Published:Updated:

"தொலைந்துபோன கொசுவின் கண்ணாடி" குழந்தைகளுக்கான இரவு நேரக் கதை #BedTimeStory

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"தொலைந்துபோன கொசுவின் கண்ணாடி" குழந்தைகளுக்கான இரவு நேரக் கதை #BedTimeStory
"தொலைந்துபோன கொசுவின் கண்ணாடி" குழந்தைகளுக்கான இரவு நேரக் கதை #BedTimeStory

"தொலைந்துபோன கொசுவின் கண்ணாடி" குழந்தைகளுக்கான இரவு நேரக் கதை #BedTimeStory

குழந்தைகளுக்குப் புதிய உலகத்தைப் பரிசாக அளிப்பவை கதைகளே. ஆனால், தற்போது பல வீடுகளில் கதைகள் சொல்வதே இல்லை. கதை சொல்ல விரும்பும் பெற்றோர்களுக்கு உதவும் விதமாக சூப்பரான கதை இதோ!
 

“இம்மா, இங்க கவனி, நான் பலகையில் எழுதுறதைக் கவனிக்காம என்ன செய்ற?” என்றார் ஆசிரியர் கொசு. பக்கத்திலிருந்த 'இட்டி' கொசுவிடம் நடந்ததைச் சொன்னது இம்மா கொசு. அன்றைய பாடம் “எப்படி மனிதர்கள் அடிக்க வரும்போது தப்பிப்பது?” என்பதே. இவர்களுக்கு, பள்ளிக்கூட வகுப்புகளே மொத்தம் ஏழு நாள்கள்தான். முதல் நாள் எப்படிச் சாப்பாடு தேடுவது, அடுத்த நாள் பாடம் எப்படி மனிதர்களின் ரத்தத்தைச் சுவைப்பது, எந்த இடத்தில் மறைந்துகொள்வது, கொசுமருந்து போடப்பட்டதும் எப்படி அங்கிருந்து தப்பிப்பது, எப்படி நீண்டநாள் ஆரோக்யத்துடன் வாழ்வது என்று தினம் ஒரு பாடம். முன்னர் எல்லாம் ஐந்து நாள்தான் இருந்தது, இப்போதுதான் ஏழு நாள் பாடமாக மாறிவிட்டது. வாழ்க்கையில் மொத்தமே ஏழு நாள்கள்தான் பள்ளி. ஆனால், அதற்கே கொசுக்கள் மூக்கால் அழும்.

நம்ம இம்மாவின் பிரச்னைக்கு வருவோம். இம்மா தன்னுடைய மூக்குக்கண்ணாடியைத் தொலைத்துவிட்டது. கண்ணாடி இல்லாததால் பலகையில் எழுதியிருப்பது சரியாகத் தெரியவில்லை. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததால் வகுப்பைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார் ஆசிரியர். இம்மா கொசு கொஞ்சம் பயந்துவிட்டது. அப்பா எப்படியும் திட்டப்போகிறார். இம்மாவும் இட்டுவும் எல்லா இடத்திலும் இம்மாவின் கண்ணாடியைத் தேடினார்கள். ஓவென அழ ஆரம்பித்தது இம்மா. “பொறுமையா இரு, எனக்கு ஒரு துப்பறிவாளன் கொசு தெரியும் அவர் நிச்சயம் உன் கண்ணாடியைக் கண்டுபிடிச்சு கொடுத்திடுவார்”. உடனே இருவரும் அந்தத் துப்பறிவாளனைத் தேடிச்சென்றனர்.

இருட்டு அறையின் பின்புறம் சிலந்திகள் நிரம்பி இருந்த இடத்தில் துப்பறிவாளன் இருந்தார். அந்த இடமே விநோதமாக இருந்தது. “வாங்க கொசுக்களே, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?” என்று முக மலர்ச்சியுடன் கேட்டது துப்பறிவாளன் கொசு. தன் மூக்குக்கண்ணாடியைக் காணவில்லை என்ற விஷயத்தைத் தெரிவித்தது இம்மா. சில கேள்விகளைக் கேட்டது. ”என் பின்னாடி வாங்க” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியது துப்பறிவாளன்.

வழக்கமாக, கொசுக்கள் நேராகப் போகும் ஆனால் துப்பறிவாளன் கொசு திடீரென வலது புறமும் திடீரென இடதுபுறம் திரும்பித் திரும்பிச் சென்றது. பின்னாடி வந்த இரண்டு கொசுக்களும் கொஞ்சம் குழம்பிப்போயின. வேகமாகப் போய்க்கொண்டிருந்த துப்பறிவாளன் கொசு கொஞ்சம் வேகத்தைக் குறைத்தது. எதிரே ஆசிரியர் கொசு அமர்ந்துகொண்டிருந்தது “வணக்கம் ஆசிரியரே, நலமா?” என்று நலம் விசாரித்துவிட்டு மீண்டும் வேகம் பிடித்தது. இம்மாவின் வீட்டின் பக்கம் போகும் என எதிர்பார்த்தார்கள், ஆனால், துப்பறிவாளன் கொசு அவர்கள் பள்ளி வகுப்பு நடந்த பகுதிக்குச் சென்றது. அங்கும் இங்கும் தேடியது. இம்மாவும் இட்டுவும் அமைதியாகப் பார்த்தன. அட நாம தான் இங்க தேடிட்டோமே. அப்புறம் எப்படி துப்பறிவாளன் கொசு இங்கே கண்டுபிடிக்கும் என உள்ளுக்குள் சிரித்தன.

சரியாகப் பத்தாவது நிமிடத்தில் “இம்மா, அதோ அந்த பெஞ்சுக்குக்குக் கீழே உன் கண்ணாடி இருக்கும் பார். நீ வகுப்பில் அமர்ந்து இருந்த போது கண்ணாடியை கழற்றி வைத்திருக்கின்றாய், மின்விசிறியை யாரோ போட்டபோது கண்ணாடி பறந்து போயிருக்கு, அதை நீ கவனிக்கவில்லை” என்றது துப்பறிவாளன் கொசு. அட ஆமாம் சரியாக அங்கேதான் கண்ணாடி இருந்தது. இம்மா மகிழ்ந்தது.

“துப்பறிவாளன் கொசுவே, உங்களிடம் நான் ஒரு விஷயம் கேட்கவா?”
"கேளேன்”
“உங்களுக்கு நிறைய வயதாகிவிட்டது. ஆனாலும் எப்படிக் கண்ணாடி போடாம இருக்கீங்க? எப்படிக் கூர்மையா யோசிக்கிறீங்க?”
“அதுவா? நான் பச்சையா இருக்கும் எல்லாக் காய்கறிகளையும் விடாமல் சுவைத்துவிடுவேன், அதேபோல கேரட்டையும் விடுவதில்லை. மாலை வேளையில் டிவி பார்ப்பதை அறவே தவிர்த்துவிடுவேன். இன்னும் எவ்வளவு நாள் கடந்தாலும் என் கண் சிறப்பா தெரியும். மூளையும் வேலை செய்யும்..”

இதைச்சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஏதோ பொருள் அவர்கள் மூவரை நோக்கி வந்தது. “என் பின்னாடி வாங்க” எனக் கத்தியது துப்பறிவாளன் கொசு. அதன்படியே இம்மாவும் இட்டுவும் பின்னால் சென்றார்கள். மூவரும் பாதுகாப்பான இருட்டு அறையை அடைந்தார்கள். 
“அப்பாடி!”
“உங்க பள்ளியில சொல்லி கொசு ‘பேட்’ட்டிடம் இருந்து தப்பிப்பது எப்படின்னு பாடம் வைக்கச் சொல்லுங்க இட்டு, இம்மா.. அதைப்பற்றி நானே ஒரு புத்தகம் எழுதி இருக்கேன். நல்ல விளக்கப்படமும் அந்தப் புத்தகத்தில் இருக்கு”

“இன்னொரு நாள் பள்ளியா…” என வாயைப் பிளந்தது இட்டு. ஹேவென மற்ற இருவரும் அதனைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர்.

விழியன்: சிறுவர்களுக்கான கதைகளை எழுதி வருபவர். இவர் எழுதிய மாகடிகாரம் எனும் சிறுவர் நூல் விகடன் விருது பெற்றது. குழந்தை வளர்ப்புத் தொடர்பாகவும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு