Election bannerElection banner
Published:Updated:

“மழைல நனைஞ்சுட்டே தொப்பி வித்தாதான் பாவம்னு வாங்குவாங்ண்ணா!” ஓரு நெகிழ்ச்சிக் கதை

“மழைல நனைஞ்சுட்டே  தொப்பி வித்தாதான் பாவம்னு வாங்குவாங்ண்ணா!” ஓரு நெகிழ்ச்சிக் கதை
“மழைல நனைஞ்சுட்டே தொப்பி வித்தாதான் பாவம்னு வாங்குவாங்ண்ணா!” ஓரு நெகிழ்ச்சிக் கதை

“மழைல நனைஞ்சுட்டே தொப்பி வித்தாதான் பாவம்னு வாங்குவாங்ண்ணா!” ஓரு நெகிழ்ச்சிக் கதை

'சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக விடுமுறை' என்ற செய்தியைக் கேட்டதும் நம் வீட்டுப் பிள்ளைகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்ததைப் பார்த்திருப்பீர்கள். 'லேசான தூறலுக்கே லீவா? நல்லா வாழுங்கடா' எனப் புலம்பியிருப்பீர்கள். ஆனால், நம் குழந்தைகள் துள்ளிய அதேநேரம், அதே செய்தியைக் கேட்டு வருந்திய குழந்தைகள் உண்டு என்றால் நம்புவீர்களா? 

சீரான மழைத்தூறலில் தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள கண்ணதாசன் சிலை அருகே இருந்த சிக்னலில் வண்டியை நிறுத்தினேன். கை, கால்கள் உதறலெடுக்க ஹெவி ட்ராஃபிக்கில் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக நிற்கவேண்டிய நிலை. அப்போது, ஒரு காரின் அருகே 12 வயதுள்ள சிறுமி ஒருத்தி, கையில் குடைகளுடன் கெஞ்சிக்கொண்டிருந்தாள். காரின் மூடிய ஜன்னல் திறக்கவே இல்லை. அவளோடு அந்த இடத்தில் மட்டும் நான்கைந்து சிறுவர்கள் இருந்தார்கள். மழையில் நனைந்தவாறே குடை, பிளாஸ்டிக் தொப்பி போன்றவற்றை விற்றுவிடும் பரபரப்பில் இருந்தார்கள். பைக்கில் இருப்பவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு “அண்ணா, தொப்பி இருவது ரூவாதாண்ணா. ப்ளீஸ்ண்ணா” என்கிறார்கள். 

பலரும் அந்தக் குரலுக்கு ஏறிட்டுப் பார்க்கவில்லை. அவர்களின் பார்வையெல்லாம் மாறப்போகும் சிவப்பு விளக்குமீதே நிலைகொண்டிருக்கிறது. ஒரு சிலர், “காலையிலே ஆரம்பிச்சுட்டீங்களா? இம்சை பண்ணாம நகருங்க” எனச் சீறினார்கள். அந்தச் சொற்களை மழையில் கரையவிட்டு அடுத்தடுத்து நம்பிக்கையோடு நகர்கிறார்கள் அந்தச் சிறுவர்கள். 

''தம்பி, நான்தான் ஹெல்மெட் போட்டுருக்கேனே. எதுக்கு தொப்பி?'' என்ற ஒருவரிடம், “ப்ளீஸ்... இருவது ரூவாதாண்ணா. வீட்டிலிருந்து வந்து அரை மணி நேரம் ஆகுதுண்ணா. இன்னும் போனி ஆகலை'' என்று கெஞ்ச, அந்தக் குரலின் ஏக்கத்தில் இருபது ரூபாயைக் கொடுத்து ஒரு தொப்பியை வாங்குகிறார். அந்தப் பிஞ்சு முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். 

நம்மில் பலரும் இதுபோன்ற சிறுவர்களை தினம்தோறும் கடந்துசெல்கிறோம். நானும் இதுவரை அப்படித்தான் கடந்திருக்கிறேன். ஆனால், இன்று அவர்களோடு பேசத்தோன்றியது. பச்சை விளக்கு காட்டியதும் வண்டியை ஓரம் கட்டி, அந்தச் சிறுவர்களை நடைபாதை அருகே அழைத்துச் சென்று, ''ஏன் பசங்களா நீங்க ஸ்கூல் போகலையா?'' எனக் கேட்டேன். 

''ஐயோ அண்ணா, உங்களுக்கு நியூஸ் பாக்குற பழக்கமே கெடையாதா? மழை பெய்யுதுன்னு லீவு விட்டுருக்காங்க. மத்த பசங்களுக்கு லீவுன்னா ஜாலி. எங்களுக்கு அது வேலை செய்யறதுக்கு கிடைச்ச நாள். இப்படி ரோட்டுல நின்னு வியாபாரம் பண்ணணும்.. மழை, வெயில்னு எல்லா சீசன்லயும் இப்படி ரோட்டுல நின்னுதான் வியாபாரம் பண்ணுவோம். திங்கள்கெழமையிலிருந்து வெள்ளிக்கெழம வரை ஸ்கூல் போவோம். லீவு நாள்ல அம்மா, அப்பா கொடுத்துவிடறதை கொண்டுவந்து வியாபாரம் பண்ணுவோம். இப்படி லீவு விட்டுட்டா அன்னைக்கும் வியாபாரம் பார்க்கணும்” என்றாள், மேற்கு மாம்பலம் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி. 

“போக முடியாதுன்னு சொன்னா அம்மா திட்டிக்கிட்டே இருக்கும். ஸ்டிக்கர், குடை, தொப்பின்னு எதையாவது கொடுத்து, சிக்னலாண்ட வித்துட்டு வாங்கன்னு சொல்லும். இவ என் தங்கச்சிதான். என் அப்பா ரிக்க்ஷா ஓட்டுறாரு. அம்மா பிளாட்பாரத்துல பழக்கடை போட்டுருக்குது. காலையிலிருந்து சாயந்திரம் வரை ஒவ்வொரு சிக்னல்லயா மாறி வித்து கொண்டுபோற காசுலதான் சோறு ஆக்கிப் போடும். ஏன்னா, அப்பா வீட்டுக்கு காசே கொடுக்க மாட்டாரு. எங்களுக்கு படிக்க ரொம்ப புடிக்கும். இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவு விட்டுடக்கூடாதுன்னு நேத்தே சாமிகிட்ட வேண்டினோம். ஆனா, லீவு விட்டுட்டாங்க. ஸ்கூலுக்குப் போனா சத்துணவு கிடைச்சிருக்கும். அதுவும் போச்சு. சாயந்திரம் வீட்டுக்குப் போயிதான் சாப்புடணும். தங்கச்சிக்கு மட்டும் பிஸ்கட் பாக்கெட் வாங்கித் தந்துடுவேன். இப்படி மழையில நனைஞ்சுட்டே வித்தாதான் பாக்குறவங்க கொஞ்சமாச்சும் பாவப்பட்டு வாங்குவாங்க'' என்கிற அந்தச் சிறுவனின் வார்த்தைகள், நெஞ்சில் பாரத்தை ஏற்றியது. 

சிக்னலில் சிவப்பு விளக்கு மின்ன, ''அண்ணா, சிக்னல் போட்டுட்டாங்க. நாங்க வர்றோம்'' என்றபடியே அந்த நால்வரும் குடைகளையும் தொப்பிகளையும் எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள். கார் கதவுகளைத் தட்டுகிறார்கள். ஆனால், தட்டப்படும் அனைத்துக் கதவுகளுமே திறக்கப்படுவதில்லை. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு