Published:Updated:

அவினாசி பிரபாகரன் அத்திப்பட்டு பூவரசன் நாமக்கல் மதியழகன்

நிஜப் போராளிகள் !பாரதிதம்பி, படங்கள்: ச.வெங்கடேசன், த.ஸ்ரீநிவாசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் 

பயங்கொள்ள லாகாது பாப்பா.

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!’

- என்ற பாரதியாரின் வரிகளை பள்ளியில் நாம் படித்திருப்போம். இந்த வரிகளுக்கான விளக்கத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் அரசோ, அப்படி பாதகம் செய்பவரைப் பயமின்றி எதிர்ப்பவர்களைத்தான் மோதி மிதிக்கிறது. அவினாசி பிரபாகரனும், அத்திப்பட்டு பூவரசனும், நாமக்கல் மதியழகனும் இதற்கு உதாரணங்கள்.

தங்கள் ஊரில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதற்கு எதிராக, சமூக அநீதிகளுக்கு நியாயம் கேட்டுத் துணிவுடன் எதிர்த்து நின்ற இவர்களை, பொய்வழக்குகளாலும் சித்ரவதைகளாலும் துன்புறுத்துகிறது இந்த அரசு.

அவினாசி பிரபாகரன்

28 வயது இளைஞரான பிரபாகரனுக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரின் பெற்றோருக்கு, தறி நெய்வதுதான் வேலை. ப்ளஸ் டூ-வுக்கு மேல் படிக்க இயலாத பிரபாகரனும் தறி வேலைதான் செய்கிறார். அவினாசி அருகே எலச்சிப்பாளையம் என்ற  கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு, அரசியல் ஈடுபாடு அதிகம். ஊர்ப் பொதுவேலைகளில் ஆர்வத்துடன் செயல்படுவார். இப்படி தன் கிராமத்தின் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட கும்பலுக்கு எதிராக, இவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இவருக்குக் கிடைத்ததோ போலீஸ் அடியும் பொய்வழக்கும்தான். இப்போதும் வலி நிறைந்த குரலில் பேசினார் பிரபாகரன்.

அவினாசி பிரபாகரன் அத்திப்பட்டு பூவரசன் நாமக்கல் மதியழகன்

''காரமடையில் இருந்து திருப்பூர் வரைக்கும் 'கௌசியா’னு ஒரு நதி ஓடுது. இதுல தெக்கலூரில் இருந்து கோதபாளையம் வரைக்கும், கடந்த ஒரு வருஷமா மண் அள்றாங்க. ஏகப்பட்ட பொக்லைன் மெஷின் வெச்சு, லோடு லோடா அள்ளித் தள்றாங்க. இவங்களுக்கு, பொதுப்பணித் துறை பெர்மிட் கொடுத்திருக்கு. ஆனா அது, விவசாயத்துக்குப் பயன்படுத்த வண்டல் மண் அள்றதுக்கானது. இந்த ஆத்துல வண்டல் மண்ணே கிடையாது. அந்தப் பெயரில் பெர்மிட் வாங்கிட்டு, இவங்க முழுக்க முழுக்க கிராவல் மண் அள்றாங்க. இந்தக் கிராவல் மண்ணை, கட்டடம் கட்டவும் அஸ்திவாரம் அமைக்கவும் பயன்படுத்துவாங்க. ஒரு லோடு லாரி மண் 1,500 ரூபாய்னு வெளியே அனுப்புறாங்க. அதை வாங்கி ஒரு லோடு 3,000 ரூபாய் வரைக்கும் விக்கிறாங்க. இந்த ஒரு வருஷத்துல மட்டும் உத்தேசக்கணக்கா சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புக்கு மண் அள்ளியிருப்பாங்க.

இதைத் தடுத்து நிறுத்தச்சொல்லி கலெக்டர், பவானிசாகர் அணைக்கட்டுத் தலைமைச் செயற்பொறியாளர், சி.எம் செல்... எல்லாத்துக்கும் நானும் எத்தனையோ தடவை மனு அனுப்பிப் பார்த்துட்டேன். ஒண்ணும் நடக்கலை. அப்புறம£ தான் சென்னை உயர் நீதிமன்றத்துல பொதுநல வழக்குப் போட்டேன். நீதிமன்றம், மண் அள்ள ஸ்டே கொடுத்துச்சு. ஆனா, அதையும் மதிக்காம தொடர்ந்து மண் அள்ளினாங்க.

தாசில்தார்கிட்ட புகார் கொடுத்துட்டு ரெண்டு நிருபர்களை அழைச்சுட்டு புதுப்பாளையம் குளத்துக்குப் போனேன். ரொம்ப நேரம் காத்திருந்தும் தாசில்தார் வரலை. மண் அள்ளும் கும்பல்தான் வந்துச்சு. வந்து, நிருபர்கள் ரெண்டு பேரையும் விரட்டி விட்டுட்டு என்னை ஒரு மரத்துல கட்டிவெச்சு அடிக்க ஆரம்பிச்சாங்க. அடின்னா அடி... தாங்க முடியாத அடி. நான் மயங்கிச் சரியும்போது எல்லாம் தண்ணி தெளிச்சுத் தெளியவெச்சு மறுபடியும் அடிச் சாங்க. என்னை அங்கேயே கொன்னு புதைக்கிறதுதான் அவங்க  திட்டம். ஆனா, என்கூட நிருபர்கள் வந்திருந்ததால, உயிரோட விட்டுட்டாங்க.

நிருபர்கள் மூலமா தகவல் தெரிஞ்சு, நாலு மணி நேரத்துக்குப் பிறகு போலீஸ் வந்து ஸ்டேஷனுக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. 'வலி தாங்க முடியலை. என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க’னு கெஞ்சுறேன். போலீஸ் அதைக் காதுலயே வாங்கலை. என்ன நடந்துச்சுனு நான் சொல்றதையும் யாரும் கேட்கலை. ராத்திரி முழுக்க ஸ்டேஷன்ல தரையிலயே படுத்திருந்தேன். அடுத்த நாள் மதியம், பெட்ரோல் குண்டு வீசினதா என் மேல பொய்வழக்குப் போட்டு, நீதிமன்றத் துக்குக் கூட்டிட்டுப் போனாங்க. நீதிபதிகிட்ட நடந்தது எல்லாத்தையும் சொன்ன பிறகு, அவர் மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பினார். போலீஸே எனக்கு மனு போட்டு ஜாமீன் எடுத்து, அடுத்த நாள் வெளியில் வந்தேன். அடிச்ச வலி உடம்புல இப்பவும் அப்படியே இருக்கு; பொய்வழக்கு நிலுவையில இருக்கு. வீட்டுல உள்ளவங்க, 'உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’னு பயப்படுறாங்க. என்னங்க பண்றது... நம்ம ஊரைச் சுத்தி இருக்கிற இயற்கை வளத்தை நாமதானே பாதுகாக்கணும்''-அப்பாவியாகக் கேட்கிறார் பிரபாகரன்.

அத்திப்பட்டு பூவரசன்

கடந்த வாரச் செய்திகளில், காவேரிப்பாக்கம் மணல் குவாரி பற்றி தொடர் செய்திகள். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள களத்தூர் என்ற ஊரில் மணல் குவாரி ஒன்றை அமைக்க, தமிழ்நாடு அரசு முயற்சித்துவருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த ஊர் மக்கள் கடுமையாகப் போராடிவருகின்றனர். இதையொட்டி சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பூவரசன் என்கிற இளைஞர் பேசினார். பேசிக்கொண்டிருக்கும்போதே தாங்க இயலாமல் வாய்விட்டு அழுதார். என்ன நடந்தது? பூவரசனிடம் பேசியபோது...

''காவேரிப்பாக்கம் பக்கத்துல அத்திப்பட்டு கிராமம் எங்களுக்கு. எங்க ஊருக்குப் பக்கத்துல 'பூண்டி’னு இன்னொரு ஊர் இருக்கு. அங்கே ஒரு அரசு மணல் குவாரி இயங்குது. அந்தக் குவாரிக்குப் போய் வர, முறையான சாலை வசதி இருக்கு. அது சுத்து வழிங்கிறதால, மணல் லாரிகள் எங்க ஊர் வழியாப் போய் வருது. ஒரு லாரி, ரெண்டு லாரியா இருந்தா பரவாயில்லை. ஒரு நாளைக்கு நூத்துக்கணக்கான லாரிகள், குறுக்கும் நெடுக்குமா போய்கிட்டே இருந்தா, நாங்க எப்படி நிம்மதியா நடமாட முடியும்? குழந்தைகளை எப்படி வளர்க்க முடியும்? அதனால ஊர்ல இளைஞர்கள் ஒண்ணுசேர்ந்து மணல் லாரிகளை மறிச்சு, திருப்பி அனுப்பினோம்.

இதையெல்லாம் பார்த்து போலீஸுக்கு காண்டு. எல்லாரையும் ஒருங்கிணைச்சு முன்னாடி நின்னு போராட்டம் நடத்துற என்னைக் குறிவெச்சுட்டாங்க. ஒருநாள் ராத்திரி        11 மணிக்கு, காவேரிப்பாக்கம் போலீஸ் வந்து என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. ஸ்டேஷனுக்குப் போனதும் என்னை அம்மணமா நிக்கவெச்சு, அடி அடினு அடிக்க ஆரம்பிச்சாங்க; கையை நீட்டச்சொல்லி அடிச்சு நொறுக்கினாங்க. ரத்தம் கட்டினதும், கீழே கையைத் தட்டணும். கொஞ்சம் ரத்த ஓட்டம் வந்ததும் மறுபடியும் அடி. ஓடச்சொல்லி பின் பக்கமா அடிப்பாங்க. படுக்கவெச்சு கால் மேல ஆள் ஏறி நின்னுக்கிட்டு, குதிகால்ல அடிப்பாங்க. கால் மரத்துப்போனதும்  எழுந்து குதிச்சுக்கிட்டே ஓடணும். கொஞ்சம் ரத்தம் ஓட்டம் வந்ததும் மறுபடியும் அடி. இப்படியே நைட் எல்லாம் மாத்தி, மாத்தி அடிச்சாங்க.

அவினாசி பிரபாகரன் அத்திப்பட்டு பூவரசன் நாமக்கல் மதியழகன்

என் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, 'நீ எல்லாம் பெரிய ஆளாகப் பார்க்கிறியா?’னு கேவலமா திட்டினாங்க. விடிஞ்சதும், நான் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரைத் தகாத வார்த்தையைச் சொல்லித் திட்டினதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாவும் கேஸ் போட்டு, கோர்ட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. நீதிபதிகிட்ட நடந்த எல்லாத்தையும் சொன்னேன். என் உடம்புல இருந்த காயத்தைப் பார்த்துப் பதறிப்போன அவங்க, உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகச் சொன்னாங்க. அப்புறமா ஜாமீன்ல வெளியில் வந்தேன். என்னை அடிச்சு ஆறு மாசத்துக்கு மேல ஆவுது. ஆனா, இப்பவும் என்னால ஒழுங்கா நடக்க முடியலை; பாரம் தூக்க முடியலை!''

நாமக்கல் மதியழகன்

நாமக்கல்லில் ஜிம் நடத்திவரும் மதியழகன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் முன்னோடி. ஆயிரத்துக்கும் அதிகமான தகவல்களை ஆர்.டி.ஐ மூலம்

அவினாசி பிரபாகரன் அத்திப்பட்டு பூவரசன் நாமக்கல் மதியழகன்

பெற்றிருக்கிறார். நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக சகாயம் இருந்தபோது, மாவட்டம் முழுவதும் ஆர்.டி.ஐ பயிற்சி அளிக்கும் நபராக மதியழகனை நியமித்திருந்தார். அந்த மதியழகன், இப்போது குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது? மதியழகனுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியவரான சமூக ஆர்வலர் முகிலனிடம் பேசினோம்.

''15 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இந்தப் பகுதியில் இணைந்து பணிபுரிந்து வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையில், காகிகத் தொழிற்சாலை ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. அதனால் ஏராளமான சுற்றுச்சூழல் பாதிப்பு; நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கில் செலவுசெய்து, ஆழ்குழாய்க் கிணறு அமைத்து விவசாயம் செய்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆலையில் இருந்து கொட்டப்பட்ட திடக்கழிவுகள் ஒரு பெரிய மலைபோல குவிந்துவிட்டன. இதற்கு எதிராகப் போராடியதில் மதியழகன் முக்கியமானவர். தகவல் அறியும் உரிமைச் சட்டம்  வந்ததும், அதில் ஈர்க்கப்பட்ட மதியழகன், ஆர்.டி.ஐ மூலம் ஏராளமான தகவல்களைப் பெறத் தொடங்கினார். கடந்த  10 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் பெற்றிருக்கிறார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், சாதாரண குடிமக்களும் அரசு அலுவலகங்களை ஆய்வுசெய்ய முடியும். இதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தின் 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களை மதியழகன் ஆய்வு செய்திருக்கிறார். இங்கு மட்டும் அல்ல, சென்னையில் இருக்கும் ஆளுநர் மாளிகையையும் தகவல் ஆணையத்தையும் அவர் ஆய்வு செய்திருக்கிறார். ஜனாதிபதி மாளிகையை ஆய்வு செய்வதற்கான ஆணையைப் பெற்றுவைத்திருந்தார்.

ராசிபுரம் அருகே மோளப்பாளையத்தில் ஒரு மலையையே வெட்டி எடுக்கிறார்கள். அதை இவர் கடுமையாக எதிர்த்துப் போராடியதில், மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலை இப்போது இருக்கிறது. முன்னாள்       எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஆகியோரின் ஊழலை வெளிக்கொண்டுவந்து அதற்காகவும் போராடுபவர். இப்படி அனைத்துத் தரப்பின் பகையையும் சம்பாதித்துக்கொண்டதால் அவரை வேண்டும் என்றே குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளியிருக்கின்றனர். ஒருவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றால், குறைந்தபட்சம் அவர் மீது மூன்று வழக்குகள் இருக்க வேண்டும். இதனால், மதியழகன் மீது அடுத்தடுத்து இரண்டு நாட்களில் நான்கு வழக்குகளைப் பதிவுசெய்து குண்டாஸில் போட்டுள்ளனர்'' என்கிறார் முகிலன்.

அவினாசி பிரபாகரன் அத்திப்பட்டு பூவரசன் நாமக்கல் மதியழகன்

இந்த மூன்று பேருமே சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை. சட்டத்தைச் செயல்படுத்த சொல்லித்தான் போராடுகின்றனர். அரசின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை வைத்து மனு கொடுத்தும், வழக்கு தொடுத்தும் நேர்வழியில் செல்பவர்களைத்தான் அரசு இப்படித் துன்புறுத்துகிறது. தன்            குடிமக்களை சட்டப்படி நடக்கச் சொல்லும் அரசு, அப்படி நடப்பவர்களைத் தண்டிப்பது எப்படி நீதியாகும்? தன் சொந்தக் குடும்பம், அதற்கான வசதிகள், அதற்குத் தேவைப்படும் பணம், அதை நோக்கிய உழைப்பு என எல்லோரும் சுருங்கிவிட்ட நிலையில், பிறருக்காகச் சிந்திக்கும்; செயல்படும் மனிதர்கள் அபூர்வமாகி விட்டார்கள். அவர்களை ஆதரவாக அணைத்துக்கொள்ளவேண்டியதும், உலகத்தின் முன்பு உதாரணங்களாக நிறுத்தவேண்டியதும் நமது கடமை. மீட்பர்களைக் கைவிட்டால் யார்தான் நம்மைக் காப்பாற்றுவது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு