்த ஆண்டிலிருந்து எங்கே போனாலும், புடவை கட்டிக்கிட்டுப் பயணம் செய்யறதுனு முடிவெடுத்தேன்.'' 

''எந்த நாட்டில் உங்களின் சேலைக்கு அதிக வரவேற்பு கிடைச்சது?'' 

''சுவிட்சர்லாந்துக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டி நாடு, லிச்டென்ஸ்டெய்ன் (Liechtenstein). இங்கே பலருக்கும் சேலைன்னா என்னனுகூட தெரியாது. நான் சேலை கட்டிட்டு இருக்கிறதை முதல்முறையாகப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. என்ன இது, எப்படி கட்டறதுனு ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாங்க. வெளிநாட்டில் ஆபிஸூக்கு முதல் தடவை சேலையைக் கட்டிட்டுப் போனபோது, பதற்றமா இருந்துச்சு. ஆனால், என்னுடன் வேலை பார்க்கிறவங்க ரொம்ப அழகாக இருக்குனு பாராட்டினதும் ரொம்ப சந்தோஷமாகிட்டேன். சிங்கப்பூர், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து அலுவலகங்களுக்கு சேலையைக் கட்டிக்கிட்டுப் போயிருக்கேன்.'' 

உங்க பிளவுஸ் டிசைனும் வித்தியாசமாக இருக்கே... நீங்களே வடிவமைக்கிறீங்களா?'' 

''எனக்கு ஃபேஷன் டிசைனிங்ல ஆர்வம் உண்டு. ஒய்வு நேரங்களில் ஏதாவது டிசைனிங் செஞ்டுட்டிருப்பேன். இணையதளத்துல நிறைய ஐடியாஸ் கொட்டி கிடைக்குதே. அதைப் பார்த்துச் செய்த பிளவுஸ் டிசைன்களே இவை. டிசைன் பண்ணி என் அம்மாவுக்கு வாட்ஸ்அப் பண்ணுவேன். அவர் கோயம்புத்தூரில் கொடுத்து ரெடி பண்ணி அனுப்புவாங்க.'' 

பெரும்பாலும் லைட் வெயிட் புடவையை பயன்படுத்தறீங்க போல... ஹெவி வெயிட் பிடிக்காதா?'' 

''சமீபத்தில் வாங்கிய எல்லாச் சேலைகளும் கைத்தறிச் சேலைகள். அதுதான் பயணங்களில் கட்டிக்க ஈஸியா இருக்கும். நமது கைத்தறி தொழில் அழிந்துபோகாமல் காக்கும் என் சிறிய பங்களிப்பாகவும் எடுத்துக்கலாம். விசேஷங்களுக்கு ஹெவி வெயிட் சேலையைக் கட்டுவேன்.'' 

“எங்கிருந்து புடவைகளை வாங்கறீங்க?” 

''80 சதவிகிதம் ஆன்லைனில்தான் வாங்குவேன். இன்ஸ்ட்டாகிராமில் பார்த்து, நம்பிக்கையான இடம்தான் எனத் தெரிஞ்சுக்கிட்டு வாங்குவேன். சில சேலைகள் அம்மாவும் மாமியாரும் அனுப்பியவை.'' 

''மறக்க முடியாத அனுபவம்...'' 

'ஸ்லோவேனியா நாட்டுக்குப் பயணம் செய்தபோது, ஒரு பெண்மணியின் வீட்டில் நானும் கணவரும் தங்கினோம். வீட்டுக்குள் நுழைந்ததுமே எனது சேலையைப் பார்த்து மிகவும் குஷியாகிவிட்டார். வீட்டிலிருந்த ஒவ்வொருவரிடமும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டாடினார். அவரது உற்சாகம் எங்கள் பயணக் களைப்பையே விரட்டிடிச்சு.'' 

''நீங்கள் அடுத்து செல்ல நினைக்கும் இடம்...'' 

''உலகம் முழுவதும் ஒரு நாடு விடாமல் சுற்றுவதே ஆசை. இனிவரும் அனைத்துப் பயணங்களிலும் சேலை என்னுடன் பயணிக்கும்''