Published:Updated:

வீழ்வே னென்று நினைத் தாயோ?

சி.மகேந்திரன்ஓவியங்கள் : ராஜ்குமார் ஸ்தபதி

பிரீமியம் ஸ்டோரி
##~##

ங்கோ சுற்றுலா சென்ற இடத்தில் ஐந்து நிமிடங் களோ, பத்து நிமிடங்களோ மனைவியைக் காணவில்லை என்றால், உங்கள் மனம் எப்படித் துடித்துப்போகும்? பொருட்காட்சித் திடலில் விரல் பிடித்து வந்த குழந்தை திடீரெனக் கூட்டத்தில் தொலைந்தால் உங்கள் மனம் எப்படியெல்லாம் பதைபதைப்பு அடையும்?

ஆனால், இன்று குடும்பமே திசைக்கு ஒன்றாகக் கிழிந்துகிடக்க, கணவன் எங்கே; மனைவி எங்கே; பிள்ளைகள் எங்கே என்று ஆண்டுக்கணக்காகத் தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கிறது ஈழச் சமூகம். அதன் வேதனை எப்படி இருக்கும்?

வீழ்வே னென்று நினைத் தாயோ?

மாலதி ஓர் ஈழத்து இளம் பெண். கணவன், கைக்குழந்தையுடன் யுத்தத்தின் கடைசி நாட்களில் இருந்து உயிர் தப்பியவள். இழப்புகள் அனைத்தையும் நேரில் பார்த்த அவளுக்கு, கணவனும் குழந்தையும் உயிர் தப்பியதில் சிறு ஆறுதல். ஆனால், அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவள் கணவன் ராணுவத்தால் அழைத்துச் செல்லப்படுகிறான். விசாரணைக்குப் பின்னர், திருப்பி அனுப்பப்படுவான் என்று சொல்லப்பட்டது. ஆனால், நாட்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. எந்தத் தகவலும் இல்லை. மாலதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கலக்கத்திலேயே மாதங்கள் கழிந்த பிறகு, அவள் கணவன் தென் இலங்கை சித்ரவதை முகாம் ஒன்றில் காவல் வைக்கப்பட்டு இருக்கிறான் என்ற தகவல் கிடைக்கிறது. உறவுகள் மூலம் பணம் பெற்று, லஞ்சம் கொடுத்து முகாமில் இருந்து தன்னையும் குழந்தையையும் விடுவித்துக்கொள்கிறாள் மாலதி.

வீழ்வே னென்று நினைத் தாயோ?

பூசா என்னும் இடத்தில்தான் அவளது கணவன் சிறை வைக்கப்பட்டு இருக்கிறான். வன்னியில் இருந்து கொழும்பு வழியாக, பூசா முகாமுக்குச் செல்ல 383 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். சிங்களவர்கள் மட்டுமே அடர்ந்து நடமாடும் பகுதியான பூசா, இன்று இலங்கையின் சித்ரவதை முகாம்களுக்கு எல்லாம் தலைமை வகித்துக்கொண்டு இருக்கிறது.

முகாம் சென்று கணவனைப் பார்த்த மாலதிக்கு அழுகை பீறிட்டு வருகிறது. அடக்கிக்கொள்கிறாள். பரிதாபத்துக்கு உரிய அவளது கணவன் வேதனைகள் அனைத்தையும் விழுங்கி விட்டு, எச்சரிக்கையுடன் முகத்தில் குறுஞ்சிரிப்பைக் காட்ட முயற்சிக்கிறான். அது தன்னைச் சமாதானப்படுத்த முயலும் பொய் சிரிப்பு என்பதைப் புரிந்துகொள்கிறாள். சிதைக்கப் பட்டு உள்ள கணவனின் நிலை, அவளுக்கு எளிதாகப் புரிகிறது. கணவனை மீட்க மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் ஆதாமை அணுகுகிறாள். இவர் மூலம்தான் மாலதியின் கதை வெளி உலகுக்குத் தெரியவருகிறது. நீதிமன்றத்தை அணுகி விடுதலை பெறலாம் என்று யோசிக்கிறார்கள்.

தான் விலை கொடுத்து வாங்கிய, ஆடுகளையும் கோழிகளையும் தேவைப்படும்போது அதன் உரிமையாளர் அறுத்துச் சமைத்துக்கொள்வதைப்போலத்தான் இங்கு உள்ள சித்ரவதைக் கைதிகளின் நிலையும். ராணுவத்தின் இந்தக் கழுத்தறுப்பு செயலைத் தடுக்கும் மனிதநேயக் கடமை, நீதிமன்றங்களிடம் மட்டும்தான் இருக்க முடியும். ஆனால், நடைமுறையில் இந்த நீதிபதிகளுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. இந்தக் கொடுமைகளைக் காணாமல் இருக்க, பயத்தில் குழந்தைகள் கண்களை மூடிக்கொள்வதைப் போல மூடிக்கொள்கின்றன இலங்கையின் நீதிமன்றங்கள். இந்த நீதிமன்றங்களில் இருந்து மாலதியால் எந்த நீதியைப் பெற முடியும்?

வீழ்வே னென்று நினைத் தாயோ?

ஆனாலும், கணவனின் மறுக்கப்பட்ட நீதிக்காகப் போராடும் பெண்ணின் வலிமை யாராலும் கணக்கிட்டுச் சொல்லக் கூடியது அல்ல. இந்த வலிமையைக் கண்ணகியின் கதையில் இருந்தும் சாவித்திரியின் கதையில் இருந்தும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். மாலதியும் தன் கணவனின் மறுக்கப்பட்ட நீதிக்காகப் போராடத் தொடங்குகிறாள். மாலதியின் கதையை முழுவதும் தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே, போருக்குப் பின் தமிழ் இளைஞர்களிடம் இலங்கை அரசு வளர்க்கும் தேச பக்திபற்றிய கதை ஒன்றும் நமக்குக் கிடைக்கிறது.

முள்ளி வாய்க்காலில் இறந்தது போக, எஞ்சி இருக்கும் இளைஞர்களுக்கு எப்படியும் தேச பக்தியை ஊட்டி வளர்த்துவிடும் தீவிரத்தில் இன்றைய இலங்கை அரசு இருக்கிறது என்ற தகவல் கிடைத்தபோது, பல கேள்விகள் மனதுக்குள் முளைக்கத் தொடங் கின. முற்றாக உடல் பாதிக்கப்பட்டநிலையில் சித்ரவதை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன் சுரேஷ் வெளியிட்டுள்ள தகவல்கள் ஒருபுறம் வேடிக்கைக்கு உரியதாகவும் மறுபுறம் அதிர்ச்சிக்கு உரியதாகவும் அமைந்துஉள்ளன!

முகாம்களில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்குறித்து சுரேஷ் கூறுகிறார். அதாவது, சூரியன் உதிப்பதற்கு முன்பே அனைவரும் எழுந்துவிட வேண்டும். திறந்தவெளி மைதானம் ஒன்றில் அனைவரும் வரிசையாக நிற்க வேண்டும். கொடிக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கும். வரிசையில் நின்றவர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கு பயபக்தியுடன் முதல் வணக்கம் செலுத்த வேண்டும். முன்னரே பதிவுசெய்யப்பட்ட இலங்கையின் தேசிய கீதம் ஒலிபெருக்கியின் மூலம் இசைக்கப்படும். இதனை முகாமில் இருப்பவர்கள் திருப்பிப் பாட வேண்டும். தேசிய கீதத்தை உணர்வோடு பாடுகிறார்களா... சிங்கள உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்பதை ரகசியக் குழுக்கள் கண்காணித்துக்கொண்டு இருக்கும்.  

இந்திய தேசியக் கொடியின், நடுவில் அமைந்த அசோகச் சக்கரம் புத்த மதத்தின் தர்மத்தை நினைவுகூர்கிறது. இந்திய எல்லை களோடு முரண்பாடுகொண்ட நாடுகள் எல்லையைச் சுற்றி இருக்கத் தான் செய்கின்றன. இருப்பினும் தர்மச் சக்கரத்தோடுதான் இந்திய தேசியக் கொடி பறந்துகொண்டு இருக்கிறது. ஆனால், இலங்கைக்கோ இந்தியாவைப் போல, பகை நாடுகள் என்று எதுவுமே இல்லை. அது புத்த மதத்தைத் தங்கள் அரச மதமாக அறிவித்துக்கொண்ட நாடு. அன்பையும் கருணையையும் சுமந்த பௌத்தம் பேசும், இலங்கையின் தேசியக் கொடியில் சிங்கம் கையில் வாளேந்தி நிற்கிறது. சிங்கம் தூக்கிய வாள் யாருக்கு எதிரானது? தமிழர்களுக்கு எதிரானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அந்தக் கொடிக்குத்தான் துப்பாக்கி முனையில் வணக்கம் வைக்க முகாம் இளைஞர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள்!                

- விதைப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு