Published:Updated:

இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்காக போராடும் வன இளவரசி! #BeastsOfTheSouthernWild

சுரேஷ் கண்ணன்
இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்காக போராடும் வன இளவரசி!  #BeastsOfTheSouthernWild
இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்காக போராடும் வன இளவரசி! #BeastsOfTheSouthernWild

Beasts Of The Southern Wild சிறார் சினிமாதான் என்றாலும், வேடிக்கையாக அல்லாமல், தீவிரமான மனநிலையில் பார்க்கவேண்டிய திரைப்படம். லூசி அலிபர் எழுதிய Juicy and Delicious என்கிற நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட படைப்பு. நாகரிக உலகம் என்று சொல்லப்படும் மைய நீரோட்டப் பிரதேசங்களின் நவீன வாழ்வியலுடன் ஒட்டமுடியாமல் தம்மை துண்டித்துக்கொள்ளும் பழங்குடி மனோபாவ மனிதர்களைப் பற்றிய சித்திரம். 

இந்தத் திரைப்படம், வழக்கமான கதையாடல்போல கோர்வையாகச் சொல்லப்பட்டதல்ல. உருவகங்களாலும் குறியீடுகளாலும், ரத்தமும் சதையுமாகச் சொல்லப்படும் காட்சிகள் வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்றன. இயக்குநர் பென் ஜிட்லின் (Benh Zeitlin), 16 mm கேமிராவில் உருவாக்கிய இந்தத் திரைப்படம், சிறந்த தழுவல் திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. பிரதான கதாபாத்திரத்தில் நடித்தவர், வால்ஸ் என்கிற ஒன்பது வயது சிறுமி. இவர், அகாதமி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்களிலேயே குறைந்த வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹஷ்பப்பி எனும் ஆறு வயது கறுப்பின சிறுமியின் பார்வையிலும் ‘வாய்ஸ்ஓவர்’ விவரிப்பிலும் திரைப்படம் நகர்கிறது. அமெரிக்காவில் உள்ள தெற்கு லூசியானாவில், நீர்நிலையின் அருகாமையில் வசிக்கிறது, ‘பாத்டப்’ என்கிற சிறுபான்மை சமூகம். மைய நீரோட்ட சமூகத்துடன் இணையாமல், பிடிவாதமாகத் தங்களைத் துண்டித்துக்கொண்டு வாழ்கிறது. ஹஷ்பப்பியின் தந்தை குடிகாரர், முரடர். ஆனால், தன் மகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உறுதியும் பாசமும் உள்ளவர். மறைந்துபோன தன் தாயுடன் அடிக்கடி அந்தரங்கமான உரையாடலை நிகழ்த்துகிறாள் சிறுமி ஹஷ்பப்பி. 

இயற்கையோடு இழைந்து வாழவேண்டும் என்பதைப் பல்வேறு செயல்கள்மூலம் தன் மகளுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார் தந்தை. ஆனால், அவருடைய கோபமும் முரட்டுத்தனமும் ஹஷ்பப்பிக்கு அச்சத்தை உண்டாக்குகிறது. சமயங்களில் அவளிடமும் அந்தக் கோபம் பரவுகிறது. தந்தை தன்னைவிட்டுச் சென்றுவிட்டார் என்று அவள் உணரும் சமயத்தில், ஹஷ்பப்பி வீட்டைக் கொளுத்திவிடுகிறாள். திரும்பிவரும் தகப்பன், இவளை கோபித்து அடிக்கிறார். அவர் மருத்துவமனையிலிருந்து தப்பி வந்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஹஷ்பப்பியும் பதிலுக்கு தந்தையைத் தாக்குகிறாள். 

அதேநேரம், பனி உருகி வெள்ளம் வரும் ஆபத்து பற்றிய தகவல் வருகிறது. அங்குள்ள பெரும்பாலோனோர் நகருக்கு இடம்பெயர முயல்கின்றனர். “இங்கிருந்து செல்ல வேண்டாம். கேவலம் இந்த வெள்ளத்தை நம்மால் எதிர்கொள்ள முடியாதா?” என்று பலரிடம் கெஞ்சுகிறார் ஹஷ்பப்பியின் தந்தை. சிலர் மட்டுமே அவருடன் தங்குகிறார்கள். இயற்கைக்கு அஞ்சாமல் எப்படி அதை எதிர்கொள்வது என மகளுக்கு பல்வேறு விதங்களில் சொல்லித்தருகிறார். 

விடிந்தவுடன் அவர்கள் ஒரு சிறிய படகில் வெள்ளத்தைக் கடந்து செல்கிறார்கள். ஆங்காங்கே பதுங்கியிருக்கும் நண்பர்களை உரக்க அழைக்கிறார்கள். வெள்ளத்திலிருந்து தப்பித்த மகிழ்ச்சியைக் குடி மற்றும் இறைச்சியின் துணையுடன் கொண்டாடுகிறார்கள். சிரிப்பும் திகைப்புமாக இவற்றைப் பார்க்கிறாள் ஹஷ்பப்பி. பாதுகாப்பில்லாத பகுதி என்பதால், அந்த இடத்தைவிட்டு வெளியேறுமாறு அரசு அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள். ஹஷ்பப்பியின் தந்தை, அவர்களிடம் மூர்க்கமாகச் சண்டையிடுகிறார்.. ஆனாலும், அவர்கள் வெளியேற்றப்பட்டு முகாமில் தங்கவைக்கப்படுகிறார்கள். அப்போது, ஹஷ்பப்பியின் தந்தைக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. அதைச் சொல்லியும் சிகிச்சைக்கு மறுக்கிறார் அவர். வலுக்கட்டாயமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

பிறகு, தன் சமூக மக்களுடன் அந்த முகாமிலிருந்து ரகசியமாக வெளியேறுகிறும் அவர், தன் மகளை அவர்களுடன் அனுப்பிவிட்டு, தான் மட்டும் எங்கோ தனியாகச் செல்ல முயல்கிறார். ஹஷ்பப்பி ஆட்சேபிக்கிறாள். தன் மரணத்தை அவள் பார்ப்பதை தந்தை விரும்பவில்லை என்று தெரிகிறது. தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு பழைய வசிப்பிடத்துக்குச் செல்கிறாள் ஹஷ்பப்பி. பின்னர், தந்தையின் சடலத்துக்கு அவள் எரியூட்டுவதோடு படம் நிறைகிறது. 

இயற்கையோடு இணைந்து வாழவிரும்பும் சிறுபான்மை சமூகங்கள் என்ற கண்ணோட்டத்துடன் பார்த்தால், இதில் சித்தரிக்கப்படும் காட்சிகளையும் பின்னணியையும் புரிந்துகொள்ள முடியும். அதற்கு, இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம். 

ஒரு சிறிய விருந்தில் நண்டைக் கத்தியால் வெட்டிச் சாப்பிட ஹஷ்பப்பிக்குத் தருகிறார் ஒருவர். வெகுண்டெழும் அவளின் தந்தை, கையால் பிய்த்து சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இன்னொரு காட்சியில், அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருக்கும் முகாமுக்குள் நுழைகிறாள் ஹஷ்பப்பி. ‘அந்த இடம் நீர் இல்லாத மீன்தொட்டிபோல இருக்கிறது' என்று வர்ணிக்கிறாள். பழங்குடியினரின் பார்வையில் நவீன நாகரிக உலகம் எப்படியிருக்கும் என்பதை இதைவிட சிறப்பாகச் சொல்லிவிட முடியாது. 

ஹஷ்பப்பியாக வாலிஸ் அற்புதமாக நடித்திருக்கிறாள். இந்தப் படத்துக்கு முன்பு எவ்வித முன்அனுபவம் இல்லாத வாலிஸ், நடிகர் தேர்வின்போது தனது குரலால் இயக்குநரைக் கவர்ந்திருக்கிறாள். இவளது முகபாவங்களின் மூலமாகவே பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றன. கணினி மூலம் உருவாக்கப்பட்ட தொன்மையான விலங்கு ஒன்றை, எதிர்கொள்வதுபோல இவள் நடித்திருக்கும் காட்சி தத்ரூபமாக இருக்கிறது. ஹஷ்பப்பியின் தந்தை வின்க் கதாபாத்திரத்தில் ஹென்றி நடித்துள்ளார். இவரும் தொழில்முறை நடிகர் அல்ல. சிறிய பேக்கரி ஒன்றின் உரிமையாளராக இருக்கும் இவரைப் படப்பிடிப்பு குழு நீண்ட காலம் கவனித்துத் தேர்ந்தெடுத்துள்ளது. 

கான் திரைப்பட விருது உள்ளிட்ட பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படம், தரும் பிரத்யேகமான அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்!