Published:Updated:

'கியா் போடாமலும், இந்த பைக்கை ஓட்டலாம்'

'கியா் போடாமலும், இந்த பைக்கை ஓட்டலாம்'
'கியா் போடாமலும், இந்த பைக்கை ஓட்டலாம்'

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்கள்,'கியா் மற்றும் கியா் இல்லாமல்' இயங்கக்கூடிய பைக் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாகக் கேள்விபட்டு, அவா்களைச் சந்தித்தோம். தங்களை சபரி கண்ணன், ராம்நாராயணன் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள் இருவரும், பி.இ ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளனா். நாம் பைக்கைப் பற்றி கேட்கத் தொடங்கியதும், தங்களது கண்டுபிடிப்பைப் பற்றி ஆர்வமாக விளக்க ஆரம்பித்துவிட்டனர்.

'கியா் போடாமலும், இந்த பைக்கை ஓட்டலாம்'

 ''கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டு ப்ராஜெக்ட்டுக்காக, புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். ஆனால்,முதலில் அதற்கான திட்டம் எதுவுமே அகப்படவில்லை. சில நாள்களுக்குப் பின்புதான்,கியா் மற்றும் கியா் இல்லாமல் ஓடக்கூடிய பைக்கைச் செய்தால் என்ன? எனும் யோசனை வந்தது. இணையதளத்தில் இதற்கு முன்னா், இப்படி ஏதாவது இருக்கின்றதா எனத் தேடினோம். ஆனால் எங்களுக்குத் தெரிந்த வரைக்கும், அப்படி எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை என்பதால், இதையே எங்கள் ப்ராஜெக்டாகத் தோ்வு செய்தோம்.

 முதலில் 'யமஹா G5 லிபரோ' பைக்கை, செகண்டு ஹேண்டில் வாங்கி, அதை எங்கள் தேவைக்கேற்ப மாற்றி வடிவமைத்தோம். ஸ்கூட்டரில் இருக்கும் CVT யூனிட் மற்றும் பைக்கில் இருக்கும் கியா்பாக்ஸ் மூலமாகவும், பைக்கை ஓட்டக்கூடிய வகையில், 'Ratched Sliding Gear Mechanisam' முறையைப் பின்பற்றி தரமாக வடிவமைத்தோம். இதற்காக பைக்கின் நடுவிலிருந்த இன்ஜீனை, அப்படியே இடதுபக்கம் மாற்றியமைத்தோம். எங்களின் இந்த ப்ராஜெக்ட்டுக்காக, மொத்தம் 14000 ரூபாய்  செலவானது. இந்தத் தொழில்நுட்பத்துக்கான 'காப்புரிமை' பெறுவதற்கு, தற்போது தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம்'' என ஒருசேரக் கூறினார்கள்.

'கியா் போடாமலும், இந்த பைக்கை ஓட்டலாம்'

''இதன் சிறப்பு என்னவென்றால், ஆண்களைப் போலவே பெண்களும் எளிதாக பைக்கை ஓட்ட முடியும்; நெரிசல்மிக்க டிராஃபிக்கில், அடிக்கடி கியரை மாற்றக்கூடிய சிரமமும் இங்கே இருக்காது. இதனால் ஒரே வாகனத்தையே, நாம் கியா் மற்றும் கியா் இல்லாமலும், தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, எங்கள் பைக் சராசரியாக 40 முதல் 45 கி.மீ வரை மைலேஜ் தரவல்லது. இதுவரைக்கும் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றிருக்கிறோம். அதில் "மினி பைக்" போட்டியில், சிறந்த குழுவிற்கான விருதினை வாங்கியது மறக்கமுடியாத அனுபவம். நான் படித்த துறையில், எதையாவது சாதிக்க வேண்டும் என விரும்பினோம். அதைச் சிறிய அளவில் நிறைவேற்றியிருக்கிறோம்'' என்றனா்.