Published:Updated:

விலங்குகளின் அன்பு விலையற்றது..! விலங்குகளின் நெகிழ வைக்கும் ‘ஃபீல் குட்’ கதைகள்

விலங்குகளின் அன்பு விலையற்றது..! விலங்குகளின் நெகிழ வைக்கும் ‘ஃபீல் குட்’ கதைகள்
விலங்குகளின் அன்பு விலையற்றது..! விலங்குகளின் நெகிழ வைக்கும் ‘ஃபீல் குட்’ கதைகள்

குடும்பத்தில் ஒருவராக இருந்த நாய் இறந்து விட, ஒரு நாள் முழுக்க துக்கம் அனுசரித்தது ஒரு குடும்பம். சாமிக்கு நேர்ந்து விட்ட ஆட்டு குட்டியை கண்ணம்மா என பெயரிட்டு, ஆசையாக வளர்த்து கடைசியில் காணிக்கையாக கொடுக்கும்போது கதறினார் ஒரு பெண். செல்லப் பிராணிகள் பற்றிய கதைகள் நெகிழ்ச்சியானவை. அன்பு என்கிற ஒன்றைச் சுற்றி பின்னப்பட்ட  "பீல் குட் ஸ்டோரிஸ்." 

நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டேம்  நகரில் செயல்படும் உயிரியல் பூங்காவில் மரியோ என்கிற ஒருவர் விலங்குகள் பராமரிப்பு பிரிவில் பணிபுரிகிறார்.  மரியோ பூங்காவில் பணிபுரிந்த காலத்தில் ஒட்டகச்சிவிங்கியின் இடத்தைச் சுத்தம் செய்கிற வேலை செய்திருக்கிறார். அங்கிருக்கிற விலங்குகளோடு நெருங்கிப் பழகுகிறார். 25 வருடங்கள் அங்குப் பணிபுரிகிற மரியோ ரத்த புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்.  பிழைப்பது கடினம் என எல்லோரும் கைவிரிக்கிறார்கள். மருத்துவமனையில் உயிருக்குப் போராடுகிற மரியோ தனது கடைசி ஆசையாக அவர் பணிபுரிந்த உயிரியல் பூங்காவிற்கு செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கிறார். மருத்துவமனை நிர்வாகம் “ஆம்புலன்ஸ் விஸ்  பவுண்டேசன்” என்கிற அமைப்புக்குத் தெரியப்படுத்துகிறார்கள். அந்த அமைப்பு மரணத் தருவாயில் இருக்கிறவர்கள் கடைசி ஆசையை நிறைவேற்றித் தருகிற தனியார் அமைப்பு. அமைப்பைச் சார்ந்தவர்கள்  மரியோவை  பூங்காவிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

பத்துக்கும் மேற்பட்ட ஒட்டகச்சிவிங்கிகள் இருக்கிற பகுதியில்  மரியோவின் படுக்கை கொண்டு வந்து வைக்கப்படுகிறது. 54 வயதில் தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மரியோ தனது இறந்த காலத்தை நினைத்துக் கலங்குகிறார். ஒட்டகச்சிவிங்கிகள் ஒவ்வொன்றாக வந்து மரியோவைக் கண்டும் காணாததும் போல செல்கின்றன. ஐந்து நிமிடங்கள் கழித்து அங்கு  வருகிற ஒட்டகச் சிவிங்கி ஒன்று மரியாவை உற்றுப்பார்க்கிறது. அசைவின்றி கிடக்கிற மரியாவின் உடலை  பத்து வினாடிகள்  நுகர்ந்துபார்க்கிற ஒட்டகச்சிவிங்கி தனது நாக்கால் தடவி கொடுக்கிறது. மரணத்தை எதிர்பார்த்திருந்த மரியோவிற்கு அது விடை கொடுக்கும் நிகழ்வானது. மரியாவை அங்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விஸ் பவுண்டேசன் நிறுவன அதிகாரி  கேஸ் வெல்ட்ஹெர் டச்சு  "இது மிக முக்கியமான தருணம். அந்த ஒட்டகச்சிவிங்கி மரியோவை கண்டு கொண்டது. உண்மையில் நாங்கள் அந்த அன்பைக் கண்டு கலங்கி நின்றோம்” என்றார்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இருக்கிற பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பேராசிரியராக பணிபுரிந்தவர் யுனோ. 1923ம் ஆண்டு தனியாக நின்றுகொண்டிருந்த ஒரு நாயை எடுத்து வளர்க்கிறார். அதற்கு ஹச்சிகோ எனப் பெயரிடுகிறார். ஹச்சிகோ பேராசிரியர் யுனோ மீது அளவற்ற அன்பு வைத்திருந்தது. தினமும் காலை அவருடன் ஷிபுயா ரயில் நிலையம் வரை சென்று வழியனுப்பும். மாலை அவர் திரும்பு நேரம் அவருக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும். 1925 மே  மாதம் 20 தேதி  வரை இதுவே வழக்கமாகத் தொடர்ந்தது. மே மாதம் 21 தேதி வழக்கம் போல யுனோ பல்கலைக்கழகம் செல்கிறார். வகுப்பில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பொழுது பெரு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் மரணமடைகிறார். யுனோ  இறந்தது ஹச்சிகோவிற்கு தெரியாமல் இருக்கிறது. அன்றிலிருந்து தினமும் மாலை ஷிபுயா ரயில் நிலையத்திற்கு வந்து யுனோவிற்காக காத்திருக்க ஆரம்பிக்கிறது.

நாட்கள், மாதங்கள்  என்றில்லாமல் வருடக் கணக்கில் யுனோவுக்காக காத்திருக்கிறது. ரயில் நிலையத்தில் ஹச்சிகோவிற்கு தெரிந்தவர்கள் என  யாரும் இல்லை. ரயில் நிலையத்தில் இருப்பவர்கள் ஹச்சிகோ பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். யுனோ இறந்த அடுத்த ஒன்பது ஆண்டுகள் அவரின் வருகைக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தது. ஹச்சிகோ  பற்றிய விசாரணையில் யுனோ  குறித்த தகவல் கிடைக்கிறது. அங்கிருப்பவர்கள் ஹச்சிகோவிற்கு உணவளிக்கிறார்கள். கடைசியில் மார்ச் 8 1935 ஆம் ஆண்டு யுனோவிற்காக காத்திருந்து  இறந்து போகிறது. ஜப்பான் நாடு ஹச்சிகோவுக்கு 1934 ஆம் ஆண்டு  ஒரு சிலையை ரயில் நிலையத்தில் நிறுவுகிறது.  பிறகு நடந்த இரண்டாம் உலகப் போரில் சிலை சேதமடைகிறது. மீண்டும் 1948 ஆம் ஆண்டு ரயில் நிலைய முகப்பில் ஹச்சிகோவிற்கு சிலை  நிறுவுகிறார்கள். இப்போதும் ஷிபுயா ரயில் நிலையத்தில் ஹச்சிகோ  சிலை இருக்கிறது. தினமும் வந்து போகிறவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.அதன் அன்பை பற்றி பேசிக்கொள்கிறார்கள்.

உண்மையில் நிபந்தனையற்ற அன்பு என்கிற ஒன்று உலகத்தில் இருக்கிறது. அந்த அன்பு பல சமயம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது.