Published:Updated:

'ஜாதி, மத பாகுபாடு யாரையும் விட்டுவைப்பதில்லை!' - ஆதங்கத்தில் எழுத்தாளர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'ஜாதி, மத பாகுபாடு யாரையும் விட்டுவைப்பதில்லை!' - ஆதங்கத்தில் எழுத்தாளர்கள்
'ஜாதி, மத பாகுபாடு யாரையும் விட்டுவைப்பதில்லை!' - ஆதங்கத்தில் எழுத்தாளர்கள்

'ஜாதி, மத பாகுபாடு யாரையும் விட்டுவைப்பதில்லை!' - ஆதங்கத்தில் எழுத்தாளர்கள்

``இப்பெல்லாம் யாருங்க சாதி, மதம் பார்க்கிறாங்க... எவ்வளவோ டெவலப் ஆகிட்டோம்'' - ``சாதி, மதம் எல்லாம் பார்ப்பீங்களா?'' எனக் கேட்டால், நம்மில் பலரின் பதில் மேலே சொன்ன வாசகமாகத்தான்  இருக்கும். ஆனால், சில `துப்பறியும்' கண்கள் நம் அத்தனை பேரின் மதம் குறித்து கூர்மையாகத் துழாவிக்கொண்டிருக்கும். அந்தக் கண்கள் நம்முடைய முழுப்பெயரைத் துழாவும். அதிலுள்ள மத அடையாளத்தைத் தேடும். பிறகு, 10 நண்பர்கள் இருக்கும் ஓர் இடத்தில் நம்மை மட்டும் வேற்றுமதம் எனத் தேவையில்லாத பார்வை ஒன்றைப் பதியவைக்கும். இப்படிச் சமீபகாலத்தில் வேகமாகப் பரவிவருகிறது `பிரிவினை' என்ற நெருப்பு.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, அடிப்படை உரிமைகளுக்கான விதியும் கொண்டுவரப்பட்டது. அடிப்படை உரிமைகளுக்கான விதி 15, `எந்த ஒரு மனிதனையும் சாதி, மதம், இனம், பால், பிறப்பு இவற்றின் அடிப்படையில் பாகுபாடு செய்யக் கூடாது' என்கிறது. ஆனால், நம் நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பாகுபாடு பார்ப்பதும், சாதிய, மத ஒடுக்குமுறைகளும் வெவ்வேறு வடிவில் நடந்துகொண்டிருக்கின்றன. 

இதன் விளைவாக, சிறுபான்மை மக்கள் தங்களின் மத அடையாளங்களை மறைத்துதான் பொதுவெளியில் வாழவேண்டியுள்ளது. வாடகைக்கு வீடு கிடைப்பதில் தொடங்கி வேலைவாய்ப்பு, சினிமா, ஊடகம் போன்ற தளங்களில் வாய்ப்புக் கிடைப்பது வரை தங்களின் அடையாளங்களை மறைக்கவேண்டிய சூழல் உள்ளது. தான் சார்ந்த மத அடையாளங்கள் இன்றி இருப்பவர்களைக்கூட அவர்கள் கூறும் கருத்துகளில் முரண்பாடு வரும்போதெல்லாம் தனிப்பட்ட முறையில் மதம் சார்ந்த, சாதி சார்ந்த தாக்குதல்தான் நிகழ்த்தப்படுகிறது. இதை சமீபத்தில் நடந்த `மெர்சல்' பட விவகாரத்தில் விஜய், ஜோசப் விஜய்யாகப் பார்க்கப்பட்டதிலிருந்து தெளிவாக உணரலாம். இது ஒரு `ஜோசப்' விஜய் மட்டும் சந்திக்கும் பிரச்னை அல்ல. நம் நாட்டில் நாள்தோறும் பல `ஜோசப்'களும் யூசுப்களும் சந்திக்கும் பிரச்னை. `இவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். உங்கள் சகோதரர்கள் அல்ல. அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்' என்ற கருத்தை நம்மில் புகுத்த நினைக்கிறது பிரிவினைவாதச் செயல்.

இதன் நீட்சிதான் திரைப்படங்களில் தொடர்ந்து கதாநாயகனை `பெரும்பான்மை'ச் சமூகத்தைச் சேர்ந்தவராகவும், வில்லனை `சிறுபான்மை'ச் சமூகத்தைச் சேர்ந்தவராகவும் சித்திரிக்கும் போக்கு. நம்மைச் சுற்றி சிறுபான்மை மக்கள் மீதான தவறான பிம்பம் கட்டமைக்கப்படுவதால் பொதுப்புத்தியில்  அவர்களைப் பற்றி `மோசமான' பார்வை உருவாகிறது. இதன் காரணமாக அவர்களுக்கும் நமக்குமான பழக்கம் குறையும்போது என்ன காரணம் என்றே தெரியாமல் அவர்கள் பிரச்னைகளும் நமக்குப் புரியாமல்போய்விடுகின்றன.

மத அடையாளத்தைக்கொண்டு தன்னையும் புண்படுத்தியதாகக் கூறுகிறார் எழுத்தாளர் அ.மார்க்ஸ்...

``தனிமனிதன் ஒருவன் சமூகத்தில் ஒரு கருத்தை முன்வைக்கும்போது, எதிர் கருத்துடையவர்கள் அந்த மனிதனின் மத அடையாளங்களை முன்வைத்து ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது. என்னையும் புரட்சிகர அமைப்பு `அந்தோணிசாமி' மார்க்ஸ் எனக் குறிப்பிட்டு விமர்சித்தனர். சமீபத்தில் ஒரு முகநூல் பக்கத்தில் சாதிக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர்,  சமூகத்தில் பல்வேறு தளங்களில் போராடிவரும் உதயகுமார், திருமுருகன் காந்தி போன்ற பலரையும் அவர்கள் மதம் குறித்து விமர்சித்து எழுதியிருந்தது மோசமான ஒரு செயல். சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்  மத அடையாளத்தை விடுத்து பொதுத்தளங்களுக்கு வரும்போது அவர்கள்மேல் மதச்சாயம் பூசுவது பல வருடங்களாக நடந்துவரும் கொடுமை. இதுகுறித்து வெளிப்படையான கலந்துரையாடல் வரும்போதுதான் சரியான புரிதல் உண்டாகும். என் கல்லூரிக் காலம் தொடங்கி தற்போது வரை என் பெயரின் காரணமாகவும், மதத்தின் பெயரிலும் கல்லூரியில் சேருவதில், வீடு கிடைப்பதில் பிரச்னைகளைச் சந்தித்துள்ளேன். நெருங்கிய நண்பர்களின் மனதில் என் மத அடையாளங்கள் குறித்து எந்தவித பிரச்னையுமில்லை. சுற்றியுள்ள சமூகம்தான் அந்தப் பார்வைக்கு அவர்களை நிர்பந்தப்படுத்துகிறது" என்றார் வேதனையுடன்.

``பெரும்பான்மை மதத்துக்கானதுதான் இந்த நாடு என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. பொதுவெளியில் மதத்தைக் காரணமாகக்கொண்டு தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல்போகும் அச்சம் `சிறுபான்மை' மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது'' என்று தன் கருத்தை முன்வைத்தார் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா.

``இந்தப் பாகுபாடு பார்ப்பது, புதிதாக ஏதோ இன்று தோன்றியது அல்ல. இந்தியாவில் சாதிரீதியிலான மதரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. 

புனேவில் ஐ.ஏ.எஸ் படித்துக்கொண்டிருந்த மாணவர் ஒருவருக்கு, அவர் `இஸ்லாமியர்' என்ற காரணத்தால் வீடு கிடைக்கவில்லை. எனவே, அவர் தன் பெயரை இந்துப் பெயராக மாற்றிவைத்துக்கொண்டு வாடகைக்கு வீடு பெற்றார். தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, இதை அந்த மாணவர் தெரிவித்தார். இந்த நிலைதான் நம் நாட்டில் பலருக்கும். இந்த நாடு, எல்லா மதத்தினருக்கும், மதம் சாராத பகுத்தறிவாளர்கள் அனைவருக்குமான ஒன்று"  என ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் இஸ்லாமிய தாயார் ஒருவர் தன் குழந்தைக்கு `கிருஷ்ணர்' வேடம் அணிந்து தூக்கிச் செல்வது போன்ற புகைப்படம் மிகப் பிரபலம்.  சபரிமலை பக்தர்கள் மசூதிகளில் இளைப்பாறுவது, வேளாங்கன்னி மாதா கோயிலுக்கு இந்துக்கள் வேண்டுதல்கள் நிகழ்த்துவது... இவையெல்லாம் நமக்குத் தெரிவிப்பது ஒரே கருத்தைத்தான். எல்லா மதங்களிலும் சமத்துவத்தை விரும்புபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால், இந்த மக்களிடையே பிளவை உண்டாக்க நினைக்கும் சிலர், சகமனிதனை வெறுக்கும் போக்கை மதத்தின் பெயரால் திணிக்கிறார்கள். ஆனால், இன்றைய சூழலில் மக்களில் ஒருவரை நீங்கள் `ஜோசப்' எனப் பிரித்தால் எல்லோரும் `ஜோசப்' ஆவார்கள், `யூசுப்' எனப் பிரித்தால் எல்லோரும்  `யூசுப்' ஆவார்கள்; `குமார்' எனப் பிரித்தால்  எல்லோரும்  `குமார்' ஆவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு