Published:Updated:

''அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும்!'' - கான்ஸ்டபிள் சரண்யாவின் நைட் டியூட்டி கனிவு #VikatanExclusive

''அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும்!'' - கான்ஸ்டபிள் சரண்யாவின் நைட் டியூட்டி கனிவு #VikatanExclusive
''அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும்!'' - கான்ஸ்டபிள் சரண்யாவின் நைட் டியூட்டி கனிவு #VikatanExclusive

றிந்து உணரமுடியாத அதிசயம், துயரம் எனப் பல பக்கங்களைத் தன்னோடு சுமந்துள்ளது, கோயம்பேடு பேருந்து நிலையம். இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தின் காத்திருப்போர் பகுதி முழுவதும் அவ்வளவு பேர் தங்கள் உறக்கத்துக்கு இடம்பிடித்திருக்கிறார்கள். உடலும் மனமும் மட்டுமே சொத்தாகப் படுத்திருக்கிறார்கள். பல குடும்பங்களுக்கு அதுதான் வீடு. குழந்தைகள் முதல் முதியோர் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் இருக்கும் உலகம் சொல்லும் கதைகள் மனதை உருகவைப்பவை. 

வீட்டைக் காலி செய்து, மொத்த பொருள்களையும் சாக்கு மூட்டையில் கொண்டுவந்திருந்த ஒருவர், தலைக்குப் பக்கத்தில் வைத்துப் படுத்திருக்கிறார். மூட்டையைச் சந்தேகத்துடன் தட்டிப்பார்த்த காவலரிடம் “குக்கர்” என்கிறார். இன்னொருவர் துணியைத் தலையணையாக்கி தூங்க முயற்சி செய்கிறார். தலைமாட்டில் சாமி படத்துடன் ஒருவர். குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண், காலுக்கு மருந்து போட்டவாறு ஒரு முதியவர். காவலர்கள் இங்கும் அங்குமாக வலம் வருகிறார்கள். வாக்கி டாக்கி அலைவரிசை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு குழந்தை விளையாடி கலைத்துப் போட்ட பொம்மைகளாக இருக்கிறது அந்த இடம். கோயம்பேட்டில் உள்ள ஆதரவற்ற மனிதர்களின் வயிற்றை விட கொசுக்களின் வயிறு நிரம்பியிருக்கிறது.

இரவு நேரப் பாதுகாப்பில் பெண் காவலர்கள் நான்கைந்து பேர் எப்போதும் இருப்பார்கள். அங்கிருக்கும் பெண்கள், குழந்தைகளை அழைத்து விசாரிப்பார்கள்.  பசியோடு உள்ள ஓரிருவருக்குச் சாப்பாடு வாங்கிக்கொடுக்கும் பெண் காவலர்களைப் பார்க்கலாம். பேருந்து நிலைய நுழைவு வாயிலில் காவல் பணியில் இருந்த 30 வயது பெண் காவலர் சரண்யா, “இங்கே தூங்கும் பலரும் வெளியூரிலிருந்து வந்தவங்கதான். காலையில் போய்டுவாங்க. சிலர் தங்கறதுக்கு இடமில்லாமல் படுத்துட்டு காலையில் போய்டுவாங்க. ஊரைவிட்டு ஓடி வந்தவங்க, குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவங்க, வேலை தேடி வந்தவங்க எனப் பலரின் கதைகளைக் கேட்டால் தூக்கமே வராது. இப்போகூட சேலத்திலிருந்து வந்துட்டு, எங்கே போறதுன்னு தெரியாமல் அழுதுட்டிருந்த பொண்ணை விசாரிச்சேன். அம்மா அப்பா இல்லாமல், மாமா வீட்டில் வளர்ந்திருக்கா. அந்தப் பொண்ணுக்குப் படிக்க ஆசை. மாமாவால் படிக்கவைக்க முடியலை. சென்னைக்குக் கிளம்பி வந்துட்டாள். அண்ணாநகர் ஹோமில் விட்டுட்டு வர்றதுக்காக ஒரு காவலர் போயிருக்கார்'' என்றார். 

நேரம் 1.30 ஆகியிருந்தது. வெற்றிடத்தைக் காற்றும் நிரப்பும் மௌனமும் நிரப்பும் என்பார்கள். ஆனால், நினைவுகள் மட்டுமே நிரம்ப சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார். “இங்கே நைட் டியூட்டிக்கு வந்த நாளிலிருந்து ஒருத்தர் தினமும் நைட் ஒன்பது மணிக்கு இரண்டு குழந்தைகளோடு வந்து படுப்பார். பசங்களுக்கு வயசு பத்துக்குள்ளே இருக்கும். பொண்ணு பேரு தீபா, பையன் பேரு ஆகாஷ். வீட்டு வாடகை கொடுக்கமுடியாம காலி பண்ணிட்டார். காலையில் இங்கேயே குளிச்சுட்டு கூட்டிட்டுப் போய்டுவார். ஒருநாள் நைட் தீபாகிட்ட பேச்சுக் கொடுத்தேன். ''அம்மா புத்தி சுவாதீனம் இல்லாமல் தொலைஞ்சுட்டாங்க. அப்பாதான் எங்களைப் பாத்துக்கிறாரு. நாலாவது வரைக்கும் படிச்சேன். அப்பா காலையில் ஸ்கூலில் விட்டுட்டு வேலைக்குப் போய்டுவார். ராத்திரி எட்டு மணிக்குத்தான் வருவார். ஸ்கூல் விட்டதும் அப்பா வேலை செய்யும் இடத்துக்குப் போய்விடுவேன். சில சமயம் ஸ்கூல் பக்கத்திலேயே இருப்பேன். அப்புறம் ஸ்கூல் போறதையே நிப்பாட்டிட்டேன்'னு சொல்லுச்சு. அந்த இரண்டு பேருக்கும் அடிக்கடி சாப்பாடு, டீ வாங்கிக் கொடுப்பேன். 

பொதுவா இங்கே தூங்குறவங்களை நாலு மணிக்கே எழுப்பி விட்டுடுவோம், அவங்களை மட்டும் ஆறு மணி வரை தூங்க விட்டுருவேன். அவங்க அப்பாவுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. குழந்தைகளே உலகமா இருக்கார். பத்து நாளைக்கு முன்னாடி அந்தப் பொண்ணுகிட்ட 'ஸ்கூல் சேர்த்துவிடட்டுமா?'னு கேட்டதுக்குச் சரினு சொல்லியிருந்துச்சு. அடுத்த நாளே எனக்கு வேற இடத்துல டியூட்டி போட்டுட்டாங்க. ஒரு வாரம் கழிச்சு வந்ததும், 'அக்கா ஸ்கூல் சேர்த்துவிடறத சொன்னீங்களே எப்போ?'னு என் கால்களைப் புடிச்சுட்டு கேட்டாள். ரெண்டு நாளுக்கு முன்னாடி குடிகாரன் ஒருத்தன் இந்தக் குழந்தைகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கிறான். ஆளை அடிச்சி விரட்டினோம். அவளோட வருங்காலத்தை நினைச்சா பயமா இருக்கு, உங்களால் முடிஞ்சா அந்தக் குழந்தைகளை ஹோம்ல சேர்த்துவிடமுடியுமா?'' எனக் கண்கள் கலங்க அந்தக் குழந்தைகள் படுத்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். 

தந்தையுடன் படுத்திருந்த அந்தக் குழந்தைகளைச் சுற்றி, நிராகரிக்கப்பட்ட உலகத்தின் கைகளும் கால்களும் தலைகளும் உறக்கத்தில் இருந்தன. புகைப்படம் எடுக்க ஆரம்பித்ததும், நான்கைந்து காவலர்கள் சூழ்ந்துவிட்டார்கள். விசாரித்துவிட்டு அந்தக் குழந்தைகளை எழுப்ப முயற்சி செய்தார் ஒருவர். அந்தப் பெண் காவலர், “வேண்டாம் சார், கொஞ்ச முன்னால்தான் தூங்கினாங்க. காலையில் பேசிக்கலாம்'' என்றார். 

இதற்குள் சேலத்துப் பெண்ணை அண்ணா நகர் ஹோமில் விட்டுவிட்டு வந்த இன்னொரு பெண் காவலர், "அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு சொல்லுது. நல்ல மார்க் எடுத்திருக்கு. பிளஸ் டூவில் 750 மார்க். அழுதுட்டே இருக்கு மேடம். மனசுக்குக் கஷ்டமா இருக்கு'' என்றார். முன்பின் தெரியாதவருக்குக் கலங்கும் மனம். 

எங்களைப் பார்த்து, ''நீங்க போய்ட்டு காலையில் வாங்க. நான் குழந்தைகளை இங்கேயே இருக்கச் சொல்றேன். இவங்களுக்கு நல்லது நடக்கட்டும்'' என்று அலைபேசி எண் வாங்கிக்கொண்டார். 

காலை 06:00 மணிக்குச் சென்று பார்த்தபோது, அந்த இடம் முற்றிலும் மாறியிருந்தது. இரவுக் கோலங்கள் கலைந்து, பரபரப்புடன் இருந்தது. அந்தப் பெண் காவலரைச் சந்தித்தோம். குழந்தைகள் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். அவரைப் பார்த்ததும் குழந்தைகள் ஓடிவந்து கட்டிக்கொண்டார்கள். “வாங்க டீ சாப்பிடலாம்'' என அழைத்துச் சென்றார். நாங்கள் அப்பாவிடம் பேச்சுக் கொடுத்தோம். 

“எனக்கு ஊர் பண்ருட்டி சார். மனைவிக்கு மனநிலை சரியில்லாமல் போய்டுச்சு. ஊரில் நிரந்தரமான வேலை இல்லே. மூணு வருசத்துக்கு முன்னாடி குழந்தைகளோடு சென்னைக்கு வந்துட்டேன். கொத்தனார் வேலை செய்யுறேன். வீடு புடிச்சு வாடகை கொடுக்கிற அளவுக்கு வருமானம் இல்லே. குழந்தைகளை விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது சார். எனக்கு எல்லாமே அவங்கதான். ஆனா, இவங்க எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்கு. அதனால், நல்ல இடமா பார்த்துச் சேர்த்துவிடுங்க சார். அவங்க நல்லா இருக்கணும். எங்கே போனாலும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுனு கேட்கறாங்க. என்கிட்டே எதுவுமே இல்லே'' என்று கலங்குகிறார். 

டீ வாங்கிக்கொண்டு வந்த குழந்தைகள் முகங்களில் அவ்வளவு சிரிப்பு. பெண் காவலர் அந்தக் குழந்தைகளிடம், “ஹாஸ்டல்ல சேர்த்துவிடுறோம். ஸ்கூலுக்குப் போறீங்களா?” எனக் கேட்டதும், மகிழ்ச்சியோடு தலையாட்டுகிறார்கள். இருவரையும் நெகிழ்ச்சியோடு அணைத்துக்கொள்கிறார். போட்டோ எடுக்கலாம் என்றதும், காணக் கிடைக்காத அற்புதமான புன்னகையோடு கேமராவுக்கு முன்பு வருகிறார்கள். (குழந்தைகள் நலன் கருதி படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன) 

எம்எம்டிஏ சிக்னலுக்குப் பின்னால் இருக்கும் கங்கை அம்மன் கோயில்தான் இவர்களின் பகல் நேர அடைக்கலம். கோயிலுக்கு எதிரே இருந்த கட்டடத்தின் சுவருக்கு அருகே குழந்தைகளின் துணி மூட்டைகள் இருந்தன. பக்கத்தில் பாதி கட்டிய நிலையில் ஒரு கட்டடம். கோயில் வாசலிலிருந்த பூக்காரப் பெண்மணி, “ஐந்தாறு வருஷமா இங்கேதான் இருக்காங்க. பகல் நேரத்துல நாங்கதான் பார்த்துப்போம். புள்ளைங்களோட அப்பா இந்தக் கட்டடத்தில்தான் கொத்தனாரா வேலை பார்க்கிறார். உங்களால் அந்தக் குழந்தைக்கு நல்லது நடந்தால் புண்ணியமாகப் போகும்'' என்றார் சந்தோஷத்துடன். 

குழந்தைகளின் அப்பா ஓர் அட்டைப் பெட்டியை எடுத்துவந்தார். என்னவென்று பார்த்தால், இரண்டு கோழிகள். அந்தக் குழந்தைகள் அன்புடன் வளர்க்கும் இரண்டு ஜீவன்கள். 

''எக்மோர் டான்பாஸ்கோ ஹோம்ல பேசிட்டோம். இரண்டு நாளில் பள்ளிக்கூடமும் போய்டலாம். படிச்சு என்ன ஆகப்போறீங்க?'' என்று கேட்டோம். 

“அந்த போலீஸ் அக்கா மாதிரி நாங்களும் போலீஸாகி எல்லோருக்கும் ஹெல்ப் பண்ணுவோம்" என்கிறார்கள் இருவரும். 

உலகின் அதிசிறந்த மந்திர வார்த்தை... லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!

அடுத்த கட்டுரைக்கு