கனவு, கனவுக்குள் கனவு எனக் கதை சொல்வதுதானே இப்போ ஃபேஷன். இதுவும் ஒரு ஜாலியான கனவுக் கதைதான். குழம்பாமல் படிங்க பார்ப்போம்!
சோம்பல் சோமு, அலாரம் அடிச்ச சத்தம் கேட்டு கண் விழிச்சான். செல்போனைப் பார்த்து முறைச்சான். அந்த முறைப்புக்குப் பயப்படாத செல்போன், விடாமல் சத்தம் போட்டுச்சு.
‘ம்... மணி எட்டு ஆச்சா? வேலைக்குப் போகணுமே. சே, ‘வேலை செய்யாமலே, மூணு வேளை சோறுனு ஒரு திட்டம் வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்’னு நினைச்சுக்கிட்டே அவனோட மனைவி, அலுப்பு அஞ்சலையைக் கூப்பிட்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆடி அசைஞ்சு வந்த அஞ்சலை, ஒரு எவர்சில்வர் தூக்கை நீட்டிக்கிட்டே, ‘‘இந்தாய்யா... போய் டீ வாங்கி வா. நானும் வேலைக்குப் போவணும்” என்றாள்.

‘‘எப்பவும் எனக்கே வேலை வை” என்றபடி சலிப்போடு கிளம்பினான் சோமு.
சோமு, ஒரு டாக்டர் வீட்டு பங்களாவில் வாட்ச்மேன் வேலை பார்க்கிறான். எலெக்ட்ரிக் ரயிலில் போகணும். தாம்பரத்தில் ஏறி, மாம்பலத்தில் இறங்கணும். ஆனால், ரயிலில் உட்கார்ந்ததும், எப்படித்தான் தூக்கம் வருமோ தெரியாது. இன்னிக்கும் அப்படித்தான்.
பல்லாவரம் தாண்டுறதுக்குள்ளே தூங்கிட்டான். திடீரென முழிப்பு வந்ததும் பக்கத்தில் இருந்தவரிடம், “மாம்பலம் வந்துருச்சா?” எனக் கேட்டான்.
“அது போய் 10 நிமிஷம் ஆவுது. இப்போ, வண்டி எக்மோரில் நிக்குது” என்றார் அவர்.
பதறி இறங்கிய சோம்பல் சோமு, எதிர்த் திசைக்கு ஓடி, இன்னொரு ரயிலில் ஏறினான். இரண்டு நிலையங்கள் தாண்டியதும், மறுபடியும் தூங்கிட்டான்.
அந்த ரயில், மாம்பலத்தைத் தாண்டி கிண்டி வந்துருச்சு. அப்போ, செல்போன் அடிச்சது. “என்னா சோமு, டியூட்டிக்கு வரலியா?” எனக் கேட்டார் முதலாளி.
இதுக்கு அப்புறம் வேலைக்குப் போக சோம்பலா இருந்ததால, “பாட்டிக்கு சீரியஸா இருக்கு சார், நாளைக்கு வந்திடுறேன்”னு சொல்லிட்டு, வீட்டுக்குப் போய் தூக்கம் போட்டான்.
வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்த அஞ்சலை, “என்னா, இன்னிக்கும் ரயில்ல தூங்கிட்டியா? சரி சரி, போய் ஒரு டீ வாங்கிட்டு வா” என்று தூக்கை நீட்டினாள்.

புலம்பியபடியே டீக்கடைக்குப் போனவன், அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்து தூங்கிட்டான். திடீரென குச்சியால் யாரோ அவன் முதுகில் தட்ட, திடுக்கிட்டு எழுந்து, “ஒரு டீ போடு மாஸ்டர்” என்றான்.
“என்னது டீயா? நான் உன் முதலாளி” என்று முறைச்சார், அங்கே நின்றிருந்த முதலாளி.
‘நான் எப்படி டூட்டிக்கு வந்தேன்? ஆகா... தூக்கத்துல வீடு, ரயிலில் தூக்கம், மறுபடியும் வீடுனு கனவு கண்டிருக்கோம் போல’ என நினைச்சான்.
“என்னடா முழிக்கிறே? மூஞ்சியைக் கழுவிட்டு வந்து வீட்டைக் கவனிச்சுக்க” என்றவர், காரில் கிளம்பிட்டார்.
சோமு, முகத்தைக் கழுவிவிட்டு, கதவைச் சாத்திவிட்டு, பக்கத்தில் இருந்த டீக்கடைக்குப் போனான். “மாஸ்டர், ஸ்டிராங்கா ஒரு டீ போடு” என்றான்.
‘‘தூக்கில் பார்சல் டீ போட்டு அரை மணி நேரம் ஆவுது. எடுத்துப் போ சோமு” என்ற குரல் கேட்டுச்சு.
அது, சோமு வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் டீக்கடை மாஸ்டர் குரல்.
‘இதென்னடா மாயம்? இந்த டீக்கடைக்கு எப்படி வந்தேன்? அப்போ, டூட்டிக்கு மட்டம் போட்டது நிசம்தான். முதலாளி மிரட்டினதுதான் கனவு. சே, இனிமே ஒழுங்கா ஒன்பது மணிக்குத் தூங்கி, காலையில ஆறு மணிக்கு எழுந்திடணும். விடிய விடிய டிவி-யைப் பார்த்தா இப்படித்தான்’னு நினைச்சுக்கிட்டே, டீ தூக்குடன் கிளம்பினான்.
வீட்டுக்கு வந்து, ‘‘இந்தா அஞ்சலை, இதான் கடைசி... இனிமே என்னை கடைக்கு அனுப்புற வேலையை வெச்சுக்காதே”னு சொல்லிக்கிட்டே, தூக்கை அஞ்சலை கையில் கொடுக்கப்போனான்.
“ஏய் சோமு, எவ்வளவு நேரமா ஹார்ன் அடிக்கிறேன். தூங்கிட்டு இருக்கியா? நைட் வாட்ச்மேன்னு பேர். விடிய விடியத் தூங்கவேண்டியது. உனக்குப் பயந்தே, என்னோட நைட் ஷிஃப்ட்டை மாத்திக் கொடுக்கச் சொல்லி டீன்கிட்டே கெஞ்சுறேன். கதவைத் திற” என்று முதலாளியின் அதட்டல் குரல் கேட்டது.
என்.எஸ்.வி.குருமூர்த்தி
பிள்ளை