Published:Updated:

நடுக்கடலில் திடுக்கிடல் !

பாரதி தம்பி

சித்த வயிற்றுடன் நட்ட நடுக்கடலில் நின்று, உலகத்தை நோக்கிக் கையேந்தும் சிறுவனின் கண்கள், எதிர்கொள்ள முடியாதவை. உப்புக்காற்றில் உயிர் நடுங்க, உடல் துடிக்க, கடல் நடுவே ஆயிரமாயிரம் பேர் தவிக்கின்றனர். உண்மையில், சம காலத்தில் உலகின் துயர்மிக்க அகதிகள் ரோஹிங்கியா முஸ்லிம்களே! 

பர்மாவில் இருந்து அடித்துத் துரத்தப்படும் இவர்களுக்காகப் பேச, ஒரு நாதியும் இல்லை. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களின் கரிசனப் பட்டியலில்கூட இவர்கள் இல்லை. அதனால்தான் இத்தனை கோடி மக்களின் சாட்சியாக, கடலின் நடுவே செத்து வீழ்கின்றனர்!

மியான்மரில் (முன்னர் 'பர்மா’), புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பான்மையினர். அந்த நாட்டின் மேற்குப் பகுதியில், சுமார் 13 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அடர்த்தியாக வசிக்கிறார்கள். நூற்றாண்டுக்கும் மேலாக இவர்கள் இங்கு வசித்தாலும், இவர்களின் பூர்வீகம் இன்றைக்கு வரலாற்றுச் சர்ச்சை. 'இவர்கள் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள்’ என ஒரு சாரார் சொல்ல, 'மேற்கு மியான்மரின் பூர்வீகக் குடிகள்’ என இன்னொரு பிரிவினர் சொல்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நடுக்கடலில் திடுக்கிடல் !

'சொந்த நாட்டினர்’ என்ற எண்ணம் மனதில் பதியாததால், புத்த மதத் துறவிகள், முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் மட்டும் அல்லாமல், அரசும் சேர்ந்து ரோஹிங்கியா முஸ்லிம்களை வெறுக்கிறது. இப்போது வரை அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுகிறது. ரோஹிங்கியா மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில், அரசின் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள்கூட கிடையாது. மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகளில் ரோஹிங்கியாக்கள் சேர முடியாது. அரசியல் இயக்கம் நடத்தவோ, மனித உரிமை அமைப்பை ஏற்படுத்தவோ முடியாது.

மியான்மரின் ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்குச் செல்வதற்கு, உள்ளூர் காவல் துறைக்கு அவர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை. இப்படி அரசின் அடக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் ரோஹிங்கியாக்கள், நேரடி வன்முறைக்கும் இலக்காகின்றனர்.

2011-ம் ஆண்டு, ராணுவ சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்துக்கு மாறியது மியான்மர். ஒரு புதிய ஒளி பிறக்கும் என ரோஹிங் கியா மக்கள் நம்பினார்கள். பெயர் அளவுக்கேனும் சில உரிமைகள் வழங்கப்படலாம் என நினைத்தார்கள். ஆனால், ஜனநாயக அரசு பதவியேற்றதும், 'ரோஹிங்கியாக்கள் பெங்காலிகள்’ என அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனால் இனவெறுப்பு உச்சத்துக்குச் சென்றது. புத்தத் துறவிகள், புத்தத் தீவிரவாதிகளாக மாறி, இனவெறுப்புக் கருத்துக்களைக் கட்டவிழ்த்துவிட்டனர். 'முஸ்லிம்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்’ என வெளிப்படையாகப் பேசினார்கள்.

நடுக்கடலில் திடுக்கிடல் !

இந்த நிலையில்தான், புத்த மதத்தைச் சார்ந்த ஒரு பெண், 2012-ம் ஆண்டு கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். அதைச் செய்தது ஒரு ரோஹிங்கியா முஸ்லிம் இளைஞன்தான் என்ற வதந்தி நாடு முழுவதும் பரவியது. அது வதந்தியா, உண்மையா என்பது இறுதி வரை உறுதிசெய்யப்படவில்லை. ஒருவேளை உண்மை எனில், அந்தக் குற்றவாளி மட்டும்தான் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு அனைத்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதும் கொடூரமான தாக்குதல்கள், நாடு முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. கண்களில் சிக்கியவர்கள் எல்லோரும் அடித்து நொறுக்கப்பட்டனர். அந்தக் கலவரத்தில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 200. முழுக்க முழுக்க அரசின் ஆதரவுடன் நடைபெற்ற வன்முறை இது. அதன் பிறகு ரோஹிங்கியாக்கள் மீது தாக்குதல் நிகழ்த்த, அந்த நேரக் காரணத்துக்காகக் காத்திருந்தார்கள்.

2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓர்  அடகுக்கடையில் நடந்த வாய்த்தகராறு கலவரமாக மாற்றப்பட்டு, 40 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டனர். சமூக நிலையில் சற்று மேம்பட்ட நிலையில் இருந்த ரோஹிங்கியாக்களும் இந்த இனவெறுப்புக்குத் தப்பவில்லை. தொழில் செய்ய, அலுவலகம் நடத்த, வழக்குரைஞராக இருக்க... என அனைத்துக்கும் சிக்கல் வந்தது. 'உலகில் மிக மோசமாக வதைக்கப்படும் அகதிகள் ரோஹிங்கியாக்கள்’ என ஐக்கிய நாடுகள் சபையே அறிவித்தது.

இந்தக் கொடுமையான வாழ்க்கையில் இருந்து விடுபட, ஏதேனும் ஒரு நாட்டுக்கு ரோஹிங்கியா மக்கள் அகதிகளாகச் செல்வது, கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. அப்படிச் செல்லும்போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளையே ரோஹிங்கியாக்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர்.

2012-ம் ஆண்டுக்குப் பிறகான மூன்று ஆண்டுகளில் மட்டும், சுமார் 1.2 லட்சம் பேர் இப்படி அகதிகளாக வெளியேறியுள்ளனர். தங்களிடம் இருக்கும் நிலம், நகை, ஆடு, மாடு உள்ளிட்ட அனைத்தையும் விற்றுவிட்டு அகதிகளாகச் செல்ல முயற்சிக்கும் இவர்கள், படகுகளில் நெருக்கியடித்து அமர்ந்து வங்கக் கடலைக் கடக்கத் துடிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அங்கு கிடைப்பது துயரங்களே!

நடுக்கடலில் திடுக்கிடல் !

நாட்டைவிட்டு வெளியேறும் ரோஹிங்கியா முஸ்லிம்களை, மனிதக் கடத்தல் கும்பல் குறிவைத்துக் கடத்திச் செல்கிறது. படகுடன் மக்களைக் கடத்திச்சென்று, கரையோரக் காடுகளில் அடைத்துவைத்து, பணயத் தொகைக் கேட்கிறார்கள். தலைக்கு இவ்வளவு என அவர்கள் நிர்ணயிக்கும் பணத்தைக் கொடுத்தால்தான், மக்களை விடுவிக்கின்றனர். இல்லையெனில், அந்தக் காட்டிலேயே அநாதையாக விட்டுவிடுகின்றனர்.

சமீபத்தில் மலேசியா-தாய்லாந்து எல்லையோரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 26 மனிதச் சடலங்கள் கண்டறியப்பட்டன. அனைவரும், ரோஹிங்கியா முஸ்லிம்கள்; கடத்தல் கும்பலால் கடத்திவரப்பட்டுக் கைவிடப்பட்டவர்கள்.

2014-ம் ஆண்டு நவம்பரில், இந்த மனிதக் கடத்தல் குழுக்கள் மீது தாய்லாந்து கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அதன் பிறகு, இவர்கள் தங்கள் வழியை மாற்றிக்கொண்டனர். ரோஹிங்கியா மக்களை, கடத்திக் கரைக்கு அழைத்துவந்து பணயக் கைதிகளாக வைத்திருப்பதற்குப் பதிலாக, கடலுக்குள்ளேயே படகை நிறுத்திவைத்தார்கள். அந்த மக்களுக்கு உணவோ, தண்ணீரோ கொடுப்பது இல்லை. எனவே கடத்தல்காரர்களைப் பொறுத்தவரை மக்கள் கரையில் இருந்தாலும் ஒன்றுதான்; கடலில் இருந்தாலும் ஒன்றுதான்.

இப்படி கடலில் கைவிடப்பட்ட சுமார் 3,000 ரோஹிங்கியா மக்கள் இருந்த படகுகள், இரண்டு வாரங்களுக்கு முன்பு கிழக்கு ஆசியக் கடற்பகுதியில் கரை ஒதுங்கின. அந்த 3,000 பேர் போக, அதேபோல இன்னொரு மடங்கு மக்கள் கடலில் தத்தளிக்கக்கூடும் எனவும் கருதப்பட்டது. அனைத்து நாடுகளாலும் கைவிடப்பட்ட நிலையில் பல நாட்களாக பசியிலும் தாகத்திலும் இவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர். உலக நாடுகள் எல்லாம் இதுகுறித்து தீவிரமாகப் பேசிவந்த நிலையில், இறுதியில் மலேசியாவும் இந்தோனேஷியாவும் தற்காலிகமாக இவர்களுக்கு அகதித் தஞ்சம் தர முன்வந்தன. இதைத் தொடர்ந்து அந்த நாட்டுக் கடற்படை கடலுக்குள் தேடி, கிடைப்பவர்களை மீட்டு கரை சேர்த்து வருகிறது.

ஆனால், இது இதோடு முடியப்போவது இல்லை. மியான்மரின் உள்நாட்டு வன்முறை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அங்கு ரோஹிங்கியா மக்களுக்குத் துளியும் பாதுகாப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது. எனவே, அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறவே விரும்புவார்கள். அதிலும் இரு நாடுகள் அகதிகளாக ஏற்கச் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் வேகமாக வெளியேறத் தொடங்குவார்கள். அப்போது இது மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் எதிர்ப்புகளைக் கிளப்பினால், அந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடும். நிலைமை இன்னும் சிக்கலாகும்!

ஆங் சான் சூ கியின் மௌனம்!

புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியும், நோபல் பரிசு பெற்றவரும், ஜனநாயக தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளரும், மியான்மரின் எதிர்க்கட்சித் தலைவருமான ஆங் சான் சூ கி, ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை வெறியாட்டம் குறித்து, இதுவரை

நடுக்கடலில் திடுக்கிடல் !

எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. 2013-ம் ஆண்டு தனது ஐரோப்பியப் பயணத்தின்போது, 'மியான்மரில் உள்நாட்டு வன்முறை எதுவும் நிகழவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது இன அழிப்பு நடத்தப்படுவதாகக் கூறுவது தவறு’ என எதிர்மறையாகக் கூறினார். இதற்காக, அப்போதே இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இப்போது இந்தத் தொடர் மௌனம்!  

மியான்மரில், 90 சதவிகிதம் புத்த மதத்தினர்தான் வசிக்கின்றனர். பொதுமக்களை மிக மோசமான இனவாதிகளாக மாற்றும் வேலையில் சில புத்த பிக்குகளும், பல இனவாத அமைப்புகளும் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது சிறிய அளவிலான பரிதாப உணர்ச்சி மக்களிடையே எழுந்தாலும்கூட, தனி நபர்களின் பரிதாபம் எதையும் சாதிக்காது. அரசியல் கட்சிகள் அதை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், இன்னும் ஆறு மாதங்களில் மியான்மர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பெரும்பான்மை புத்த மதத்தினரைப் பகைத்துகொள்ள ஆங் சான் சூ கியும் தயார் இல்லை; ஆளும் அரசும் தயார் இல்லை. இதுதான் நிதர்சனம்!