Published:Updated:

ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கதை! #FeelGoodStory

ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கதை! #FeelGoodStory
News
ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கதை! #FeelGoodStory

ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கதை! #FeelGoodStory

டுபாட்டோடு, ஆத்மார்த்தமாக, அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கிற எந்தச் செயலுக்கும் பலன் உண்டு. சில நேரங்களில் அது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத உயரத்தைத் தந்து, நம்மைத் திக்குமுக்காடச் செய்துவிடும்.

`கடமையைச் செய்... பலனை எதிர்பாராதே!’ என்கிற கூற்றைப் பின்பற்றுபவர்களில் பலருக்கும் கிடைக்கவேண்டிய பாராட்டோ, அங்கீகாரமோ, பலன்களோ கிடைக்காமல் போவதற்குக் காரணம், கடமையைக் `கடனே’ என்று செய்வதுதான். இதற்கு உதாரணங்களாக வரலாற்றில் ஏராளமான நிகழ்வுகளும், சம்பவங்களும், கதைகளும் உள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி ஆஷ்ஃபோர்டின் (Daisy Ashford) கதை நம்ப முடியாதது; ஆனால், உண்மை. அதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. டெய்ஸி ஆஷ்ஃபோர்டு முழு ஈடுபாட்டோடு செய்த ஒரு வேலை அவருக்கு வாரி வழங்கியது கொஞ்ச நஞ்சமல்ல. அப்படி என்ன செய்தார் டெய்ஸி... அவருக்குக் கிடைத்தது என்ன... பார்க்கலாமா? 

லண்டனின் தென்மேற்குப் பகுதியில் இருக்கிறது பீட்டர்ஷாம் (Petersham) கிராமம். அந்தக் கிராமத்தில்தான் இருந்தாள் குட்டிப்பெண் டெய்ஸி ஆஷ்ஃபோர்டு... ஒன்பது வயது துறுதுறுச் சுட்டி. இயற்கையின் வனப்பெல்லாம் கொட்டிக்கிடந்த கிராமம் அது. பக்கத்திலேயே தேம்ஸ் நதி ஓடிக்கொண்டிருந்தது. `மார்கரெட் மேரி ஜூலியா டெல்வின் (Margaret Mary Julia Devlin) என்று டெய்ஸிக்கு முழு நீளமான ஒரு பெயரைச் சொல்கிறது அவரின் வரலாற்றுக் குறிப்பு. டெய்ஸியின் அப்பா வில்லியம் ஆஷ்ஃபோர்டு ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர். அவருக்கும் அம்மா எம்மாவுக்கும் (Emma) டெய்ஸியின் மேல் அலாதிப் பிரியம். அதனாலேயே அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். அந்தச் சிறு பெண்ணைப் பள்ளிக்கு அனுப்ப மனமில்லாமல், வீட்டிலேயே ஆரம்பக் கல்வியைக் கற்றுக்கொடுத்தார்கள். டெய்ஸிக்குக் கதை என்றால் கொள்ளைப் பிரியம். படிக்கிற நேரம் போக, அம்மாவிடமும் அப்பாவிடமும் `கதை, கதை...’ என்று கேட்டுத் துளைத்தெடுப்பாள். அவர்கள் சொல்பவை மட்டுமல்ல... அவளே சில கதைகளையும் புனைந்து அம்மா அப்பாவுக்கும் சொல்வாள். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டெய்ஸிக்கு எதையும் சட்டெனக் கிரகித்துக்கொள்ளும் திறமை இருந்தது. வீட்டுக்கு வருகிற விருந்தினர்கள், உறவினர்கள், அப்பாவின் நண்பர்கள் அத்தனைபேரின் உருவங்களையும் நடவடிக்கைகளையும் அப்படியே உள்வாங்கிக்கொள்வாள். அவர்களைப்போல் நடித்துக்காட்டுவாள். நான்கு வயதிலேயே அழகாக, சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் ஆற்றல் டெய்ஸிக்கு வந்துவிட்டது. அவள் சொல்லச் சொல்ல, அதைக் கேட்டு அப்பா அந்தக் கதையை எழுதினார். அந்தக் கதையின் பெயர் `தி லைஃப் ஆஃப் பாதர் மெக்ஸ்வைனி’ (The Life of Father McSwiney). ஒரு குழந்தையின் திறமை பளிச்சிடுவதும், மேலும் மேலும் வளர்வதும் பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. டெய்ஸியின் அப்பாவும் அம்மாவும் அவள் சொல்கிற கதைகளை விழிகள் விரியக் கேட்டார்கள்; மனதாரப் பாராட்டினார்கள்; வீட்டுக்கு வருகிறவர்களிடமெல்லாம் தங்கள் செல்லத்தின் பெருமையை எடுத்துச்சொன்னார்கள். டெய்ஸியின் கதை சொல்லும் ஆற்றல் படிப்படியாக வளர்ந்தது. 

அது 1890-ம் ஆண்டு. பனிக்காலம். அப்போது டெய்ஸியின் குடும்பம் லீவிஸ் (Lewes) என்ற இடத்தில் இருந்தது. இங்கிலாந்தில் சிறு குழந்தைகளாக இருந்தாலும், அவர்களுக்குத் தனி அறை கொடுத்திருப்பார்கள். அவர்கள் சுதந்திரமாக, தங்கள் தனித்துவத்தை இழக்காமல் வளர வேண்டும் என்கிற எண்ணம்தான் அதற்குக் காரணம். ஒன்பது வயது டெய்ஸி, அந்தப் பனிக்காலத்தில் தனி அறையில் இருந்தாள். பகல் நேரத்தில்கூட அதிகமாக வெளியே வர முடியாது. வாட்டியெடுக்கும் பனி அவளை அறைக்குள்ளேயே முடக்கிப்போட்டிருந்தது. சும்மாவும் அவளால் இருக்க முடியவில்லை. படித்த புத்தகங்களையே எத்தனை முறைதான் படிப்பது? புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்கிற ஆசை அவளை உந்தித் தள்ளியது. தான் பார்த்த மனிதர்கள், வீட்டுக்கு வந்தவர்கள் அத்தனை பேரையும் மனக்கண்ணில் கொண்டுவந்தாள். அவர்களை வைத்து ஒரு பெரிய கதையாக (நாவல்) எழுதினால் என்ன என்கிற எண்ணம் தோன்றியது. உடனே அவள் கைக்குக் கிடைத்தது ஒரு எக்சர்ஸைஸ் நோட் புக்தான். அவள் யோசிக்கவே இல்லை. ஒவ்வோர் அத்தியாயமாக தான் நினைத்த கதையை அந்த நோட்டுப் புத்தகத்தில் வடிக்க ஆரம்பித்தாள். 

அதன்பிறகு பனிக்காலம் டெய்ஸிக்குக் கடினமானதாக இருக்கவில்லை. குடும்பத்தோடு சாப்பிட அவள் ஹாலுக்கு வரும் நேரம் தவிர, தன் அறையிலேயே பழியாகக் கிடந்தாள். தான் நினைத்த கதையை ஆர்வத்தோடு எழுதினாள். அவ்வப்போது எழுதிய பக்கங்களைப் படித்துப் பார்ப்பாள். கற்பனையை விரிப்பாள். மறுபடி எழுத ஆரம்பிப்பாள். ஒருவழியாக தான் எழுத நினைத்த முழுக் கதையையும் எழுதி முடித்துவிட்டாள் டெய்ஸி. ஆனால், அதை என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. யாரிடமாவது காட்ட வேண்டும் என்றுகூட அப்போது அவளுக்குத் தோன்றவில்லை. அதை அப்படியே ஒரு மேஜை இழுப்பறையில் வைத்தாள்; மூடினாள்; பிறகு அப்படியே மறந்து போனாள். 

எல்லோருக்கும், எல்லாக் காலங்களிலும், எல்லாமும் பிடிப்பதில்லை. டெய்ஸிக்கும் அதுதான் நடந்தது. டீன் ஏஜ் பருவத்திலேயே எழுதுவதை நிறுத்திவிட்டாள் டெய்ஸி. அது என்னவோ புனைகதைகளின் மேலிருந்த ஈர்ப்பு அவளுக்குக் குறைந்துபோய், ஒரு கட்டத்தில் காணாமலேயே போய்விட்டது. வாழ்க்கை, பணிச்சூழல் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக டெய்ஸியின் குடும்பம் இடம்பெயர்ந்துகொண்டே இருந்தது. பெக்ஸ்ஹில் (Bexhill) என்கிற இடத்துக்குப் போனது; பிறகு லண்டனுக்குப் போனது. அங்கே ஒரு நிறுவனத்தில் செக்ரட்டரியாகப் பணிபுரிந்தார் டெய்ஸி. பிறகு, முதல் உலகப்போரின்போது தென்கிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் டோவர் என்கிற இடத்தில் ஒரு கேன்டீன்கூட வைத்து நடத்தினார். வாழ்க்கை அதுபாட்டுக்கு வேகமெடுத்துப் போய்க்கொண்டே இருந்தது. 

அது, 1917-ம் ஆண்டு. டெய்ஸிக்கு 36 வயது. லீவிஸில் இருந்த அம்மா இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. பழைய நினைவுகளைச் சுமந்தபடி லீவிஸுக்குப் போனார். அம்மாவின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்தன. மிக நெருங்கியவர்களைத் தவிர, ஒவ்வொருவராக விடைபெற்றுப் போனார்கள். டெய்ஸியும் அவருடைய சகோதரியும் தாங்கள் இருந்த பழைய அறைகளுக்குப் போய், தாங்கள் விட்டுச் சென்ற பொருள்களைப் பார்த்து நெகிழ்ச்சியோடு பேசிக்கொண்டார்கள். அம்மா தங்கள் பொருள்களை இத்தனை ஆண்டுகாலம் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறாரே என வியந்தார்கள். டெய்ஸி, தன் மேஜையைத் துழாவியபோது அவர் ஒன்பது வயதில் எழுதிய அந்த நாவல் கிடைத்தது. முழுக்க முழுக்க பென்சிலால் எழுதப்பட்ட நாவல். அதை எடுத்து படிக்கப் படிக்க டெய்ஸிக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நிறைய எழுத்துப் பிழைகள்... ஒவ்வோர் அத்தியாயமும் முழு பாராவாக இருந்தன. அதையும் தாண்டி, தான் எழுதிய எழுத்து அவருக்கே புதிதாக இருந்தது. 

டெய்ஸிக்கு ஒரு தோழி இருந்தார். பெயர் மார்கரெட் மக்கின்ஸி (Margaret Mackenzie). அந்த நேரத்தில் குளிர் ஜுரத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுக்கையில் இருந்தார் மார்கரெட். தன் தோழியின் வீட்டுக்குப் போனார் டெய்ஸி. ``மார்கரெட்... உனக்கு உடம்பு சரியில்லைதான். உன் நிலைமை எனக்கும் புரியுது. ஆனா, எனக்கு ஓர் உதவி செய்யேன்... நேரம் கிடைக்கும்போது, இதைப் படிச்சுட்டு எப்பிடி இருக்குனு சொல்லேன். நான் ஒன்பது வயசுல இதை எழுதினேன். இப்போ படிக்கும்போதும் புதுசா இருக்கு’’ என்று சொல்லி தன் நாவலைக் கொடுத்தார். அந்தக் கடுமையான ஜுரத்திலும் மார்கரெட்டை அந்த நாவல் ஈர்த்ததுதான் ஆச்சர்யம். தான் படித்ததோடு நிற்காமல், தனக்குத் தெரிந்த பலருக்கும் அந்தக் கையெழுத்துப் பிரதியைப் படிக்கக் கொடுத்தார் மார்கரெட். பல கைகளுக்கு மாறியது அந்த நாவல். கடைசியாக நாவலாசிரியர், ஃப்ராங்க் ஆர்தர் ஸ்வின்னர்டோன் (Frank Arthur Swinnerton) என்பவரிடம் போய்ச் சேர்ந்தது. அவருக்கு அதை ஒரு புத்தகமாகக் கொண்டு வரலாமே என்று தோன்றியது. 

முதல் வேலையாக ஒரு பதிப்பாளரைப் பிடித்தார். அந்தப் பதிப்பகத்தின் பெயர் சாட்டோ & வைண்டஸ் (Chatto & Windus). அதுவும் சாதாரண நிறுவனம் கிடையாது. பிரபல பதிப்பாளர்களான `ரேண்டம் ஹவுஸ்’-ன் கிளை அது. அவர்கள் அதைப் புத்தகமாகக் கொண்டுவர ஒப்புக்கொண்டார்கள். `ஆனால், ஆசிரியர் புதியவராயிற்றே... பிரபல எழுத்தாளர்கள் யாராவது அணிந்துரை எழுதித்தந்தால் நல்லது’ என்றும் சொன்னார்கள். அதற்கும் ஒருவரைப் பிடித்தார் ஃப்ராங்க். அவர் `பீட்டர் பேன்’ என்ற பிரபல நாவலை எழுதிய ஜே.எம்.பேரி (J.M.Barrie). 1919-ம் ஆண்டு, பேரியின் அணிந்துரையோடு, டெய்ஸியின் `தி யங் விசிட்டர்ஸ்’ (The Young Visiters) என்ற அவரின் நாவல் வெளியானது. நாவல் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த வருடத்தின் `பெஸ்ட் செல்லர்’ என்கிற பெயரையும் வாங்கியது. முதல் வருடத்திலேயே 18 பதிப்புகள் விற்பனையாயின. அதற்குப் பிறகும் பல ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. டெய்ஸிக்கு அந்த நாவலின் மூலமாகக் கிடைத்த ராயல்டி தொகையே பல லட்ச ரூபாய்கள்.1920-ம் ஆண்டு ஜேம்ஸ் டெல்வின் என்பவரை மணந்துகொண்டார் டெய்ஸி. 

புத்தகமாக மட்டுமல்ல... அவரின் `தி யங் விசிட்டர்ஸ்’ நாவல் நாடகமாக, இசை நிகழ்வாக, இருமுறை திரைப்படமாக, தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்டு வசூலில் பட்டையைக் கிளப்பியது. பணத்தை ராயல்டி என்கிற பெயரில் மழையாகப் பொழிந்தது என்றும் சொல்லலாம். அதற்குப் பிறகு அவர் புதிதாக எதையும் எழுதவில்லை என்றாலும், ஆரம்பகாலத்தில் ஆத்மார்த்தமாக அவர் எழுதிய படைப்புகளே இறுதிக்காலம் வரை அவர் வாழ்க்கையை வளமாக வாழ வழி செய்துகொடுத்தன. ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்தபோது டெய்ஸி இப்படிச் சொன்னாராம்... ``எனக்குச் சுத்தமான காற்றும் ராயல்டி செக்குகளும் மிகவும் பிடித்தவை!’’.