Published:Updated:

"இந்தக் குளிர்காலத்துக்குப் பின் நான் உயிரோடு இருக்க மாட்டேன்!" - பேராசிரியரின் உருக்கமான கடிதம்

"இந்தக் குளிர்காலத்துக்குப் பின் நான் உயிரோடு இருக்க மாட்டேன்!" - பேராசிரியரின் உருக்கமான கடிதம்
"இந்தக் குளிர்காலத்துக்குப் பின் நான் உயிரோடு இருக்க மாட்டேன்!" - பேராசிரியரின் உருக்கமான கடிதம்

நாக்பூர் மத்திய சிறைச்சாலையின் தனிமைச் சிறையிலிருந்து தன் மனைவிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா. டெல்லி பல்கலைக்கழத்தின் ஆங்கிலத்துறையில் பணியாற்றியவர். தொண்ணூறு விழுக்காடு செயல்படாத உடலையும், பல்வேறு உபாதைகளையும் தாங்கிவரும் மாற்றுத்திறனாளி இவர்.

2009 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களைப் பிடிப்பதற்காக, 'பச்சை வேட்டை நடவடிக்கை' (Operation Greenhunt) என்ற பெயரில், அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தினால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் மூலம் இந்தியாவின் மத்திய பகுதிகளில் இருக்கும் மாவோயிஸ்ட்கள் அழிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், 'பழங்குடி மக்களின் நிலங்களைப் பிடுங்கி, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறார்கள்', என இந்த நடவடிக்கையின் மீது விமர்சனங்கள் பாய்ந்தன. ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களை இழந்ததாகவும், அவர்களது கிராமங்கள் சூறையாடப்பட்டதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்தியா முழுவதும் பல்வேறு செயற்பாட்டாளர்களும், எழுத்தாளர்களும், பழங்குடி மக்களுக்கு எதிராக நக்சல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் செய்த கொடுமைகளை வெளிப்படுத்தினர். அவர்களுள் மிக முக்கியமானவர் பேராசிரியர் சாய்பாபா. பழங்குடி மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களை அறிவுசார் தளத்தில் பெரும் விவாதத்துக்கு உள்ளாக்கினார் அவர்.

இதனால், பேராசிரியர் சாய்பாபா, மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், பல முறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம், பேராசிரியர் சாய்பாபா, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புகொண்டிருந்ததாகக்கூறி கைது செய்யப்பட்டார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து பல்வேறு செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பேராசிரியர் சாய்பாபா, நாக்பூர் மத்திய சிறையிலிருந்து தன் மனைவி வசந்தாவுக்கு அக்டோபர் 17ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதன் மொழிபெயர்ப்பு, பின்வருமாறு...

"அன்புள்ள வசந்தா,

வரவிருக்கும் குளிர்காலத்தை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது. ஏற்கெனவே தொடர் காய்ச்சல் காரணமாக நடுங்கி வருகிறேன். என்னிடம் கம்பளியோ, போர்வையோ இல்லை. தட்பவெப்ப நிலை குறையக் குறைய, எனது கால்களிலும் இடது கையிலும் வலி பெருகி மிகவும் துன்புறுத்துகிறது. நவம்பர் மாதம் தொடங்கவிருக்கும் குளிர்காலத்தில், நான் இங்கு பிழைப்பது சாத்தியமற்றது.

இறுதி மூச்சு விடும் மிருகத்தைப் போல நான் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்படியோ எட்டு மாதங்களை இங்கு கடந்துவிட்டேன். ஆனால், வரவிருக்கும் குளிர் காலத்தை என்னால் கடக்க இயலாது; இது நிச்சயம். இனியும் எனது உடல்நிலையைப் பற்றி எழுதுவதில் எந்தப் பயனும் இல்லை.

எப்படியாவது இந்த மாத இறுதிக்குள், மூத்த சட்ட ஆலோசகரைச் சந்தித்து விடு. திரு.காட்லிங் (அவரது வழக்கறிஞர்) அவர்களிடம் எனது பிணை மனுவை நவம்பர் முதல் வாரம் அல்லது அக்டோபர் இறுதி வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கவும். உன் நினைவில் கொள், நான் சொன்னபடி செய்யத்தவறினால், என் நிலைமை கைமீறிப் போய்விடும். அதற்கு நான் பொறுப்பல்ல. இனி இதைப்பற்றி நான் உனக்கு எழுதப்போவதில்லை என்பதைத் தெளிவாக்கிக் கொள்கிறேன்.

நீ திருமதி ரெபெக்கா அவர்களிடமும், நந்திதா நரேனிடமும் பேச வேண்டும். பேராசிரியர் ஹரகோபால் அவர்களிடமும், மற்றவர்களிடமும் பேசு. என் நிலைமையை முழுவதுமாக எடுத்துக் கூறு. நீ இதனை விரைவாகச் செய்ய வேண்டும்.

உங்கள் அனைவரிடமும் பிச்சைக்காரனைப் போலவும், கைவிடப்பட்டவனைப் போலவும் பல முறை கெஞ்சுவதால், மிகவும் மனச்சோர்வுற்று இருக்கிறேன். ஆனால், நீங்கள் யாரும் ஓர் அங்குலம்கூட நகர்வதில்லை; எனது நிலைமையைப் புரிந்துகொள்வதில்லை. தொண்ணூறு விழுக்காடு செயல்படாத உடலையும், பல்வேறு உடல் உபாதைகளையும் கொண்ட மாற்றுத்திறனாளி மனிதன், சிறைக்குள் இருந்துகொண்டு, இயங்கும் ஒரே கையுடன் என்ன செய்வான் என்பது யாருக்கும் புரிவதில்லை. எனது வாழ்க்கையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இந்த அலட்சியமே சட்டமீறல்; இது இரக்கமற்ற அணுகுமுறை.

தயவுசெய்து உன் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளவும். உனது உடல்நலமே எனது உடல்நலம்; நம் குடும்பத்தின் உடல்நலம். உனது உடல்நலத்தைப் பார்த்துகொள்ள தற்போது உன்னுடன் யாரும் இல்லை. நான் உன் முன் இருக்கும்வரை, நீ உன் உடல்நிலையை அலட்சியமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பேரன்புடன்,

உன் சாய்''