Published:Updated:

60 நாளில் 50 தற்கொலைகள்... என்ன நடக்கிறது கோச்சிங் சென்டர்களில்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
60 நாளில் 50 தற்கொலைகள்... என்ன நடக்கிறது கோச்சிங் சென்டர்களில்?
60 நாளில் 50 தற்கொலைகள்... என்ன நடக்கிறது கோச்சிங் சென்டர்களில்?

60 நாளில் 50 தற்கொலைகள்... என்ன நடக்கிறது கோச்சிங் சென்டர்களில்?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதன்கிழமை இரவு, ஹைதராபாத்தில் உள்ள சுராராம் பகுதியைச் சேர்ந்த மோனிகா என்கிற 21 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி  `இப்போதெல்லாம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கே எனக்கு பயமாக உள்ளது. என் வாழ்க்கை மிக மோசமாகச் சென்றுகொண்டிருக்கிறது'  என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவிட்டு, தற்கொலை செய்துகொண்டார். அதே புதன் இரவு, ஆந்திராவின் நஸ்வித் பகுதியில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றின் விடுதியில் பூர்ணலக்‌ஷ்மி நரசிம்மமூர்த்தி என்கிற 16 வயது மாணவி தூக்கிலிட்டுக்கொண்டார்.

மறுநாள் வியாழக்கிழமை காலையில் ஹைதராபாத்தில் உள்ள நீட்  தேர்வுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்றின் விடுதியில் சம்யுக்தா என்கிற 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டார். அதே நாள் அதே காலை வேளையில் ஆந்திராவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி சிப்புருப்பள்ளி மாலதி என்கிற 15 வயது மாணவி தன் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.  24 மணி நேரத்துக்குள் ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறிய துயரச் சம்பவங்கள் இவை. 

கடந்த அறுபது நாளில் மட்டும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், தற்கொலை செய்துகொண்டனர்.  இவர்களில் பெரும்பாலானோர் நீட் மற்றும் பொது இன்ஜினீயரிங் நுழைவுத்தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தவர்கள். கடந்த சில வருடங்களாகவே ஐ.ஐ.டி மற்றும் பொது மருத்துவ நுழைவுத்தேர்வுகளில் அதிக அளவில் மாணவர்களை வெற்றிபெறச் செய்துவரும்  ஆந்திரா மற்றும் தெலங்கானா, அதன் பொருட்டு பல மாணவர்களின் உயிரைக் காவுகொடுக்கிறது.

ஏஜென்டுகள் மூலம் மாணவர்களைச் சேர்க்கும் பயிற்சி மையங்கள்:

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பள்ளிகளைப்போலவே பயிற்சி மையங்களிலும் மாதிரித்தேர்வு நடத்தி `ரேங்க் கார்டு' வழங்கும் முறை பல பயிற்சி மையங்களில் இருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பில் 95 விழுக்காடு மதிப்பெண் பெற்ற `சம்யுக்தா', நீட் தேர்வுக்கான மாதிரித்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதன் காரணமாகவே மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து எழுத்தாளர் மற்றும் குழந்தைகள் நல ஆலோசகர் ஆயிஷா நடராஜனிடம் பேசினோம்...

``ஆந்திராவில் ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே மாணவர்களைப் போட்டித்தேர்வுக்குத் தயார்படுத்தும்  வழக்கமிருக்கிறது. அவர்களின் வயதுக்கு, கல்விநிலைக்கு மீறிய `ஷார்ட்கட்' நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள திணிப்பதுண்டு. மத்திய அரசு நடத்தும் இருபதுக்கும் மேற்பட்ட போட்டித்தேர்வுகளுக்கும் சேர்த்து `பேக்கேஜாக' பல லட்சம் ரூபாய் தொகையை பெற்றோரிடம் வாங்கிவிட்டு, மாணவர்களைப் படாதபாடு படுத்துவது பயிற்சி மையங்களின் வழக்கமாகவே இருந்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, பயிற்சி மையங்கள் ஏஜென்ட்கள் மூலம் ஆள் சேர்ப்பு வேளைகளில் ஈடுபடுவதும் உண்டு. பயிற்சி மையங்களில் சேருவதற்காக அரசு வங்கிக்கடன் வழங்குவதால் படிக்கும் மாணவர்கள் ஒரு சுமையுடனேதான் தேர்வை அணுகவேண்டியுள்ளது'' என்றார் ஆதங்கத்தோடு.

தொடர்ந்து பேசிய அவர், ``தற்போது தமிழகத்திலும் இந்த நிலை தொடங்கியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயிற்சியாளர்கள் தமிழகத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் நோக்கில் அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் தமிழகத்தின் பிரபலமான பயிற்சி மையம் ஒன்று கொடுத்த அழுத்தம் தாங்காமல், வீட்டைவிட்டு ஓடிய மூன்று மாணவர்களைக் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் பணம் மற்றும் மனநிலை சார்ந்த அழுத்தங்களே தற்கொலைகளுக்குக் காரணமாகின்றன. ஆனால், எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் கல்வியைப் பணமாக்கி, மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறது அரசாங்கம்'' எனத் தன் வேதனைகளை வார்த்தைகளில் வடித்தார்.

`பணம் மற்றும் போட்டிதான் கல்வி' என்ற நிலையால் ஏற்படும் விபரீதங்கள்:

கல்வி என்பது, அறிவுசார் துறையாகயின்றி பணம் சார்ந்த துறையாக மாறிவிட்ட சூழலில், கல்விக்கொள்கை சார்ந்த விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் கல்வியாளர் அ.மார்க்ஸிடம் இதுகுறித்து கேட்டோம்...

``இன்றைய சூழலில் வெறும் போட்டிக்களமாக மட்டுமே கல்வி பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட கல்விக்கொள்கையில் உயர்கல்விகள் தனியார்வசமாகி பணம் மட்டுமே பிரதானமாகப் பார்க்கப்படுகின்றன. இந்தச் சூழலில்,  தற்போது கொண்டுவந்திருக்கும் நுழைவுத்தேர்வு போன்றவற்றால் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களும் இங்கு கால் ஊன்றும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது. பத்தாம் வகுப்புக்குப் பிறகு மேற்படிப்பு படிக்கக்கூடியவர்களுக்காக ஒரு கல்வி, மேற்படிப்புப் படிக்க முடியாதவர்களுக்காக ஒரு கல்வி என மக்களைப் பிரிக்கும் சூழல் உருவாகவுள்ளது. நடுத்தர மற்றும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளும் நிலை அதிகரித்துவருவது கொடுமையானதுதான்'' என்றார்.

`அனிதா'வைப் பிரிந்து இன்னும் இரண்டு மாதங்கள்கூட முழுமையாகாத நிலையில், இன்றைய கல்வியும்  அதை வைத்து பணம் பார்க்கும் நிறுவனங்களும் நம்முடைய பல `அனிதாக்களை' காவு கேட்கின்றன.  அனிதாக்கள், எப்போதும் பெருங்கனவு காண்பவர்கள்;  கல்வியின் வழியே மாற்றத்தை நிறுவ விரும்புபவர்கள்; பணத்தை மட்டுமே முன்னிறுத்தும் வியாபாரக் கல்விக்கு எதிராகக் குரலெழுப்புபவர்கள். `பிராய்லர்' மாணவர்களை மட்டுமே உருவாக்க விரும்பும் அரசுக்கும் `கல்வித்தந்தை'களுக்கும், அனிதாக்களின் குரல் மட்டுமல்ல... அனிதாக்களே தேவைப்படுவதில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு