Election bannerElection banner
Published:Updated:

“தவறான சிகிச்சையில் இழந்தது கையைத்தான்...தன்னம்பிக்கையை அல்ல!” யோகா டீச்சர் கலா

“தவறான சிகிச்சையில் இழந்தது கையைத்தான்...தன்னம்பிக்கையை அல்ல!” யோகா டீச்சர் கலா
“தவறான சிகிச்சையில் இழந்தது கையைத்தான்...தன்னம்பிக்கையை அல்ல!” யோகா டீச்சர் கலா

“தவறான சிகிச்சையில் இழந்தது கையைத்தான்...தன்னம்பிக்கையை அல்ல!” யோகா டீச்சர் கலா

ரு பெண்ணாக என் கணவர், குழந்தைகள், குடும்பம் சார்ந்தே சிந்திச்சுட்டிருந்தேன். ஆனால், இந்தச் சமூகத்துக்கான ஏதோ ஒரு நல்ல விஷயத்தை என் மூலமா நடத்திக்காட்டணும்னு இறைவன் முடிவுப் பண்ணியிருந்தார்போல. அதனால்தான், கர்ப்பப்பை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இடது கையை இழந்ததும், சமூகம் சார்ந்து சிந்திக்க ஆரம்பிச்சேன்” - திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த கலாவின் வார்த்தைகளில் வேதனையைத் தாண்டி தன்னம்பிக்கை தெறிக்கிறது. 

“செங்கோட்டை என் ஊரு. எப்பவுமே சிலுசிலுன்னு அடிக்கும் காற்று. நாலா பக்கமும் கண்ணுக்குக் குளிர்ச்சியா வயல்வெளிங்க. அன்பான வீட்டுக்காரர். ஒரு பொண்ணு, ஒரு பையன்னு சந்தோஷமா வாழ்க்கை ஓடிட்டிருந்தப்போ அது நடந்துச்சு. கிட்டத்தட்ட ஒன்பது வருஷம் முன்னாடி. திடீர்னு வயிறு வலிச்சது. உள்ளுர் ஆஸ்பத்திரியில் காட்டினோம். கர்ப்பப்பை பிரச்னைனு சொன்னாங்க. பெருசா ஆகுறதுக்குள்ளே திருநெல்வேலி ஆஸ்பத்திரியில் காட்டிடலாம்னு போனோம். இதுக்கு இடையில், என் வீட்டுக்காரர், ஃபாரின் போய் வேலை பார்க்க வேண்டிய சூழல். ரெண்டு பிள்ளைகளோடு நானே ஆஸ்பத்திரிக்குப் போனேன். எந்த ஆஸ்பத்திரியில் குறைஞ்ச ஃபீஸ் வாங்குவாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டுப் போனேன். ஆரம்பத்தில், எல்லாமே நல்லாத்தான் நடந்துச்சு. ஆபரேஷன் முடிச்சு வீடு திரும்பிட்டேன். அதுக்கு அப்புறம் அடிக்கடி ஸ்டொமக் பெயின் வந்துச்சு. வலி தாங்காமல் அந்த ஆஸ்பத்திரியில் போய் காட்டினோம். அந்த டெஸ்ட்டு இந்த டெஸ்ட்டுன்னு எடுத்துட்டே இருந்தாங்க. காசு பார்க்கிறதுக்காக, பலவீனமா இருக்கேன்னு டிரிப்ஸ் போட்டாங்க. என் பொண்ணுதான் 'அம்மா சாப்பிடற அளவுக்குத் தெம்பா இருக்காங்க. ஏன் இப்போ ட்ரிப்ஸ் போடணும். ரிமூவ் பண்ணுங்க'னு சத்தம் போட்டாள்.'' என்ற கலா, பேச முடியாமல் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். பிறகு தொடர்ந்தார்... 

“அந்த ஹாஸ்பிடல்ல என்ன பண்றாங்கன்னு எங்களால் தெரிஞ்சுக்கவே முடியலை. மருத்துவத்து மேலே எங்களுக்கு இருந்த அறியாமையால் நிறைய தப்பா யூஸ் பண்றாங்கன்னு உணரமுடிஞ்சது. தப்பிச்சோம் பிழைச்சோம்னு கிளம்பி, பையன் படிப்புக்காக சென்னை வந்துட்டோம். வந்த சில நாளிலேயே கை வலி ஆரம்பிச்சது. விரல் எல்லாமே கறுப்பாக மாறிடுச்சு. எந்த டாக்டராலும் உடனடியா காரணம் கண்டுபிடிக்க முடியலை. அப்புறம்தான், திருநெல்வேலி ஆஸ்பத்திரியில டிரிப்ஸ் போட்ட பொண்ணு, வழக்கமா ஊசி செலுத்துற நரம்புக்குப் பதிலா தவறுதலான  நரம்புல போட்டிருக்கிறது தெரிஞ்சது. அதனால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருக்குறதா சென்னைல உள்ள டாக்டருங்க சொன்னாங்க. உடனே சென்னையில இருக்குற பெரிய மருத்துவமனையில் ட்ரீட்மென்ட். கையில் ஒரு ஆபரேஷன். அங்கேயும் விதி விளையாட ஆரம்பிச்சது. ஆபரேஷன் முடிஞ்ச 24 மணி நேரம் எனக்குத் தொடர்ந்து மெடிசன் கொடுத்துட்டே இருக்கணும். ஒரு நர்ஸ மட்டும் இருந்தாங்க. நைட் ரெண்டு மணிக்கு அவங்களும் அசதியில் தூங்கிட்டாங்க. மறுநாள் கை பழைய நிலைக்கு போயிடுச்சு. கையையே எடுக்கவேண்டிய சூழல். டாக்டர்ஸ் நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டாங்க. அந்த நர்ஸை வேலையை விட்டே தூக்கிடறோம்னு சொன்னாங்க. அதான் எல்லாமே நடந்துடுச்சே. இனி என்ன பண்ண முடியும்? அந்தப் பொண்ணுக்குத் தண்டனை கொடுக்க வேணாம். என் குடும்பத்துக்காக நான் உயிரோடு இருக்கணும். அதனால், கையை எடுத்துடுங்கன்னு சொல்லிட்டேன்” எனக் கண்ணீர் தொண்டையை அடைக்க அழுகிறார் கலா. 

இரண்டு நர்சுகள் செய்த தவறால், கையைப் பறிகொடுத்த வேதனை கலா மனதை வாட்டியிருக்கிறது. இரண்டு மருத்துவமனை நிர்வாகமும் கொடுப்பதாகச் சொன்ன இழப்பீடும் இழுபறியாகிப்போக அப்போதுதான் வாழ வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு அதிகமாகியிருக்கிறது. 

''ஆபரேஷனில் இடது கையை எடுத்ததுமே, 'இனி உங்க உடம்பிலிருந்து ரத்தம் வெளியேறக் கூடாது. எங்கேயும் அடிபடாமல் பார்த்துக்கங்க. நாங்க இருபது பர்சன்டேஜ்தான் கேரண்டி கொடுக்கமுடியும்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. சரி இனியும் சென்னைல இருக்க வேண்டாம்னு முடிவு பண்ணி செங்கோட்டைக்கே திரும்ப வந்துட்டோம். இங்க வந்த பிறகுதான் என் கவனத்தை யோகா பக்கம் திருப்பினேன். ஒரு கை இல்லாமல் யோகா பண்றது அவ்வளவு ஈஸி இல்லே. 'வாழ்க வளமுடன்' யோகா மையத்தில் இருந்தவங்க அதை சாத்தியமாக்கினாங்க. அதுதான் ஒன்பது வருஷமா என்னைத் துடிப்போடு வெச்சிட்டிருக்கு. செங்கோட்டை, பாவூர்சத்திரம், தென்காசி எனப் பல ஊர்களில் இருக்கும் பள்ளிகளில் யோகா, கவுன்சலிங், நீதிபோதனை வகுப்புகள் நடத்தறேன். ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, டீன்ஏஜ் பத்தின விழிப்புஉணர்வு பாடங்களை எடுக்கறேன். 'டீச்சர், ஒரு கை இல்லாமலேயே எப்படித் தலை வாரிக்கறீங்க? புடவை கட்டிக்கறீங்க?னு ஸ்டூடண்ட்ஸ்லாம் ஆச்சர்யமா கேட்பாங்க. சிரிச்சுக்கிட்டே பதில் சொல்வேன். பல்வேறு எழுத்தாளர்களைச் சந்திச்சு அவங்க புத்தகங்களை வாங்கி வந்து, நூலகங்களுக்குக் கொடுக்கறேன். என் பொண்ணோட டெலிவரியையும் நானே பாத்தேன். எனக்குக் கை இல்லாதபோதுகூட இந்த அளவுக்குத் தைரியமா, தன்னம்பிக்கையோடு இல்லே. இப்போ, என் மனசை ரிலாக்ஸா வெச்சிருக்கேன். மத்தவங்களுக்கு வேணும்ன்னா நான் மாற்றுத்திறனாளியா தெரியலாம். என்னைப் பொறுத்தவரை ஒருபோதும் அப்படி நினைக்கறதே இல்லே'' என கம்பீரமாகச் சொல்கிறார் கலா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு