Published:Updated:

பேய் பூதம் எல்லாம் பொய்!

ஆச்சர்ய அன்னம்மாள்

##~##

'பெண்ணில் துவங்கி மண்ணில் முடிகிறது!’ - இது வாழ்க்கைத் தத்து வம். ஆனால், காஞ்சிபுரம் வேடல் கிராமத்தைச் சேர்ந்த அன்னம்மா ளைப் பொறுத்தவரைவாழ்க்கை பெண்ணில் துவங்கி பெண்ணா லேயே முடிகிறது. ஆம்... அன்னம் மாள்தான் அந்தக் கிராமத்தின் வெட்டியான். மூன்று தலைமுறையாக இந்தத் தொழிலைச் செய்து வரும் அன்னம்மாளிடம் பேசிக்  கொண்டு இருந்தேன்...

''ஆரம்பத்துல அம்மா வழிதாத்தா தான் பொங்கானி வாங்கினாரு. ஊர் மக்களோட துக்க காரியங்களை கடைசி வரைக்கும் இருந்து முடிச்சுக் கொடுக்குறதைத்தான் 'பொங்கானி’ன்னு சொல்வாங்க. 'நீ ஏன் சும்மா இருக்க. தாத்தாவுக்கு ஒத்தா சையா இரு’ன்னு சொல்லி, என்னை யும் அவர்கூட எங்கம்மா அனுப்பி வெச்சாங்க. அப்ப எனக்கு 14 வயசு. அப்பல்லாம் கூலின்னு எதுவும்கிடை யாது. நிலத்துல இருந்து கழனிக்கு ஒரு கட்டுனு நெல்லும் மத்த பயிர்களும் கொடுப்பாங்க. கிடைக்கிறதுல கொஞ்சத்தை வித்துட்டு மிச்சத்தைச் சாப்பிட வெச்சுக்குவோம்.

பேய் பூதம் எல்லாம் பொய்!

தாத்தாவுக்கு உடம்பு முடியாமப் போனதுக்குப் பிறகு யார் அடுத்த பொங்கானின்னு பேச்சு வந்தப்ப, 'இந்தக் கருமாந்தரம் பிடிச்ச வேலை வேணாம்’னு சொல்லி என் அப்பன் கொஞ்ச நாள் ஊரைவிட்டேகாணா மப் போயிடுச்சு. 'திரும்ப பொங்கானி வாங்கிட்டா பிள்ளைங்க தலைமுறை யும் இப்படியே கழிஞ்சிடும்’னு சொல்லி, என் ஆத்தாளும் ஆரம்பத் துல மறுத்துச்சு. பிறகு, ஊர்க்காரங்க வற்புறுத்தி னதால ஆத்தாளே பொங்கானி வாங்கிச்சு. கிட்டத்தட்ட 15 வருஷம் சுடுகாட்டுல ஆத்தா வுக்கு உதவியா இருந்தேன். ஆத்தாவுக்கு வயசான பிறகு, அந்தப் பொங்கானி என் கைக்கு வந்து 20 வருஷம் ஆச்சு. பாதி வாழ்க்கையை சுடுகாட்டு லயே கழிச்ச பிறகு, வேற வேலைக்குப் போக மனசு இல்லை. பெருசா பணம் காசு கிடைக்காட்டியும் வருத்தம் ஒண்ணும் இல்லை!'' - அனுபவத்தை வார்த்தையாக வடிக்கிறார் அன்னம்மாள்.

அன்னம்மாளுக்கு ஒரு மகள், ஒரு மகன்.  ஊராரின் கேலிப் பேச்சால் வெட்டியான் வேலையை விட்டுவிடச் சொல்லி அன்னம்மாளை அவரின் குடும்பத்தார் வற்புறுத்துகிறார்களாம். ''எப்பவாவது உடம்பு முடியாமப் போகும்போது என் வீட்டுக்காரர் திட்டுவாரு. வீட்டை பகைச் சிட்டு ஏன் இந்த வேலையைச் செய்யணும்னு நினைப்பேன். ஆனா, ஊர்ல சாவுன்னு தகவல் வந்தா, மனசு கேக்காம  அடுத்த அஞ்சு நிமிஷத்துல சாவு வீட்டுல போய் நிப்பேன். ஆனா, மனசுக் குள்ள என்ன சங்கடம்னா... துக்க விஷயத்துக் குன்னா உடனே என்னைக் கூப்பிட்டு விடுற ஊர்க்காரங்க, நல்ல விஷயங்களுக்குக் கூப்பிட யோசிக்கிறாங்க. அதுதான் மனசுக்கு வேதனையா இருக்கு.

பேய் பூதம் எல்லாம் பொய்!

முன்ன ஏழு ஊர்களுக்கு நான் ஒருத்திமட்டும் தான் பொங்கானி. இப்ப வயசாச்சு. ரெண்டு ஊரை மட்டும்தான் பார்த்துக்கிறேன். இந்த ரெண்டு ஊர்கள்ல இருந்து சாவு தகவல் வந்த தும் உடனடியா மேள தாளம் புக் பண்ணி எல்லா ஏற்பாடுகளையும் முடிச்சிடுவேன். அதுல 50, 100 ரூவா தேறும். மத்தபடி பிணம் எரிஞ்சு முடிஞ்ச மறுநாள் கூலியா 300 ரூவா தருவாங்க. இப்படியே 37 வருஷம் ஓடிப்போச்சு தம்பி!'' என்று பெருமூச்சுவிடுபவரிடம், ''உங்களுக்குச் சுடுகாட்டுப் பேய் பயம் இல்லையா?'' என்றால் சத்தமாகச் சிரிக்கிறார் அன்னம்மாள்.

''உண்மையில் பேய் பூதம்னு எதுவுமே கிடையாது ராசா. என் தாத்தா ஒரு பிணத்தை எரிச்சிட்டு இருந்தார். உடம்பு ஒண்ணு எரியிறதை அப்பத்தான் முதல் தடவையாப் பாக்குறேன். தாத்தாவோட காலை இறுக்கமாக் கட்டிப் பிடிச்சுட்டு பயந்துகிட்டு நிக்கிறேன். கொழுந்து விட்டு எரிஞ்சிட்டு இருந்த பிணம் திடீர்னு எழுந்து உக்காந்துச்சு பாரு... நான் பயத்துல 'பேய்... பேய்...’னு அலறிட்டேன். ஆனா, தாத்தா சாதாரணமாப் பிணத்தைக் கட்டையால அடிச்சுக் கிடத்திட்டு, 'பேய்னு ஒண்ணு இருந்தா, நான் எப்படித் தினமும் வீட்டுக்கு உயிரோட திரும்ப வருவேன்’னு சர்வசாதாரணமாக் கேட்டார். யோசிச்சுப் பார்த்தா 'ஆமால்ல’னு தோணுச்சு. அப்பவே எனக்கு பேய், பூதம் பயமும் விட்டுப்போச்சு. ஊரு ஆம்பளையாளுங்களே, 'பாருப்பா இந்தப் பொம்மனாட்டி என்னா தில்லா பயப்படாம இருக்கு’னு சொல்றப்போ பெருமையாஇருக் கும்!'' என்று சிரிக்கிறார் அன்னம்மாள்.

சாவு வீடுகளில் ஏச்சு, பேச்சு, அடி, உதைக்கு வெட்டியான்கள் இலக்காவது பற்றிக் கேட்டேன். ''நீங்க சொல்றதெல்லாம் எங்க தாத்தா காலத்துல இருந்தது தம்பி. அவர் ஏகப்பட்ட விஷயங்களைக் கதை கதையா சொல்வாரு. ஆனா, எனக்குப் பெருசா எந்த பிரச்னையும் வந்தது இல்லை. ஒருவேளை நானும் இந்த வேலையை விட்டுப் போயிடுவேனோன்னு நினைச்சுத் திட்டாம இருக்காங்களோ என்னவோ? இத்தனை வருஷத்துல சம்பாதனைனு பெருசா ஒண்ணும் இல்லீங்க. ஊர்ப் பெரியவங்கக்கிட்ட மனை எதுனா ஒதுக்குங்கன்னு கேட்டேன். 'முடியாது’ன்னுட்டாங்க. அதுக்காகத் தொழில்ல இருந்து ஒதுங்க முடியாதுஇல்லையா? என் காலம் முழுக்க இந்தத் தொழில்தான்!'' எனப் பேசிக்கொண்டு இருக்கும்போதே, 'மண்ணாங்கட்டி மருமகன் இறந்துட்டாரு...’ என்று ஒருவர் தகவல் சொல்ல,   தோட்டத்தில் இருந்து மண்வெட்டி, கடப்பாரை சகிதம் கடமையாற்றக் கிளம்பு கிறார் அன்னம்மாள்!  

- எஸ்.கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு