Published:Updated:

கொலைக் குற்றவாளியா இந்த முயல்? #WhoFramedRogerRabbit

கொலைக் குற்றவாளியா இந்த முயல்?  #WhoFramedRogerRabbit
கொலைக் குற்றவாளியா இந்த முயல்? #WhoFramedRogerRabbit

கொலைக் குற்றவாளியா இந்த முயல்? #WhoFramedRogerRabbit


ராபர்ட் ஹெமிக்ஸ் (Robert Zemeckis) இயக்கிய Who Framed Roger Rabbit திரைப்படத்தின் முக்கியமான தொழில்நுட்ப விஷயத்தை முதலில் பார்த்துவிடுவோம். ஏனெனில், அதுதான் திரைப்படத்தின் அடிப்படையான சுவாரஸ்யமே. 

இது ஒரு லைவ் ஆக்‌ஷன் அனிமேட் திரைப்படம். தமிழ்த் திரைப்பட உதாரணம் சொன்னால் சட்டெனப் புரியும். ரஜினிகாந்த் நடிப்பில் 1989- ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ஒரு பாடல் காட்சி வரும். ‘ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் வந்தாராம்” என்ற அந்தப் பாடலில், நடிகர்களோடு அனிமேஷன் உருவங்களும் இணைந்து ஆடும். அப்போது, இது பெரிய ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. இது, நடிகர்கள் ஆடிப்பாடும் பகுதிகள் முதலில் படமாக்கப்படும். இல்லாத அனிமேஷன் உருவங்களை இருப்பதாக பாவனைசெய்து நடிகர்கள் நடிக்க வேண்டும். பிறகு, கணினி மூலம் அனிமேஷன் உருவங்களை உருவாக்கி, அந்த அசைவுகளுக்குப் பொருத்தமாக இணைப்பார்கள். இரண்டுக்குமான ஒத்திசைவும் திட்டமிடலும் சரியாக இல்லாவிட்டால், காட்சிகள் சொதப்பிவிடும். இதற்கான தொழில்நுட்பம் அப்போது மும்பையில் மட்டுமே இருந்தது. இந்த முறையில் முழுத் திரைப்படமும் வந்தால் எப்படி இருக்கும்? அப்படி உருவான திரைப்படமே ‘Who Framed Roger Rabbit’. 

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம். வருடம் 1947. ‘டூன்டவுன்’ என்கிற இடத்தில் உள்ள கார்ட்டூன் உருவங்கள், நிஜ மனிதர்களுடன் இணைந்து செயல்படுகின்றன. ரோஜர் என்கிற முயல் ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறது. அன்று எடுக்கப்படும் காட்சியில் அதற்குச் சரியாக நடிக்க வரவில்லை. காரணம், அது எப்போதும் மனைவி ஜெசிக்கா நினைவாகவே இருக்கிறது. (ஜெசிக்காவும் ஒரு கார்ட்டூன்). படத்தின் முதலாளி முயலை பயங்கரமாகத் திட்டுகிறார். பிறகு, தனியார் டிடெக்டிவ் எட்டியை அழைக்கிறார். “இந்த முயல் படத்தில் ஒழுங்காக நடிக்க மறுக்கிறது. அதன் மனைவி ஜெசிக்காவின் லட்சணத்தை அது அறிந்துகொள்ள வேண்டும். ஜெசிக்கா இன்றிரவு மார்வின் என்கிற செல்வந்தனுடன் உல்லாசமாக இருப்பாள். நீ ரகசியமாக அதைப் புகைப்படம் எடுக்க வேண்டும்” என்று உத்தரவிடுகிறார். 

எட்டி திறமையான துப்பறிவாளன் என்றாலும், தன் சகோதரனின் மரணத்துக்குப் பிறகு, பயங்கர குடிகாரனாகிவிட்டான். மூக்கு நுனியில் கோபத்தை வைத்திருப்பவன். “கார்ட்டூன்களுக்காக இனி பணியாற்றுவதில்லை'' என்று சபதம் எடுத்திருக்கிறான். காரணம், கார்ட்டூன் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில்தான் சகோதரன் கொல்லப்பட்டான். எனவே, எட்டி முதலில் மறுத்தாலும், ‘சரி, பணம் வருகிறது. செய்து தொலைப்போம்’ என்று வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொள்கிறான். 

ஜெசிக்கா மார்வினுடன் வேடிக்கையாக விளையாடிக்கொண்டிருப்பதை ஒளிந்திருந்து புகைப்படம் எடுக்கிறான். அந்தப் புகைப்படங்களைப் பார்த்து ரோஜர் முயல் கதறுகிறது. மறுநாளே மார்வின் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வருகிறது. இந்தப் பழி முயல்மீது விழ, அது தலைமறைவாகிறது. அதேநேரம் தனது அறைக்கு வரும் டிடெக்டிவ் எட்டிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ரோஜர் அங்கே ஒளிந்திருக்கிறது. கார்ட்டூன் என்றாலே பிடிக்காத எட்டி, அதைத் துரத்த முயல்கிறான். “நான் ஒரு அப்பாவி. எப்படியாவது என்னைக் காப்பாற்று” என்று கெஞ்சுகிறது. 

முதலில் மறுக்கும் எட்டி, பரிதாபப்பட்டு ஒப்புக்கொள்கிறான். மார்வினைக் கொன்றது யார்? இந்தப் பழியிலிருந்து முயல் தப்பியதா? எட்டி எவ்வாறு முயலுக்கு உதவுகிறான் என்பதை விறுவிறுப்பும் நகைச்சுவையுமாகச் சொல்லியிருக்கிறார்கள். 

1981-ம் ஆண்டு கேரி.கே.வோல்ஃப் எழுதிய ‘Who Censored Roger Rabbit?’ நாவலைத் தழுவி உருவான திரைப்படம் இது. எப்போதும் சிடுசிடுப்புடன் இருக்கும் டிடெக்டிவ் எட்டி, சூழலின் சிக்கல் தெரியாமல், 'உன் நகைச்சுவை உணர்வு எங்கே போனது?' எனக் குறும்பு செய்யும் ரோஜர் என விநோதமான கூட்டணி. யார் கொலையாளி என்பது மாறிக்கொண்டே செல்லும் விறுவிறுப்பு. கடைசிவரை பரபரப்பைத் தக்கவைக்கும் திரைக்கதை. 

நிஜ மனிதர்கள் நடித்த காட்சியும், அனிமேஷன் உருவங்களின் சேட்டைகளும் இணைந்து புதுவித அனுபவத்தைத் தருகின்றன. ஒரு கட்டத்தில், இது இரண்டின் கலவையில் உருவானது என்பதே மறந்துபோகிறது. அவ்வளவு நுட்பமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. டிடெக்ட்டிவ் எட்டியாக பாப் ஹாஸ்கின்ஸ் அற்புதமாக நடித்துள்ளார். 

இதுபோல, உண்மையிலேயே கார்ட்டூன்கள் நம்முடன் பழகினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைக்கும் திரைப்படம். குழந்தைகளுடன் கண்டுகளிப்பதற்கான மகத்தான சித்திரம்.
 

அடுத்த கட்டுரைக்கு