Published:Updated:

AADHEENAM WORLD

நா.சிபிச்சக்கரவர்த்திஓவியம்: எம்.ஜெயசூர்யா

AADHEENAM WORLD

நா.சிபிச்சக்கரவர்த்திஓவியம்: எம்.ஜெயசூர்யா

Published:Updated:

'மீடியா ஃப்ரெண்ட்லி’ மதுரை ஆதீனத்துக்கு என்னதான் ஆச்சு... கமுக்கமாக இருக்கிறாரே?’ என்ற எண்ணத்துடன் தொடர்புகொண்டால், 'நாட்-ரீச்சபிள்’. விடாப்பிடியாக முயற்சித்து வலைவீசிப் பிடித்தால், சுபமுகூர்த்த சுபவேளை ஒன்றில் பேட்டிக்குச் சம்மதித்தார். 

''வணக்கம்... சன்னிதானத்தின் ஆசீர்வாதங்கள். பேட்டி எல்லாம் தந்துடலாம். ஒரு சின்ன விண்ணப்பம். பேட்டியில சன்னிதானத்தின் முழுப் பெயரையும் போடணும். அது முக்கியம். இப்ப அப்படி யாருமே போடுறது இல்லை. அதனால நீங்க குறிச்சுக்கோங்க!'' எனப் பதிலுக்குக் காத்திருக்காமல், '' 'மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்’னு போடுங்க!'' என எடுத்த எடுப்பிலேயே பரேடு அடித்தார். கேள்விகளை எதிர்பார்க்காமல் அவரே தொடர்ந்தார்.

''எப்படியும் 'அம்மா’ பற்றி கேட்பீங்க. அதனால நானே பதில் சொல்லிடுறேன். அம்மா பூரண நலத்துடன் இருக்கிறார். அம்மாவுக்கு தெய்வ அருள் நிறைய இருக்கு. நான்தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிட்டிருந்தேனே... 'எல்லா வழக்குகளில் இருந்தும் அம்மா விடுதலையாகி மீண்டும் முதலமைச்சர் ஆகிடுவார்’னு. சொன்னபடியே நடந்துச்சு  பார்த்தீங்களா? அதேபோல ஆர்.கே.நகரில் வரலாற்றுச் சாதனை வெற்றியை அம்மா பெறுவாங்க. இது என் உள்ளுணர்வு சொல்லும் விஷயம். அப்புறம், 'விடுதலையான பிறகு அம்மாவைப் பார்த்தீங்களா?’னு எல்லாரும் கேட்கிறாங்க. பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. ஆனா, அம்மா முதலமைச்சராகப் பதவியேற்கும்போது முதல் வரிசையில் உட்கார்ந்து கை தட்டிப் பாராட்டினேன். அம்மா அதை நிச்சயம் கவனிச்சிருப்பாங்க!''

AADHEENAM WORLD

'ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் மேல் முறையீடு செய்யவிருப்பதாக, கர்நாடக அரசு அறிவித்திருக்கிறதே!''

(சட்டெனக் கோபப்படுகிறார்...) ''அதுலாம் நிக்காது. தள்ளுபடி ஆகிடும்!''

'எதிர்காலத்தில் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா?''

(பல நிமிடங்கள் யோசிக்கிறார்...) ''நோ கமென்ட்ஸ். நெக்ஸ்ட் கொஸ்டீன்!''

'அழகிரி - ஸ்டாலின் இடையே எப்போது சமாதானம் ஏற்படும்?''

(சட்டென ஆங்கிலத்துக்குத் தாவுகிறார்...)

‘‘Can you ask some other questions? I don’t want to tell any comment on those people. I want tell about  Amma... Amma... ok?”

'சரி சாமி... ஜெயலலிதா நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?''

(குரலில் குபீர் சந்தோஷம்...) ''ஹீரோயின்ஸ்ல அப்போ இருந்து இப்போ வரை எனக்கு அம்மாதான் பிடிக்கும். அம்மா நடிச்ச படங்கள் டி.வி-யில எப்போ போட்டாலும் பார்ப்பேன். அவங்க நடிச்சதுல 'ஆயிரத்தில் ஒருவன்’ எனக்குப் பிடிச்ச படம்!''

'நித்யானந்தா வாட்ஸ்அப்பில் புரொஃபைல் படமாக என்ன வைத்திருக்கிறார் சாமி?''

(ஆர்வமாக ஏதோ சொல்ல வந்தவர், சட்டென அமைதியாகி யோசித்துப் பேசுகிறார்...) ''ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்ல எல்லாம் சன்னிதானம் இல்லை. அது எல்லாமே நம் நேரத்தை வீணடிப்பவை. அவற்றை நீங்களும் பயன்படுத்த வேண்டாம் என்பது ஆதீனத்தின் வேண்டுகோள்!''

AADHEENAM WORLD

'நாங்கள் பொழுதுபோக்காக, சினிமாவுக்குப் போவோம்; ஃபேஸ்புக் பார்ப்போம். சன்னிதானம் என்ன செய்கிறீர்கள்?'

''இது நல்ல கேள்வி! எனக்குச் சின்ன வயசுல இருந்தே சிங்கம், புலின்னா ரொம்ப இஷ்டம். அதனால பெரும்பாலும் சிங்கம், புலி பற்றி காட்டுல போய் படம் பிடித்துக் காட்டுவாங்களே... அது எந்த சேனல்? ஆங்... டிஸ்கவரி, அனிமல் பிளானெட் போன்ற சேனல்களைத்தான் நான் பெரும்பாலும் பார்ப்பேன். வேட்டையாடும் சிங்கம், புலிகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பேன்.

AADHEENAM WORLD

சென்னைக்கு வந்தப்போகூட வண்டலூர் பூங்காவுக்குப் போனேன். அங்கே சிங்கம், புலிகளைப் பக்கத்துல பார்த்தேன். ஆனா, சிங்கம், புலிகள் என்னைப் பார்த்ததும் மிரண்டுருச்சு. அங்கே 'அம்மா’ பேர் வெச்ச 'மித்ரா’ என்ற புலி (எல்லா பதில்லயும் 'அம்மா’வைக் கொண்டுவந்துர்றாரே!) ரொம்பக் கோபமா அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுட்டிருந்துச்சு. நான் அது பக்கத்துல போனேன். அது என் கண்களையே உத்து உத்துப் பார்த்துச்சு. நானும் அதை உத்து உத்துப் பார்த்தேன். 'டேய் மித்ரா... Don't shout,sit down -னு சத்தமாகச் சொன்னேன். உடனே அது உறுமுறதை நிறுத்திட்டு, என்னைப் பார்த்துட்டே அமைதியா உட்கார்ந்திருச்சு. அதுக்கு நான் சொன்னது எப்படிப் புரிஞ்சது தெரியுமா? தமிழ்நாட்டுலயே முதன்முதலாக 'சிங்காதனம்’... அதாவது சிங்க வடிவிலான சிம்மாசனத்தில் அமர்ந்தது நம்ம சன்னிதானம்தான். அந்தச் சிம்மாசனத்தில் உட்காரும்போதே ஒரு வைபரேஷன் இருக்கும். அந்தச் சிங்கத்தின் கர்ஜனை நம்மகிட்ட பிரதிபலிக்கும். 2,500 வருஷங்களுக்கு முன்னாடி சிவனுடைய இன்ஸ்ட்ரக்ஷன்படி தேவி, ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுப்பாங்க. தேவிக்கு 'சிம்மவாஹினி’னும் ஒரு பேர் இருக்கு. அந்தப் பாரம்பர்யத்தில் வந்த நான் பேசுறதை சிங்கம், புலிகள் புரிஞ்சுக்கிறது இயல்புதான். அதுங்க என்ன நினைக்குதுன்னும் என்னால் உணர முடியும்!''

'சூப்பர் சாமி... சரி, இப்போதைய சூழ்நிலையில் விஜயகாந்த் என்ன செய்யணும்?''

(சடுதியில் சுதாரிக்கிறார். ஆங்கிலத்துக்குத் தாவுகிறார்) ‘‘I want to speak about our amma only. please skip those questions.”

'அழகிரிகிட்ட கடைசியாக என்ன பேசினீங்க சாமி?'

“I don’t want to speak about those people... அம்மாவைப் பற்றி பேசலாமே தம்பி... ப்ளீஸ்!''
 

AADHEENAM WORLD

'எதிர்காலத்தில் தமிழ் சினிமா நடிகர், நடிகைகளில் யாரேனும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?''

''ம்கூம்! சினிமாவில் இருந்து 'அம்மா’ முதலமைச்சர் ஆனதுபோல இனி யாரும் முதலமைச்சர் ஆக முடியாது. காரணம், அம்மா 'மக்களுக்காகச் சேவை செய்யணும்’னு மனசார நினைச்சாங்க. அதைச் செயல்படுத்தியும் காட்டினாங்க. ஆனா இப்போ, பலரும் பொறாமை, சுயநலம் பிடிச்சவங்களா இருக்காங்க. அவங்க எல்லாரும் ஞானத்தை கத்துக்கணும். இந்த உலகத்தில் ஞானத்தைப் போதிக்கத்தான் என்னைப் போன்றவர்களை கடவுள் அனுப்பியிருக்கார்!''

'ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் பேசியிருக்கிறீர்களா?'

''இதுவரை பேசியது இல்லை. சிலர் சும்மா பெருமைக்காக 'அவங்ககூட பேசினேன்’னு சொல்லிக்குவாங்க. ஆனா, எப்பவும் உண்மையைச் சொல்லிடுறது நல்லது இல்லையா? நான் அம்மாவைச் சந்திச்சிருக்கேன். ஆனா, இன்னும் சசிகலாவைச் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை!''

'தமிழ் சினிமாவில் இப்போ 'பேய் டிரெண்டு’ சாமி. இதனால் எங்கும் 'பேய் ஜுரம்’ பிடித்து பேய் நம்பிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பேய் பயத்தை எப்படிப் போக்குவது?'

''தற்கொலை செய்துகொண்டவர்கள்தான் ஆவியாவோ, பேயாவோ அலைவாங்க. ஆனா, பேய் உங்க எதிர்ல வந்துட்டா, அதைப் பார்த்துப் பயந்துராதீங்க. 'நீ எதுக்கும் கவலைப்படாத... உன் ஆத்மா சாந்தி அடைய உனக்காக நான் கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணுறேன். என்னையோ, யாரையோ எந்தத் தொந்தரவும் பண்ணிடாத’னு சொன்னா, பேய் நம்மளை ஒண்ணும் பண்ணாம, அது பாட்டுக்குப் போயிடும். அதனால, பேயைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்!''

AADHEENAM WORLD

'சன்னிதானம் அப்படி எந்தப் பேய்க்காவது ஞானம் கொடுத்திருக்கிறாரா?''

''இல்லை... இதுவரை சன்னிதானம் எந்தப் பேயையும் ஆவியையும் சந்தித்தது இல்லை. ஏன்னா, கடவுளின் அருள் பெற்றவர்கள் முன் பேய் வரப் பயப்படும்!''

' 'ஓ காதல் கண்மணி’ படத்தில் வருவதுபோல கல்யாணம் கட்டிக்கொள்ளாமல் சேர்ந்து வாழும் 'லிவ்விங் டுகெதர் கலாசாரத்தில் சாமிக்கு உடன்பாடு இருக்கிறதா?''

(ஜெர்க் ஆகிறார்...) ''சன்னிதானத்துக்கு 'லிவ்விங் டுகெதர்’ கலாசாரத்தில் விருப்பம் இல்லை. திருமணம் செய்துகொண்டுதான் கணவன் மனைவியாக வாழணும். அதுதான் அவங்களுக்கும் நல்லது; கலாசாரத்துக்கும் நல்லது.

பேட்டி போதும். சந்நிதானத்தின் ஆசீர்வாதங்கள். மறக்காம என் முழுப் பேரையும் போட்டுடுப்பா!''