Published:Updated:

வாழ்பவர்களுக்கு பேனரில்லை... பேனரால் வாழ்பவர்களுக்கு...? #Banner

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாழ்பவர்களுக்கு பேனரில்லை... பேனரால் வாழ்பவர்களுக்கு...? #Banner
வாழ்பவர்களுக்கு பேனரில்லை... பேனரால் வாழ்பவர்களுக்கு...? #Banner

வாழ்பவர்களுக்கு பேனரில்லை... பேனரால் வாழ்பவர்களுக்கு...? #Banner

நமது ஊரில் திருவிழா, தேர்தல், கல்யாணம், புதுப்பட ரிலீஸ்... என எந்த விசேஷமாக இருந்தாலும் `பேனர்' வைத்து அமர்க்களப்படுத்துவது நம் மக்களின் வழக்கம். அதுவும் தேர்தல் மற்றும் தங்கள் தலைவர்களின் பிறந்த நாள் என்றால் `லோக்கல்' அரசியல் புள்ளிகள்  அதிக அளவில் பேனர் வைத்துத் தங்களின் செல்வாக்கைக் காட்டுவார்கள். பெருநகரத்தின்  முக்கியமான இடங்கள்  அனைத்துமே `பேனரும் பேனர் சார்ந்த இடங்களாக'த்தான் காட்சியளிக்கும். 

இந்நிலையில், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பேனர் மற்றும் கட்-அவுட் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் தேவையில்லாமல் கட் அவுட்கள் வைப்பதைத் தடுக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பேனர் தயாரிக்கும் தொழிலாளர்களும் பேனர் அமைப்பவர்களும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிய, அவர்களைச் சந்தித்துப் பேசினோம்.

பேனர் மற்றும் கட்-அவுட் கலாசாரம்:  

முன்பெல்லாம் பெரிய பெரிய தட்டிகள் அமைத்து, துணிகளில் நடிகர்களின் படங்களையும் தலைவர்களின் படங்களையும் வரைந்து தேர்தல்  புதுப்பட ரிலீஸ் நேரங்களில் விளம்பரம் செய்வார்கள். அந்த நாளில் அது வெறும் விளம்பரமாக மட்டுமன்றி, கலை வடிவமாகவே  பொதுமக்களால் பார்க்கப்பட்டது. பிறகு ரசிகர் மன்றங்கள் தங்கள் நடிகர்களுக்குப் போட்டிபோட்டுக்கொண்டு பெரிய பெரிய தட்டிகளில் படம் வரைந்து தியேட்டர்களை விழாக்கோலமாக்கினார்கள். நாளடைவில் டிஜிட்டலின் வருகையினால் தேர்தல், பட ரிலீஸ்களுக்கு மட்டுமன்றி வீட்டு விசேஷங்களுக்கும் `பேனர்' வைக்கும் பழக்கம் பரவ ஆரம்பித்தது.  திருமணம், பிறந்த நாள், பூப்புனித விழா என எல்லா விழாக்களுக்கும் சம்பந்தபட்டவர்களின் புகைப்படத்துடன்  `பேனர்' வைப்பவர்கள் புகைப்படமும் `ஸ்டைலாக' இடம்பெற்றிருக்கும். தற்போது வீட்டின் விசேஷங்களுக்கு  பேனர்களுக்கும்  சேர்த்து பட்ஜெட் போடும் அளவுக்கு  பேனர் அடிப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அதன் பொருட்டு டிஜிட்டல் பேனர்கள் அச்சிடும் தொழிலும் பரவலானது.  தற்போது தமிழகத்தின் பெரும்பாலான நகரம், சிறு நகரங்களில் `பேனர்' அச்சிடும் கடைகள் இருக்கின்றன. நேற்று சென்னை உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவு குறித்து, சென்னையில் உள்ள பேனர் அச்சிடும் தொழிலாளி ராஜ் ப்ரியாவிடம் பேசினோம்.

முதலமைச்சரின் புகைப்படம் இல்லாமல் அரசு விளம்பரம் வந்தால் அதை மக்கள் எப்படிக் கவனிப்பார்கள் என்ற கேள்வியுடனேயே  இதுகுறித்து பேசிய அவர், ``கிட்டத்தட்ட 16 வருடங்களாக நான் இந்தத்  தொழிலில் இருக்கிறேன். தமிழகம் முழுக்கவே ஏறக்குறைய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொழிலை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். தற்போது உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள உத்தரவு நடைமுறைக்கு வரும்பட்சத்தில் எங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு உண்டாகும். ஏனென்றால், பெரும்பாலும் அரசியல் கட்சி சார்ந்த பேனர்களில் தற்போது உயிரோடு இருக்கும் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் புகைப்படம் இருக்கும்படிதான் அச்சிடுவார்கள். தேர்தல் மற்றும் முக்கியத் தலைவர்களின் வருகையின்போது மட்டும்தான் கட்சி பேனர்கள் அச்சிடுவார்கள். பெரும்பாலான நேரங்களில் விசேஷ பேனர்களை நம்பித்தான் தொழில் நடக்கும். விசேஷங்களுக்கு அடிக்கப்படும் பேனர்களில் புகைப்படம்தான் நிறைய இருக்கும். தற்போது வந்துள்ள உத்தரவின்படி பார்த்தால் அது மாதிரியான பேனரே அச்சிட முடியாத நிலைக்குத்தான் தள்ளப்பட்டிருக்கிறோம். பேனர் வைப்பவர்களின் புகைப்படத்தை விடுத்து பெயரை மட்டும் போடுவதென்றால், யாரும் பேனர் அடிக்க முன்வர மாட்டார்கள். பேனர் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும்பட்சத்தில் அதை வைத்தவரின் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு இப்படி எங்கள் தொழிலை முடங்கச்செய்வது எந்த விதத்தில் நியாயமாகும்?'' என்ற கேள்வியை முன்வைத்தார் வேதனையுடன்.  

நாம் கடையில் இருந்தபோதே அங்கு தன் நண்பனின் திருமணத்துக்காக பேனர் அச்சிட வந்தார் ஹாஜா ஷெரிஃப். அவரிடம் நீதிமன்ற உத்தரவால் பேனரில் புகைப்படம் வைக்க முடியாதது குறித்து கடையில் இருப்பவர் விளக்கினார். அதிர்ச்சியடைந்தார் ஷெரிஃப்,  ``என் ஃப்ரெண்டோட கல்யாணம். எல்லா ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து அவருக்கு வாழ்த்து சொல்றதுக்காக பேனர் வெக்கிறோம். அதுல எங்க போட்டோ போடுறதுல என்னங்க பிரச்னை? எங்கள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான் பேனர் வெக்கிறது'' என்றவரிடம் முழு உத்தரவைப் பற்றி கூறியவுடன், ``எங்களை மாதிரி கல்யாணத்துக்கு, பிறந்த நாளுக்குனு பேனர் வெச்சா மண்டபத்துல இல்லைன்னா சம்பந்தபட்டவங்களோட வீட்டுலதான் வெப்போம். ஃபங்ஷன் முடிஞ்ச பிறகு நாங்களே எடுத்திருவோம். சிலர் அப்படி மத்தவங்களைத் தொந்தரவு பண்ற மாதிரி பேனர் வைக்கிறப்ப அவங்க மேல நடவடிக்கை எடுக்கிறதுதானே சரியா இருக்கும். இப்படி போட்டோ வெச்சு பேனர் அடிக்க வேண்டாம்னு சொல்றது எப்படிச் சரியாகும்? பேனர் வெக்கிறது ஒருவிதமான கொண்டாட்டம் மாதிரிதான் நான் பார்க்கிறேன். நான் ஃப்ரெண்ட்ஸோடு வீட்டு விசேஷங்களுக்கு பேனர் வெக்கிறப்ப, அது எனக்கு மட்டுமல்லாம அதைப் பார்க்கிற அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும். கல்யாணப் பத்திரிகையே போட்டோவோடு அச்சடிக்கிறப்ப, பேனரெல்லாம் போட்டோ இல்லாம அடிச்சா எப்படிங்க நல்லாருக்கும்?" என்றார்.

அந்த இடத்தில் மட்டுமே கிட்டத்தட்ட இருபதுக்கும் அதிகமான டிஜிட்டல் பேனர் அச்சிடும் கடைகள் இருந்தன. ஒவ்வொரு கடையிலும் குறைந்தபட்சம் ஐந்து பேர் வேலைபார்த்தனர். உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களை பேனர்களில் வைப்பதற்குத் தடைசெய்யும் உத்தரவு நடைமுறைக்கு வரும்போது தொழில் நலிவடையும் என்ற ஏக்கம் பலரிடமும் தெரிந்தது. ஒருபுறம் பேனரின் மூலம் விபத்துகள் நடப்பதும், விதிகளை மீறி அமைக்கப்படும் பேனர்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. `இதற்கு என்னதான் தீர்வு?' என யோசித்துக்கொண்டே வரும்போது, அங்கிருந்த பேனர்களில் அரசியல் தலைவர்கள் பலரும் பாந்தமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு