Published:Updated:

மெளலிவாக்கம் விபத்து ... ஒரு வருடம் கழித்து..?!

பாரதி தம்பிபடங்கள்: எம்.உசேன்

மெளலிவாக்கம் விபத்து ... ஒரு வருடம் கழித்து..?!

பாரதி தம்பிபடங்கள்: எம்.உசேன்

Published:Updated:

சென்னை மௌலிவாக்கத்தில் ஒரு மழை நாளில், அந்த 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து ஒரு வருடம் நிறைவடையப்போகிறது. கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று, அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 61 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி இறந்தார்கள். ஒரு கட்டடம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போதே இடிந்து தரைமட்டமாகி பல உயிர்களைப் பலிகொண்ட பயங்கரம், தமிழ்நாட்டையே அதிரவைத்தது. முக்கியமாக, 'சென்னையில் ஒரு சொந்த வீடு’ என்பதைக் கனவாகக்கொண்ட லட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரைப் பதறவைத்தது. ஆயிற்று, ஒரு வருடம். மௌலிவாக்கம் விபத்தின் பின்விளைவுகள் என்ன? 

விபத்து நடந்த கட்டடம், காவல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இன்னமும் இருக்கிறது. நான்கு புறங்களும் இரும்புத் தகடுகளால் அடைக்கப்பட்டு, 'இது தடைசெய்யப்பட்ட

பகுதி. உள்ளே நுழைபவர்கள், தண்டனைக்கு உள்ளாவார்கள்’ என்கிறது அறிவிப்புப் பலகை. நான்கைந்து காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகள் அப்படியே கிடக்கின்றன. மௌலிவாக்கம் கட்டட விபத்து குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்தது தமிழ்நாடு அரசு. அந்த கமிஷன், தன் விசாரணையை முடித்து கடந்த ஆண்டே அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துவிட்டது. ஆனால், இப்போது வரை அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகில் உள்ள அதேபோன்ற மற்றொரு 11 மாடிக் கட்டடம், அப்படியே பாதியில் நிற்கிறது. அந்தக் கட்டடமும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில், அதன் அருகில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். ஒருசிலர் வீடு திரும்பியிருந்தாலும் பெரும்பாலான வீடுகள் வெறிச்சோடியே கிடக்கின்றன.

மெளலிவாக்கம் விபத்து ... ஒரு வருடம் கழித்து..?!

'இடிஞ்சு விழுந்தது விழுந்துடுச்சு. இப்போ நின்னுட்டிருக்கிற கட்டடம்தான் எங்களை ரொம்பப் பயமுறுத்துது. ரெண்டு கட்டடங்களையும் பக்கத்துல, பக்கத்துலதான் கட்டியிருக்காங்க. அந்த பில்டிங் இடிஞ்சு விழுந்ததுக்கு என்ன காரணமா இருந்தாலும், அது இதுக்கும் பொருந்தும். அப்படின்னா இதுவும் ஆபத்தான கட்டடம்தான். பின்ன இதை இடிச்சுத் தள்ளுறதுல என்ன தயக்கம்? எத்தனை நாளைக்குத்தான் பயந்துக்கிட்டே வாழ முடியும்?’ எனக் கேட்கிறார்கள் அருகில் வசிக்கும் மக்கள்.

இந்தக் கட்டடத்தை இடித்துத் தள்ள, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த ஆண்டே உத்தரவு பிறப்பித்தார். ஆனால், கட்டுமான நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் அதற்கு தடை உத்தரவு வாங்கிவிட்டார்கள். 'அவங்க, தடை வாங்கட்டும்; என்னவோ வாங்கட்டும். இந்த பில்டிங்ல யாராச்சும் குடிவருவாங்களா? திக்திக்னு உயிர் பயத்தோடு வாழ முடியுமா? வாடகைக்கு விட்டாக்கூட யாரும் வர மாட்டாங்க. எல்லாருக்கும் இதைப் பத்தி தெரியும். பேய் பங்களா மாதிரி சும்மாதான் போட்டுவெச்சிருக்கணும்’ என்கிறார்கள் மக்கள்.

இந்தக் கட்டடத்தின் சுற்றுச்சுவர்களுக்கு மறுபுறம், மௌலிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. கட்டடத்துக்கும் பள்ளிக்குமான இடைவெளி சில அடிகள்தான். இடிந்து விழுந்தால் பள்ளியின் மீதுதான் விழும். இதனால் சுமார் 650 மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளி உடனடியாக மூடப்பட்டு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிக் கட்டடத்துக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டது. அந்த 'தற்காலிகம்’ ஒரு வருடத்தைத் தாண்டியும் நீடிக்கிறது. ஆதிதிராவிடர் பள்ளி, ஒரு தொடக்கப் பள்ளி. அங்கு ஏற்கெனவே 250 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் 650 பேரையும் சேர்த்து சுமார் 900 மாணவர்கள். ஆனால் அங்கு இருப்பதோ வெறும் ஒன்பது வகுப்பறைகள். தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 50 பேருக்கான ஓர் அறைபோக, மீதம் உள்ள எட்டு அறைகளில், 1 முதல் 12-ம் வகுப்புகள் நடைபெற வேண்டும். எப்படி இது சாத்தியம்? இதனால் ஷிஃப்ட் முறையில் செயல்படுகிறது பள்ளி. அப்படி ஷிஃப்ட் பிரித்தாலும்கூட வகுப்பறைகள் போதுமானதாக இல்லை. இதனால் மரத்தடி, வராண்டா என, கிடைக்கும் இடங்களில் அமர்ந்துகொள்கின்றனர். விளையாட்டுத் திடல் எதுவும் இல்லை. வழக்கமானதைவிட இவர்களுக்கான பள்ளி நேரம் குறைவாக இருப்பதால் பாடங்களை முழுமையான அளவில் நடத்த முடியவில்லை. எனினும், இவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் மௌலிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு ப்ளஸ் டூ ரிசல்ட் 99 சதவிகிதம். 10-ம் வகுப்பில் 90 சதவிகிதத்துக்கு மேல்.

இடிந்து விழுந்த கட்டடத்தில் வீடு வாங்கியோரின் நிலைமை இன்னும் பரிதாபம். அங்கு கட்டப்பட்டு இருந்தவை, சுமார் 1,000 சதுரஅடி உடைய இரண்டு படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடுகள். 50 லட்சம் முதல் 70 லட்சம் வரையில் விலை. வீடு முன்பதிவு செய்தவர்கள், இந்தத் தொகையில் பாதியோ, முக்கால்வாசியோ கொடுத்திருந்த நிலையில்தான் கட்டடம் இடிந்து விழுந்தது. சொந்த சேமிப்புப் போக, பெரும்பாலானோர் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றிருக்கிறார்கள். சேமிப்பையும் இழந்து கடன்காரர்களாக நிற்கும் நிலையில், வங்கிக் கடனுக்கான தவணையை வட்டியுடன் கட்டியாகவேண்டிய நிர்பந்தம். 'ஒருவேளை, குடியேறிய பிறகு இடிந்து விழுந்திருந்தால் உயிரும் போயிருக்கும். நல்லவேளை முன்பே இடிந்து விழுந்தது’ என்பது மட்டுமே இவர்களுக்கான ஆறுதல்.

மெளலிவாக்கம் விபத்து ... ஒரு வருடம் கழித்து..?!

இவர்கள் எல்லோரையும்விட பரிதாபமானவர்கள் இறந்துபோன தொழிலாளிகள். ஆந்திரா, ஒடிசா, மத்தியப்பிரதேசம்... என, வடமாநிலங்களில் இருந்து பிழைக்க வந்த ஏழைத் தொழிலாளர்கள் அவர்கள். பெரும்பாலானோர் இளைஞர்கள். வயது, 30-குள் இருக்கும். அந்த வயதுக்கு உரிய ஆசைகள் எதையும் ஒருபோதும் அனுபவித்தது இல்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் கடும் உழைப்பு மட்டும்தான். பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் குடும்பத்தின் பசி போக்குவதற்காக, நாள் முழுவதும் செங்கல் சுமந்து, சிமென்ட் சட்டி தூக்கினார்கள். வேறு பொருளில் சொல்வதானால், நாம் பார்க்கும் நவீன சென்னையின் முகத்தை உருவாக்குபவர்கள், முகம் அறியாத அந்தத் தொழிலாளர்கள்தான்.

இதை 'விபத்து’ என ஒரு வசதிக்காக நாம் கூறினாலும், உண்மையில் இது விபத்தா? கட்டுமான முதலாளிகளின் வரம்பற்ற லாபவெறியால் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலை இல்லையா? ஆனால், கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த மௌலிவாக்கம் கட்டடத்தின் உரிமையாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆறு பேரும் மூன்றே மாதங்களில் நிபந்தணை பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஒருவேளை வழக்கின் விசாரணையில் இவர்கள் தண்டிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த மோசடி நடப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த, முறைகேடுகளைச் சாத்தியப்படுத்திய அரசுத் துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை?