Published:Updated:

ஒரு நிமிட ஓவியம்... 10 லட்சம் டாலர் விலை! பிக்காஸோ கதை விவரிக்கும் பின்னணி #FeelGoodStory

ஒரு நிமிட ஓவியம்... 10 லட்சம் டாலர் விலை! பிக்காஸோ கதை விவரிக்கும் பின்னணி #FeelGoodStory
ஒரு நிமிட ஓவியம்... 10 லட்சம் டாலர் விலை! பிக்காஸோ கதை விவரிக்கும் பின்னணி #FeelGoodStory

வாழ்க்கையில் முன்னேறிய ஒருவரை, ‘அவருக்கென்னப்பா ஈஸியா மேலே வந்துட்டாரு’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். இல்லையென்றால், `அவனுக்கென்னப்பா... எங்கே போனாலும் ரத்தினக் கம்பள வரவேற்புனு சொல்வாங்களே... அந்த மாதிரி! தொட்டதெல்லாம் துலங்குது. அவன் ராசி அப்படி!’ என்று ஜாதகம், ராசியின் மேல் பழிபோட்டுவிடுவார்கள். உண்மையில் ஒரு வெற்றியாளர் அந்த உயரத்தை அடைவதற்கு எவ்வளவு கடினமாக உழைத்தார், என்னென்ன தடைகளையெல்லாம் கடந்துவந்தார் என்று பலரும் யோசிப்பதில்லை; அறிந்துகொள்ள முயற்சி செய்வதும் இல்லை. ஒரு வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பை, மெனக்கெடலை, திறமையை எளிதாக மதிப்பிட்டுவிடலாமா? பிக்காஸோவின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு கதை இது தொடர்பாக ஓர் உண்மையை விவரிக்கிறது. பிக்காஸோவின் வரலாற்றில் உண்மையில் நடைபெறாத சம்பவமாக, கட்டுக்கதையாகவேகூட இது இருக்கலாம். ஆனால், இது உணர்த்தும் செய்தி மிக முக்கியமானது.

`20-ம் நூற்றாண்டின் இணையற்ற ஓவியர்களில் ஒருவர்’ என்று புகழப்படுபவர் பாப்லோ பிக்காஸோ (Paplo Picasso). ஸ்பெயினில் பிறந்த இந்த ஓவியர், தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது ஃபிரான்ஸில்தான். அது ஒரு காலை நேரம். பிக்காஸோ ஒரு சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார். இதமான காற்று... அந்தக் காற்றுக்கு ஏற்றபடி சாலையின் இருபுறமும் இருக்கும் மரங்களிலிருந்து அசையும் இலைகள்...  `கீச்’சிட்டுப் பறக்கும் பறவைகள்... ஏதோ ஒரு மரத்தில் தன் அலகால் கொத்திக்கொண்டிருக்கும் மரங்கொத்தி... எல்லாவற்றையும் நோட்டமிட்டபடி நடந்துகொண்டிருந்தார். 

சற்று தூரத்தில் அவருக்கு எதிர்ப்புறம் நடந்து வந்துகொண்டிருந்த ஒரு பெண், பிக்காஸோவையே பார்த்தபடி வந்துகொண்டிருந்தார். அதை பிக்காஸோ கவனித்தாலும், தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு நடந்தார். அந்தப் பெண்மணி அவரைக் கடந்து போனார். சற்று தூரம் போனதும் நின்றார். ஏதோ யோசனை வந்தவராக பிக்காஸோவை நோக்கி ஓடிவந்தார். 

``ஐயா... சற்று நில்லுங்கள்!’’ 

பிக்காஸோ நின்றார். 

``நீங்கள்... நீங்கள்... ஓவியர் பிக்காஸோதானே..!’’ 

பிக்காஸோ மென்மையாகச் சிரித்தபடி `ஆமாம்’ என்பதுபோலத் தலையை அசைத்தார். 

உடனே அந்தப் பெண் மகிழ்ச்சியோடு சிரித்தார். பிக்காஸோவின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார். ``நான் உங்கள் ரசிகை’’ என்றவர், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அதோடு, பிக்காஸோ வரைந்த சில குறிப்பிட்ட ஓவியங்களைச் சிலாகித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். சாலை ஓரத்தில் நின்று பேச சங்கடமாக இருந்தாலும், பிக்காஸோவால் அந்தப் பெண்ணைத் தவிர்க்க முடியவில்லை. லேசான புன்னகையுடன் அந்தப் பெண் சொல்வதையெல்லாம் தலையை அசைத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் போனதும், அந்தப் பெண் பிக்காஸோவிடம் தயங்கித் தயங்கிக் கேட்டார். ``எனக்கு ஒரு ஆசை ஐயா. சொன்னால் தவறாக நினைத்துவிட மாட்டீர்களே...’’

``சொல்லுங்கள் மேடம்... என்ன?’’ 

``என்னை ஒரு ஓவியமாக வரைந்து தருவீர்களா? இப்போதே...’’ 

பிக்காஸோ சிரித்தார். ``இங்கேயா... இப்போதா? வரைவதற்கான உபகரணங்கள் எதுவும் என்னிடம் இல்லையே... நான் வெறும் கையுடன் அல்லவா வந்திருக்கிறேன்! இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்’’ என்று சொல்லி விடைபெறத் தயாரானார். 

``அப்படிச் சொல்லாதீர்கள். திரும்ப உங்களை என்னால் பார்க்க முடியுமோ, முடியாதோ... இப்பொழுதே என்னை எப்படியாவது ஒரு  ஓவியமாக வரைந்து தாருங்கள்!’’  

அந்தப் பெண்ணின் வற்புறுத்தலை அவரால் மறுக்க முடியவில்லை. பிக்காஸோ தன் பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்தார். வரைய ஆரம்பித்தார். ஒரு நிமிடம்தான். வரைந்து முடித்துவிட்டார். அந்தக் காகிதத்தை நீட்டினார். ``இதோ... இந்த பத்து லட்சம் டாலர் பெறுமானமுள்ள ஓவியத்தை வாங்கிக்கொள்ளுங்கள்!’’ என்றார். 

அந்த ஓவியத்தைப் பார்த்த அந்தப் பெண்ணுக்கு விழிகள் வியப்பால் விரிந்தன. ஒரு நிமிடத்துக்குள் வரைந்த ஓர் ஓவியம் பத்து லட்சம் டாலருக்கு விலை போகுமா? ஆனாலும், அந்தப் பெண் நன்றி சொன்னார். பிக்காஸோ விடைபெற்றுத் தன் வழியில் நடந்தார். 

வீட்டுக்கு வந்த பெண்மணிக்கு இருப்புகொள்ளவில்லை. உண்மையிலேயே இந்த ஓவியத்துக்கு அவ்வளவு விலை கிடைக்குமா? ஒருவேளை பிக்காஸோ நகைச்சுவைக்காக அப்படிச் சொல்லியிருப்பாரோ..! பரிசோதித்துப் பார்க்க முடிவுசெய்தார். கடைத்தெருவுக்குப் போனார். அந்த ஊரிலேயே ஓவியங்களை விற்கும் ஒரு பெரிய கடைக்குப் போனார். அதன் உரிமையாளரிடம் தயங்கித் தயங்கி ஓவியத்தை நீட்டினார். அதைப் பார்த்ததும் கடைக்காரர், ``இது ஓவியர் பிக்காஸோ வரைந்ததுபோல இருக்கிறதே...’’ என்றார். பெண்ணிடம் பேசி, உண்மையைத் தெரிந்துகொண்டார். அந்த ஓவியத்துக்குக் கடைக்காரர் சொன்ன விலை, பத்து லட்சம் டாலர். 

***

பல நாள்களுக்குப் பின்னர் அந்தப் பெண்மணிக்கு மறுபடியும் ஒரு சாலையில் பிக்காஸோவைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் ஓடி வந்தார். ``ஐயா... நீங்கள் சொன்னது மிகச் சரி. அந்த ஓவியத்தின் விலை பத்து லட்சம் டாலர்.’’ 

பிக்காஸோ சிரித்தபடி அந்தப் பெண்ணைப் பார்த்தார். 

“எனக்கு இன்னொரு ஆசை ஐயா. என்னை உங்கள் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுங்கள். அப்போது, என்னாலும் உங்களைப்போலவே மிகக் குறைந்த நேரத்தில் பத்து லட்சம் டாலர் விலைமதிப்புள்ள ஓவியத்தை வரைய முடியும் இல்லையா?!’’ 

“மேடம்! நீங்கள் குறிப்பிடும் ஓவியத்தை நான் ஒரு நிமிடத்துக்குள்தான் வரைந்தேன். அதன் மதிப்பும் பத்து லட்சம் டாலர்தான். ஆனால், அந்த விலைக்காக என் வாழ்க்கையில் 30 ஆண்டுகளைச் செலவழித்திருக்கிறேன். அத்தனை வருடங்களும் மிகவும் போராடியிருக்கிறேன். இந்த ஓவியக்கலையைக் கற்றுக்கொள்வதற்காகக் கடுமையாக, அர்ப்பணிப்போடு உழைத்திருக்கிறேன். என்னுடைய திறமை உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால், உங்கள் வாழ்க்கையையே ஓவியம் வரைவதற்காக அர்ப்பணியுங்கள். அப்போது, என்னைப்போல ஓவியம் வரைவது உங்களுக்கும் சாத்தியமாகும்.’’ 

அந்தப் பெண்மணி என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றார். பிக்காஸோ அவரைக் கடந்து நடந்து போய்க்கொண்டிருந்தார்.