Published:Updated:

சார்லியின் இனிப்புத் தொழிற்சாலைப் பயணம்! #CharlieAndTheChocolateFactory

சுரேஷ் கண்ணன்
சார்லியின் இனிப்புத் தொழிற்சாலைப் பயணம்! #CharlieAndTheChocolateFactory
சார்லியின் இனிப்புத் தொழிற்சாலைப் பயணம்! #CharlieAndTheChocolateFactory

விநோதமாகவும் ரகசியமாகவும் இயங்கும் ஒரு சாக்லேட் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைப்பவர்களில் சார்லியும் ஒருவன். ஆனால், அதிர்ஷ்டம் அடித்தது சிறுவனுக்கல்ல, தொழிற்சாலையின் உரிமையாளருக்குத்தான். ஏன் என்பதைப் படத்தின் இறுதியில் உணர்வீர்கள். தொழிற்சாலையின் உள்ளேயிருக்கும் பல வியப்பூட்டும் சங்கதிகளுடன், குடும்ப அமைப்பின் அருமையை ஒரு நீதியாக Charlie And The Chocolate Factory திரைப்படம் உணர்த்துகிறது. 

சார்லி என்கிற சமர்த்துப் பையன், வறுமையான குடும்பத்தைச் சார்ந்தவன். அவனுடைய தந்தை, பற்பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் சொற்ப சம்பளத்தில் இருக்கிறார். வசதி இல்லாவிட்டாலும் அவர்களின் வீட்டில் அன்பும் பாசமும் நிறைந்திருக்கிறது. சார்லியின் அப்பா மற்றும் அம்மா ஆகியோரின் பெற்றோரான இருவழி தாத்தா, பாட்டிகளும் அவர்களுடன் இணைந்து வசிக்கிறார்கள். இந்நிலையில், பற்பசை தொழிற்சாலையில் இயந்திர உபயோகம் வருகிறது. இதனால், சார்லியின் தந்தை வேலையை இழக்கிறார். அந்தக் குடும்பத்தில் வறுமையின் நிழல் இன்னும் அழுத்தமாகப் படிகிறது. 

அந்த ஊரில் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற பிராண்ட் அது. ‘வோன்கா’ என்பது அதன் பெயர். விதவிதமான சாக்லெட்டுக்களைத் தயாரிக்கும் அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளர், வில்லி வோன்கா. இந்தத் தொழிற்சாலைக்கு ஒரு முன்கதை இருக்கிறது. அதைத் தாத்தாவின் மூலம் அறிகிறான் சார்லி. 

இதர சாக்லேட் நிறுவனங்களின் தயாரிப்புக்கும் வில்லி வோன்கா சாக்லேட்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ‘வோன்கா’ பிராண்ட் சாக்லெட் மற்றும் ஐஸ்க்ரீம்கள், குளிர்பதனப் பெட்டியின் அவசியமில்லாமல் நீண்ட நேரத்துக்கு உருகாமல் இருக்கும். வெயிலில் வைத்தாலும் உருகாது. சுவையைப் பற்றி சொல்லவே வேண்டாம். இந்த ரகசியம் புரியாமல் இதர கம்பெனிகள் தலையைப் பிய்த்துக்கொள்கின்றன. தன் உளவாளிகளை வோன்கா நிறுவனத்துக்கு அனுப்பி, தயாரிப்பு ரகசியத்தை அறிந்துகொள்கின்றன. இதனால், வோன்கா பிராண்டின் தனித்துவம் குறையத் தொடங்குகிறது. 

தனது ஊழியர்களில் சிலரே தனக்குத் துரோகம் செய்ததை அறியும் வில்லி வோன்கா, மனம் உடைந்து தொழிற்சாலையை மூடிவிடுகிறார். அனைத்துப் பணியாளர்களுக்கும் வேலை போய்விடுகிறது. சார்லியின் தாத்தாவும் அதில் ஒருவர். அதற்குப் பிறகு அந்தத் தொழிற்சாலை நீண்ட காலத்துக்கு மூடியே கிடக்கிறது. 

ஒரு நாள் தொழிற்சாலையிலிருந்து புகை வருவதை மக்கள் பார்க்கிறார்கள். கதவுகள் திறக்கப்படாவிட்டாலும், தொழிற்சாலை மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டதை உணர்கிறார்கள். யார் அங்கே பணிபுரிகிறார்கள். எவரும் உள்ளே செல்லாமல் வெளியே வராமல் எப்படித் தொழிற்சாலை இயங்குகிறது. இதெல்லாம் மர்மமாக உள்ளன. வில்லி வோன்காவை அதற்குப் பிறகு எவராலும் பார்க்க முடிவதில்லை. 

ஒருநாள் வோன்கா நிறுவனத்திடமிருந்து பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு வருகிறது. உலகமெங்கும் விற்கப்படும் ‘வோன்கா’ சாக்லேட்டுக்களில், ஐந்து சாக்லேட்டுக்களின் உள்ளே ‘கோல்டன் டிக்கெட்’ இருக்கும். அதைக் கைப்பற்றும் அதிர்ஷ்டசாலி சிறுவர்களுக்கு, ரகசியமாக இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்ல, அந்த ஐந்து சிறுவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்குக் கற்பனைசெய்து பார்க்கமுடியாத பெரும் பரிசு அளிக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. 

இந்த அறிவிப்பு தீயாக உலகமெங்கும் பரவுகிறது. கடைக்கு விற்பனைக்கு வரும் ‘வோன்கா’ சாக்லேட்டுக்கள், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் விற்றுத் தீர்கின்றன. சார்லியும் தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என ஏங்குகிறான். ‘எனக்கு ஒரு வாய்ப்பு வந்தால், நான் பணிபுரிந்த தொழிற்சாலையை மறுபடியும் பார்க்க விரும்புவேன்’ எனத் தாத்தாவும் ஆவலுடன் சொல்கிறார். 

கோல்டன் டிக்கெட் கிடைப்பது அத்தனை சுலபமானதாக இல்லை. தன் செல்ல மகள் அடம்பிடிக்கும் காரணத்தால், ஆயிரக்கணக்கான சாக்லேட்டுக்களை வாங்கும் ஒரு பணக்காரருக்கு முதல் அதிர்ஷ்டம் அடிக்கிறது. இதுபோலவே மேலும் மூன்று சிறார்களுக்கு அதிர்ஷ்ட சீட்டுகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிடிவாதக்கார்களாக, வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

மீதம் இருப்பது ஒரேயொரு டிக்கெட். வறுமை ஒரு பக்கம் இருந்தாலும், சார்லியின் பெற்றோர் அவனுக்கு ஒரு சாக்லெட் வாங்கிப் பரிசாக அளிக்கிறார்கள். ஆவலுடன் சாக்லெட்டைப் பிரித்துப் பார்க்கிறான் சார்லி. கோல்டன் டிக்கெட் இல்லை. அவனது ஏக்கத்தைப் புரிந்துகொள்ளும் தாத்தா, தனது அரிய சேமிப்பிலிருந்து பணம் தருகிறார். ஓடிச்செல்லும் சார்லி சாக்லெட்டுடன் திரும்புகிறான். ம்ஹூம்... அதிலும் டிக்கெட் இல்லை. இதற்கிடையில் ரஷ்யாவில் உள்ள ஒரு சிறுவனுக்கு ஐந்தாவது அதிர்ஷ்ட சீட்டு கிடைத்துவிட்டதாகத் தகவல் வருகிறது. ஆனால், அது போலி என்கிற தகவலும் வருகிறது. தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறான் சார்லி. 

ஆனால், அதிர்ஷ்டம் அவனை விடுவதாயில்லை. சார்லி நடந்து செல்லும்போது சாலையில் கேட்பாரின்றி கிடக்கும் பணத்தைப் பார்க்கிறான். அந்தப் பணத்தில் கடைசி முறையாக ஒரு சாக்லேட் வாங்குவோம் என முடிவுசெய்து வாங்குகிறான். கைகள் நடுங்க சாக்லேட்டைப் பிரித்துப் பார்க்கிறான். வாவ்... அதில் கோல்டன் டிக்கெட். மகிழ்ச்சியுடன் தன் குடும்பத்துக்கு இந்தத் தகவலைச் சொல்கிறான். 

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறார்களுடன் அவர்களது குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெரியவர் வரலாம் என்கிற விதியின்படி, சார்லியுடன் அவனின் தாத்தா செல்கிறார். இதர நான்கு சிறார்களும் அவர்களின் அப்பா அல்லது அம்மாவுடன் வருகிறார்கள். நீண்ட காலமாக திறக்கப்படாமலிருந்த தொழிற்சாலையின் ரகசிய கதவுகள் திறக்கின்றன. விநோதமான தோற்றத்தில் இருக்கும் வில்லி வோன்கா புன்னகையுடன் அவர்களை வரவேற்கிறார். பணியாளர்கள் எவருமே இல்லாத தொழிற்சாலையினுள் சாக்லேட்கள் எப்படி உற்பத்தியாகின்றன. வோன்கா பிராண்டின் தனித்துவமான சுவை எப்படி அமைகிறது. இந்தப் போட்டியில் எவர் வென்றார்கள். அதிர்ஷ்டசாலி பெற்ற பெரும் பரிசு என்ன. ஏன் இந்தப் போட்டியை வில்லி வோன்கா நடத்தினார். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை மிக மிக சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். 

ரோல் தால் என்கிற புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் 1964-ம் ஆண்டில் எழுதிய நாவல்தான் இந்தத் திரைப்படம். சிறார்களுக்காகப் பல படங்களை இயக்கிய டிம் பர்ட்டன், திரைப்படத்தை இயக்கியுள்ளார். சாக்லேட் தொழிற்சாலையின் உரிமையாளர், ‘வில்லி வோன்கா’வாக நடித்திருப்பவர், ஜானி டெப். அவரது விநோதமான உடல்மொழியும் பூடகமான வசனங்களும் ஒப்பனையும் ரகளையாக இருக்கின்றன. (மைக்கேல் ஜாக்சனின் உடல்மொழியை ஜானி டெப் நகல் எடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்). 

சிறுவன் சார்லியாக, ஃபிரெடிக் ஹக்மோர் (Freddie Highmore) அசத்தியுள்ளான். அமைதியான முகபாவத்துடன், தனது ஆர்வத்தைக் கேள்விகளாக முன்வைக்கும் அருமையான நடிப்பு. அவனின் தாத்தாவாக வரும் டேவிட் கெல்லியின் குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. பாட்டியின் அற்புதமான புன்னகை, முதியோர்களுக்குரிய பிரத்யேக அழகுடன் வசீகரிக்கிறது. 

இந்தப் படத்தின் முக்கியமான அம்சம், சாக்லேட் தொழிற்சாலைக்குள் நிகழும் பயணம். அறிவியல் புனைவுத் திரைப்படங்களுக்கு நிகராக பல ஆச்சர்யங்கள். சாக்லேட் பான நீர்வீழ்ச்சி, சாப்பிடக்கூடிய வகையிலான சாக்லேட் புல் என அசரவைக்கும் கற்பனை. பாண்டிச்சேரி இளவரசருக்காக, சாக்லேட்டால் அமைக்கப்பட்ட மாளிகையை வில்லி வோன்கா கட்டித்தருவதும், வெயில் பட்டு அது உருகி விழுவதும் எனப் படம் முழுவதும் பிரமிக்கவைக்கும் காட்சியகள். கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்திருக்காமல், அரங்கப் பொருள்களை திட்டமிட்டு உருவாக்கியிருப்பதும் பாராட்டத்தக்கது. சாக்லேட் தயாரிப்புக்காக, வால்ட் கொட்டைகளைப் பரிசோதிக்க அணில்கள் வரும் காட்சியில், உண்மையான அணில்களைப் பல மாதங்களுக்குப் பழக்கியிருக்கிறார்கள். இதுபோல படம் உருவான பின்னணித் தகவல்களைத் தேடி வாசித்தால், பல விஷயங்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. 

தனது அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகளாலும் செய்கைகளாலும் இதர சிறார்கள் விநோதமான தண்டனைகளைப் பெறுகிறார்கள். சாக்லேட் தயாரிப்பின்மீது உண்மையான ஆர்வமும் மதிப்பும் வைத்திருக்கும் சார்லி, இறுதியில் அந்தப் பெரும் பரிசைப் பெறுவதில் நீதியொன்று இருக்கிறது. அந்த சாக்லேட் தொழிற்சாலைக்கு உரிமையாளர் ஆவதுதான் அந்தப் பரிசு. 

ஆனால், 'உனது குடும்பத்தைப் பிரி்ந்து வந்தால்தான் சாக்லேட் தொழிற்சாலையை அடைய முடியும்' என்கிறார் வோன்கா. அதை மறுக்கும் சார்லி, ‘எனது குடும்பத்தின் அன்புதான் பிரதானமானது’ என்கிறான். அது வோன்காவை திடுக்கிட செய்கிறது. சாக்லெட்டின் மீதான அதீத ஆர்வத்தால், தனது தந்தையைப் பிரிந்து ‘சாக்லேட் உருவாக்குவதே’ தனது வாழ்வு என்றிருக்கும் வில்லி வோன்காவுக்கு படிப்பினை கிடைக்கிறது. தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்கும் பயணத்துக்கு இடையே வில்லி வோன்காவின் இளமைப் பருவ காட்சிகள் அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. 

புலன்களால் நுகரப்படும் தற்காலிக இன்பத்தைவிடவும் குடும்பம் என்கிற அமைப்பிடம் கிடைக்கும் அன்பும் பாசமுமே நிலையானது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இத்திரைப்படம். குறும்புக்காரச் சிறுவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது வரும் பாடல், உதவியாளர்களாக வரும் ஊம்ப்பா லூம்ப்பா குழுவின் நடனமும் அற்புதமானவை. (உதவியாளர்கள் என்று சொன்னாலும், இதில் நடித்திருப்பவர் ஒரேயொருவர்தான். தீப் ராய் என்கிற இந்திய வம்சாவளியைச் சார்ந்த கனடா நாட்டுக்காரர்). 

......

டிம் பர்ட்டன் உருவாக்கிய மிகச் சிறந்த படைப்புகளின் வரிசையில் இத்திரைப்படத்தை நிச்சயம் இணைக்கலாம். குழந்தைகளுடன் கண்டுகளிக்க வேண்டிய மகத்தான திரைச்சித்திரம், 'சார்லி அண்டு தி சாக்லேட் ஃபேக்டரி'.