Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

விவசாயக் குடும்பத்துச் சமூக உறவுகள்ல ரொம்ப நாளாவே ஒரு விபத்து நடந்துக்கிட்டிருக்கு. படிக்கவச்ச தாய்-தகப்பனுக்கும் படிச்ச பிள்ளைகளுக்கும் மத்தியில ஒரு பெரும் பள்ளம் விழுந்துபோகுது. புடிக்க நெனைக்கிறதுபுள்ளையார் தான்; குரங்குல போயி முடிஞ்சுருது.

 நம்ம ஊர்ல விவசாயம் மாதிரி ஒரு தொழிலும் இல்ல; அது மாதிரி ஒரு துன்பமும் இல்ல.

'என்னோட ஒழியட்டும்டா மகனே இந்த மண்ணோட மாரடிக்கற பொழப்பு. நீயாச்சும் நகத்துல அழுக்கு ஒட்டாம நல்ல பொழப்புப் பொழச்சுக்க’ன்னுதான் பிள்ளைகளப் படிக்கவைக்கிறான் ஒரு விவசாயி..அதுக என்னடான்னா... முடியில எண்ணெயும் மூஞ்சியில பவுடரும் பூசிக்கிட்டு, வேர்வைய வித்த காசுல வெள்ளையும் சொள்ளை யுமாத் திரிஞ்சுக்கிட்டுத் திமிராத் தலையத் தூக்கி அப்பன் ஆத்தாள ஒரு கீழ்ப் பார்வை பாக்குதுக; நம்ம தரத்துக்குத் தாய்-தகப்பன் இல்லை யேன்னு நெனைக்குதுக.

மூன்றாம் உலகப் போர்

என்னென்னமோ நெனச்சு வளத்த தாய்-தகப்பன் எண்ணத்துல இடி விழுந்துபோகுது.

படிக்கவச்சுட்டாப் பிள்ளைக நம்ம சொத்து இல்லேன்னு அந்தத் 'தற்குறி’ களுக்கு உதறவும் தெரியல. பாவம் அந்த 'அழுக்குப்புடிச்ச’ தாய் -  தகப்பனோட இந்த மேனாமினுக்கி 'மேதாவி’களால ஒட்டவும் முடியல. படிப்பு மனுச உறவுகளக் கட்டிவைக்கிறதுக்குப் பதிலா, வெட்டி எறியுது.

படிக்காத தாய்-தகப்பன் பிற்படுத்தப்பட்ட சாதி மாதிரியும், படிச்ச பிள்ளைக முன்னேறிய சாதி மாதிரியும் நட்டமா ஒரு சுவர் எந்திரிச்சு நிக்கிது நடு வீட்டுக்குள்ள.

கருத்தமாயி - முத்துமணி கதை இதே கதையாகிப்போச்சு.

மூத்த மகன் முத்துமணி சின்னஞ் சிறுசுல இருந்தே வெடிச்ச பய; விவரமான ஆளு. திருகுதாளம் புடிச்சவன்; ஆனா, தெரியாது வெளிய.

தான் - தன் நாக்கு - தன் சுகம்னு வளர்றவன் ஒடம்பு வளைய மாட்டான்; ஒடம்பு வளையாதவனுக்குப் புத்தி வளஞ்சிரும்; புத்தி வளஞ்சாப் பொய் சொல்ல ஆரம்பிச்சிரும். உடம்புல எல்லா உறுப்பை யும் பொய் சொல்லவச்சிரலாம். கண்ண மட்டும் பொய் சொல்லவைக்க முடியாது; அது காட்டிக் கொடுத்துரும். ஆனா, முத்துமணி பொய் சொல்றதக் கண்ணவச்சுக்கூடக் கண்டுபுடிக்க முடியாது. குரங்கு, குட்டியா இருக்கிறபோதே கரணம் போடச் சொல்லிக் குடுத்துப் பழக்கற மாதிரி, சின்ன வயசுல இருந்தே கண்ணுக்குப் பொய் சொல்லப் பழகிக் கொடுத்துட்டான் முத்துமணி. அவன ஒதைச்சாலும் உரிச்சா லும் உண்மை வாங்க முடியாது.

றேழு வயசுல சிங்கி விளையாட்டுல ஆரம்பிச்சது அவன் திருகுமுருகு.

புளியந்தோப்புல நடக்கும் சிங்கி விளையாட்டு.

ஒரே மாதிரி ரெண்டு காசுகள ஒண்ணுக்கு மேல ஒண்ணுவச்சு, தலைக்கு மேல சுண்டி வீச வேண்டியது. ரெண்டுமே ராசாவா விழுந்தா - போட்டவன் செயிச்சான்; மாறி விழுந்தா - கேட்டவன் செயிச்சான்; பையில இருக்கிற காசுக்குத் தக்கன பந்தயம்.

எப்படிப்பட்ட சூரன் - சுப்புராசு பேரனா இருந்தாலும், சிங்கி மாறி மாறித்தான் விழுகும்; எப்பவாச்சும் ரெண்டு ராசா விழுகும்.

ஆனா, முத்துமணி சுண்டி எறிஞ்சான்னு வச்சுக்குங்க... ரெண்டும் ராசாவத் தவிர மாறி விழுந்ததா அட்டணம்பட்டியில சரித்திரமில்ல; அஞ்சாரு ஊர்ல அவன யாரும் செயிச்சதில்ல.

அள்ளிருவான் காச.

மூன்றாம் உலகப் போர்

கடைசியில எழுவனம்பட்டியில இருந்து சிங்கி விளையாட வந்த ஒருத்தன்தான் கையும் காசுமாக் கண்டுபுடிச்சான் முத்துமணி மோசடிய.

சுண்டறதுக்கு முன்ன ரெண்டு காசையும் ஒண்ணா வைக்கிற சமயத்துல, ராசாவும் ராசாவும் உள்ள ஒட்டியிருக்கணும்; அடிக்காசு அடியில பூ இருக்கணும்; மேல் காசு மேலயும் பூ இருக்கணும். இப்ப சுண்டி எறியணும். இதுதான் சிங்கிக்கின்னு ஊரு நாட்டுல உண்டான சட்டம்.

என்ன பண்ணியிருக்கான் தெரியுமா இத்தன நாளா முத்துமணி?

அடிக் காசுல ராசாவக் கீழ கவுத்து வச்சிருவான்; மேல் காசு ராசாவ அது மேல கவுத்து, மேல் பக்கம் பூ தெரிய வச்சிருவான். வீசற காசு மேல போயிப் புரள்ற மாதிரி ஒரு சைசா வீசுவான். இப்ப ராசாக்க ரெண்டு பேரும் வானத்தப் பாத்த மேனிக்கு மண்ணுல வந்து மல்லாக்கா விழுவாக. ரெண்டுமே ராசான்னு சொல்லிப் பறிச்சிருவான் பணங்காச.

இந்தக் களவாணித்தனம் ஏற்கெனவே தெரிஞ்சவன் எழுவனம்பட்டிக்காரன்.

களவாணி புடிச்சுப்புட்டான் களவாணிய.

அன்னைக்குக் கிழிஞ்சுபோச்சு முத்துமணி முகமூடி.

புளியமரத்துல கட்டிவச்சு விளாறெடுத்து வீசிப்புட்டாங்க வீசி.

சிங்கி அடிச்சவன் பொழப்பு அப்புறம் சிங்கியடிக்குது. காசு வரத்து கம்மியாகிப்போச்சு பயலுக்கு.

சிரங்கு புடிச்ச கையும் சில்லரை அடிச்ச கையும் சும்மா இருக்குமா?

வீடு பூரா மோந்து மோந்து மோப்பம் புடிச்சுக் கடைசியிலே கண்டேபுடிச்சிட்டான்.

சாமி படத்துக்குக் கீழ அடுக்குப் பானை மூலையில உறியில கட்டித் தொங்கவிட்டிருக்கா ஆத்தா உண்டியல; கடைசியாப் பெறந்த ஒத்த மக 'தேனு’க்குக் கம்மல் வாங்கச் சிறுகச் சிறுகச் சேத்து வர்ற காசு.

அப்பன் ஆத்தா வீட்டுல இல்ல. தம்பி, தங்கச்சி ரெண்டு பேரும்  பள்ளிக்கூடத்துல. அவனும் பூனையும் மட்டும்தான் வீட்டுல.

சாக்கு மூட்டை மேல ஏறிச் சன்னல்ல ஒரு காலவச்சு எக்கியெக்கி எடுத்துட்டான் உண்டியல. தலைகீழாக் கவுத்து உலுக்கி உலுக்கிப் பாத்தான். கஞ்சப் பய உண்டியலு; வாங்குதே தவிர கொடுக்குதில்ல.  

ஒரு வெளக்கமாத்துக் குச்சிய எடுத்தான்; நாலா ஒடிச்சான். உள்ளுக்குள்ள செலுத்தி நேக்கா ஒரு எம்பு எம்புனான். குலை குலையா விழுகுது காசு; சொளை சொளையா விழுகுதுக நோட்டு.

''யாத்தே! காலி உண்டியலப் பாத்தாக் கண்டுபுடிச்சிருவாளே ஆத்தா.''

திரும்பிப் பாத்தா - பரண்ல கோழி அடைகாத்த ஓட்டு மணலு அப்படியே கெடந்துச்சு.

மணலப் போட்டு உண்டியல நெப்பிட்டு அதுமேல லேசா சில்லரைக் காசுகளத் தெளிச்சு விட்டுட்டு 'எனக்கும் இதுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்ல சாமி’ங்கற மாதிரி உண்டியல உறியில வச்சிட்டு ஓடியே போனான்.

ஒரு பஞ்சத்துக்கு உண்டியல ஒடச்சுப் பாத்த ஆத்தா - 'பொழப்புல மண்ணு விழுந்து போச்சே’ன்னு பொலம்பித் தீத்துட்டா.

முளைக்கிறபோதே கண்டுபுடிக்கணும் அது கரும்பா, வேம்பான்னு. முளைச்சு மூணு வருசமாகித் தின்னு பாத்த பிறகுதான் தெரியுது அது வேம்புன்னு வச்சுக்குங்க... அப்புறம் என்ன பண்ணுவீக? வேப்பந்தூருக்குக் கீழ தேனா ஊத்தி வளத்தாலும் அது கரும்பாயிருமா? வித்தே வேப்பம் வித்தா ஆகிப்போச்சு முத்துமணி விவகாரத்துல.

பத்துப் பதிமூணு வயசு இருக்கும் அப்ப முத்துமணிக்கு. கேப்பைக் களிக்குக் கருவாட்டுக் கொழம்புவைக்க வக்கு இல்லாத காலத்துல 'கறிக் கொழம்பு வச்சுத்தா’ன்னு ஆத்தாள அரிச்சுத் திங்கிறான் முத்துமணி.

''ஏலேய்! பத்தவைக்க அடுப்புக் கரி இல்லாத காலத்துல ஆட்டுக் கறி வேணுமாக்கும் ஆட்டுக் கறி? போடா போடா போக்கத்த பயலே''- சிடுசிடுன்னு விழுகுறா சிட்டம்மா.

அந்த நேரம் பாத்து முத்துமணிக்கு அடிச்சது யோகம் சித்தையன் கோட்டை ஈசா ராவுத்தர் ரூபத்துல. சீனிச்சாமி காலத்துலயிருந்து சிநேகம் ராவுத்தர் குடும்பம்; பரம்பரையா மாமன் மச்சான்னு பழகறதுதான் அவுக வழக்கம்.

''வாங்க நன்னா வாங்க''ன்னு வாய் நெறையக் கூப்பிட்டாரு கருத்தமாயி.

''வாங்க சிய்யான் வாங்க. நன்னி சௌக்கியமா?''ன்னு கேட்டு, சொம்பு நிறையக் குடிதண்ணி குடுத்துட்டுப் போனா சிட்டம்மா.

''ஏ பக்கிகளா! பலகாரம் வாங்கிட்டு வாங்க''ன்னு சில்லரை கொடுக்கவும்   சின்னப்பாண்டியும் தேனும் சேந்து வண்டி உருட்டிக்கிட்டே வடை வாங்க ஓடுதுக கடைவீதிக்கு.

''கை நனைக்காமப் போகக் கூடாது.''

''இருக்கட்டும். இன்னொரு நாளைக்கு வரேன்.''

''நல்லாயிருக்கு கதை. இம்புட்டுத் தூரம் வந்துட்டு எலும்பு கடிக்காமப் போனா எப்பிடி?''

தாவாரத் திண்ணையிலயிருந்து விசுக்குன்னு எந்திரிச்சு உள்ள போனாரு கருத்தமாயி.

சட்டைப்பையி, மாடக்குழி, அடுக்குப்பானை, தகரப் பொட்டி எல்லாம் தடவித் தடவிப் பாத்தாலும் காக் கிலோ கறிக்குக் காசு சேரல.

முத்துமணிய இழுத்துக் கைக்குள்ள வச்சு அணைச்சுக்கிட்டுக் கமுக்கமாச் சொல்றாரு:

''கசாப்பு சுப்பு கடைக்கு ஓடிப்போயி அப்பன் சொன்னேன்னு காக் கிலோ கறி வாங்கியாடா. போனேன் வந்தேன்னு வாடா. போ.''

மூன்றாம் உலகப் போர்

தாமரை எலையில பச்சைக்கறிய வாங்கி வந்தவன் பாதியிலயே பிரிச்சான். கறிக்கு வீங்கிக்கெடந்த பயலுக்கு உள் நாக்கு ஊறுது. ஈரலாப் பொறுக்கி எடுத்தான்; ஒவ்வொரு கொழுப்பா எடுத்து ஒண்ணு சேத்தான். சும்மா ஆவாரங்குழைய ஆடு திங்கற மாதிரி பச்சைக்கறிய நறுச் நறுச்சுனு மென்னு தின்னு முழுங்கிட்டான். மிச்சமிருந்த எலும்பும் கறியும் கொண்டாந்து ஆத்தாகிட்டக் கொடுத்தான்.

''இது கறியாக்கும் - இதுல ஒரு கொழம்பாக்கும்? அண்டாவுல கொழம்பு வைக்கிற வம்சத்துல வந்தவளுக்கு அகப்பையில கொழம்புவைக்கிற பொழப்பாகிப் போச்சேடா.''

கொழம்பு கூட்டிக் கொதிக்கவிட்டுட்டுக் கன்னுக்குட்டிக்குத் தண்ணி வைக்கப்போன சிட்டம்மா திரும்பி வந்து பாத்தா - கொதிக்குது கொழம்பு மட்டும்; ஒரு கறி இல்ல. அரை வேக்காட்டுலயே அகப்பைய போட்டுத் தின்னு தீத்துட்டுப் போயிட்டான் முத்துமணி.

கடைசியில கருத்தமாயி வாக்கு பலிச்சிருச்சு.

'எலும்பு’தான் கடிச்சிட்டுப் போனாரு ஈசா ராவுத்தரு. வேற என்னத்தப் பண்ண?

ல்லா வெள்ளாமையும் அடி வாங்குது.

சோளம் போட்டாரு - சொங்காப்போச்சு. கத்திரி நட்டாரு - வேர்ப்புழுவு விழுந்துபோச்சு. காட்டு வெள்ளாமையா வரட்டும்னு கம்பு வெதைச்சுப் பாத்தாரு; கடனை அடைக்க விளைய வேண்டிய நெலத்துல கஞ்சிக்கு வெளஞ்சதுதான் மிச்சம்.

சரி! பருத்தி நடலாம்னு முடிவு பண்ணிட்டாரு கருத்தமாயி. நல்ல வெலை வித்துச்சு பருத்தி அப்ப. கிலோ நாலு ரூவா; நயம் பருத்தி அஞ்சு ரூவா.

சாமிதான் ஏய்க்குது; பூமியுமா ஏச்சுப்புடும்? பாத்துருவம்.

தை இருவதுக்குத் தோட்டமெல்லாம் ஊன்டிட்டாரு பருத்தி வெதைய. மாசி பத்துக்கு மொதல் களை; பங்குனி இருவதுக்கு ரெண்டாம் களை. குப்புன்னு எந்திருச்சுப் பசபசன்னு பசப்பெடுத்து நிக்குது பருத்திச் செடி. சித்திரை பத்துக்கு மூணாம் களை எடுத்து மண் அணைச்சுவிடவும், பூவெடுத்துப் பிஞ்சு எறங்கிக் குழந்தப் புள்ளைக மாதிரி கையும் காலும் ஆட்டி நிக்குதுக பருத்திச் செடிக.

குடும்பமே தோட்டத்துல குடி இருக்கு. பள்ளிக்கூடம் போன நேரம் போக சின்னப்பாண்டியும் தேனும் ஊடமாட ஓடியாடி வேல செய்யறாக. பாக்கப் பாக்க ஆசையா இருக்குன்னு பருத்திச் செடிகளுக்குள்ளயே படுத்துக்கெடக்கா சிட்டம்மா. முத்துமணி மட்டும் கடன் கொடுத்தவன் கேக்க வர்ற மாதிரி வந்து வந்து போறான்.

உரம் வைக்கணுமே!

காசி நாடார் கடையில கடன் காசு வாங்கிப் பொட்டாசு போட்டாரு; யூரியா வச்சாரு.

கணுப்புழுவு தாக்காம இருக்க வேப்பம்புண்ணாக்கு வாங்கி விதைச்சுவிட்டாரு.

'தீரப் போகுதுரா பஞ்சம்’னு உருமால வரப்புல போட்டுட்டு வாய்க்கால்ல படுத்து 'சொளை சொளை’யாக் கெனாக் கண்டு ஒறங்குனாரு.

எம்பது நாள்ல பருத்தி அங்கொண்ணும் இங்கொண்ணுமா வெடிக்குது. தொண்ணூறு நாள்ல தோட்டம்பூரா விட்டுவிட்டுத் தெரியுது வெள்ளை வெள்ளையா.

ஈசானிய மூலையில அப்பன் ஆத்தா தங்கச்சி மரத்துக்குச் சந்தனம் குங்குமம் தொட்டுவச்சு, சூடம், பத்தி கொளுத்தி, வாழப்பழம் கண் தெறந்து, ''குலசாமிகளா... கூடவே வாங்க''ன்னு ஓங்கி அருள்கொண்டு ஒரு கத்துக் கத்திட்டுக் குடும்பத்தோட குனிஞ்சு தடவு பருத்தி  எடுக்குறாரு கருத்தமாயி.

பெரிய சாக்கு நெறஞ்சு, குட்டிச் சாக்குல பாதி வந்துச்சு பருத்தி. பெரிய சாக்கைத் தலையில வச்சுக் குட்டிச் சாக்கைக் கையில புடிச்சு தேவதானப்பட்டி காசி நாடார் கடைக்கு நடந்துட்டாரு கருத்தமாயி.

கணக்கு ஓடுது மனசுக்குள்ள.

''இழுத்துப் பறிச்சு நிறுத்தாலும் இருவத்தி ரெண்டு கிலோ வரும். அடிமாட்டு வெலையா அஞ்சு ரூவா வச்சாலும் இருவது அஞ்சு நூறு, ரெண்டஞ்சு பத்து; நூறும் பத்தும் நூத்துப் பத்து. நல்லவரு நாடாரு; கடனை அப்புறம் கழிச்சுக்கய்யான்னு சொல்லிக் காச வாங்கிட்டு வந்துற வேண்டியதுதான்.''

கருத்தமாயி கணக்கு தப்பல. ஒரு கிலோ எச்சாவே இருந்துச்சு. ''நான் கும்புடறசாமி குறை வைக்கல; அஞ்சு ரூவா கூடவே கொடுத்துருச்சு''- ஆகாயத்தப் பாத்து ஒரு கும்புடு போட்டுட்டு அக்குள் வேர்வையத் தொடச்சுக்கிட்டாரு.

நிறுத்துப் போட்ட பருத்தி உள்ள ஓடி விழுந்துருச்சு. கணக்குப் பாத்துக் காசு கொடுப்பாரு நாடாருன்னு ஒரு ஓரமா ஒதுங்கி நிக்கிறாரு கருத்தமாயி.

கழுதையும் குதிரையும் வந்து வந்து போகுதுக - காசு வந்த பாடு இல்ல. வந்த சனம் போன சனமெல்லாம் ஓயவும், ''மொதப் பருத்தி போட்டுருக்கீக. வெறுங்கையோட வீடு போக வேணாம் - இந்தாய்யா இத வச்சுக்க''ன்னு பத்து ரூவாயும் ஒரு ரூவாயும் எடுத்து நீட்டுனாரு நாடாரு.

கையில வாங்குன நோட்டுகளப் பிதுக்கிப் பிதுக்கிப் பாத்து, மேலயும் கீழயும் முழிக் கிறாரு கருத்தமாயி.

கணக்குச் சொல்றாரு நாடாரு:

''உரம் வச்ச வகையில பழைய கடன் ஒரு தொண்ணூறு. இப்பக் கொடுத்தது

பதினொண்ணு. நீ வாங்கிட்டு வரச் சொன்னேன்னு முந்தாநாளு உன் மூத்த பய முத்துமணிவசம் குடுத்துவிட்டது முன்னூறு. ஆக மொத்தம் நானூத்தி ஒண்ணு. போயிட்டு வாய்யா. பருத்தி போடப் போடக் கணக்கக் கழிச்சுக்கிர்றேன்.''

ரெண்டு கையும் தூக்கி நல்லாக் கும்பிட் டாரு நாடாரு.

''முன்னூறு வாங்கிட்டானா? களவாணிப் பய மகனே''ன்னு வாய் வரைக்கும் வந்துச்சு வார்த்தை.

''சும்மா சொல்லக் கூடாது - அடக்கசடக்கமாத்தான் பிள்ளைய வளத்திருக்க. ஒடம்பும் சொல்லும் பணிஞ்சு நின்னான் பய. நல்லா வருவான்.''

முத்துமணிக்கு நல்வாக்கு வேற சொல்ல ஆரம்பிச்சுட்டாரு நாடாரு.

உடம்பு வேர்த்ததுல உள்ளங்கை ரூவா நனையுது.

அன்னைக்குதான் மொத மொதலா ஒரு கேள்வி எழும்புது மனசுல:

''வந்து வாச்சவன் மகனா? எமனா?''

அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்ல தெரிஞ்சுபோச்சு அவன் மகன் இல்ல - எமன்தான்னு.

- மூளும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு