Published:Updated:

2.5 கிராம்தான்... ஆனால் மனிதனுக்குப் பாம்பை விட ஆபத்தான உயிரினம் இது!

2.5 கிராம்தான்... ஆனால் மனிதனுக்குப் பாம்பை விட ஆபத்தான உயிரினம் இது!
2.5 கிராம்தான்... ஆனால் மனிதனுக்குப் பாம்பை விட ஆபத்தான உயிரினம் இது!

உலகம் முழுவதும் கொசுக்களுக்கு எதிரான ஒரு போரை ஒவ்வொரு நாடும் நேரடியாக நடத்திக்கொண்டிருக்கின்றன. அந்தப் போரில் வருடத்திற்கு 600000 மனிதர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். 200 மில்லியன் மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். உலகில் ஆபத்தான உயிரினமாக  இருப்பது பாம்போ, புலியோ, சிங்கமோ  மற்ற உயிரினங்களோ அல்ல; கொசு தான் என்கிறது உலக சுகாதாரத்துறை. வெறும் 21 நாள்கள் மட்டுமே உயிர் வாழக்கூடிய கொசுக்கள் நிகழ்த்துகின்ற ஆபத்து நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு, யானைக்கால், மஞ்சள் நோய் என நோய்  வைரஸ்களைப் பரப்புகின்ற கொசுக்கள் மத்தியில் இன்றைய  Talk of the town `ஏடிஸ்'.  ’ஏடிஸ் எகிப்தி’ என்கிற பெயர் கொண்ட கொசுதான் கொசுக்கள் உலகின் டான். ஒவ்வொரு வருடமும் ஒரு வைரஸை பரப்புகின்ற `ஏடிஸ்' கொசுவைக் குறி வைத்து பல நாடுகளும் எது எதையோ செய்து பார்த்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அணுகுண்டுகளைத் தயாரிக்க முடிந்த வல்லரசு நாடுகளால் கூட இந்தக் கொசுவுக்கு எதிராக ஒரு சிறிய தீர்வைக் கூட கண்டறிய முடியவில்லை. கொசுக்களின் வாழ்நாள் மூன்று வாரங்களே எனத் தீர்மானித்த அறிவியல் கூட  இன்று  `ஏடிஸ்' கொசுவின் வாழ் நாள் 40 என்கிறது. 


’புலி கொசு’ என அழைக்கப்படுகிற ஏடிஸ் கொசு மனித இரத்தத்தை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் உறிஞ்சி தனது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட இரத்தம், சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு உணவாகச் சேகரிக்கப்படும். நொதியம் எனப்படுவது உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாகச் செய்யத்தூண்டும் ஒரு வினையூக்கி. அதேவேளை மனித உடலிலிருந்து கொசு இரத்தத்தை உறிஞ்சும் பொழுது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும். இதனால் இதன் நுண்ணிய குழலுக்குள் இரத்தம் செல்ல ஏதுவாக இரத்தத்தின் அடர்த்தி குறைகிறது. நோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே நோயற்றவரை இக்கொசு கடிக்குமாயின் நோய் தொற்று பரவ ஆரம்பிக்கும். ஒரு முறை கொசு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிவகுக்கிறது. பெண் கொசு தனது உணவை (இரத்தத்தை) நோய் தொற்றியுள்ளவரிடமிருந்து பெற்ற பின்னர், அவை வைரஸாக கொசுவின் குடற்கலங்களை அடைகின்றன. 8 – 10 நாள்கள் கழித்து கொசுவின் ஏனைய இழையங்களுக்குத் வைரஸ்கள் பரவுகின்றன. இவ்வகையில் உமிழ்நீர்ச் சுரப்பியையும் நோய்க்குக் காரணமான வைரஸ் சென்றடைகின்றன. நோயில்லாத ஒருவரை இக்கொசுக்கள் கடிக்கும்போது வைரஸ்களை உமிழ்நீர் மூலம் அவருக்குள் செலுத்துகின்றன. இதன் மூலம் அவரும் தொற்றுக்கு உள்ளாகின்றார். கொசு, உடனடியாகவோ அல்லது 8-10 நாள்கள் சென்ற பின்னரோ நோய்த்தொற்றைப் பரப்புவதில் முக்கியக் காரணியாக இருக்கின்றன.

பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் இரத்தத்தைஉறிஞ்சும் என்றாலும் அதற்கு இரத்தம் முதன்மையான உணவல்ல. ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபட்ட பிறகு, முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே பெண் கொசுக்கள் இரத்தம் குடிக்கின்றன. பெண்கொசுக்கள் மனிதரிடம் இரத்தத்தை உறிஞ்சியவுடன் முட்டையிடத் தேவையான புரதத்தைப் பெற்றுக்கொள்கின்றன. பின்னர் இவைத் தேங்கியுள்ள நீர் நிலைகளில் முட்டையிடுகின்றன அனாஃபிலிஸ், ஏடிஸ், ஆக்லரோடாட்டஸ். கொசுக்களின் முட்டைகள் ஒவ்வொன்றாக இடப்படுகின்றன. இவை ஒன்றிணைவதில்லை. க்யூலிசிடே, க்யூலெக்ஸ் போன்ற கொசுக்களின் முட்டைகள் சுமார் 100-200 எண்ணிக்கையில் இருக்கும். நல்ல நீரில் முட்டையிடுகிற ஒரே கொசு ஏடிஸ் கொசு மட்டும்தான். இவை நீரின் மேற்புறத்தில் மிதக்கின்றன. ஏடிஸ், ஆக்லரோடாட்டஸ் போன்ற இனங்கள் ஈரமான இடங்களில் முட்டையிடுகின்றன. சாதகமான சூழலில் இவை நீரில் சென்று பொறிக்கப்படுகின்றன. பெரும்பாலான கொசு முட்டைகள் 48 மணி நேரத்திற்குள் பொறிக்கப்பட்டு குடம்பியாகின்றன.

ஏடிஸ் கொசு என்றில்லாமல் கொசுக்களின் வாழ்க்கை சுழற்சியில் அவை நான்கு முக்கியப் பருவங்களைக் கொண்டுள்ளன. அவை முட்டை, குடம்பி, கூட்டுப்புழு, மூதுயிரி ஆகும். இவற்றின் உருமாற்ற நிலைகள் பொதுவாகச் சுற்றுச்சூழலின் வெப்பநிலையைப் பொருத்து வேறுபடும். 4-30 நாள்கள் வரையிலாக இதன் பருவ உருமாற்றம் நிகழ்கிறது. இதன் தேவையான வெப்பநிலை 60°F முதல் 80°F ஆகும். கொசு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் கொசு இனத்தின் பெண் கொசுக்களே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்குக் கடத்தும் விநியோகிப்பாளராகவும் இவை இருக்கின்றன. கொசுக்களின் தலையிலுள்ள நுண் சென்சார் மயிர் கால்கள் மூலமாக மனிதனின் மூச்சுக் காற்றும் மற்றும் வியர்வை வாசனையை வைத்து துள்ளியமாக ரத்தம் உறிஞ்சும் பகுதியைக் கண்டுபிடிக்கின்றன அதுமட்டும் அல்ல; வெப்ப அளவீடுகளைக் கொண்டும் டார்கெட்டை துரத்திப் பிடிக்கின்றன.

WHO என்கிற சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் உயிரினங்களால் நிகழ்கிற இறப்புகள் எண்ணிக்கையை வெளியிட்டிருக்கிறது. சிங்கங்களால் ஆண்டுக்கு 100 உயிரினங்களும், முதலையால் 1000 உயிரினங்களும் உயிரிழக்கின்றன என வரிசைப் படுத்தப்பட்டுள்ள பட்டியல், வருடத்திற்கு மனிதனால் 475000 உயிரினங்கள் கொல்லப்படுவதாகச் சொல்கிறது. இதில் துயரமான செய்தி ஆண்டுக்கு 725000 மனிதர்கள் கொசுக்களால் கொல்லப்படுகிறார்கள். ஆனால், ஒரு கொசுவின் சராசரி எடை எவ்வளவு தெரியுமா? வெறும்  2.5 கிராம்தான்.