Published:Updated:

மழை வரட்டும்... நிலம் புகட்டும் !

மழை வரட்டும்... நிலம் புகட்டும் !

மழை வரட்டும்... நிலம் புகட்டும் !

ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டதும் கையெழுத்திட்ட திட்டங்களில், மாநிலம் முழுக்க நகர்ப்புற மற்றும் கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்தும் திட்டமும் ஒன்று. சாலை வசதியை மேம்படுத்துவதும் நவீனப்படுத்துவதும் காலத்தின் தேவை. நாட்டிலேயே மிக அதிக விபத்துக்கள் நடக்கும் மாநிலமான தமிழ்நாட்டில், சாலைகளைச் செப்பனிடப்படவேண்டியது மிக அவசியமானதும்கூட. ஆனால், சாலை மேம்பாட்டின் பெயரால் இங்கு ஏற்கெனவே நடந்துகொண்டிருப்பது என்ன? 

நகரங்களின் சிறுசிறு குறுக்குச் சந்துகளில் தொடங்கி, கிராமங்களின் கிளைச் சாலைகள் வரை... எங்கு திரும்பினாலும் சிமென்ட் சாலைகள். அவை, பார்க்க பளபளப்பாக இருக்கலாம்; ஆனால், பொழியும் மழை நீரில் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட பூமிக்குள் விடாமல் தடுத்து நிறுத்தும் பெரும் தீங்கை விளைவிக்கின்றன. உறுதி, தரம் என்ற அடிப்படையில் சிமென்ட் சாலைகள் அவசியமானவை என்றால், அதில் மழை நீர் சேகரிப்பை முன்நிபந்தனையாக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் உண்டாக்கப்பட வேண்டும். சிமென்ட் சாலைகளில் மட்டுமல்ல, அனைத்து சாலைகளிலும் மழை நீர் சேகரிப்புக்கான சாத்தியங்கள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகள், மழை நீர் சேகரிப்பின் மூலம் மகத்தான வெற்றிகளை ஈட்டிவரும் நிலையில், அதில் நாம் ஓர் அடிகூட முன்னேறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அரசின் நிர்பந்தம் காரணமாக நிறைவேற்றப்பட்ட சிறிய அளவிலான மழை நீர் சேகரிப்பு முயற்சியே, நல்விளைவைத் தந்ததைக் கண்டோம். ஆனால், ஏனோ அதன் பிறகு அரசு அதே முனைப்புடன் அந்தத் திட்டத்தைத் தொடரவில்லை. மக்களும் தன்னுணர்வுடன் பின்பற்றவில்லை. ஏரிகளும் குளங்களும்தான் தமிழ்நாட்டின் நீர்ப்பாசன அமைப்பின் உயிர் நரம்புகள். ஆனால் அவை, 'காணாமல்’போகின்றன; வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் பலிகொடுக்கப்படுகின்றன; அதிகாரச் செல்வாக்குடன் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சாலையில் தொடங்கும் மழை நீர் சேகரிப்புக்கான முயற்சி, ஏரிகள் மீட்பை நோக்கி நகர வேண்டும். அப்போதுதான் அது முழுமை பெறும்.

ஏனெனில், நிலத்தடி நீர் என்பது அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி அல்ல; அது வரம்புக்கு உட்பட்ட வளம். ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான குழாய்கள் பூமியின் உள்ளே குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து, கடைசிச் சொட்டு நிலத்தடி நீரையும் உறிஞ்சி இழுக்கின்றன. தாகத்தில் துடிக்கும் பூமிக்கு நீர் தர வேண்டாமா? குறைந்தபட்சம் மழை நீரையேனும் நிலத்தின் அடியே கொண்டுசேர்க்க வேண்டாமா? அந்த மாபெரும் பணிக்கான முதல் மணி இப்போதே ஒலிக்கட்டும்.

மழை வரட்டும்... நிலம் புகட்டும்!