Published:Updated:

“பூச்சிக்கொல்லிக்கான ஆய்வுக்குழுவே ஒழுங்காகச் செயல்படவில்லை..!” - யவத்மால் மாவட்டத்திலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட்

“பூச்சிக்கொல்லிக்கான ஆய்வுக்குழுவே ஒழுங்காகச் செயல்படவில்லை..!” - யவத்மால் மாவட்டத்திலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட்
“பூச்சிக்கொல்லிக்கான ஆய்வுக்குழுவே ஒழுங்காகச் செயல்படவில்லை..!” - யவத்மால் மாவட்டத்திலிருந்து அதிர்ச்சி ரிப்போர்ட்

வழக்கமாக விவசாயத் தற்கொலைகள்தான் மகாராஷ்டிராவைக் கதிகலங்க வைக்கும். இந்தமுறை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியதால் 35 விவசாயிகள் இறந்திருப்பது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மகாராஷ்டிர மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. 

மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா பகுதி பருத்திச் சாகுபடிக்கு பெயர்போனது. இந்தப் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை அதிகம் பயன்படுத்தியதால் அப்பாவி விவசாயிகளின் உயிரைப் பறித்துள்ளன நச்சு மருந்துகள். இந்தப் பூச்சிக்கொல்லி மருந்தைத் தயாரித்த கார்டா கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தின்மீது ’ஏமாற்றுதல் மற்றும் மனித உயிர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருள்களை விற்பனை செய்தல்’ என்ற சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோடு சின்ஜென்டா என்ற மருந்து கம்பெனியின்மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

ஜூலை மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை 35 விவசாயிகள் இறந்துள்ளனர். 450 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் யவத்மால் மாவட்டத்தில் மட்டும் 19 பேர் இறந்துள்ளனர் என்று மகாராஷ்டிரா மாநில அரசு கணக்கெடுத்திருக்கிறது.
 
இது சம்பந்தமான வழக்கில் நீதிமன்றம், மகாராஷ்டிரா மாநில வேளாண் கூடுதல் செயலாளர் மற்றும் யவத்மால் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறப்பு விசாரணைக் குழு யவத்மால் மாவட்ட வேளாண் வளர்ச்சி அலுவலரைப் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. யவத்மால் மாவட்டத்தில் இயங்கும் கிருஷி கேந்திராக்களின் உரிமையாளர்களுக்கு எதிராக 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதோடு அவற்றின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னையின் மூல காரணம் மாவட்ட நிர்வாகம் இதைச் சரியாகக் கண்காணிக்காதுதான். பெரும்பான்மையான உரக்கடைகள் உரிமம் இல்லாமல் இயங்கியதற்கும் அனுமதி அளித்துள்ளது. அதனால்தான் தடைச் செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி விற்பனையில் இவ்வளவு பெரிய பிரச்னையாக இது உருவெடுத்துள்ளது என்று கருதுகிறது மகாராஷ்டிரா அரசு.  

இந்த விவரங்களை கேள்விப்பட்டு யவத்மால் மாவட்டத்துக்கு 10 பேர் கொண்ட குழுவோடு சென்று, இறந்த விவசாயிகளின் குடும்பங்களையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரையும் சந்தித்துவிட்டு திரும்பியிருக்கிறார் நீடித்த, நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பின் (ஆஷா) ஒருங்கிணைப்பாளர் கவிதா குருகந்தி. 

இதுகுறித்து அவர் பேசியபோது, "இதுவொன்றும் இந்தியாவில் முதன்முறையாக நடக்கக்கூடியதல்ல. இதற்கு முன்பே பீகாரில் மோனோ குரோட்டாபாஸ் வைத்திருந்த கன்டெய்னரில் சமையல் எண்ணெயைப் பயன்படுத்தியபோது இறந்த பள்ளி மாணவர்கள், 2001-04ம் ஆண்டு காலத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பலர் இறந்தனர், அதற்கடுத்து பஞ்சாப் மாநிலத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி பயன்படுத்தியதால் பலர் சுயநினைவை இழந்து மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்கள். இப்போது விதர்பா பகுதியில் வயலில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளால் அநியாயமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் யவத்மால் மாவட்டத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாங்கள் அக்டோபர் 9, 10-ம் தேதிகளில் யவத்மால் மாவட்டம், கலாம்ப், ஆர்னி பகுதிகளில் இறந்தவர்களின் குடும்பங்களையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்தோம். இவர்களில் பெரும்பான்மையோர் விவசாயிகள், விவசாயக் கூலிகள். மருத்துவ பதிவேடுகளின்படி அனைவரும் வாந்தி, பேதி, மூச்சுத் திணறல், தலைவலி, தலைச்சுற்றல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர். பி.டி பருத்தி வந்தபிறகு கடுமையான பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. இவற்றில் இரண்டு, மூன்று பூச்சிக்கொல்லி மருந்துகளை ஒன்றாகக் கலந்து பயன்படுத்துகிறார்கள். இந்தப் பூச்சிக்கொல்லிகளில் மெத்தைல் கார்போமெட்ஸ், நியோ நிக்கோட்டினாய்டு, ஆர்கனோ பாஸ்பேட்ஸ் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த கனிமங்கள் கலந்துள்ளன. இவற்றைக் கட்டுப்பாட்டில் வைப்பது அவ்வளவு எளிதானதல்ல. நாக்பூர், அகோலா, அமராவதி, வார்தா உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதல் மகாராஷ்டிரா அரசுக்கும் மட்டும் பங்கில்லை. இந்திய அரசுக்கும் பங்கிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 

இந்தியாவில் நடைமுறையில் இருந்துவரும் 66 பூச்சிக்கொல்லி மருந்துகளை ஆய்வு செய்ய 2013-ல் அனுபம் வர்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழு இந்த சம்பவத்தில் தொடர்புடைய பூச்சிக் கொல்லிகளை அனுமதித்திருக்கிறது. இதைத்தவிர மோனோ குரோட்டாபாஸ், ஆஸ்பேட், குளோரோபிரிபோஸ் போன்ற பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்த அனுமதியளித்தது. சொல்லப்போனால் அந்தக் குழு தன்னுடைய பணியை ஒழுங்காக செய்யவில்லை. ஆனால், இங்கே நடைமுறையில் இருக்கும் பூச்சிக் கொல்லிகளில் பல வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழு நினைத்திருந்தால் பல பூச்சிக்கொல்லிகளை தடை செய்திருக்க முடியும். இங்கே மருந்து கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம். மீண்டும் 2018-ல் ஆய்வு குழு அமைக்க வேண்டும். அப்போதாவது உண்மையாகச் செயல்படுவார்களா என்று பார்ப்போம்.

பூச்சிக் கொல்லிகளால் இவ்வளவு உயிரிழப்புகள் நடந்தபிறகு, மருத்துவமனைகள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் இதையொரு ஆவணமாக காரணம் அறியும் குழு பதிவு செய்யவேண்டும். இப்படி பதிவு செய்தால் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்துகள், நச்சு என்பதை ஆய்வின் மூலம் நிரூபிக்க முடியும். இல்லையென்றால் எந்தவொரு பலனும் ஏற்படப்போவதில்லை.

இப்போது மாவட்ட நிர்வாகத்தின்மீது பழியைப் போட்டு மகாராஷ்டிரா அரசு தப்பிக்க பார்க்கிறது. உண்மையில் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இதில் பங்கு இருக்கிறது. பல வருடங்களாக ‘பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்யுங்கள்’ என்று இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். அதேபோன்று ‘மரபணு மாற்று பயிர்களை அனுமதிக்காதே’ என்று கேட்டு வருகிறோம். இந்தக் கோரிக்கைகளை வைத்தபோது ஏளனமாகத்தான் பார்த்தார்கள். இப்போது உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நாங்கள் பயணித்த கிராமங்களில் விவசாயிகளின் மரண ஓலம் கேட்டுக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டுள்ளவர்களின் கண்ணீர் எங்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. இந்த ஓலம் மாநில அரசுக்குக் கேட்கிறதோ இல்லையோ, நிச்சயமாக மத்திய அரசுக்கு கேட்க வேண்டும்.  தற்காலிக நிவாரணமாக இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மருத்துவ உதவியை தடையின்றி வழங்க வேண்டும். நீண்ட கால அடிப்படையில் இந்தியா முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்தை தடை செய்வது ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும்" என்றார்.