Published:Updated:

”என் அம்மா காலை பிடிச்சுவிடணும் !”

பேரறிவாளனின் பெருவிருப்பம்டி.அருள் எழிலன், படம்: வீ.நாகமணி, ஓவியம்: ஹாசிப்கான்

”என் அம்மா காலை பிடிச்சுவிடணும் !”

பேரறிவாளனின் பெருவிருப்பம்டி.அருள் எழிலன், படம்: வீ.நாகமணி, ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:

''மிகச் சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல ஒரு ஜூன் மாதம் 11-ம் தேதிதான் கைதுசெய்யப்பட்டேன். சிறை வாழ்க்கையில் இப்போது 25-ம் ஆண்டுக்குள் அடியெடுத்துவைக்கிறேன். தூக்குத் தண்டனைக் கைதியாக இருந்த நான், இப்போது ஆயுள் தண்டனைக் கைதி. இந்தக் கால் நூற்றாண்டு கால சிறைவாசத்தில் உடல்நிலை மாற்றத்தைத் தவிர, வேறு எந்த மாற்றமும் என் வாழ்க்கையில் நடக்கவில்லை. அதே கம்பிகள், அதே தனிமை, அதே விடுதலைக் கனவுகள். நான் கைதுசெய்யப்பட்ட என் 19-வது வயதிலேயே தேங்கிக் கிடக்கிறேன்'' - கலவையான உணர்வுகள் அலைமோதப் பேசுகிறார் பேரறிவாளன். 

பெரும் போலீஸ் படை சூழ வேலூர் மத்தியச் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார் பேரறிவாளன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர், இப்போது சென்னை ராஜீவ் காந்தி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். வழக்குரைஞர்கள் துணையுடன் அவரிடம் பேசினேன்...

''ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு வரும்போது, சென்னையில் எங்களுக்குத் தெரிந்த ஒரே இடம் பெரியார் திடல்தான். அங்கு இருந்துதான் சென்னையை நான் சுற்றிப் பார்த்தேன். இப்போது சிகிச்சைக்காக என்னை அழைத்துவந்தபோது பேசின் பாலம், வால்டாக்ஸ் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் கட்டடம்... எனப் பழகிய இடங்களை அடையாளம் காண முடிந்தாலும், அவை பெருமளவு மாறிவிட்டன. போலீஸ் வாகனத்தில் இருந்தபடியே வெளியே பார்க்கிறேன். மனிதர்கள் சாரைசாரையாகச் சாலையைக் கடக்கிறார்கள். எல்லோரும் அவசரமாக எங்கோ விரைந்துகொண்டிருக்கிறார்கள். இங்கே ஒரு வானமும், அதற்குக் கீழே இத்தனை பெருங்கூட்டமாக மனிதர்களும் வாழ்கிறார்கள் என்பதை உணரும்போது, விவரிக்க முடியாத உணர்வு மனதை அழுத்துகிறது. இதைத் தரிசிக்கவாவது எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போகட்டும் என்றுதான் இப்போதெல்லாம் நினைக்கிறேன்.''

   ”என் அம்மா காலை பிடிச்சுவிடணும் !”

''உங்கள் உடல்நலத்தில் என்ன பிரச்னை?''

''நான் 19 வயதில் கைதுசெய்யப்பட்டேன். முதல் 10 மாதங்கள் நல்ல உடல் நலத்தோடு இருந்தேன். காவல் துறையினரின் விசாரணை வதைகளும், அதன் பிறகான தனிமைச் சிறையும் கடும் மன அழுத்தத்தைக் கொடுக்க, உடல்ரீதியான பல பிரச்னைகள், எனக்கு வரத் தொடங்கின. 1996-ம் ஆண்டு உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளை எடுக்கத் தொடங்கினேன். 24-வது வயதில் ரத்த அழுத்தம் வந்தபோது, 'இந்தச் சின்ன வயதிலா?!’ என மருத்துவர்கள் கேட்டார்கள். புகைப்பழக்கமோ, குடிப்பழக்கமோ, உடல் நலத்தைக் கெடுக்கும் வேறு எந்தப் பழக்கங்களோ என்னிடம் இல்லை. நான் எந்தச் சூழலிலும் மனதிடத்துடன் போராடும் வலிமைமிக்கவன் என்றே என்னைப் பற்றி உள்ளேயும் வெளியேயும் நினைக்கிறார்கள். ஆனால், என்னுள் தொடர்ந்து இருந்துவரும் இனம்தெரியாத மனஅழுத்தமே இந்த நோய்களின் தொடக்கத்துக்குக் காரணம். முதலில் ரத்த அழுத்தம், பின்னர் மலச்சிக்கல், அதைத் தொடர்ந்து சிறுநீரகத் தொற்று... எனப் பல உடல்நலக் கோளாறுகள் வந்தபடியே இருக்கின்றன.

2013-ல் ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜன், 'பேரறிவாளன் நிரபராதி’ எனச் சொன்னபோதும், தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் விடுதலைக்கு ஆணையிட்ட பின்னரும்கூட, அது நிறைவேறாமல் போகிறதே என்ற பெருங்கவலை என்னைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. 16 ஆண்டுகளாக நான் மரணத் தண்டனைக் கைதியாக இருந்த காலத்தைவிட, விடுதலை அறிவிப்புக்குப் பின் 16 மாதங்களாக விடுதலை கிடைக்காமல் சிறைக்குள் இருக்கும் இந்தக் காலம்தான் அதிக மன வலியைத் தருகிறது!

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 'எனக்குத் தீவிர சிகிச்சை வேண்டும்’ எனப் போராடினேன். வேலூர் சிறைத் துறை மருத்துவரே, 'இங்குள்ள சிகிச்சை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதால் உயர் சிகிச்சை பேரறிவாளனுக்குத் தேவைப்படுகிறது’ எனச் சொன்ன பிறகும்கூட என்னை வெளியில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. என் அம்மா அற்புதம் அம்மாள், முதலமைச்சரின் தனிப் பிரிவில், 'உயர்சிகிச்சை வேண்டும். அரசு செய்யாவிட்டால் பரவாயில்லை. நாங்களே செலவு செய்துகொள்கிறோம்’ என மனுகொடுத்த பிறகுதான், தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்தது.''

''இப்போது என்னென்ன சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்கள்?''

''பலவிதமான பரிசோதனைகள் செய்திருக்கிறார்கள். சில முடிவுகளுக்காக மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள். இன்னும் கண், பல் உள்பட சில பாகங்களைப் பரிசோதிக்க வேண்டுமாம். இந்தப் பரிசோதனைகள் முடிந்த பின்னரே, எனக்கான உயர்சிகிச்சை தொடர்பான தீர்க்கமான முடிவுகளை மருத்துவர்கள் எடுப்பார்கள். முன்னர் எல்லாம் என்னைப் போன்ற சிறைவாசிகள், தங்களுக்கு சட்டப்படி வழங்கப்படும் உரிமைகளைப் பெறவே கடுமையாகப் போராடவேண்டியிருந்தது. இப்போது அரசும் சிறைத் துறையும் காவல் துறையும் மிகச் சிறந்த முறையில் நடந்துகொள்வதுதான், இந்தத் துயரத்துக்கு மத்தியிலும் ஆறுதலாக இருக்கிறது!''

''உச்ச நீதிமன்ற அரசியல் அமர்வின் முன்னால் இருக்கும் உங்கள் வழக்கின் நிலை என்ன?''

''முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு எங்களை விடுவிப்பதாக முடிவெடுத்தபோது, அப்போதைய மத்திய அரசு உணர்ச்சி மேலீட்டில் எங்கள் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நான் நிரபராதி என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு குற்றவாளி என வைத்துக்கொண்டாலும்கூட, தண்டனைக் கழிவுடன் 25 ஆண்டு சிறைவாசத்தை முடித்துவிட்டேன்.  சாதாரண ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 14 ஆண்டுகளிலும், முக்கியமான வழக்குகளில் 20 ஆண்டுகளிலும் விடுவிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. மேலும், சிறை நிர்வாகம் என்பது மாநிலப் பட்டியலில் வருவதால், 'கைதிகள் விடுதலை மாநிலங்களின் உரிமை’ என்கிறது அந்தப் பத்திரம். ஆக, தமிழ்நாடு அரசு எங்களை விடுவிப்பதாக எடுத்த முடிவு சட்டரீதியிலானது; மத்திய அரசு அதைத் தடுத்தது அரசியல்ரீதியிலானது. இப்போதை பா.ஜ.க அரசு அரசியல் காரணங்கள் பற்றி யோசிக்காமல் சட்ட நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.''

   ”என் அம்மா காலை பிடிச்சுவிடணும் !”

''விடுதலையாவோம் என்ற நம்பிக்கை உள்ளதா?''

''ஒற்றை இழைபோல எப்போதும் என்னோடு ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கைதான் இன்னமும் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கை அறுந்துவிழும் அடுத்த நொடியே, என் வாழ்வும் அறுந்துபோகும். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் விடுதலை பெற்ற மனிதனாக உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என முழுமையாக நம்புகிறேன்.''

''மரண தண்டனைக்கு எதிரான உங்கள் போராட்டத்தில், நீங்கள் இழப்பதாகக் கருதுவது எதை?''

''நான் விடுதலையாகி வருவேன் என்பதை ஆழமாக நம்பினார் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். நான் விடுதலையானதும் முதன்முதலாகச் அவரைத்தான் சந்திக்க விரும்பினேன். அவரது மறைவுதான் எனக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.''

''தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவு, பின்னர் நீதிமன்றத் தடை, தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம்... என நாட்டையே பரபரப்பாக்கிய நிகழ்வுகள் நடந்தபோது, உங்களின் மனநிலை எப்படி இருந்தது?''

''தூக்குத் தண்டனைக்கான நீதிமன்றத் தடை ஆணையோடு என் தாயார் என்னைச் சந்திக்க வந்தபோது, எனக்கு எந்த மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. காரணம், செங்கொடி மரணம் தந்த வேதனை மனதை அழுத்தியது. மரண தண்டனை ஒழிப்பு என்ற பெரிய கடமையில், என்னை இன்னும் பற்றுறுதியுடன் இருக்கச்செய்துவிட்டுச் சென்றவர் தங்கை செங்கொடி. அதுபோல எங்கள் வழக்கு தொடர்பாக பல நேரங்களில் உணர்வே இல்லாத ஒருவித இறுக்கமான மன நிலையோடும், பல நேரங்களில் கூடுதல் உற்சாகத்தோடும் இருக்கிறேன். இந்த மனநிலைகள்கூட சின்னச் சின்னப் பாதிப்புகளை என் உடல் நிலையில் உருவாக்குகின்றன.''

''இப்போது உங்கள் அம்மா என்ன சொல்கிறார்?''

''நான் கைதுசெய்யப்பட்ட நாளில் இருந்து, ஒரு நாள்கூட அவர் நிம்மதியாக உண்டதும் இல்லை; உறங்கியதும் இல்லை. அம்மா என்பதற்காகச் சொல்லவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக அற்புதம் அம்மாள் என்ற தாயின் கால்கள் ஒரு நாள்கூட ஓய்ந்து இருந்தது இல்லை. அம்மாவுக்கு 68 வயது ஆகிறது. உடலில் எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் ஓடித் திரியும் என் அம்மாவின் கால்களை, நான் விடுதலையாகி வெளியில் வந்ததும் பிடித்துவிட வேண்டும். பார்க்கும்போதெல்லாம் 'நீ வந்துருவே அறிவு’ என்கிற அம்மாவுக்காகவாவது நான் விடுதலையாகி வெளியில் வர வேண்டும்!''