Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : கவிஞர் காசி ஆனந்தன்நா.கதிர்வேலன், படங்கள் : பொன்.காசிராஜன்

பிரீமியம் ஸ்டோரி

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''நான் பிறப்பதற்கு முன்பே பிறந்துவிட்ட ஆனந்த விகடனைப்பற்றிப் பேசுவது சுகம். நான் மேல் நிலைப் பள்ளியில் படிக்க ஆரம்பித்தபோது விகடனைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், எனக்கு முன்னமே பெரியக்கா புஷ்பம் விகடனை விடாது படித்துக்கொண்டு இருந்தார். அந்தக் காரியத்தை அவர் விருப்பத்தோடு இன்றைக்கும் செய்துகொண்டு இருக்கிறார். வெள்ளி வந்துவிட்டால், விடியற்காலை வீட்டுக் கதவை விரைவாகத் திறந்து பார்க்கிற அவசரம் எப்போதும் அவருக்கு உரியது. அக்கா தேர்ந்த வாசகி. நுண்ணிய ரசிகை. அவரின் வழியாகவே விகடன் எனக்கு அறிமுகமானது. தமிழீழத்தின் தென் பகுதியான மட்டக்களப்பில், விகடன் வருகிற தினங்களை ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருப்போம். ஆறுமுகத்தின் 'தமிழ்ப் பண்ணை’க்கு வந்து சேரும் அந்தக் கணமே பறிக்கப்படும் ஆனந்த விகடன். அந்தக் காலத்தில் ஏழெட்டுப் பிரதிகளே வரும் விகடனைப் படித்து தமிழ் அறிந்து தான் நாங்கள் கையெழுத்தில் இதழ்கள் கொண்டுவர முயற்சித்தோம். நண்பர்களோடு சேர்ந்து 'ஈழ முரசு’ என ஓர் இதழும் 'முத்தம்’ எனச் சொந்தமாக ஓர் இதழும் நடத்தினேன்.

நானும் விகடனும்!

இந்தச் சமயம் சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்துவிட்டு, எங்கள் கல்லூரியில் ஆசிரியராக வந்து சேர்ந்தார் எஸ்.பொ. அவரோடு இணைந்து 'மழலை’ என்றோர் இதழ் நடத்தினோம். எங்கள் மட்டக்களப்பில் நடந்த கையெழுத்து இதழ் புரட்சிக்கே ஆனந்த விகடன்தான் முழு முதற் காரணம். மிகுந்த பிரயாசையோடு அமரர் வாசன், இயல், இசை, நாடகம் போன்றவற்றில் தீவிர ஈடுபாட்டோடு இயங்கிய காலம். அவர் விகடனில் இயல் வளர்த்தார். இசைக் கலைஞர்களைப் பெரிய அளவுக்கு ஊக்குவித்துக்கொண்டு, திரையுலகில் மிகப் பிரமாண்ட மான படங்களை எடுத்து அவர் கொடி கட்டிப் பறந்த சமயம். இளைஞர்கள் விகடன் மீது நம்பிக்கை வைத்து இருந் தார்கள். தமிழ் ஈழத்தின் இலக்கியப் பரப்பில் பல இளைஞர்கள் எழுதுவதற்கு உந்து சக்தியாக, விதையாக, வேராக இருந்தது விகடன். மட்டக்களப்பின் சிறந்த எழுத்தாளர் நவம், விகடனில் அப்போது எழுதிக்கொண்டு இருந்தார்.

பாரதி தமிழ் உணர்வுக்கு என்ன விதத்தில் பணியாற்றினாரோ, அதே விதத்தில் விகடன் செயல்படுகிறது. ஜெயகாந்தன் பொது உடைமை இயக்கத்தில் இருந்த காலத்திலேயே, ஒரு சிறந்த எழுத்தாளர்தான். ஆனால், முத்திரைக் கதைகளாக அவரது படைப்புகள் விகடனில் வெளி வந்த பிறகுதான், அவர் புகழின் உச்சிக்குச் சென்றார். 'அக்னிப் பிரவேசம்’, 'புதுச் செருப்பு கடிக்கும்’ கதைகளைச் சிலாகித்துப் பேசிக்கொண்டு இருந்த காலங்களை மறக்க இயலாது. கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்’ எவ்வளவு தூரம் தமிழ் இலக்கிய உலகத்தை உலுக்கியதோ, அதே அளவுக்குச் சற்றும் குறையாமல் மனதைத் தொட்டது கொத்தமங்கலம் சுப்பு எழுதிய 'தில்லானா மோகனாம்பாள்’ தொடர் கதை.

ஓவியத்தின் சிறப்பையும் தமிழ் மக்களிடம் கொண்டுசென்றது விகடன் தான். தமிழர் கோயில்களின் சிறப்பை எல்லாம் முன்பு எழுதுவார்கள். பரணீ தரன் அதில் பெரும் பணியாற்றி இருந் தார். ஈழத்தில் இருந்துகொண்டு விகடன் மூலமாக மானசீகமாக வழிபட்ட திருத்தலங்களின் வரலாறுகள் மறக்க இயலாதவை. இப்போது தமிழ் நாட்டுக்கே வந்து தங்கிவிட்ட சூழலில், அந்தக் கோயில்களைப் பார்க்கக் கிடைக்கும் போது, விகடனில் படித்தபோது ஏற்பட்ட பரவசம் அப்படியே நீடிக்கிறது. ஓவியங்களின் வளர்ச்சிக்கு விகடன் செய்த பணிகள் அப்பழுக்கு இல்லாதவை. நகை ஓவியங்கள் (கார்ட்டூன்) விகடனில் வரவேற்பு பெற்றது மாதிரி வேறு எங்கும் பார்த்தது இல்லை. கோபுலுவின் உயர்ந்த ஓவியங்கள் விகடனை மேலும் உயரத்தில் வைத்தன. தானும் வளர்ந்து, ஓவியனையும் கொண்டாடுகிற பாங்கு, விகடனைவிட்டால் வேறு யாருக்கும் வருமா என்பது சந்தேகம் தான்.

நானும் விகடனும்!

கோபுலுவின் சின்னக் கோட்டு அசைவுக்கு மலர்ந்துகிடந்தவன் நான். கோபுலு ஈடு இணையற்ற ஓவியர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு தந்ததும் விகடன்தான். திறமை உள்ளவர்களை வரவேற்பதில் முன்னிற்பதும் விகடன்தான்.

முக்கியமாக தமிழ் அரசியல் பரப்பில் விகடனின் கட்டுரைகள் மிக முக்கியமானவை. ஆழமாகவும் நடுநிலையாகவும் சார்பு இல்லாமலும் இன்று வரை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பித்து இதுநாள் வரையில் இது எப்படிச் சாத்தியமாகிறது என்பது எனக்குப் புரிபடவில்லை. எந்தச் சறுக்கல்களும் அவர்களிடம்தென் பட்டது இல்லை. கணிப்புகள் தவறியது கிடையாது. உண்மையைச் சொல்லாமல் வாளாவிருந்தது அகராதியில் இல்லை. அதிகாரத்துக்குப் பயப்படுவது என்றால் என்ன என்று கேட்டார் கள். எவ்வளவோ இதழ்கள் தங்கள் கண்ணியத்தை மறந்து, கடமை தவறி இருக்கின்றன. விகடனின் தராசு எப்போதும் நடுநிலைதான். மக்களின் பக்கம் நிற்பதால், மக்களின் ஆதரவும் அவர்களுக்கு இருப்பது கண்கூடு.

சிங்கள அரசின் இனவெறிக் கொள்கை உச்சத்தில் இருந்த காலத் தில், தமிழர்கள் படும் துயரங்களைப் போராட்ட உணர்வோடு சொன்னது விகடன்தான். ஈழத் தமிழர் படும் கொடுமைகளைக் கல்லும் கரையும் விதமாகச் சொன்னது விகடன். ஈழத் தமிழர்கள் மட்டும் அல்ல, தமிழர்கள் எங்கே ஒடுக்குமுறைக்கு உட்பட்டா லும், அவர்களுக்குக் கை கொடுப்பதும் தூக்கிவிடுவதும் விகடன்தான். முள்ளி வாய்க்கால் போரில் இலங்கை இன வெறி அரசின் கொடிய அடக்குமுறைகளைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு எடுத்துக்காட்டியதும் அவர்களே.

உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் எல்லாத் தமிழர்களும் விகடனை நம்புகிறார்கள். வீடுகளில் மட்டுமல்ல... காடுகளிலும் விகடன் படிக்கப்பட்டது! ஆம்... எத்தனையோ ஈழப் போராளிகள் கைகளில் விகடன் இருப்பதை நேரில் பார்த்து இருக்கிறேன். அவற்றின் பொருள் குறித்து விவாதிப்பதையும் கேட்டு இருக்கிறேன். தலைவர் பிரபாகரனுக்கு விகடன் மிகவும் விருப்பமான இதழ்! தமிழகத்தில் வெளிவருகிற அன்றே அவருடைய கைகளிலும் ஒரு பிரதி இருக்கும். எவ்வளவு பரபரப்புக்கு இடையிலும் விகடன் படிப்பதில் கவனம் செலுத்துவார் தலைவர். ஏனெனில், தமிழின் குரல் விகடன்.

நானும் விகடனும்!

இது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. உண்மையின் இன்னோர் எழுச்சியாகத் தலைவர் விகடனைக் காண்கிறார். அநேகமாக வேறு யாராவது தங்களின் வடிவ அமைப்பை முற்றிலுமாக மாற்றி இருப்பார்களா எனத் தெரியவில்லை. விகடன் தன் அழகிலும் வடிவத்திலும் பெரும் புரட்சி செய்தது. அந்த மாற்றம் கொண்டுவந்திருக்கிற அழகு அற்புதமானது. விகடனை அங்குலம் அங்குலமாக நான் ரசிக்கிறேன். நம்புகிறேன். உண்மைக்குப் புறம்பாகச்செயல்பட முடியாத அவர்களது மனப்பாங்கைப் பாராட்டுகிறேன்.

ஈழத் தமிழர்கள் உலகம் எங்கும் விகடனைத் தங்களது கருத்துக் களமாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள் அனைவருக்குமான உரிமைகளின் மீட்டெடுப்புக்கு விகடன் முன் நிற்கும். அதற்காக விகடன் நின்று வாழும். தமிழ் மக்கள் எப்போதும் கொண்டாடுகிற தகுதியை விகடன் பெற்றிருக்கும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு