Published:Updated:

கேண்டிட், டீசர், போஸ்ட் வெட்டிங் ஷூட்! போட்டோகிராபர் பரிதாபங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கேண்டிட், டீசர், போஸ்ட் வெட்டிங் ஷூட்! போட்டோகிராபர் பரிதாபங்கள்
கேண்டிட், டீசர், போஸ்ட் வெட்டிங் ஷூட்! போட்டோகிராபர் பரிதாபங்கள்

கேண்டிட், டீசர், போஸ்ட் வெட்டிங் ஷூட்! போட்டோகிராபர் பரிதாபங்கள்

புகைப்படங்கள், நாம் மறுபடியும் செல்ல முடியாத கடந்த காலங்களை நம் கண்முன் நிறுத்திக்காட்டும் மாயாஜாலம்கொண்டவை. நம் சிரிப்பு, அழுகை, நண்பர்களுடனான பொழுதுகள் எனப் பலவற்றை நமக்கு பத்திரப்படுத்தித் தருவது கேமராக்களும் புகைப்படக்காரர்களும்தாம். நாம் `பாஸ்போர்ட் சைஸ்' போட்டோக்களுக்காக ஸ்டூடியோவில் `நீல நிற' துணிகளுக்கு முன் அமர்ந்து கிடந்த நாள்களும் உண்டு. தீபாவளி போன்ற பண்டிகை நாளில் குடும்பத்துடன் சென்று `ஃபேமிலி' போட்டோ எடுப்போம். இல்லாவிட்டால், நெருங்கிய உறவினர் திருமணத்தில் மேடையைவிட்டே நகராமல் கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் போஸ் கொடுப்போம். திருமண ஆல்பங்களை உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று காட்டிவிட்டு வருவது திருமணத்துக்குப் பிறகான மிக முக்கியமான சம்பிரதாயமாக இருக்கும். அதில் மனைவியின் உறவினர்கள் யாரேனும் `அவுட் ஆஃப் ஃபோக்கஸ்' ஆகிப்போனால் கணவர்கள் அவுட் ஆவது தனிக்கதை. இப்படிப் புகைப்படம் என்பதே எப்போதாவது நடக்கும் அதிசயமாக இருந்தது. ஆனால் இன்றோ காலை, மாலை, இரவு மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன் ஒரு செல்ஃபி, ஒரு கேண்டிட், சாப்பிட்ட பிறகு ஒரு குரூப் செல்ஃபி என `க்ளிக்' சூல் உலகாகவே மாறிவிட்டது. அதிலும், முக்கியமாக  திருமணத்துக்குப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்களை என்னென்ன இம்சைகளுக்கெல்லாம் நாம் ஆளாக்கினோம் என்பது பற்றிப் பார்ப்போம். 

நிச்சயதார்த்தம்:

திருமணத்தின்போது போட்டோகிராஃபர்களை `வெச்சு செய்துவிடுவது' என்பது புது ட்ரெண்ட். டிரெடிஷனல், கேண்டிட், ஹெலிகேம், திருமணத்துக்கு முன்பு ஒரு போட்டோஷூட், திருமணத்துக்குப் பிறகு ஒரு போட்டோஷூட், வெட்டிங் வீடியோ டீஸர், ட்ரெய்லர், சாங் வீடியோ என எல்லாவற்றையும் புக் செய்துவிடுவோம். ஆனால், அதற்கான தொகையை அவர் கேட்கும்போது `என்ன பாஸ், போட்டோ எடுக்கிறதுக்குப் போய் இவ்வளோ காசா?' என அவரை காண்டாக்குவோம். திருமண நிச்சயதார்த்தத்தின்போது தாம்பூலம் மாற்றுகையில் ஒருவர் கேண்டிட் எடுப்பவரையும், மற்றொருவர் டிரெடிஷனல் எடுப்பவரையும் பார்த்துத்தொலைப்பர். `சார், இந்த கேமரா இல்லை சார், அந்த கேமராவைப் பாருங்க சார்' எனக் கூறினால் அவர் `கட்டப்பா' ரேஞ்சுக்கு முறுக்கிக்கொள்வார்.

`கிப்ஃட்' கொடுக்க மேடைக்கு வரும் சஃபாரி சூட் ஆசாமிகள் ஏதோ பள்ளி ஆண்டுவிழாவுக்கு வந்த சீஃப் கெஸ்ட் ரேஞ்சுக்கு `ஃபீல்' பண்ணி போஸ்கொடுப்பர். கேக் வெட்டுவதற்காக மேடைக்கு வரும் நண்பர்கள் கேக் வெட்டி, ஸ்ப்ரே அடித்து மாப்பிள்ளையோடு சேர்த்து போட்டோகிராஃபர்களையும் அலங்கோலமாக்கிவிடுவர். மேடைக்கு வரும் `சினேகன்' டைப் ஆள்கள், மாப்பிள்ளைக்கு அரை மணி நேரமாகக் கட்டிப்புடி வைத்தியம் நடத்தி,  போட்டோகிராஃபரும் சாப்பிடப் போவார் என்பதையே யோசிக்காமல் காண்டேத்துவார். ஒவ்வொருவராக ஏறி கேமராவுக்கு  போஸ் கொடுப்பதோடு நில்லாமல், அவர்களின் மொபைலையும் கேமராமேனிடம் குடுத்து போட்டோ எடுக்கச் சொல்லிவிட்டு பிறகு அவரே ஒரு செல்ஃபியும் எடுத்துச் செல்வார். (உங்களெல்லாம் சாயங்காலம் 6 மணிக்கு `மவுன்ட் ரோடு' டிராஃபிக்ல மாட்டிவிடணும்ய்யா!).

ஒருவழியாக 12 மணிக்கு போட்டோ எடுத்து முடிக்கும்போது, மேடை அலங்காரம் செய்பவர் போட்டோகிராஃபரை `எம்புட்டு நேரமாய்யா எடுப்பீங்க?' என்ற ரேஞ்சுக்கு முறைப்பார். இதோடு முடியாமல் மணமக்களை வேறு தனியாக நிச்சயதார்த்த டிரெஸில் போட்டோ எடுக்க லைட்டை செட் செய்து தோளில் கை வைத்தபடி போஸ் கொடுக்கச் சொன்னால், மாப்பிள்ளை வேறு வெட்கப்பட்டு கடுப்பேற்றுவார். போட்டோக்கள் எடுக்கும்போது `வினுசக்கரவர்த்தி' சாயலில் ஒரு கிடா மீசை வந்து, `மாப்பிள்ளை - பொண்ண கஷ்டப்படுத்தாதீங்கப்பா. தூங்கவேணாமா அவுங்க' எனப் பஞ்சாயத்து பேசி, கேமராவை ஆஃப் செய்வதற்கு வழிசெய்வார்.  

திருமணம்:

அதிகாலை சீக்கிரமாகவே எழுந்து மேடை அலங்காரம் தொடங்கி ஐயர் மந்திரம் ஓதுவது, விருந்தினர்கள் ஒவ்வொருவராக வருவது, வந்திருக்கும் குழந்தைகள் என கேண்டிட் பணியைச் செவ்வனே செய்யும்போது யாராவது சீர்திருத்தச் சிங்காரம் ஒருவர் வந்து `பொண்ணு மாப்பிள்ளையை போட்டோ எடுக்காம அங்கே என்னய்யா பண்ற?' என முறைப்பார். போட்டோகிராஃபர்களுக்கு இக்கட்டான நேரமே தாலி கட்டும் நேரம்தான். மணமகன் - மணமகளின் கழுத்தில் தாலி கட்டும் தருணத்தைப் படம்பிடிக்க மொபைலைத் தூக்கிக்கொண்டு வந்து கேமரா முன்னாடி நிற்பவர்களைத் துரத்தவேண்டியிருக்கும். அட்சதை அரிசி மணமேடையைவிட போட்டோகிராஃபர்களின் தலையில்தான் அதிகம் இருக்கும்.  

மணமக்கள் போட்டோஷூட்: 

இதுதான் போட்டோகிராஃபர்களின் மனவலிமையைச் சோதித்துப்பார்க்கும் கட்டம். `பாகுபலி' டிசைன், சூர்யா - ஜோதிகா டிசைன், ராஜா - ராணி டிசைன், கேம் ஆஃப் த்ரோன்ஸ் டிசைன் எனச் சகட்டுமேனிக்கு டிசைன் ரெடி பண்ணி போட்டோ ஷூட் செய்யச்சொல்லி போட்டோகிராஃபருக்கு `ஸ்ட்ரெச்சர்' ரெடி பண்ணுவார்கள். ஏதாவது ஒரு படத்தின் லவ் புரப்போசல் சீனை நடித்து, அதைத் திருமண வீடியோவுக்கு டீஸராக ரெடிபண்ணுவார்கள். இந்த `போட்டோ படலம்' முடிந்த பிறகு `எடிட்டிங் படலம்'. கல்யாண வீடியோ எடிட் செய்வதற்கு போட்டோகிராஃபருக்கு `குருட்டுத்தனமான ஒரு புத்திசாலித்தனமும், முரட்டுத்தனமான முட்டாள்தனமும்' தேவைப்படுகின்றன. 

வீடியோவின் பின்னணியில் ஒலிப்பதற்காக மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒரு சாங் லிஸ்ட், பொண்ணு வீட்டிலிருந்து ஒரு சாங் லிஸ்ட் என வெரைட்டி வெரைட்டியாக காண்டேத்துவார்கள். ஒருவழியாக எல்லா லிஸ்ட்களுக்கும் பொதுவான ஒன்றை ரெடிபண்ணி வீடியோவில் சேர்த்துவிடுவர். அதன் பிறகு ஆல்பம், வீடியோ சகிதம் டெலிவர் செய்தால், `எங்க சித்தப்பா ஒரே ஒரு போட்டோவுலதான் இருக்கார். எங்க மூணாவது மாமா வீடியோவுலேயே இல்லை' என பேட்ச்வொர்க்குக்காக அனுப்பிவிடுவார்கள். பேசினபடி பேமென்ட்டும் வராது. இப்படி சகல சைடுகளிலிருந்தும் அடிவாங்கி உட்கார்ந்திருக்கும்போது, நெருங்கிய நண்பன் போன் செய்வான். `தோள் கொடுப்பான்டா என் தளபதி' என நீங்களும் ஆசையாக அட்டெண்ட் செய்வீர்கள். `மச்சி ஃபேஸ்புக் புரொஃபைல் பிக்சர்ல நான் வயசான மாதிரி இருக்கேன்னு என் ஆளு சொன்னாடா (வயசான மாதிரி இல்லை, வயசானவன்தானே நீ!?) வேற போட்டோ எடுத்துத் தா' என்பான். ஏது... மறுபடியும் மொதல்ல இருந்தா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு