##~##

''சமீபத்தில் போரூரில் இடம் வாங்கி வீடு கட்டினேன். ஆனால், அங்கு குடிபோக மனசே இல்லை. காரணம்,  தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை வீடுதான். ஏதாவது பொருட்களை வாங்க, விற்க இங்கு சுற்றிக்கொண்டு இருக்கும் மக்களின் கலவையான குரல்களும் வாகனங்களின் இரைச்சலும் பழகிய என்னால், அமைதியான போரூர் வீட்டில் இருக்க முடியுமா என்றும் தெரியவில்லை!'' - தன் சொந்த ஏரியாவான தி.நகர் பற்றி மனம் திறக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.

''பரபரவென ஓடிக்கொண்டே இருக்கும்போது நம் நகரத்தின் வளர்ச்சி நமக்குத் தெரிவது இல்லை. ஆனால், வெளியில் இருந்து, '20 வருஷத்துக்கு முன்னே இந்த இடம் எவ்வளவு அமைதியா இருந்துச்சு தெரியுமா?’ என யாராவது ஒருவர் சொல்லும்போதுதான் 'ஆமாம்ல’ என்று யோசிக்கத் தோன்றுகிறது. எனக்கும் தி.நகருக்குமான உறவைப் பற்றி யோசிக்கையில், கிரிக்கெட் பேட்டும் கையுமாகச் சுற்றித் திரிந்த நாட்கள்தான் நினைவுக்கு வருகின்றன. பள்ளி நாட்களில் நடேசன் பூங்கா எதிரே உள்ள மைதானம், கண்ணம்மாபேட்டை மைதானங்களில்தான் என் பொழுது கழியும். சச்சின் அளவுக்கு நானும் ஒரு ப்ளேயராகி விடுவேன் என்று கற்பனையில் மிதந்த நாட்கள் அவை. ஆனால், கால ஓட்டத்தில் இப்போது இசையமைப்பாளராகிவிட்டேன்.

என் ஊர்!

தெற்கு உஸ்மான் சாலையில் அருணா ஹோட்டலுக்கு எதிரே உள்ள சந்தில்தான் என் வீடு. இரண்டு பேர் நுழையும் அளவுக்கான இந்த சந்தில், பத்துப் பதினைந்து பேர் வரிசையாக நின்று கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். நான் தூக்கி அடிக்கும் பந்துகள் பக்கத்து வீடுகளின் ஜன்னல், கார் கண்ணாடிகளைப் பதம் பார்த்த சம்பவங்கள் ஏராளம். 'யார்றா அது’ எனச் சத்தம் வந்தால் பயந்துபோய் பேட், பந்துகளை அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடியிருக்கிறேன்.

கனவுத் தொழிற்சாலையில் காலத்தை ஓட்டினாலும் சிலரைத் தவிர, வெகுஜனத்துக்கு என் முகம் இன்னும் பழக்கப்படவில்லை என்பது எனக்கு சௌகர்யமான விஷயம்தான். சமயங்களில் ரங்கநாதன் தெருவில் கடை கடையாக ஏறி இறங்கி, எந்தப் பொருட்களையும் வாங்காமலேயே வந்துவிடுவேன். 15 வருடங்களுக்கு முன் உஸ்மான் சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய எனக்கு தற்போது தி.நகரில் நீண்டு நிற்கும் வாகன நெரிசல் மிரட்சியை ஏற்படுத்துகிறது.

பக்கத்து வீட்டு நண்பன் ராஜேஷ், பள்ளித் தோழிகள் ப்ரீத்தி, ஸ்வாதி, நண்பர்கள் ப்ரவீன், விஜய் கோபிநாத் என எங்கள் கேங் நேரம் கிடைக்கும்போது எல்லாம் போட் கிளப் சாலையில் ஒன்று கூடுவோம். அப்போது ஓரிருவர் சிரித்துப் பேசி ஆட்டோகிராஃப் வாங்கினால், 'டேய்! நீ அந்தளவுக்குப் பெரிய ஆளா ஆயிட்டியா?’ என்று நண்பர்கள் கலாய்ப்பார்கள். அப்படியே பழைய பள்ளி விஷயங்கள் தொடங்கி, தி.நகர் தெருக்களில் ஓடி விளையாடிய தருணங்கள் வரை பேசுவோம்.

பிரமாண்ட பாலங்கள், உயரமான ஜவுளிக் கடைகள் என தி.நகர் வளர வளர... மக்களின் கலாசாரம், பழக்க வழக்கங்கள் பின்னால் போய்க்கொண்டே இருப்பதை உணர முடிகிறது. ஆனாலும், இந்த வணிகப் பகுதியில்  சத்தங்களுக்கு இடையே வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது!''

- ம.கா.செந்தில்குமார் படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு