Published:Updated:

செல்ஃபி பாரதி!

செல்ஃபி பாரதி!

செல்ஃபி பாரதி!

செல்ஃபி பாரதி!

Published:Updated:
செல்ஃபி பாரதி!

திராவும் பாரதியும் சகோதரிகள். ஆதிரா ஒன்பதாம் வகுப்பும், பாரதி ஆறாம் வகுப்பும் படிக்கிறாங்க. இவங்க ரெண்டு பேரையும் நல்லா படிக்கவைக்கணும்னு அப்பாவுக்கு ஆசை. அந்த நகரத்திலேயே பெரிய பள்ளியில் சேர்த்தார். அடுத்த வருஷமே, அதைவிட பெரிசா ஒரு பள்ளி அங்கே வந்தது. விடுவாரா அப்பா... அந்தப் பள்ளிக்குப் பிள்ளைகளை மாத்திட்டார்.

அந்தப் புதுப் பள்ளியில், புத்தகம் கிடையாது. கைக் கணினி... அதாங்க, டேப்லெட் (Tablet) மூலம்தான் பாடம் நடத்துவாங்க. ஒவ்வொரு பாடமும் அனிமேஷன் படமாக இருக்கும். அதனால், பிள்ளைங்க எல்லோரும் பாடங்களை ரொம்ப ஆர்வமா கத்துக்கிட்டாங்க. ஆதிராவும் பாரதியும் எந்த நேரமும் டேபும் கையுமாகவே இருப்பாங்க. இப்படிப்பட்ட பள்ளியில் படிப்பதில் ரெண்டு பேருக்கும் பெருமை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செல்ஃபி பாரதி!

இப்போ, செல்ஃபி எடுத்துக்கிறதுதானே டிரெண்டு. பாரதிக்கும் செல்ஃபி எடுத்துக்கிறதில் ஆர்வம். அப்பாவின் செல்போன் ஒரு நிமிஷம் கிடைச்சாலும், செல்ஃபியா எடுத்துத் தள்ளுவாள். ‘கிச்சனில் என் அன்பு அம்மாவுடன்’, ‘மொட்டை மாடியில் துணி எடுக்கும்போது’, ‘எல்.கே.ஜி படிச்சப்ப, பிஸ்கட் சாப்பிடும் போட்டியில் ஜெயிச்ச சர்ட்டிஃபிகேட்டுடன்’ என செல்ஃபி எடுத்து, வலைப்பூவில் பதிவுசெய்வாள்.

‘‘18 வயசுக்கு அப்புறம்தான் வலைத்தளத்தை யூஸ் பண்ணணும்” என்ற அப்பாவிடம் கெஞ்சி, பரதம் ஆடி (பின்னே... எத்தனை நாளைக்கு ‘கூத்தாடி’ன்னே சொல்றது) அப்பாவின் வலைப்பூவில் வெளியிடுவதற்கு பெர்மிஷன் வாங்கினாள்.

குட்டிக் குட்டி கவிதைகளையும், இந்தச் சமூகம் பற்றிய தனது ‘சின்ன மனசு சொல்லுது’ என்ற தலைப்பில் கருத்துக்களையும் பதிவுசெய்தாள். பாரதியின் வலைப்பூவை பலரும் பார்த்துப் பாராட்ட ஆரம்பிச்சதும், அப்பாவுக்குப் பெருமை பிடிபடலை.

‘‘நல்லா... அழகா எழுதுறே, சந்தோஷம். ஆனா, இந்த செல்ஃபி எடுக்கிறதைக் குறைச்சுக்க. நேற்று பக்கத்து வீட்டு நாயின் கன்னத்தோடு கன்னம் வெச்சு செல்ஃபி எடுத்திருக்கியே... டாபர்மேன் கடிச்சா என்ன ஆகறது?’’ என்றவர் குரலில் பயம்.

செல்ஃபி பாரதி!

‘‘கடிக்காதுப்பா... அவங்க வீட்டு ஷாலினியைவிட என்னைத்தான் அதுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பா,  இந்த டிரெஸ் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்குப்பா. அப்படியே ஒரு செல்ஃபி... ப்ளீஸ்ப்பா” என்ற பாரதி, அப்பாவின் கன்னத்தோடு கன்னம்வைத்து  ஒரு க்ளிக் செய்தாள்.

அப்பா முகம் முழுக்க பல்லாக போஸ் கொடுக்க, ‘‘ஐயோ அப்பா, நேத்து டாபர்மேனோடு இப்படித்தான் எடுத்துக்கிட்டா” என்று ஆதிரா தலையில் அடித்துக்கொண்டாள்.

அன்று, மூன்று பேரும் கோயிலுக்குப் போனாங்க. வழக்கமாக போகும் கோயில்தான். ஒவ்வொரு முறை போகும்போதும், ஒரு சிலையின் முன்னால் செல்ஃபி எடுத்துக்கிறது பாரதிக்குப் பழக்கம். இந்த முறை,  ‘கோயிலில் இருக்கும் எல்லா சிலை முன்னாடியும் நின்னு எடுத்தாச்சு. என்ன செய்யலாம்?’னு யோசிச்சப்போ, கண்ணில் பட்டுச்சு கோயில் யானை.

‘ஆகா... இவ்வளவு நாளா எப்படி மிஸ் பண்ணினோம்’ என நினைச்ச பாரதி, அப்பாவின் பாக்கெட்டில் இருந்து, ஐந்து ரூபாய் நாணயத்தையும் செல்போனையும் எடுத்துக் கொண்டு யானையை நோக்கி ஓடினாள்.

முதலில், ரூபாயை நீட்டினாள். அது வாங்கிக்கொண்டு, தனது தும்பிக்கையால் பாரதியின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்துச்சு. செல்ஃபி எடுக்கலாம்னு செல்போனை நீட்டிக்கிட்டே இன்னும் பக்கத்தில் போனதும், அந்த யானை செல்போனை லபக் என வாங்கி, கபக் என முழுங்கிடுச்சு.

‘‘ஐயையோ’’ எனக் கத்தினாள் பாரதி.

இது வரை சேர்ந்த காசுகளை எண்ணிக்கொண்டு இருந்த யானைப் பாகன், ‘‘என்ன பாப்பா என்ன?’’ எனப் பதறினார். அப்பாவும் ஆதிராவும் ஓடிவந்தாங்க.

‘‘யா... யானை... போ... போனை முழுங்கிடுச்சு” என்றாள் பாரதி.

‘‘டேய் ராமா... வாயைத் தொறடா’’ என்ற யானைப் பாகன், பல் டாக்டர் மாதிரி குனிஞ்சு, யானையின் வாய்க்குள் பார்த்தார்.

இவங்க என்ன செய்றதுனு புரியாமல் நிற்க, தலையைத் தூக்கிய யானைப் பாகன், ‘‘ஒண்ணும் கவலைப்படாதீங்க சார். நாளைக்குக் காலையில், யானை விட்டம் போடும்போது வாங்க” என்றான்.

‘‘என்னப்பா இவ்வளவு சாதாரணமா சொல்றே. யானைக்கு ஏதாவது ஆகிடப்போகுது” எனப் பதறினார் அப்பா.

செல்ஃபி பாரதி!

‘‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க சார். போன வாரம் என்னோட போனை முழுங்கிடுச்சு. காலையில் வந்துடுச்சு. இதோ பாருங்க” என்று தனது கையில் இருந்த செல்போனைக் காட்டினான்.

‘‘சரிதான், நாங்க கேம் விளையாடுற மாதிரி, யானைக்கு இது விளையாட்டுப் போல” என்றாள் ஆதிரா.

‘‘எல்லாம் என்னாலதான். என்னை மன்னிச்சிடுங்கப்பா” என்றாள் பாரதி.

‘‘இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? சரி வா, காலையில் வந்து பார்ப்போம்” என்றார் அப்பா.

பாரதிக்கு, ராத்திரி சரியாகத் தூக்கம் இல்லை. அப்படியே தூங்கின நேரம், யானையும் பாரதியும் செல்போனில் கேம் விளையாடுற மாதிரி கனவு வந்துச்சு. அதில், தோற்றுப்போன யானை, பாரதியை துரத்தினதும் முழிப்பு வந்துடுச்சு.

காலையில், முதல் வேலையாக கோயிலுக்குப் போனாங்க. யானை இருக்கும் இடம் காலியாக இருக்க, பதற்றத்தோடு கோயில் அலுவலகத்தில் விசாரிச்சாங்க.

‘‘பின்னாடி இருக்கும் பாருங்க” என்றார்கள்.

கோயிலின் பின்னால் இருந்த மண்டபத்தின் கடைசியில், லாயம் இருந்தது. அங்கே, யானைக்கு தென்னை மட்டைகளைக் கொடுத்துக்கொண்டிருந்த யானைப் பாகன், ‘‘வாங்க சார்... வா பாப்பா” என்றான்.

செல்ஃபி பாரதி!

‘‘என்னங்க, யானை விட்டம் போட்டுச்சா?” எனக் கேட்டார் அப்பா.

‘‘இன்னும் இல்லை சார். போடுற நேரம்தான். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அப்புறம் சார், அந்த போன் என்ன மாடல்? சார்ஜ் நிக்குதா சார்?’’ என ஆரம்பித்து, நிறையக் கேள்விகள் கேட்டான்.

அப்பாவின் வாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தாலும், கண்கள் யானை மீதே இருந்தது. பாரதியும் வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த யானையோ, காதுகளையும் உடம்பையும் மெதுவாக ஆட்டியவாறு  சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

திடீரென பாரதி கத்தினாள். ‘‘அப்பா... அப்பா... யானை விட்டம் போடுது.”

‘சொத்’ ‘சொத்’ என விட்டத்தைப் போட்டுவிட்டு, நகர்ந்து நின்றது யானை.

‘‘சார், உங்க நெம்பர் சொல்லுங்க” என்ற யானைப் பாகன், தனது செல்போனில் எண்களை அழுத்தினான்.

என்ன ஆச்சர்யம்... கும்கி படத்தின் ‘ஐயையய்யோ... ஆனந்தமே’ என்ற பாடலின் ரிங்டோன் கேட்டது.

நிஜமாகவே அப்பா முகத்தில்  அவ்வளவு ஆனந்தம். பாரதியும்  துள்ளிக் குதித்தாள். யானைப் பாகன் செல்போனை எடுத்து, அங்கிருந்த துணியில் துடைத்துக்கொடுத்தான்.

‘‘ரொம்ப நன்றி அங்கிள்” என்றாள் பாரதி.

‘‘எனக்கு எதுக்கு பாப்பா நன்றி. யானைக்கு சொல்லுங்க. நீங்க அதிர்ஷ்டசாலிதான். போன் ஒண்ணும் ஆகலை’’ என்றான்.

அந்த யானைப் பாகனிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டுக் கிளம்பிய அப்பா, ‘‘இனிமேலாவது ஜாக்கிரதையா இரு பாரதி” என்றார்.

‘‘ஆமாப்பா. செல்ஃபி எடுக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு செய்யணும். நமக்கோ, மத்தவங்களுக்கோ பிரச்னை வந்துடக் கூடாது. இதை, மறக்காம இருக்கிறதுக்காக, நீங்க அவரோடு பேசிட்டு இருக்கும்போது எடுத்த செல்ஃபிப்பா இது’’ என்று செல்போனைக் காட்டினாள் பாரதி.

அதில், அப்பா, யானைப் பாகன், யானை எல்லாம் பின்னால் இருக்க, எல்லோருக்கும் முன்னால், முகம் காட்டிச் சிரித்துக்கொண்டிருந்தாள் பாரதி.

இரத்தின புகழேந்தி

ஸ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism