Published:Updated:

மணல் வளம்... மக்கள் நலம் !

மணல் வளம்... மக்கள் நலம் !

மணல் வளம்... மக்கள் நலம் !

மணல் வளம்... மக்கள் நலம் !

Published:Updated:
மணல் வளம்... மக்கள் நலம் !

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பாலாற்றுப் படுகையில், அரசு மணல் குவாரி அமைப்பதற்கு எதிராக ஒன்றுதிரண்டு நிற்கிறார்கள் பொதுமக்கள். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக குவாரிக்கு எதிராக போராட்டங்களை நடத்திவரும் மக்களை, இப்போது வழக்கு, கைது, சிறை... என அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது அரசும் காவல் துறையும். 

'குவாரி வந்தால், எங்கள் ஊரே நாசமாகிவிடும்; மணல் வளம் சுரண்டப்பட்டு நிலத்தடி நீர் வற்றும்; குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும்; ஆயிரக்கணக்கான லாரிகளால் சுற்றுச்சூழல் கெடும்; ஊருக்குள் குழு மோதல்களும் கட்சித் தகராறுகளும் சாதிச் சண்டைகளும் வரும். எனவே, எங்கள் ஊரில் மணல் குவாரி அமைக்கக் கூடாது’ என்பது மக்களின் குரல். மாநிலத்தில் மணல் குவாரி அமைந்துள்ள மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தால், இவர்களின் அச்சத்தில் உள்ள நியாயம் புரியும். மணல் குவாரி என்பது, ஒரு தொழிற்சாலை போன்றது அல்ல; அது, அதிகாரப் பகடையாட்டத்தின் அடையாளம்; பேரங்களும் குற்றங்களும் கீழ்மைகளும் நிறைந்த நிழல் உலகம். அதனால்தான் மக்கள் எதிர்க்கிறார்கள். மக்களின் கோரிக்கையைப் பரிவுடன் பரிசீலித்து, கரிசனத்துடன் தீர்த்துவைக்கவேண்டிய தமிழ்நாடு அரசோ, மக்களின் போராட்டத்தை தன் செல்வாக்குக்கு விடப்பட்ட சவாலாகக் கருதி, அவர்கள் மீது காவல் துறையை ஏவுகிறது; இயற்கை வளங்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் மக்களைத் தண்டிக்கிறது. அப்படியெனில் அரசு யாருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது? இப்படி பொது நோக்கத்துக்காக இணைந்து நிற்பவர்கள் தண்டிக்கப்பட்டால், அது சமூகத்தில் கேடான விளைவுகளைத்தானே உண்டாக்கும். இதைத்தான் அரசு விரும்புகிறதா?

ஒருகாலத்தில் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்துவந்த பாலாற்றின் இருகரைக் கிராமங்களில், இப்போது குடிநீருக்கே தட்டுப்பாடு. காவிரி, பவானி, தாமிரபரணி, அமராவதி, கொள்ளிடம், வைகை... என அனைத்து நதிகளின் கதியும் இதுதான். தமிழ்நாட்டில் பல பேருந்து நிலையங்கள், கல்லூரிகள், ஏன் நீதிமன்றங்களேகூட ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் மீது கட்டப்பட்டவையே. தனிப்பட்ட நபர்கள் இப்படிச் செய்தால் அது ஆக்கிரமிப்பு; விதிமீறல். அதையே அரசு செய்தால் நியாயமாகிவிடுமா?

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புஉணர்வு மக்களிடமே வேர்விடத் தொடங்கியிருக்கும் சூழலில், இயற்கை வளங்களின் மதிப்பை உணர்ந்து, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளைத்தான் அரசு முடுக்கிவிட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும். முக்கியமாக இயற்கையைக் காக்கப் போராடும் மக்களுக்கு, அரசு பக்கபலமாக நிற்க வேண்டும். மணல் வளம் காக்க மக்களே தன்னியல்பாகக் களம் இறங்கியுள்ள இந்தச் சூழ்நிலை, மிகப் பொருத்தமான தருணம்!