Published:Updated:

”ஒரு இயக்குநராகவும், அம்மாவாகவும் இருப்பது மிகவும் கடினம்” - நந்திதா தாஸின் பர்சனல் பக்கங்கள்! #HBDNanditaDas

”ஒரு இயக்குநராகவும், அம்மாவாகவும் இருப்பது மிகவும் கடினம்” - நந்திதா தாஸின் பர்சனல் பக்கங்கள்! #HBDNanditaDas
”ஒரு இயக்குநராகவும், அம்மாவாகவும் இருப்பது மிகவும் கடினம்” - நந்திதா தாஸின் பர்சனல் பக்கங்கள்! #HBDNanditaDas

ரு நடிகையாகக் குறிப்பிடுவதைவிட, முற்போக்கான பெண்ணாக அடையாளப்படுத்துவதே அவருக்குப் பொருத்தமாக இருக்கும். ஓரினச் சேர்க்கையாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'ஃபயர்’, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைச் சொல்லும் '1947 யர்த்' என அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள், இந்தியச் சமூகத்தில் பேசத் தயங்கும் விஷயங்களைப் பகிரங்கப்படுத்தியது. அத்தகையத் திரைப்படங்களில் துணிவுடன் நடித்த நந்திதா தாஸின் 47-வது பிறந்தநாள் இன்று.

நந்திதாவின் தந்தை, பிரபல ஓவியரான ஜத்தின் தாஸ். அம்மா வர்ஷா, ஓர் எழுத்தாளர். சிறுவயதிலிருந்தே புத்தகங்களுடன் உறவாடி வந்த நந்திதாவுக்கு, பிரெஞ்ச் உள்பட 11 மொழிகள் அத்துப்படி. மும்பை கல்லூரியில் படிக்கும்போதே, நாடகக் குழுவில் இணைந்து தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார். பெண்கள் உரிமை, சாதீயம் எனச் சமூகப் பிரச்னைகளை எடுத்துரைக்கும் நாடகங்களில் நடித்தார். புதுடெல்லியில், சமூகப் பணி படிப்பில் முதுகலைப் பட்டம் வாங்கினார். நாடக ஆர்வம், அவரைத் திரைக்குக் கொண்டுவந்தது. 10 மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நந்திதா தாஸ். 

அது பாலிவுட்டாக இருக்கட்டும், ஹாலிவுட்டாக இருக்கட்டும் வாய்ப்புகளைத் தேடி அவராகச் சென்றதில்லை. தேடிவந்த வாய்ப்புகளையும் மிகக் கவனமாகவே தேர்ந்தெடுத்து நடித்தார். “எனக்கு ஹாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், ஓர் இந்தியப் பெண்ணுக்கு எத்தகைய கதாபாத்திரம் அளிக்கமுடியுமோ, அதையே கொடுக்கிறார்கள். அதனை நான் ஏற்கவேண்டிய அவசியமில்லை” என்று தெளிவாகக் கூறுகிறார் நந்திதா தாஸ். இவர் இயக்குநராகக் களமிறங்கிய ‘ஃபிராக்’ (Firaaq) திரைப்படம், 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தை மையப்படுத்தியது. 

2005 முதல் 2013 வரை உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தவர். திரைத்துறையில் இருந்தவாறே அதில் நிலவும் ஒடுக்குமுறைகளை வெளிப்படையாகப் பேசியவர்களில் நந்திதா முக்கியமானவர். இந்தியக் கலாசாரத்தில், கறுப்பாக இருப்பவர்களைத் தாழ்வாக நினைக்கும் போக்கை எதிர்த்து, இவர் ஆரம்பித்த ‘Dark is Beautiful' (கருமை அழகு) பிரசாரம் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. இந்திய சினிமாவில் சிவப்பான நடிகைகளுக்கே முக்கியத்துவம் அளித்துவருவதற்கு எதிராகக் குரல் கொடுத்தார். 'எனது இத்தகைய செயற்பாட்டுக்குக் காரணம், என் பெற்றோர்களே. சாதி, மதம், பாலினம் ஆகியவற்றில் வேறுபாடு காட்டாமல் என்னை வளர்த்த அவர்களுக்கு நான் நன்றிகூற வேண்டும்” என்கிறார் நந்திதா தாஸ். 

சொந்த வாழ்விலும் தைரியமாக முடிவெடுப்பதில் தயங்காதவர். 2002-ம் ஆண்டு, செளமியா சென் என்பவரைத் திருமணம் செய்துகொண்டவர், 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு, 2010-ம் ஆண்டு சபோத் மஸ்காரா என்ற தொழிலபரை மணந்தார். இப்போது, விஹான் என்ற மகன் இருக்கிறான். “என் வாழ்க்கையை மாற்றிய ஒரு விஷயம் தாய்மை. என் வாழ்க்கையில் நடந்த அற்புதமான ஒன்று, விஹான் பிறந்தது. ஒரே சமயத்தில் இயக்குநராகவும் அம்மாவாகவும் இருப்பது மிகவும் கடினம். சில சமயம், வீட்டில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, 'அம்மா, நீங்க வேலை செய்யாதீங்க' என்று என் லாப்டாப்பை மூடிவிடுவான்” என்று தாய்மை தருணங்களை நெகிழ்ந்து கூறுகிறார். 

தற்போது, தனது இரண்டாவது கணவரையும் பிரிந்து வாழும் நந்திதா, “என் சொந்த வாழ்விலும் எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் இருக்கிறேன். திருமணம் என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். ஆண்-பெண் இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். பிறகு, குழந்தைகளுக்காகவும் சமூகத்துக்காகவும் சேர்ந்து வாழ்கிறார்கள். பிடிக்கவில்லை என்றால், விவாகரத்துச் செய்துகொள்ளும் துணிச்சல் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கிறது” என்றார். 

தற்போது, பிரபல எழுத்தாளர் ஓவியர் மாண்டோ பற்றிய திரைப்படத்தை உருவாக்கிவரும் நந்திதா தாஸ், தனது பிறந்தநாளையும் ’மாண்டோ’ தொடர்பான வேலைகளைச் செய்தவாறே கொண்டாடுகிறேன் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.