Published:Updated:

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 6

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 6

ரிதன்யா சர்வாங்கமும் அதிர்ந்து போனவளாய் திவாகரைப் பார்த்தாள். அவளுடைய சிறிய நெற்றியில் வியப்பு வரி ஒன்று உற்பத்தியாயிற்று.

"நீ.. நீ... இப்போ... என்ன கேட்டே?'

"நள்ளிரவு வானவில்...''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"அப்படீன்னா..?''

திவாகரின் உதடுகளில் கோணல் புன்னகை நெளிnய... அவனுடைய கண்களில் சிரிப்பு தெறித்தது.

"உன்னோட பேரு ரிதன்யாதானே?'' அவன் கேட்ட கேள்விக்கு ரிதன்யா பதில் சொல்லாமல் அப்படியே நின்றாள்.

"இதோ பார்..! நான் என்ன கேள்வி கேட்டாலும் சரி, பதில் உடனடியா வரணும்... அப்படி பதில் வரலைன்னா, என்னோட நடவடிக்கைகள் தமிழ் சினிமாவில் வர்ற வில்லன் ரேஞ்ச்சுக்கு இருக்கும்... ஒண்ணு சாம்பிளுக்கு பண்ணிக் காட்டவா..?''

"வே... வேண்டாம்!''

"அப்படீன்னா கேட்ட கேள்விக்குப் பதில். உன்னோட பேர் ரிதன்யாதானே..?''

"ஆ... ஆமா!''

"சைபர் க்ரைம் பிராஞ்சில் விஜிலன்ஸ் செகண்ட் கிரேடு ஆபீஸரா நீ வேலை பார்க்கிறே... சரிதானே?''

"ஆமா!''

"இப்ப நான் கேட்டதெல்லாம் எவ்வளவு சுலபமான கேள்விகளோ அதைவிட சுலபமான கேள்விதான் நள்ளிரவு வானவில். இதைப்பத்தி உனக்குத் தெரியுமா... தெரியாதா?''

"தெரியாது!''

திவாகர் பூங்கொடியிடம் திரும்பி அவளிடம் ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தான்.

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 6

"டாஸ் பண்ணு!''

அவள் நாணயத்தை மேல் நோக்கி சுண்டி விட்டாள். மேலே போய் சுழன்று கொண்டே கீழே வந்த நாணயத்தை சட்டென்று தாங்கிப் பிடித்து தன் உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டான் திவாகர். ரிதன்யாவிடம் திரும்பினான்.

"சொல்லு... பூவா... தலையா?''

ரிதன்யா பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்க, திவாகரின் அந்த கோணல் சிரிப்பு சற்றே பெரிதாயிற்று."சரி, நீ சொல்ல வேண்டாம். நானே சொல்றேன். தலை விழுந்து இருந்தா உன்னோட புருஷன் ஹரிகிருஷ்ணன் உயிரோடு இருக்க மாட்டான். பூ விழுந்து இருந்தா உன்னோட மகன் உயிரோடு இருக்க மாட்டான். கையை ஓப்பன் பண்ணிப் பார்த்துடலாமா?''

ரிதன்யா இதயம் இடிந்து போனவளாய் பின்னுக்கு நகர்ந்து சுவரில் சாய்ந்துகொண்டாள். உதடுகள் தன்னிச்சையாய் முனகின.

"வே... வேண்டாம்''

"என்ன வேண்டாம்.?''

"அ.... அ... அவங்களை ஒண்ணும் பண்ண வேண்டாம்.''

"அதாவது, அவங்க ரெண்டு பேரும் உனக்கு வேணும்!''

"ஆமா!''

"அவங்க உனக்கு வேணும்னா எனக்கு அந்த நள்ளிரவு வானவில் வேணும்! அதைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாதுன்னு நீ ரொம்ப நேரத்துக்கு சொல்லிட்டு இருக்க முடியாது. ஏன்னா, உன்னோட டிபார்ட்மென்ட்ல உனக்கு கொடுக்கப்பட்டு இருக்கிற வேலையே 'நள்ளிரவு வானவில்’ சம்பந்தப்பட்டதுதான்!''

ரிதன்யா அவனையே பார்த்தாள். மனதின் ஓர் ஓரத்தில் எச்சரிக்கை வாசகங்கள் 'ஸ்க்ராலிங்’கில் ஓடின.

'இவனுக்கு எல்லாமே தெரிந்து இருக்கிறது. எதையும் மறைக்க முடியாது!’

திவாகர் இப்போது ரிதன்யாவுக்கு வெகு அருகில் வந்து அவனுடைய மூச்சுக் காற்று அவளுடைய முகத்தில் மோதும்படியாய் பேசினான். பான்பராக்கும் விஸ்கியும் கூட்டணி போட்டுக்கொண்டு நாறின.

"இதோ பார் ரிதன்யா..! நீ காலேஜ் டேஸ்ல பார்த்த திவாகர் கிடையாது நான்... படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத காரணத்தால திசை மாறிப் பறந்த பறவை! இன்டர்நெட் உலகம் புத்திசாலியான ஆட்களுக்கு ஒரு அட்சயப்பாத்திரம். என்னை மாதிரியான ஆட்களுக்கு அது ஒரு திருட்டுச் சாவி. நம் நாட்டுல இருக்கிற பெரிய பெரிய ஐ.டி கம்பெனிகளில் எது மாதிரியான மோசடிகள் திரைமறைவில் அரங்கேற்றப்பட்டு, கோடிகளைக் கொட்டிகிட்டு இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்னைக் காட்டிலும் பூங்கொடிக்கு நல்லாவே தெரியும். ஏன்னா, மெல்போர்னிலும், நியூஜெர்ஸியிலும் உள்ள ஐ.டி கம்பெனிகளில் தலா ரெண்டு வருஷம் வேலை பார்த்தவள். இந்த நிமிஷம் இந்தியாவில் இருக்கிற எல்லா ஐ.டி கம்பெனிகளைப் பற்றியும் அவளுக்குத் தெரியும். அந்தக் கம்பெனியோட லாப நஷ்டக் கணக்குகளும் தெரியும். எது பந்தயக் குதிரை, எது நொண்டிக் குதிரை என்கிற லிஸ்ட் அவளுக்கு மனப்பாடம்.

அதே மாதிரி போலீஸோட சைபர் க்ரைம் பிராஞ்சில் எது மாதிரியான இன்வெஸ்டிகேஷன்ஸ் 'ஹாட்’ டா இருக்குங்கிற விவரமும் பூங்கொடிக்கு தெரியும். அப்படி ஹாட்டான விஷயங்களில் ஒண்ணுதான்... நள்ளிரவு வானவில்!''

அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் தள்ளி நின்றிருந்த பூங்கொடி ரிதன்யாவைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

"இப்ப சொல்லு... அந்த 'நள்ளிரவு வானவில்’ பற்றி உனக்குத் தெரியுமா... தெரியாதா..?''

ரிதன்யாவின் முகம் ஒரு வியர்வைக் குளியலுக்கு உட்பட்டிருக்க, உதடுகள் உப்புத்தாளாய் வறண்டு போயிருந்தன.

'இனி இவர்கள் விடமாட்டார்கள்... சொல்லிவிட வேண்டியதுதான்!’

'தெரியும்’ என்பது போல் மெல்ல தலையாட்டினாள்.

"இது புத்திசாலித்தனம்..! இந்த புத்திசாலித் தனம் கடைசி வரைக்கும் இருக்கணும். இனி உன்னோட வாயிலிருந்து ஒரு எழுத்துகூட பொய்யா வரக் கூடாது. நீ எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தர்றியோ அந்த அளவுக்கு உன்னோட புருஷனும் மகனும் சேஃப்பா இருப்பாங்க... சரி, அது என்ன 'நள்ளிரவு வானவில்’..?''

"அது ஒரு சட்டவிரோதமான சைபர் குற்றம்..''.

"இதை நீ சொல்லணுமா என்ன..? அதுக்கு என்ன அர்த்தம்னுதான் கேட்டேன்!''

"அதைக் கண்டுபிடிக்கிற பொறுப்பைத்தான் என்கிட்டே குடுத்திருந்தாங்க. என்னால கண்டுபிடிக்க முடியலை... இன்னும் வெளிப் படையா சொல்லணும்னா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அந்தப் பொறுப்பிலிருந்து நான் விலகிட்டேன்!''

திவாகர் திகைப்பில் அவளைப் பார்த்தான்.

"என்னது...! பொறுப்பிலிருந்து விலகிட்டியா!''

"ஆமா!''

"ஏன்?''

"இந்த 'நள்ளிரவு வானவில்’ விசாரணையை இன்னிக்குக் காலையில்தான் ஆரம்பிச்சேன். ஆரம்பிச்ச அடுத்த சில மணி நேரத்துக்குள்ளாகவே ரெண்டு பேர் உயிரோடு இல்லை. முதலாவது நபர் இரண்டாம் நாரதர். அவர் ஒரு டி.வி ரிப்போர்ட்டர். 'நள்ளிரவு வானவில்’ மேட்டரை முதன்முதலா போலீஸ் க்ரைம் பிராஞ்சுக்கு இன்ஃபார்ம் பண்ணினது அவர்தான். ரெண்டாவது நபர் கர்நாடகாவின் சூப்பிரெண்

டென்ட் ஆஃப் போலீஸ் சந்திர கவுடா. இவர் ஒரு நேர்மையான போலீஸ் ஆபீஸர். இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணி உண்மைகளை வெளியே கொண்டு வரணும்னு சொல்லி எனக்கும் கமிஷனர் நம்பெருமாளுக்கும் ஆர்டர் இஷ்யூ பண்ணினது இவர்தான். இவரும் இப்போ உயிரோடு இல்லை. யஷ்வந்த்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் அவர் போயிட்டிருந்த ஜீப்பை நோக்கி ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஜீப் வெடித்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி மரணம்!''

திவாகர் திகைத்த விழிகளோடும் ஒரு உஷ்ணமான பெருமூச்சோடும் தன் தாடையை இடது கை விரல்களால் வருடினான்.

"இந்த விஷயத்துக்குள்ளே இவ்வளவு பெரிய வீரியமான விபரீதமா?'

"இன்வெஸ்டிகேஷனை ஆரம்பிச்ச முதல் நாளே இந்த விஷயத்தோட சம்பந்தப்பட்ட இரண்டு பேர் அடுத்தடுத்து இறந்து போனதில் டி.எஸ்.பி. நம்பெருமாள் அதிர்ச்சியடைந்து என்னை இந்தப் பொறுப்பிலிருந்து விலகச் சொல்லிட்டார்.''

"நீயும் விலகிட்டே?''

"ஆமா... வேற வழி..! என்னுடைய மேலதிகாரியே பயப்படும்போது நான் என்ன செய்ய முடியும்..?''

"அப்படீன்னா... அந்த 'நள்ளிரவு வானவில்’ விவகாரம்?''

"சைபர் க்ரைம் பிராஞ்சில் இருக்கிற வேற எந்த ஒரு அதிகாரியாவது கொஞ்சநாள் கழிச்சு அந்த இன்வெஸ்டிகேஷனை ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன்!''

"கொஞ்சநாள்னா எவ்வளவு?''

"ரெணு அல்லது மூணு வாரம்.''

"வேறு எந்த ஒரு அதிகாரியாவது வந்து அதை இன்வெஸ்டிகேட் பண்ணி 'நள்ளிரவு வானவில்’ சம்பந்தப்பட்ட உண்மைகளைத் தோண்டி எடுக்கிறதுக்கு முந்தி அந்த உண்மைகள் எனக்கு வேணும்! அதுக்கு உன்னோட ஒத்துழைப்பு வேணும்!''

"என்னது..! என்னோட ஒத்துழைப்பா... நாந்தான் அந்த இன்வெஸ்டிகேஷன் பொறுப்பிலிருந்து விலகிட்டேனே?''

திவாகர் சிரித்தான்.

".எஸ்.பி. நம்பெருமாள் சொன்ன துக்காக நீ விலகியிருக்கலாம் ஆனா, எனக்காக நீ அந்த இன்வெஸ்டிகேஷனை கண்டினியூ பண்ணணும்...''

ரிதன்யா உறைந்தாள்.

"உனக்கு என்ன பைத்தியமா...? டி.எஸ்.பி.  நம்பெருமாளே கதிகலங்கிப் போய் அந்த விஷயத்திலிருந்து பின்வாங்கிட்டார். என்னையும் நீ இதுல இன்வால்வ் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டார். அவர் என்னோட பாஸ். அவரோட பேச்சைத்தான் கேட்கணும்!''

திவாகர் குரலை உயர்த்தினான் "இதோ பார் ரிதன்யா! நீ இனிமே என்னோட பேச்சைத்தான் கேட்கணும். உனக்கு ரெண்டு வாரம் அவகாசம். இந்த ரெண்டு வாரத்துக்குள்ளே அந்த நள்ளிரவு வானவில் என்னோட கண்ணுக்குத் தெரியணும். தெரிய வைக்கணும். உன்னால அது முடியாத பட்சத்துல நீ நிரந்தரமா உன்னோட ரெண்டு உறவுகளையும் இழக்க வேண்டி வரும்...''

திவாகர் உதிர்த்த உக்கிரமான வார்த்தைகளில் உருக்குலைந்து போன ரிதன்யா தன்னிச்சையாய் தளர்ந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

சென்னை. ராத்திரி மணி ஏழு.

அடையாறின் மையத்தில் இருந்த 'ஸ்கை வ்யூ’ ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் தன்னுடைய 'சான்ட்ரோ’ காரை நிறுத்திவிட்டு சந்தன நிற சஃபாரியில் இறங்கினார் கமிஷனர் ராஜகணேஷ். ஏழு மாடிகளோடு பிரமாண்டம் காட்டிய ஹோட்டலின் ரிசப்ஷன் ஹால் ஏதோ ஒரு ஏர்போர்ட்டின் லவுஞ்ச் போல பரபரப்பாய் இருந்தது. பெரிய டி.வி. திரைகளில் கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருக்க, இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுக் கொண்டிருந்தது.

ராஜகணேஷ் ரிசப்ஷன் கவுன்ட்டரில் சித்தனவாசல் ஓவியம் போல உட்கார்ந்திருந்த அந்த 19 வயது சொர்க்கத்துக்கு முன்பாக போய் நின்றார். கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஒரு பில்லை ப்ரிப்பேர் செய்துகொண்டிருந்த அந்தப் பெண். நிமிர்ந்தாள். பென்சில் கோடு புருவங்களுக்கு கீழே இரண்டு அலையடிக்காத கடல்கள் தெரிய, பீட்ரூட்டின் சிவப்பு சதைபிடிப்பான உதடுகளில் உறைந்து போயிருந்தது.

'யெஸ்...!'' சொல்லி அவள் புன்னகைத்த போது முத்துச்சரம் ஒன்று விநாடி நேரம் தெரிந்து உடனே மறைந்தது.

ராஜகணேஷ் குரலைத் தாழ்த்தினார்.

"ஒரு தகவல் வேண்டும்.''

"ப்ளீஸ்...''

ராஜகணேஷ் தன் சட்டைப் பையில் வைத்து இருந்த ஞானேஷின் போட்டோவை எடுத்துக் காட்டினார்.

'இவரை உங்களுக்குத் தெரியுமா?'

அவன் போட்டோவை வாங்கிப் பார்த்துவிட்டு அந்த விநாடி மறைவதற்கு முன் தலையாட்டினாள். காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த தங்கத்துணுக்குகள் ரம்மியமாய் அசைந்தன.

'ஸாரி... தெரியலை.'

'இட்ஸ் ஓ.கே... நேற்றைக்கு ராத்திரி இந்த ஹோட்டலில் ஏதாவது 'ஹைடெக்’ மீட்டிங் நடந்ததா?'

அந்த ரிசப்ஷனிஸ்ட் பதில் சொல்வதற்குமுன் பக்கவாட்டில் அந்தக் குரல் கேட்டது. 'எக்ஸ்க்யூஸ்மீ ஸார்...'

ராஜகணேஷ் திரும்பினார்.

நடுத்தரவயதில் வழுக்கைத் தலையோடு டை அடித்த மீசையுடன் ஃபுல்சூட்டில் அந்த நபர் தெரிந்தார். ஒரு மெல்லிய புன்முறுவலோடு சொன்னார்.

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 6

'ஸார்... ஐயாம் புவனேந்திரன்... இந்த ஹோட்டலின் மானேஜர். போலீஸ் கமிஷனரே எங்க ஹோட்டலுக்கு வந்திருக்கீங்க... பர்ப்பஸ் என்னனு தெரிஞ்சுக்கலாமா ஸார்?'

'ஒரு என்கொயரி...'

'என்னோட ரூமுக்குப் போயிட

லாம் ஸார்... ப்ளீஸ் கம்!'  சொன்ன புவனேந்திரன் ரிசப்ஷன் ஹாலின் கோடியில் இருந்த தன்னுடைய அறையை நோக்கிப் போனார். ராஜகணேஷ் பின்தொடர்ந்தார்.

ஒரு நிமிட நடைக்குப் பின் இருவரும் அறைக்குள் நுழைந்தார்கள். புவனேந்திரன் கமிஷனருக்கு இருக்கையை காட்டிவிட்டு, எதிரில் இருந்த இருக்கையில் சாய்ந்தார்.

'என்ன என்கொயரி ஸார்?'

'நேத்து உங்க ஹோட்டலில் ஐ.டி பீப்பளோட ஹைடெக் மீட்டிங் ஏதாவது நடந்ததா?'

'இல்லையே!'

'நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க...!'

'இதுல யோசனை பண்ண ஒண்ணுமேயில்லை... கடந்த ஒரு வார காலமா இந்த ஹோட்டலில் ஒரு ஃபங்க்‌ஷன்கூட நடக்கலை ஸார்...'

'ஆர் யூ ஷ்யூர்?'

'நோ டவுட் ஸார்!'

'இந்த போட்டோவைப் பாருங்க..!' ஞானே ஷின் போட்டோவை எடுத்து நீட்டினார் ராஜகணேஷ். புவனேந்திரன் வாங்கிப் பார்த்துவிட்டு தன் பரந்த நெற்றியில் நான்கைந்து வியப்பு வரிகளை உற்பத்தி செய்தார்.

'யார் ஸார் இந்தப் பையன்?'

'பேரு ஞானேஷ். டெல்லியில் இருக்கிற ஒரு பெரிய ஐ.டி கம்பெனியில் நல்ல வேலை. நேத்து ராத்திரி உங்க ஹோட்டலில் ஒரு ஹைடெக் மீட்டிங் நடக்க இருக்கிறதா சொல்லி இந்த ஞானேஷ் ஒரு கால்டாக்ஸியில் புறப்பட்டு வந்து இருக்கான். அந்த டாக்ஸி எதுன்னு ட்ரேஸ் அவுட் பண்ணி டிரைவரையும் புடிச்சுட்டோம். டிரைவரோட ஸ்டேட்மென்ட்படி ஞானேஷ் இந்த ஹோட்டலுக்குத்தான் வந்திருக்கான். அதுக்கப்புறம் ஞானேஷ் வீடு திரும்பலை. இன்னிக்குக் காலையில் ஒரு மண் சட்டியில் இது ஞானேஷோட அஸ்தி என்கிற ஒரு குறிப்போடு யாரோ சாம்பலை அனுப்பி வெச்சிருக்காங்க... சாம்பலை முதற்கட்ட பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்த்ததில் அது மனித சாம்பல்தான்னு தெரிய வந்திருக்கு!'

புவனேந்திரனின் விழிகளில் மருட்சி பரவியது. 'என்ன ஸார்! விஷயம் விபரீதமா இருக்கு!'

'அதனால்தான் இந்த கேஸ்ல நானே 'இன்வால்வ்’ ஆகியிருக்கேன். பையன் பெரிய இடம். ரிட்டையர்ட் ஹைகோர்ட் ஜட்ஜ் பார்த்தசாரதியோட ஒரே பையன். அவன் டெல்லியிலிருந்து இன்னிக்குத்தான் சென்னைக்கு வந்து இருக்கணும். ஆனா, ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்திருக்கான். வீட்டுக்கு தெரியாமே ஒரு ஃப்ரெண்ட்டோட வீட்ல தங்கிகிட்டு உங்க ஹோட்டலுக்கு வந்திருக்கான். இங்கே ஒரு ஹைடெக் மீட்டிங் நடக்கிறதா சொல்லியிருக்கான்.'

'ஸார்...! ஞானேஷ் பொய் சொல்லியிருக் கார்னு நினைக்கிறேன். நேத்து ராத்திரி அவர் இங்கே வந்திருந்தா இந்த ஹோட்டலில் பொருத்தப்பட்டு இருக்கிற சி.சி.டி.வி. கேமராக்கள் ஏதாவது ஒண்ணுல பதிவாகி இருப்பார். இப்பவே அதை 'செக்’ பண்ணிப் பார்த்துடலாம்!'  சொன்ன புவனேந்திரன் தனக்கு முன்னால் இருந்த இன்டர்காமின் ரிஸீவரை எடுத்து ஒரு பட்டனை அழுத்திவிட்டு பேசினார்.

'கிறிஸ்டோபர்...'

'ஸார்...'

'நேத்து சாயந்தரம் ஆறுமணியிலிருந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் சி.சி.டி.வியில் பதிவான பதிவுகளை டி.வி.டிக்கு ஃபார்மட் பண்ணியாச்சா?'

'பண்ணியாச்சு ஸார்!'

'அந்த டி.வி.டியை எடுத்துகிட்டு என்னோட ரூமுக்கு உடனடியா வாங்க!'

'இதோ...ரெண்டு நிமிஷத்துல வர்றேன் ஸார்.'

புவனேந்திரன் ரிஸீவரை வைத்துவிட்டு டி.வி.டியோடு வரப்போகும் கிறிஸ்டோ பருக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

இரண்டு நிமிடம் ஐந்து நிமிடமாகி, பத்து நிமிடமாக மாறி, இருபது நிமிடமாக வளர்ந்து, முப்பது நிமிடமாக உருவெடுத்த பின்பும் கிறிஸ்டோபர் வரவில்லை.

தொடரும் 

ராஜேஷ்குமார்  ஓவியங்கள்: அரஸ்