Published:Updated:

சென்னை ஸ்பெஷல் செயலி !

நா.சிபிச்சக்கரவர்த்திபடம்: ஆ.முத்துகுமார்

''இனி யாரும் சென்னையில பஸ், டிரெயினுக்காக காத்திருக்கக் கூடாதுனு நினைச்சோம். அப்ப ஸ்பார்க் ஆன ஐடியாதான்... இந்த 'Raft’ - தாங்கள் கண்டுபிடித்த மொபைல் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பற்றி அறிமுகம் கொடுக்கிறார் சித்தார்த். இவர் சென்னை ஐ.ஐ.டி-யின் முன்னாள் மாணவர். தன் நண்பர்கள் அகிலேஷ், கிருஷ்ணாவுடன் சேர்ந்து இந்த ராஃப்ட் செயலியை (Raft App) கண்டுபிடித்திருக்கிறார். இந்தச் செயலியால் என்ன பயன்? 

ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு, சென்னை நகரப் பேருந்துகள் மூலம் செல்வதற்கான வழிகாட்டுதல், குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்துக்கு எத்தனை மணிக்கு பேருந்து வரும் என்பது போன்ற தகவல்களுடன், சென்னைப் புறநகர் ரயில் சேவைகளின் கால அட்டவணைகளையும், மூன்று எம்.பி-க்குள் ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேஷனாக அடக்கிவிட்டார்கள். சென்னைவாசிகளிடையே ஹிட்டடித்திருக்கும் இந்தச் செயலி பற்றிப் பேசலாம் என சித்தார்த் அண்ட் கோ-வை அழைத்தால், ''வாங்களேன்... பஸ்ல போயிட்டே பேசலாம்'' என தங்கள் ராப்ஃட் செயலியை இயக்கினார்கள்.  

''இன்னும் ஏழு நிமிஷத்துல 1A பஸ் இங்கே வரும்'' என அகிலேஷ் சொல்ல, ஆச்சர்யம்... எட்டாவது நிமிடத்தில் வந்து நிற்கிறது 1A. பெருமிதம் பொங்கப் பேசினார் சித்தார்த்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சென்னை ஸ்பெஷல் செயலி !

''நாங்க மூணு பேரும் ஐ.ஐ.டி-யில ஒரே டீம். அங்கே படிக்கிறப்போ பேருந்து, ரயில் டிராஃபிக் பத்தி ஒரு புராஜெக்ட் பண்ணோம். நிறைய மார்க் கிடைச்சது. படிப்பு முடிச்சுட்டு மூணு வருஷம், மூணு பேரும் வேற வேற நிறுவனங்களில் வேலை பார்த்தோம். ஏதோ வெறுமையா இருக்கிற மாதிரி இருந்தது. அப்போ ராஃப்ட் செயலியை, பெரிய அளவில் எல்லா மக்களுக்கும் உபயோகமாகிற மாதிரி உருவாக்கலாமேனு தோணுச்சு. மூணு பேரும் வேலையை  விட்டுட்டோம். போன வருஷம்  ஜூலை மாசம் தீவிரமா இறங்கினோம். சென்னையில உள்ள அத்தனை பஸ் டிப்போவின் டைம்டேபிளையும் வாங்கினோம். அதை அப்படியே டேட்டா பேஸில் அப்லோடு பண்ணலை. அந்த டைம்டேபிளை கையில வெச்சுக்கிட்டு, 10 பேர் கொண்ட குழுவா ஒவ்வொரு பஸ்ஸா ஏறி இறங்கினோம். அந்த டைம்டேபிள்ல குறிப்பிட்டிருக்கிற மாதிரி சரியான நேரத்துல பஸ் வருதா, அந்த பஸ் நம்பர் சரிதானா...

இப்படி எல்லா தகவல்களையும் ஊர்ஜிதப்படுத்தி குறிச்சுக்கிட்டோம். அந்தத் தகவல்களை எங்கள் செயலியில் பதிந்தோம். இப்படி படிப்படியா சென்னையில் ஓடும் எல்லா பேருந்துகளையும் அதன் வழித்தடங்களையும் சோதிச்சோம். ஏன்னா எங்க ஆப்ல ஒரு தகவல் தப்பா இருந்தாக்கூட 'இது வேஸ்ட்’னு அதை அன்இன்ஸ்டால் பண்ணிருவாங்க. அதனால அவசரப்படாம ஒவ்வொரு தகவலையும் ஊர்ஜிதப்படுத்தின பிறகே, எங்க டேட்டாபேஸுக்குள்ளயே சேர்த்துக்கிட்டோம்.

ஜூலை மாசம் ஆரம்பிச்ச வேலை டிசம்பர் மாசம்தான் முடிஞ்சது. அதன் பிறகு கூகுள் ப்ளே ஸ்டோரில் சேர்த்தோம். அப்பவும் நாங்க எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கலை. நடைமுறை செயல்பாட்டில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்களை அடுத்தடுத்த வெர்ஷன்களில் சரி செஞ்சோம். அப்புறம் எங்க ஆப் நிறையப் பேர் கவனத்தை ஈர்த்தது'' என சித்தார்த் சொல்லி முடிக்க, தொடர்ந்தார் கிருஷ்ணா.

''சென்னையில் ஒரு நாளைக்கு மொத்தம் 1,500 பேருந்துகள் 6,000 பஸ் ஸ்டாப்புகளில் நின்னுட்டுப் போகுது. ஒரு நாளைக்கு 25 லட்சம் பஸ் டிக்கெட் விக்குது. அப்படிப் பார்த்தால் குறைந்தது 15 முதல் 20 லட்சம் மக்கள் பேருந்துகளைப் பயன்படுத்துறாங்க. அவங்க எல்லாரையும் எங்க அப்ளிகேஷனை டௌன்லோடு பண்ணவைக்கணும். அதான் எங்க இலக்கு. தமிழ்நாட்டுல சக்சஸ் பண்ணின பிறகு, இந்தியா முழுக்க இருக்கிற பஸ் ரூட் நம்பர்களை இணைக்கணும். அதுக்கு சில வருஷங்கள் ஆகலாம். ஆனா, நினைச்சா முடியும்னு ராஃப்ட் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு. ஏன்னா, கூகுள் ப்ளே ஸ்டோர்ல எங்க செயலியை ஆயிரக்கணக்கானவங்க பயன்படுத்திட்டு 5-க்கு 4.5 ரேட்டிங் கொடுத்திருக்காங்க. எந்த அப்ளிகேஷனுக்கும் எடுத்தவுடனே இவ்வளவு ரேட்டிங் வந்தது இல்லை. அதான் எங்க சந்தோஷம்.''

''சரி... இந்த ஆப் மூலம் என்ன வருமானம் கிடைக்கிறது?'' எனக் கேட்டால் மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்துவிட்டு தோள் குலுக்கிச் சிரிக்கிறார்கள்.

''இப்போதைக்கு எதுவும் இல்லை...'' என்ற சித்தார்த், அதற்கான காரணத்தைச் சொன்னார்.

'' 'ஆப்’களைப் பொறுத்தவரை முதல்ல பெரிய வருமானம் எதிர்பார்க்க முடியாது. 'ஆங்கிள் இன்வெஸ்ட்மென்ட்’னு சொல்வாங்க. அதாவது, எங்க அப்ளிகேஷன் ஹிட்டாகி, நிறையப் பேர் பயன்படுத்தும்போதுதான், முதலீட்டாளர்களுக்கு எங்க மேல நம்பிக்கை வந்து ஸ்பான்ஸர் பண்ணுவாங்க. அப்போதான் எங்களுக்கு வருமானம் வரும். அப்பவும் விளம்பரங்கள் மூலம்தான் நிறைய வருமானம் வரும். ஆனா, இப்போதைக்கு எங்க ஆப்ல விளம்பரங்களைச் சேர்க்க நாங்க விரும்பலை. 'ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குப் போக பேருந்துக் கட்டணம் எவ்வளவு ஆகும்?’னு சொல்ல எங்க ஆப்ல வசதி இல்லை. அதைச் சேர்க்கணும். அதுதான் இப்போதைக்கு எங்கள் நோக்கம். வருமானம் எல்லாம் அப்புறம் பார்க்கலாம்!''

ரை ரைட்..!

சென்னையில் நகரப் பேருந்துப் பயணங்களைத் திட்டமிட உதவும் Raft App - ஐ, கீழே இருக்கும் லிங்க்கில் டௌன்லோடு செய்துகொள்ளலாம்.