Published:Updated:

ஓவிய உலகின் சகாப்தம் !

சிவகுமார்

கோபுலு... ஓவிய உலகில் ஒரு சகாப்தம்! ஒரு நடிகனாக அல்ல; ஓர் ஓவியனாக ஓவிய மேதை கோபுலுவைப் பற்றி நினைக்க நினைக்க பிரமிப்பே மிஞ்சுகிறது! 

கோபுலுவின் அப்பாவுக்கு, ஸ்டேஷன் மாஸ்டர் உத்தியோகம். அவருக்கு ஏழு குழந்தைகள். ஆறாவது குழந்தையாகப் பிறந்தவர் கோபுலு. வரலட்சுமி விரதம் போன்ற விசேஷ தினங்களில் கோபுலு, வீடு வீடாகச் சென்று சுவாமி படங்கள் வரைந்து கொடுத்து அதற்குச் சன்மானமாக ஓர் அணா பெற்றார். ஆனந்த விகடன் புத்தகத்தில் ஓவியர் மாலி வரைந்த படங்களைப் பார்த்து ஆர்வம்கொண்டு, அதேபோல் வரைந்து பழகி, நான்கு அணா மாதக் கட்டணத்தில் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயின்றார்.

சென்னைக்கு வந்தவர் முன்பே சென்னையில் செட்டிலாகி இருந்த பள்ளித் தோழன் சுவாமிநாதன் (இவர்தான் விவசாய விஞ்ஞானி என பின்னாளில் அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன்) மூலம், பிராட்வேயில் இருந்த ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு வந்து ஓவியர் மாலியைச் சந்தித்து, தனது ஓவியங்களைக் காண்பித்து விகடனுக்காக வரையத் தொடங்கினார்.

ஓவிய உலகின் சகாப்தம் !

1941-ம் ஆண்டு ஜூன் மாதம், கோபுலு வரைந்த படம் முதன்முதலாக விகடன் அட்டையில் வெளியானபோது உண்டான மகிழ்ச்சியை ஒரு குழந்தையின் குதூகலத்தோடு நினைவுகூர்வார்; ஓவியர் சில்பியுடன் சேர்ந்து ஊர் ஊராக ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று, அவற்றைப் படங்களாக வரைந்து, விகடன் தீபாவளி மலர்களில் வெளியிட்டதைப் பரவசத்தோடுப் பகிர்ந்துகொள்வார். அதற்கு அப்போதே 50 ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டபோது, இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.

ஆனந்த விகடனில் 'தில்லானா மோகனாம்பாள்’, 'வாஷிங்டனில் திருமணம்’; 'திருச்சிற்றம்பலம்’, 'ஆலவாய் அழகன்’ போன்ற நாவல்களுக்கு கோபுலு வரைந்த படங்கள், அவரின் அற்புதமான ஓவியத் திறமைக்கு உதாரணங்கள்.

ஓவிய உலகின் சகாப்தம் !

கோபுலுவின் நகைச்சுவைத் திறன், அபாரமானது; குபீரெனச் சிரிப்பை வரவழைக்கக்கூடியது. உதாரணத்துக்கு ஒரு ஜோக் சொல்கிறேன். சேர்ந்துகிடக்கும் கடிதங்களைப் பார்த்து, தேவை இல்லாதவற்றைத் தூக்கிப்போட்டுவிடலாம் என்ற முடிவில் உட்காருவார் ஒருவர். கம்பியில் குத்தப்பட்டிருக்கும் முதல் கடிதத்தை எடுப்பார். 'அடடா! இது முனிசிபாலிட்டியில் இருந்து வந்த லெட்டர். இது முக்கியம்’ என தனியே எடுத்து வைப்பார். அடுத்தடுத்து 'இது இந்தக் கடிதம்; இது முக்கியம். இது இன்னார் போட்டது. அவசியமானது’ எனச் சொல்லிச் சொல்லி வைத்துக்கொள்வார். முடிவில் பார்த்தால், அவரின் இடது பக்கம் இருக்கும் அத்தனை கடிதங்களையும் வலது பக்கத்துக்கு மாற்றியிருப்பார்.

வசனத்துடன்கூடிய ஜோக்தான் என்றில்லை; வசனமே இல்லாமல், ஆனந்த விகடனில் முதல் பக்கத்தில் அவர் பல வருட காலம் தொடர்ந்து வரைந்த 'ஸ்ட்ரிப் ஜோக்ஸ்’ மிகவும் ரசனையானவை.

ஒரு சர்க்கஸ் வேனில் ஒட்டகச்சிவிங்கியை ஏற்றிச் செல்வார்கள். இடையில் பாலம் குறுக்கிடும். தலை இடிக்கும் அல்லவா? கீழே நிற்கும் ஒருவர் ஒரு புல்லுக்கட்டை நீட்டுவார். அதைத் தின்பதற்காக ஒட்டகச்சிவிங்கி கழுத்தை வளைத்துக் குனிய, அதன் தலை அடிபடாமல் வேன் பாலத்தின் கீழாகக் கடக்கும். என்னவோர் அபாரமான கற்பனை, பாருங்கள்! ஒரு வார்த்தைகூட இல்லாமல், மூன்று நான்கு கட்டங்களில் வெறும் காட்சிகள் மூலமே நம்மைச் சிரிக்கவைத்த நகைச்சுவைக் கலைஞன் கோபுலு.

ஆனந்த விகடனில் தேவன் எழுதிய 'துப்பறியும் சாம்பு’ தொடரை மறக்க முடியுமா?... அதற்கு கோபுலு வரைந்த படங்களைத்தான் மறக்க முடியுமா? தேவன் எழுதிய மல்லாரிராவ் கதைகள், மிஸ் மைதிலி போன்ற பல படைப்புகளுக்கு தமது தூரிகையால் உயிரூட்டியவர் கோபுலு. தேவனையும் கோபுலுவையும் 'இரட்டை நாயனங்கள்’ எனப் புகழ்வார்கள்.

அப்போது தமது கதைகளுக்கு கோபுலு படம் வரைவதை, தங்கள் பாக்கியமாகக் கருதினார்கள் எழுத்தாளர்கள். ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகள், தொடர்கதைகள் எனப் பலவற்றுக்குப் படம் வரைந்துள்ளார் ஓவியர் கோபுலு.

ஆனந்த விகடன் அட்டைப் படத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் அசாத்தியமானவை! ஒரு ரயில்வே பிளாட்பாரத்தை வரைந்திருப்பார், பாருங்கள்... அடேயப்பா! அதில் இடம்பெற்றிருக்கும் பல்வேறுவிதமான ஆட்கள், பொருட்கள், தண்டவாளம் நீண்டு சென்று ஒரு புள்ளியில் முடிவது, தொலைதூரத்தில் கைகாட்டி இறங்கியிருப்பது, ஒரு குட்டிப் பையன் அருகில் நிற்கும் சிறுமியிடம் 'அதோ.... தூரத்துல ரயில் வருது பார்!’ எனக் காட்டுவது... என, அந்தப் படத்தில் எத்தனை எத்தனை அம்சங்கள்! 'ஒரே ஒரு படத்தில் இத்தனை கேரக்டர்களா?!’ என மலைக்காதீர்கள். இந்தியாவில் 120 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால், அத்தனை பேர் முகங்களையும் கோட்டுச் சித்திரத்தில் கொண்டுவரக்கூடிய ஆற்றல்மிக்கவர் கோபுலு.

ஓவிய உலகின் சகாப்தம் !

'பொம்மை’ பத்திரிகைக்காக யாரேனும் ஒரு பிரமுகரை பேட்டி கண்டு எழுதும்படி என்னைக் கேட்டார்கள். நான் ஓவியர் கோபுலுவைப் பேட்டி காண விரும்பினேன். ஒரு நடிகனாக அவரிடம் சென்று பேட்டி காண விரும்பாமல், ஓர் ஓவியனாகச் சென்று பேட்டி காணவே விரும்பினேன்.

அவரைச் சந்திக்கச் சென்றபோது, நான் வரைந்த மகாத்மா காந்தி மற்றும் தஞ்சாவூர் கோயில் போன்ற நான்கைந்து படங்களை கையோடு எடுத்துச் சென்றிருந்தேன். என் ஓவியங்களை கோபுலுவிடம் காண்பித்ததும், அவற்றை வாங்கிப் பார்த்தவர், என் வலது கையை எடுத்து தன் இடது கையில் வைத்துக்கொண்டார். தன் வலது கையால் என் புறங்கையை மெள்ள வருடிக்கொடுத்து, 'அற்புதமான கலைஞனின் கை’ என்றார். அந்தப் பாராட்டின் கனம் தாளாமல் நான் கரகரவென அழுதுவிட்டேன்.

'சார்... நான் சென்னைக்கு வரும்போது, ஓவியனாக வளர்ந்து, ஓவியனாக வாழ்ந்து, ஓவியனாகவே வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவோடுதான் வந்தேன். ஆனால், என் பாதை திசை மாறிவிட்டது’ என ஏக்கத்தோடு அவரிடம் சொன்னேன். 'இல்லை. நீ சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய். இது பிரான்ஸ் அல்ல... இந்தியா. இங்கே ஓவியக் கலைக்கு மதிப்பு இல்லை. இங்கே ஓவியனாக மட்டுமே இருந்தால், உன் ஸ்கூட்டருக்கு பெட்ரோல்கூடப் போட முடியாது. நீ செய்ததே சரி!’ என்றார்.

ஓவிய உலகின் சகாப்தம் !

2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கோபுலு தன் வலது கையும் இடது காலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். 'சிவகுமார், எல்லாரும் என் ஸ்ட்ரோக்ஸ் பிரமாதமா இருக்குனு சொல்வாங்க இல்லியா! ஆனா, அதைவிடப் பிரமாதமா எனக்கு ஸ்ட்ரோக்ஸ் போட்டுட்டான் ஆண்டவன்’ என அந்த நிலையிலும்கூட தன் ஹ்யூமர் சென்ஸை விட்டுக்கொடுக்காமல் இருந்தவர் கோபுலு.

79 வயது நெருக்கத்தில் பக்கவாதம் தாக்கிய நிலையிலும் துவண்டுவிடாமல், தன் இடது கையால் அற்புதமாக ஓவியம் வரையப் பழகியவர் உலகிலேயே இவராகத்தான் இருக்க முடியும். தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் மிகச் சிறந்த உதாரண மனிதர்.

அரசியல் உலகில் காந்தி, காமராஜ்... திரையுலகில் சிவாஜி, எம்.ஜி.ஆர்... எழுத்துலகில் ஜெயகாந்தன் என்பதுபோல் ஓவிய உலகில் கோபுலு!

அடுத்த கட்டுரைக்கு