Published:Updated:

சாதனை படைத்தவர்களுக்கு வேதனைதான் பரிசா ?

சார்லஸ்

ன்னதான் ஆச்சு இந்த கிரிக்கெட்டுக்கு? ஒருகாலத்தில் உலகமே கொண்டாடிய சாதனை மன்னர்களை, அதிரடிப் புயல்களை... அவமானப்படுத்தி விளையாட்டில் இருந்து வெளியேற்றிக்கொண்டிருக்கிறது அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள். ஷேவாக், பீட்டர்சன், யுவராஜ் சிங்... எனத் தொடரும் களப்பலிகளில் கடந்த வார விக்கெட்... மேற்கு இந்திய தீவுகள் அணியின் சந்தர்பால். இப்படி அவமானப் பிரியாவிடை அளிக்கப்பட்டிருக்கும் நட்சத்திரங்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அடுத்த தலைமுறைக்கு இடம்கொடுப்பதற்காக, முன்னாள் நட்சத்திரங்களை அவமானப்படுத்தி வெளியேற்ற வேண்டுமா? தேசத்துக்குப் பெருமை சேர்த்த இவர்கள் ஏன் இப்படித் துரத்தப்படுகிறார்கள்?        

 யுவராஜ் சிங்

'அனைவரும் ஏங்கும் அறிமுகம், எவரும் விரும்பாத வெளியேற்றம்’ என 'ஹீரோ டு ஜீரோ’ பயணமாகிவிட்டது யுவராஜின் கிரிக்கெட் கேரியர். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றவருக்கு, 2015-ம் ஆண்டு தொடரில் இடமே இல்லை. அறிமுக வாய்ப்புகளின்போதே ஆஸ்திரேலியாவைத் துவம்சம் செய்தது, லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக, கிட்டத்தட்ட தோல்வியைத் தொட்ட போட்டியில் வெற்றியை மீட்டியது, ஆறு பந்துகளிலும் ஆறு சிக்ஸர்கள் அதிரடிகளால் இந்தியா டி20 கோப்பை வெல்லக் காரணமாக இருந்தது, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 362 ரன்கள் 15 விக்கெட்டுகள் என யுவராஜ் சிங் செய்த சாதனைகள், அபாரம். ஆனால், கேன்சர் பாதிப்பு யுவியின் திறமையைப் பறித்துக்கொண்டது காலத்தின் கோலம். ஐ.பி.எல் வரை துரத்தும் தோல்வியால் துவண்டிருக்கும் யுவராஜுக்கு, ஒரு நல்ல பிரியாவிடையைப் பரிசளிக்கவேண்டியது... தேசத்தின் கடமை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சாதனை படைத்தவர்களுக்கு வேதனைதான் பரிசா ?

ஷாகீர் கான்

'இந்தியாவின் வாசிம் அக்ரம்’, 150 கி.மீ வேகப்புயல், கபில் தேவுக்கு அடுத்து அதிக டெஸ்ட் விக்கெட்டுகள், இந்தியா வென்ற 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 21 விக்கெட்டுகள் கொய்த சாதனை... இதுவும் இன்னமுமாக சாதனை படைத்த ஜாகீர் கான், இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் பந்து வீசி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. 'பேட்டிங்கில் சச்சின் எப்படி ஒரு ஜாம்பவானோ, அதேபோல் இந்தியாவின் பௌலிங் ஜாம்பவான் ஜாகீர் கான். அவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்’ என கேப்டன் தோனி சொன்னாலும், அது நடக்கவே இல்லை. 'வேறு எதுவும் வேண்டாம். முறையான வழியனுப்புதலுக்காக ஒரு போட்டியில் ஆட வாய்ப்பு கொடுங்கள்’ எனக் கேட்டுக் காத்திருக்கிறார் இந்தியாவின் வேகப்புயல்!

வீரேந்திர ஜேவாக்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓர் இந்தியர் குவித்த 'நம்பர் 1’ ஸ்கோரை (319) கையில் வைத்திருக்கும் ஷேவாக், மீண்டும் இந்திய அணிக்குள் இடம் பிடிக்க வாய்ப்பே இல்லை என்பது கசப்பான உண்மை. சென்னையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஷேவாக் வெளுத்த 319 ரன்கள்தான், உலகிலேயே குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட முச்சதம். ஆனால், பேட்டிங் சொதப்பல், தோனியுடனான முட்டல் மோதல் என இரண்டும், 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே ஷேவாக்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைக் கிட்டத்தட்ட அவுட் ஆக்கிவிட்டது. 'இந்தியாவுக்காக விளையாடிய முதல் போட்டியில் 1 ரன்னில் அவுட் ஆனதோடு, பௌலிங்கில் 3 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்ததால் ஒரே போட்டியோடு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டேன். மீண்டும் 20 மாதங்கள் கழித்து அணிக்குள் வந்தேன். அதேபோல இப்போதும் மீண்டும் மீண்டு வருவேன்’ என 'ஆங்ரிபேர்டா’கச் சொல்கிறார் 36 வயது ஷேவாக்.

சாதனை படைத்தவர்களுக்கு வேதனைதான் பரிசா ?

கெவின் பீட்டர்சன்!

இங்கிலாந்தின் 'ஆங்ரி யங் மேன்’! டைம் இதழால் 'உலகின் முழுமையான கிரிக்கெட் வீரன்’ எனப் பாராட்டப்பட்ட கெவின் பீட்டர்சன்னின் கிரிக்கெட் அத்தியாயம் முழுமை பெறாமலேயே முடிந்துவிடும்போல! இங்கிலாந்து அணி பெற்ற தோல்விகளுக்கு பயிற்சியாளரின் அணுகுமுறையே காரணம் என வெளிப்படையாகக் குற்றம் சாட்டியது, எதிர் அணி வீரர்களுக்கு இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸை ஆட்டம் இழக்கவைக்கும் டிப்ஸ்களை எஸ்.எம்.எஸ்-ஸியது  என செம சேட்டைக்காரர் கெவின். ஆனால், அதையும் தாண்டி வித்தைக்காரர். கடந்த மாதம் இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் தன் வாழ்நாளின் சிறந்த ஸ்கோராக 355 ரன்கள் குவித்துவிட்டு, அணியில் இடம் கிடைக்கும் எனக் காத்திருந்தார் கெவின். ஆனாலும், கெடுபிடியாகத் தடைவிதித்து கெவினின் கிரிக்கெட் எதிர்காலத்தை முடக்கியிருக்கிறது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

ஷிவ்நாராயண் சந்தர்பால்

'இந்தத் தொடரோடு ஓய்வுபெற்றுவிடுகிறேன்!’ என சந்தர்பால் எவ்வளவோ கெஞ்சியும், பல முன்னாள் வீரர்கள் அவருக்காக சிபாரிசு செய்தும் கழற்றிவிடப்பட்டிருக்கிறார் சந்தர்பால். டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 87 ரன்கள் அடித்தால், அதிக ரன்கள் குவித்த லாராவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இனி சந்தர்பாலுக்குக் கிடைப்பது  சந்தேகம்தான். ஒரு இன்னிங்ஸுக்கு 51 ரன்கள் ஆவரேஜ் வைத்திருக்கும் சந்தர்பாலை, 'ரொம்பவும் ஆவரேஜ் பேட்ஸ்மேன்’ என இப்போது ஓரங்கட்டியிருக்கிறது மேற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம். கடந்த 20 வருடங்களாக களத்தில் போராடிய சந்தர்பால், இப்போது தன் கடைசி வாய்ப்புக்காக, களத்துக்கு வெளியே போராடிக்கொண்டிருக்கிறார்!

சாதனை படைத்தவர்களுக்கு வேதனைதான் பரிசா ?

கௌதம் கம்பீர்

33 வயதான கம்பீர், இந்திய அணிக்காக விளையாடி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்றும் ப்ளேயராகவும் கேப்டனாகவும் ஃபுல் ஃபார்மில்தான் இருக்கிறார். தோனியின் விடுப்பில் இந்தியாவின் கேப்டனாகச் செயல்பட்ட ஆறு போட்டிகளிலும் வெற்றி, ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் தட்டியது என ஃபுல் ஸ்விங்கிலேயே இருக்கிறார் கம்பீர்.  தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர், இந்தியா உலகக் கோப்பை வென்ற ஃபைனலில் அதிகபட்ச ரன்கள். ஆனால், 'கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் கோஹ்லி இருவருடனும் சண்டைக் கோழியாக முரண்டுபிடித்ததுதான் கம்பீரின்  நீக்கத்துக்குக் காரணம்’ என்கிறார்கள். இப்போது பல ஜூனியர்கள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இடத்துக்குப் போட்டிபோடுவதால், இனி கம்பீர் ஐ.பி.எல் போட்டிகளோடு திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியதுதானா?