Published:Updated:

'விருதுகள் நிறைய வாங்கியவளுக்கு வீடு தர ஆளில்லை' - ஆதங்கத்தில் 'லிவிங் ஸ்மைல்' வித்யா

'விருதுகள் நிறைய வாங்கியவளுக்கு வீடு தர ஆளில்லை' - ஆதங்கத்தில் 'லிவிங் ஸ்மைல்' வித்யா
'விருதுகள் நிறைய வாங்கியவளுக்கு வீடு தர ஆளில்லை' - ஆதங்கத்தில் 'லிவிங் ஸ்மைல்' வித்யா

நான்,

உங்களைப்போலவே பிறந்தேன்...

உங்களைப்போலவே வளர்ந்தேன்...

உங்களைப்போலவே வரியைச் செலுத்துகிறேன்...

உங்களைப்போலவே ரத்தம், சதையால் ஆனவள்.

ஆனால், ஏன்... ஏன்... ஏன்

என் வாழ்வு மட்டும் உங்களைப்போல் இல்லை?

- `Is It Too Much To Ask' குறும்படத்தில் இடம் பெற்ற பாடல்...

மேடை நாடகம் ஒன்றில் `எ ஹவுஸ், எ ஹவுஸ், எ ஹவுஸ்...'  எனத் திருநங்கைகள் `லிவிங் ஸ்மைல்' வித்யா, கிளாடி இருவரும் வசனம் பேசி நடித்துக்கொண்டிருப்பதாகத் தொடங்குகிறது குறும்படம். அடுத்தது, வாடகை வீடு தேடி இருவரும் காரில் பயணிக்கிறார்கள். `கிளாடி, உன் கனவு வீடு எப்படி இருக்க வேண்டும்?' என்ற வித்யாவின் கேள்விக்கு, `நான் வீட்டைப் பற்றி கனவு காண்பதையே நிறுத்திக்கொண்டேன். ஏனெனில், நாம் என்னதான் கனவு கண்டாலும் யதார்த்தம் என்பது வேறாகத்தானே இருக்கிறது' என்கிறார் கிளாடி.

இப்படியாக திருநங்கைகளுக்கு வீடு கிடைப்பதிலுள்ள சிரமத்துடன் சேர்த்து, தனது சாதியினருக்கு மட்டுமே வீடு கொடுக்கும் `வெஜிடேரியன்' கல்ச்சர், ஐ.டி துறையினருக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை என வாடகைக்கு வீடு கொடுப்பதில் புரையோடிப்போயிருக்கும்  `டீசன்ட்' மனிதர்களின் மன அழுக்குகளை யதார்த்தமாக டாக்குஃபிக்‌ஷன் செய்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான லீனாமணிமேகலை.

தரமணியில் உள்ள `ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்' கல்லூரியின் `அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம்' சார்பில் இந்தக் குறும்படம் திரையிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக `லிவிங் ஸ்மைல்' வித்யா, ஜீ செம்மலர் மற்றும் திருநங்கைகளின் சார்பில் வாதாடும் சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர் கிருபா முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

படத்தின் ஒரு காட்சியில்,  திருநங்கைகள் இருவரும் ஒரு வீட்டை தங்களுக்குப் பிடித்துவிட்டதாக அதன் உரிமையாளரிடம் கூறுகிறார்கள். வாடகை மற்றும் இதர விவரங்களைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் இருவரும் பெண்கள் அல்லர்... திருநங்கைகள் என்பதைச் சொல்கிறார்கள். அதற்கு, அவர்கள் திருநங்கை என்பதை மற்றவருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளுமாறு வீட்டின் உரிமையாளர் கூறுகிறார். அப்போது அங்கே வரும் உரிமையாளரின் கணவர், திருநங்கைகள் இருவரோடு சேர்த்து கேமராவையும் வெளியேற்றுகிறார். இதுதான் நம்மில் பலருடைய மனநிலை.

நாம் இங்கு வரையறுத்து வைத்திருக்கும் அத்துணை ஒழுக்க நெறிகளும், நாம் பின்பற்ற நினைக்கும் கௌரவங்களும் சக மனிதர்களைக் காயப்படுத்தக்கூடியதாகவே கட்டமைத்துவைத்திருக்கிறோம். மற்றொரு வீட்டில் உரிமையாளர் கேட்கும் வாடகை, அட்வான்ஸ் போன்ற தஸ்தாவேஜ்களைக் கொடுப்பதற்கு இருவரும் தயாராகிறார்கள். அப்போது `நீங்க வெஜிடேரியனா?' என்ற கேள்வி அவர்களின் முன் வைக்கப்படுகிறது. அதற்கு வித்யா, தான் இனி வெஜிடேரியனாக மாறிக்கொள்வதாகக் கூறியதும், `வெஜிடேரியன், பிராமின்களுக்கு மட்டும்தான் வீடு கொடுப்போம்' என்கிறார் உரிமையாளர். தொடர்ந்து வித்யா, `இது தவறான அணுகுமுறை. நாங்கள் பணம் கொடுத்துதானே இருக்கப்போகிறோம். பணத்தில்கூட சாதிப் பிரிவுகள் உண்டா?' என்ற கேள்வியை முன்வைத்ததும், உரிமையாளர் சொல்வதறியாது நகர்ந்து செல்கிறார்.

படத்தில் நடித்த `லிவிங் ஸ்மைல்' வித்யாவிடம் பேசுகையில், ``எல்லா இடங்களிலும் சாதிப் பாகுபாடு தலைவிரித்தாடுகிறது. திருநங்கைகளுக்கு வீடு கிடைப்பதே சிரமமாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும், மூன்று மடங்கு வாடகை வசூலிக்கிறார்கள். நான் எழுதிய `ஐ எம் வித்யா' புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட `நான் அவனு அல்ல அவளு' திரைப்படத்துக்கு, எனக்கு கர்நாடக அரசு விருது தந்தது. ஆனால், எனக்கு வீடு தர இந்த மக்கள் யோசிக்கிறார்கள்" என்றார் ஆதங்கத்தோடு.

தொடர்ந்து, ``திரைத் துறையில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். கலைத் துறையில் பங்கெடுப்பதன் மூலம் திருநங்கைகளைப் பற்றிய தவறான எண்ணங்களை மாற்ற முடியும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு, மாணவி அனிதாவின் மரணம், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு எனப் பல பிரச்னைகளுக்குத் திருநங்கைகளும் போராடினோம். ஆனால், திருநங்கைகள் குறித்தான பிரச்னைகளுக்குப் பொதுமக்களிடமிருந்து எந்தவித எதிர்வினையும் வருவதில்லை" என்று கூறினார்.

படத்தின் ஒரு காட்சியில், வித்யாவும் கிளாடியும் கோமாளி வேடமிட்டு, மனவளம் குன்றிய மாணவர்களைச் சிரிக்கவைத்துக்கொண்டிருப்பார்கள். அந்த மாணவக் குழந்தைகளும் அவ்வளவு மகிழ்ச்சியாக கைதட்டி சிரித்துக்கொண்டிருப்பார்கள். நிஜத்திலும் நாம் செய்யும் கிண்டல்களை, கேலிகளைக் கடந்துச் செல்ல, அவர்கள் ஒரு வேடம் தரித்தே வாழ்கிறார்கள். ஒருநாள், அந்த வேடத்தை அவர்கள் கலைத்துவிட்டு நம்மை நோக்கி சில கேள்விகளை முன்வைப்பர். அந்தக் கேள்விகளை அவ்வளவு சுலபமாக, கிண்டலும் கேலியுமாக நம்மால் கடந்து சென்றுவிட முடியாது. இந்தப் படத்தின் முடிவும் அப்படியான ஒன்றாகத்தான் இருந்தது.