Published:Updated:

‘இது முதல் தடவையல்ல!’ - உலக அளவில் சர்ச்சைக்குள்ளான சுயசரிதைகள்

‘இது முதல் தடவையல்ல!’ - உலக அளவில் சர்ச்சைக்குள்ளான சுயசரிதைகள்

'நான் எனது சுயசரிதைப் புத்தகத்தில் எழுதியுள்ளவை யாருடைய உணர்வையாவது புண்படுத்தினால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். குழப்பத்தை  ஏற்படுத்தியுள்ள எனது  சுயசரிதையைத்  திரும்பப் பெறுகிறேன்' - பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று இவ்வாறு பதிவிட்டிருந்தார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள  'An ordinary man' என்ற தனது சுயசரிதையை சமீபத்தில் வெளியிட்டார் நவாசுதீன். அந்தப் புத்தகத்தில் தன்னைப் பற்றி மோசமாக எழுதியுள்ளதாக பாலிவுட் நடிகை நிகாரிகா சிங்  எதிர்ப்புத் தெரிவித்த பிறகு அந்த டிவிட்டை பதிவிட்டார் நவாசுதீன்.

பல ஆண்டுகளுக்கு முன்  நேருவின் செக்ரெட்டரியாக இருந்த எம்.ஓ.மாத்தாய் 'ரெமினிசன்சஸ் ஆப் தி நேரு ஏஜ்' என்ற தன் சுயசரிதையில் இந்திராகாந்தி குறித்து சர்ச்சையான தகவல் ஒன்றைக் கூறியிருந்தார். பின்பு அந்தப் பகுதி மட்டும் நீக்கப்பட்டு புத்தகம் விற்பனையானது. இதைப் பற்றி மாத்தாய் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். எப்போதும் பிரபலமானவர்களின் வாழ்க்கை குறித்த புத்தகமோ , வாழக்கைத் தொகுப்போ வெளிவரும் போது இது போன்ற சர்ச்சைகளும் ஏற்படுவதுண்டு.

சுயசரிதைகளும் சர்ச்சைகளும்: 

 Auto biography & Biography எனப்படும் சுயசரிதை மற்றும் வாழக்கை வரலாறு  எழுதும் பழக்கம் உலக அளவில் பிரபலமான ஒன்று. பிரபலங்கள், தங்கள் சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகள், வெற்றிகள், தங்களைப் பற்றி பிறருக்குத் தெரியாத பல தகவல்களைத் தாங்களாகவோ அல்லது வேறு ஒருவர் மூலமோ எழுதி புத்தகமாக வெளியிடுவர். சுவாரஸ்யமான தகவல்கள் நிறைந்திருக்கும் காரணத்திற்காகவே இந்த வகைப் புத்தகங்களை விரும்பிப் படிப்பதற்கு உலகெங்கிலும் வாசகர்கள் இருக்கிறார்கள். சில புத்தகங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடிய அரசியல் சார்ந்த தகவல்களை வெளிக்கொண்டுவரும். சில புத்தகங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிலும் மகாத்மா காந்தி தொடங்கி அப்துல்கலாம் வரை சுயசரிதை எழுதியவர்களின் பட்டியல் நீளும். அது வரவேற்பையும் அதே சமயம் சர்ச்சைகளையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய  சில புத்தகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

ப்ளேயிங் இட் இன் மை வே - சச்சின் டெண்டுல்கர்:  

இந்திய கிரிகெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. அதில் அவர் இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல் குறித்து எழுதியிருந்த தகவல் சர்ச்சைக்குள்ளானது. "சேப்பல் ஒரு ரிங் மாஸ்டர் போல அவரது கருத்துகளை வீரர்கள் மீது திணித்தார். மூத்த வீரர்களின் அர்ப்பணிப்பை அவர் உதாசீனப்படுத்தினார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஓர் அடி கூட முன்னேறவில்லை என்றால் அது மிகையாகாது. 2007 ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களுக்கு முன் என் வீட்டிற்கு வந்து என்னை கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார்" என அவரது புத்தகத்தில் கூறியிருந்த கருத்து, சர்ச்சையைக் கிளப்பியது. அதன் பிறகு கங்குலி, ஜாகீர்கான் உள்ளிட்ட வீரர்களும் கிரேக் சேப்பல் குறித்து இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தார்கள். இந்தப் புத்தகத்தை சச்சினும் பத்திரிகையாளர் போரியா மஜிம்தாரும் சேர்ந்து எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரேகா  தி அன் டோல்டு ஸ்டோரி :

 பாலிவுட்டின் மிகப் பிரபலமான நடிகையும், ராஜ்யசபா எம்.பியுமான ரேகா அவர்களின் வாழ்க்கைப் பற்றிய புத்தகம் சென்ற ஆண்டு வெளியானது. பத்திரிகையாளர் யாசிர் உஸ்மான் புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் நடிகைகளுக்குத் திரைக்குப் பின்னான நிஜ வாழ்க்கை மிகக் கொடுமையான ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், 15 ஆவது வயதில் நடிக்க வந்தபோது முன்னணி நடிகர் ரேகாவைத் துன்புறுத்தினார். அதைச் சுற்றியிருந்த திரைப்படக்குழுவினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் எனக் குறிப்பிட்டிருந்தது திரைத்துறையிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓம்பூரி - அன்லைக்லி ஹீரோ: 

சில மாதங்களுக்கு முன் மறைந்த ஓம்பூரி பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத முக்கிய நடிகர். பாலிவுட் படங்கள் மட்டுமன்றி ஆங்கிலப் படங்கள், பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் இறந்த பிறகு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் வாழ்க்கை குறித்த புத்தகத்தை அவரது மனைவியும் பத்திரிகையாளருமான நந்திதா பூரி எழுதினார். அந்தப் புத்தகத்தில் நடிகர் ஓம்புரி சிறுவயதில் செய்த தவறான நடவடிக்கைகள் குறித்தும், அவரது முன்னால் காதலிகள் பற்றி குறிப்பிட்டிருந்ததும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

தி பாலியிஸ்டர் பிரின்ஸ் - தி ரைஸ் ஆப் திருபாய் அம்பானி: 

இந்தியாவின் பெரும் பணக்காரரான திருபாய் அம்பானியின் அனுமதி பெறாமலேயே எழுதப்பட்ட ‘தி பாலிஸ்டர் பிரின்சஸ்' புத்தகம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவரது வாழ்க்கை, தொழில் வளர்ச்சி குறித்து அவருக்கு நெருக்கமான சிலரிடம் தகவல் பெற்று எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம். இதை வெளிநாட்டுப் பத்திரிகையாளரான ஹேமிஸ் மெக்டொனால்டு எழுதினார். தன்னைப் பற்றி தவறான தகவல்கள் இருப்பதாகக் கூறி அம்பானி தரப்பிலிருந்து தடை கோரப்பட்டது. பின்பு  இந்தியாவில் மட்டும் அப்புத்தகம் தடைசெய்யப்பட்டது.

இவர்கள் தவிர இன்னும் நிறைய அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களும் சுயசரிதை எழுதியுள்ளனர். சில ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சுயசரிதை எழுதுவதும் அதில் தங்கள் துறை சார்ந்த விமர்சனங்களை முன் வைப்பதும் வழக்கமாகி வருகிறது. சில அதிகாரிகள் தாங்கள் பதவியிலிருந்த போது அரசின் வற்புறுத்தல் காரணமாகச் செய்த தவறான விசாரணைகளையும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு