ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

பாரதி பாஸ்கர் 'பளிச்' ரகசியம்!

பாரதி பாஸ்கர் 'பளிச்' ரகசியம்!

பாரதி பாஸ்கர் 'பளிச்' ரகசியம்!

'காலைல எழுந்ததும், மகாகவியோட 'என்னைப் புதிய உயிராக்கி’ங்கற பாட்டைப் பாடினாத்தான், அன்றைய பொழுது அருமையா விடிஞ்சது மாதிரி இருக்கும் எனக்கு. புதுசாப் பிறந்துட்ட மாதிரி, புது ரத்தம் பாய்ஞ்சதுபோல் கிடைக்கிற அந்த எனர்ஜி அலாதியானது!'' என்று இலக்கியத்தில் கடவுள் தேடுகிறார் பாரதி பாஸ்கர். வார்த்தைகளால் வசீகரம் தேடி வைத்திருக்கும் பேச்சாளர்!

##~##
''எண்ணங்களுக்குச் சக்தி உண்டு. அது வார்த்தையாகும்போது, இன்னும் கூடுதல் சக்தியோடு வருது. அதனோட நல்ல அதிர்வலைகள், நல்ல பலனைத் தந்தே தீரும். பிரார்த்தனைகள்ல மந்திரங்களைச் சொல்லச் சொன்னது, அந்தப் பலனை அகிலமே அடையணும் என்பதற்காகத்தான்! நல்ல எண்ணங்கள், நல்ல வார்த்தைகளாகும். அந்தச் சொற்களை தினமும் சொல்லச் சொல்ல, நமக்குள்ள ஒரு புத்துணர்ச்சி பரவும். அது, எதிலும் எவரிடமும் சிநேகிதத்தைத் தரும். தோழமை உணர்வு வந்துவிட்டால், நோய்களுக்கோ, கவலைகளுக்கோ மனதில் இடமேது?!'' - இயல்பான அழகில் முகம் மலரச் சிரிக்கிறார்.

''காலை நேரம் நமக்கானது. அந்த நேரத்தை, அன்றைய அருமையான விடியலை, அற்புதமாக்கும் வித்தை நம்ம கையிலதான் இருக்கு. கண்கள் மூடி, நாம் விடுற மூச்சை உற்றுக் கவனிக்கும்போது, மனதில் ஒரு அமைதி பரவும். சுவாசத்துல சீரான தன்மை வெளிப்படும். இருபது நிமிஷம், தினமும் இப்படி மூச்சுப் பயிற்சி செஞ்சாலே, டென்ஷனும் இல்லை; டிப்ரஷனும் வராது!

அடுத்ததா, 'ஸ்ட்ரெச் பயிற்சி’. (ஷிtக்ஷீமீtநீலீ ணிஜ்மீக்ஷீநீவீsமீs) இதைப் பண்ணினா, கால்களில்  வலியே வராது. 'இனிமே புதுசா வரணுமாக்கும்?’ என்று அலுத்துக் கொள்பவர்கள், இந்தப் பயிற்சியைச் செஞ்சா, இருந்த கால்வலியும் காணாமப் போயிடும். ஒரு நாளின் 24 மணி நேரத்துல வீடு, கணவன், குழந்தைகள், அலுவலகம்னு நிறைய நேரங்களை ஒதுக்குறோம். நமக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினா, ஆரோக்கியம் நிச்சயம்!

பாரதி பாஸ்கர் 'பளிச்' ரகசியம்!

அதிகமான வேலை, ரொம்பவே அதிகமான சோர்வுன்னு இருக்குறப்ப, 'சாந்தி ஆசனம்’தான் எனக்கு மிகப் பெரிய ரிலாக்ஸ்! ஒரு விரிப்பில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு, நம்முடைய உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் நிறுத்தி, நிதானமா... மனசுக்குள்ளே நினைச்சுப் பார்க்கணும். அந்த உறுப்புகள்கிட்ட மானசீகமா சின்னதா ஒரு குசல விசாரிப்பு; சின்னதா ஒரு நன்றி; குழந்தையைக் கொஞ்சுவதுபோல, ஒரு சீராட்டல்; 'நீ நல்லா இருந்தாதான் நான் நல்லா இருக்கமுடியும்’னு ஒரு பாராட்டு... எல்லாம் முடிச்சு, எழுந்திருச்சதும் உடம்புல ஒரு எனர்ஜி, புத்துணர்ச்சி கிடைக்கும் பாருங்க... அது பரம சுகம்! அயர்ச்சி, தளர்ச்சி எல்லாமே காணாமப் போயிருக்கும்.

'நீரின்றி அமையாது உலகு’ன்னு சொல்லுவாங்க. அது நம்ம உடம்புக்கும் பொருந்தும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூணு லிட்டர் தண்ணீராவது குடிக்கணும். இந்தத் தண்ணீர், வெறும் திரவம் இல்லை. கிட்டத்தட்ட அதுவே ஓர் அற்புதமான டாக்டர்! எல்லா இடங்களிலும் ஏ.சி. புழக்கத்துக்கு வந்துட்டதால, நிறையப் பேருக்கு தாகம் எடுக்குறதில்ல; அதனால அவங்க அதிகமா தண்ணி குடிக்குறது இல்ல. ஆனா நான், ஆபீஸ்ல என் மேஜைல கண்ணுல படுற மாதிரி, ஒரு பாட்டில்ல தண்ணியை வெச்சிருப்பேன். மதிய உணவு வேளைக்குள்ளே, இந்தப் பாட்டில் தண்ணி மொத்தத்தையும் காலி பண்ணிடணும்னு முடிவு பண்ணிப்பேன். அப்படியே செஞ்சுடுவேன்! மதிய உணவுக்குப் பிறகு, மீண்டும் ஒரு பாட்டில் தண்ணீர்... அன்னிக்கு சாயந்திரத்துக்குள்ளே அதுவும் காலியாகிடும். ஆரோக்கியத்தையும் அழகையும் தரக்கூடியது தண்ணீர். நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்களேன்!  

பாரதி பாஸ்கர் 'பளிச்' ரகசியம்!

இன்னொரு விஷயம்... உடம்புக்கு ஒத்துக்காத, லேசுல ஜீரணம் ஆகாத உணவுகளைத் தவிர்த்துடணும். இன்றைய தலைமுறைக்கு இருக்கிற மிகப் பெரிய கெட்ட பழக்கம், உணவு முறைதான். உணவுல ஜாக்கிரதை உணர்வு ரொம்பவே அவசியம். அதே போல, 'ஸ்ட்ரெஸ்’ (ஷிtக்ஷீமீss) எனும் மன அழுத்தம், சோர்வுக்கும் நோய்களுக்கும் 'ரெட் கார்ப்பெட்’ விரிக்கிற மோசமான ஒன்று. இதிலிருந்து விடுபடுறதுக்கு தியானம் மற்றும் மௌனப் பயிற்சிகள் பக்கத் துணையா இருக்கு. வாரத்துக்கு ஒரு நாளேனும், நமக்கு என்ன விளையாட்டு பிடிக்குமோ, அந்த விளையாட்டை ஆடலாம். விளையாட்டுன்னா வீடியோ கேம்ஸ் இல்லை. உடலுக்குப் பயிற்சி தர்ற விளையாட்டு. அது மன அழுத்தத்திலிருந்து ரிலாக்ஸ் கொடுக்கும்.

சமீபத்துல, என் மகளை டென்னிஸ் பயிற்சிக்கு சேர்க்கப் போயிருந்தேன். அப்போ, தன்னோட பையனைச் சேர்க்கறதுக்காக வந்திருந்த ஒரு அம்மாவும் பயிற்சியில கலந்துக்கிட்டாங்க. அவங்களுக்கு 'மட்டை’யைப் பிடிக்கக்கூடத் தெரியலை. ஆனாலும், கத்துக்கணுங்கற ஆர்வமும், முயற்சியும், அவங்க உடம்பையும் மனசையும் இளமையா வெச்சிருந்தது. மனசுல மலர்ச்சி இருந்துட்டா, அது மெள்ள மெள்ள ஆன்மிகத்தை நோக்கி, கடவுளை நோக்கி நம்மைக் கைப்பிடிச்சு அழைச்சுட்டுப் போகும். இதெல்லாம் அந்தத் தருணத்துல நான் உணர்ந்த விஷயங்கள். முயற்சி பண்ணிப் பாருங்க; உங்களாலயும் உணரமுடியும்!'' - ஆத்மார்த்தமாகச் சொல்லி தன் ட்ரேட் மார்க் புன்னகையில் நிறைவு செய்தார் பாரதி பாஸ்கர்.

'அட... நானும்கூட ஆரோக்கியத்திற்கான ஓர் அருமருந்துதான்!’ என்பதை சொல்லாமல் சொல்லிற்று அவரின் பளீர் சிரிப்பு!

- இரா.மங்கையர்கரசி
  படங்கள்: ப.சரவணகுமார்