Published:Updated:

தாவூத் இப்ராஹிம் c/o பாகிஸ்தான்

எஸ்.கலீல்ராஜா, ஓவியம் :ஹாசிப்கான்

துபாயின் படா பந்தாவான கிராண்ட் ஹையாத் ஹோட்டல். பிசினஸ் புள்ளி ஒருவரின் மகளுக்கும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தின் மகனுக்கும் திருமணம். எக்கச்சக்க பாதுகாப்புச் சோதனைகள், கெடுபிடிகள். சொகுசு கார்களில் அந்த விசேஷத்துக்கு வந்த பலரை, யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஹோட்டலுக்கு வெளியே பல்வேறு நாட்டின் உளவுத் துறை அதிகாரிகள், நகம் கடித்தபடி சுற்றிக்கொண்டிருந்தனர். 'மணப்பெண்ணின் அப்பா, திருமணத்துக்கு வருவாரா... மாட்டாரா?’ -இதுதான் அனைவரின் மனதிலும் இருந்த மில்லியன் டாலர் கேள்வி. 

திருமணத்துக்கு, மணமகளின் அப்பா கடைசி வரை வரவில்லை அல்லது வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், மணமகளும் மணமகனும் திருமணத்துக்கு இடையே 'ரெஸ்ட்’ எனச் சொல்லி அரை மணி நேரம் ஓர் அறைக்குள் சென்று திரும்பியதும், சிறிது நேரத்திலேயே ஹோட்டலின் பின்பக்கமாக ஒரு கார் வெளியே சென்றதும் யதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா எனத் தெரியவில்லை.

சரி, அங்கு ஏன் இத்தனை பரபரப்பு? காரணம், அந்த பிசினஸ் புள்ளி தாவூத் இப்ராஹிம். இந்தியாவின் பார்வையில்... 'மோஸ்ட் வான்டட் டெரரிஸ்ட்!’. இந்தியாவின் சிம்மசொப்பனம். இந்திய உளவுத் துறைக்கு, 22 வருடங்களாக தண்ணீர், வாட்டர், பாணி, நீலு, ஹெச்-டூ-ஓ எல்லாம் காட்டிக்கொண்டிருப்பவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தாவூத் இப்ராஹிம் c/o பாகிஸ்தான்

2011-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 'டாப் 10 கிரிமினல்ஸ்’ பட்டியலில் தாவூத்துக்கு மூன்றாவது இடம். 'குளோபல் டெரரிஸ்ட்’ என அமெரிக்க உளவுத் துறையால் அறிவிக்கப்பட்டவர். 300 பேர் இறப்புக்குக் காரணமான 1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு, 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2008-ம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல் அட்டாக் என மூன்று சதி வேலைகளுக்கும் 'மாஸ்டர் பிரெய்ன்’ என இந்திய உளவுத் துறையால் சந்தேகிக்கப்படுபவர். பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருக்கிறார் என யூகிக்கப்படுபவர். சமீபத்தில் இந்திய நாடாளுமன்ற விவாதத்தில் தாவூத் மீதான நடவடிக்கை பற்றிய கேள்விக்கு, 'தாவூத் எங்கே இருக்கிறார் என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அவர் எங்கே இருந்தாலும் அதை ஆதாரத்தோடு நிரூபித்து, அவரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்’ என ஆவேசம் காட்டியிருக்கிறார் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ஒரு நாடு இத்தனை ஆவேசமாகத் தேடும் அந்த டெரரிஸ்ட், நேர்மையான... அதனாலேயே ஏழ்மையாக வாழ்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் இப்ராஹிம் கஸ்கர் என்பவரின் மகன் என்பது, வாழ்வின் புதிர் விளையாட்டுக்களில் ஒன்று.

1980-ம் ஆண்டுகளில், தாவூத் வாழ்ந்த மும்பையின் டோங்ரி ஏரியாவில் இரண்டு தாதா குரூப். ஒன்று ஹாஜி மஸ்தான்; இன்னொன்று பதான் குரூப். வழக்கம்போல இரண்டு குரூப்புக்கும் ஆகாது. விளையாட்டுப்போக்கில் ஹாஜி குரூப்பில் சேர்ந்த தாவூத், மெள்ள அடிதடி, பஞ்சாயத்து எனப் பிரபலமானார். திருட்டு வழக்கு ஒன்றில் தாவூத் கைதானபோது, 'இப்ராஹிம் மகனா இப்படி?!’ என அந்த ஏரியாவில் அதிசயப்படாத போலீஸே இல்லை. தாவூத் மீது, முதல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பதான் குரூப்பின் பார்வை தாவூத் மேல் விழுந்தது. 'பதான் குரூப்பை எதிர்த்து சண்டை போட முடிவுபண்ணிட்டியா?’ என நண்பன் ஒருவன் கேட்க, அதற்கு தாவூத் அடித்த பன்ச்... 'நாம சண்டை போடலைன்னா, சாம்பல் ஆகிருவோம். எது வசதி?’

அதற்கு அடுத்து நடந்தவை எல்லாம் ரத்தச் சரித்திரம். போட்டி கோஷ்டிகளைக் கலைத்து 'கொலை’த்து மும்பையின் தனிக்காட்டு ராஜாவாக, 'தாவூத் - தி டான்’ ஆனார். மிரட்டல், ஆள் கடத்தல், கொலை, கொள்ளை, போதை மருந்துகள் கடத்தல்... என தவறான அத்தனை எல்லைகளையும் அநாயாசமாகத் தாண்டினார். கோடிகளைக் குவித்தார். கரன்சி மீதான பித்து கலைந்த பிறகு, தாவூத்தின் கவனம் கிரிக்கெட், பாலிவுட் பக்கம் திரும்பியது. நாளடைவில் டி.வி முன் சோம்பலாக கிரிக்கெட் பார்ப்பது அலுக்க, கிரிக்கெட் பெட்டிங் ஆரம்பித்தார். அதிலும் முடிவுக்குக் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை வந்தபோது, மேட்ச் ஃபிக்ஸிங் ஆரம்பித்தார். அதேபோல, 'படம் பார்க்கிறது போர் அடிக்குது. நாமளே படம் தயாரிப்போம். ஹீரோ, ஹீரோயின் எல்லாம் நாம சொல்றபடி கேட்பாங்கள்ல’ என பாலிவுட்டை குறிவைத்தார். தாவூத்தின் டி-கம்பெனி, இந்திப் படத் தயாரிப்பில் மறைமுகமாக இறங்கியது. படம் ஓடியதோ இல்லையோ பாலிவுட்டே பயந்து ஓடியது. நள்ளிரவு பார்ட்டி, நடிகைகளுடன் டேட்டிங்... என தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிடத்தையும் தானே செதுக்கி அனுபவித்தார் தாவூத்!

ஒருமுறை, பாகிஸ்தானின் கராச்சியில் தாவூத்தின் சரக்கு ஒன்று மாட்டிக்கொண்டது. பெரிய சரக்கு... பெரிய அமௌன்ட். வெளியே வரவில்லை என்றால் தொழில் அவுட் என்கிற நிலைமை. தாவூத்தின் சிக்கல் உணர்ந்து, ஒரு ஸ்பூன் சரக்குக்கூடக் குறையாமல் அப்படியே மீட்டுக் கொடுத்தது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அப்போதுதான் இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, நாடு கொந்தளிப்பான சூழலில் இருந்தது.

ஐ.எஸ்.ஐ-க்கான நன்றிக்கடனாக மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கச் சம்மதித்தார் தாவூத். மதப்பற்று இல்லாத ஒரு டான், ஒரு மதத்துக்காக டெரரிஸ்ட் ஆன தருணம் அது. மும்பை போலீஸ் தாவூத் மீது வெறிகொண்டு தேடுதல் வேட்டையில் இறங்க, குடும்பத்தோடு தலைமறைவானார் தாவூத். அன்றில் இருந்து இன்று வரை அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை.

'கராச்சியின் கிளிப்டன் தெருவில்தான் தாவூத் இருக்கிறார்’ என வீட்டு நம்பர் முதற்கொண்டு குறிப்பிட்டு, ஒவ்வொரு முறையும் இந்தியா, பாகிஸ்தானிடம் புகார் கொடுக்கும். 'அப்படியா சொல்றீங்க..? நாங்க தேடிப் பார்த்தோமே! அவர் இல்லையே. பயபுள்ள எஸ்கேப் ஆகிட்டாப்ல. வந்தார்னா தகவல் சொல்றோம்!’ என்கிற ரேஞ்சிலேயே இன்று வரை பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

'அந்தா... இந்தா...’ என சுமார் 22 வருடங்கள் ஓடிவிட்டன. 1993-ம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட தாவூத்தின் படம்கூட இன்று வரை இந்தியாவின் கையில் இல்லை. இந்த நிலைமையில்தான் 'புராஜெக்ட் தாவூத்’தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது இந்தியா.

22 வருட ஆடு-புலி ஆட்டத்தில் இதுவரை தாவூத் வென்றிருக்கிறார். இந்தியா மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. பார்க்கலாம்... இந்த முறை புலி யார் என்று!

* கிட்டத்தட்ட 20 வருடத் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின், முதல்முறையாக 2014-ல் தாவூத் தன் கூட்டாளி ஜாவீதுடன் தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியானது. சாட்டிலைட்டில் பதிவான அந்த ஆடியோ மூலம் தாவூத் அப்போது பாகிஸ்தானில் இருந்தார் என்பது உறுதியானது!

தாவூத் இப்ராஹிம் c/o பாகிஸ்தான்

* ட்விட்டரில் தாவூதின் பெயரில் போலிக் கணக்கைத் தொடங்கி, யாரோ தொடர்ந்து ட்வீட்டிக்கொண்டிருக்கிறார்கள். 'இந்த கிரிக்கெட் போட்டியின் முடிவு முன்பே எனக்குத் தெரியும்’, 'மோடி பதவி ஏற்புக்கு எனக்கு ஏன் அழைப்பு இல்லை... முகவரி தெரியாதா?’ என்றெல்லாம் நக்கல் ட்வீட்கள் விழுகின்றன.

* ஒசாமா பின்லேடனோடு தொடர்புவைத்திருந்ததால், 2003-ம் ஆண்டு தாவூத்தை 'சர்வதேசத் தீவிரவாதி’ என அறிவித்து, இன்டர்போல் மூலம் அவரது சொத்துக்களை முடக்க உத்தரவிட்டது அமெரிக்கா. 1997-ம் ஆண்டிலேயே 2,000 கோடி ரூபாய் மதிப்புக்குச் சொத்துவைத்திருந்த தாவூத்தை, அந்த உத்தரவு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சாட்டிலைட் போன், வீடியோ சாட்டிங் மூலம் இப்போதும் தனது பிசினஸை இந்தியா, துபாய், பாகிஸ்தான் நாடுகளில் தங்குதடை இல்லாமல் நடத்திக்கொண்டிருக்கிறார்.

* 'பாய்’, 'தாவூத் பாய்’ என, பாலிவுட் உலகம் தாவூத்தைக் குறிப்பிடும். மும்பை போலீஸோ, செல்லமாகவோ... கோபமாகவோ 'மீசைக்காரன்’ எனச் சொல்வார்கள்.

* சி.பி.ஐ தேடுதல் வேட்டையைக் குழப்ப, துபாய், பாகிஸ்தான், மத்தியக் கிழக்கு நாடுகளில் தன்னைப்போலவே உருவ ஒற்றுமைகொண்ட 13 பேரை உலவவைத்திருந்தாராம் தாவூத். அதை, பல வருடங்களுக்குப் பின்னரே கண்டுபிடித்திருக்கிறார்கள்.

* இக்பால் மிர்ச்சி என்பவர் தாவூத்தின் முக்கியக் கூட்டாளி. 2013-ம் ஆண்டு இவர் இறக்கும் முன்பு மும்பையில் இருக்கும் சில சொத்துக்களை விற்று, அதை ஐரோப்பாவில் முதலீடு செய்திருக்கிறார். அவற்றின் மதிப்பு மட்டும் 1,000 கோடி ரூபாய்களைத் தாண்டுமாம்!