##~##

சையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 95-வது பிறந்த நாள் ஸ்பெஷலாக உத்சவ் மியூஸிக் நிறுவனம் உலகம் முழுவதும் இசை அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. கீ-போர்டு ஜனனி, வயலின் நந்தினி, மிருதங்கம் லாவண்யா, கடம் ரம்யா, பாடகிகள் மானசி பிரசாத், சுபஸ்ரீ ராமச்சந்திரன், சாஷ்வதி பிரபு, ஸ்மிதா மாதவ், சைந்தவி, நிகழ்ச்சி தொகுப் பாளர் கிருத்திகா சூரஜித் எனப் பெண்களால் மட்டுமே இந்த நிகழ்வுகள் அரங்கேற உள்ளன. ஒத்திகையில் இருந்த 'மகளிர் மட்டும்’ குழுவைச் சந்தித்தேன்.

 ஜெயா டி.வி. 'தகதிமிதா’, 'லேடீஸ் ஸ்பெஷல்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் கிருத்திகா 'காற்றினிலே வரும் கீதம்’ பாடலை மனம் உருகப் பாடிக்கொண்டு இருக்கிறார். ''நான் பாலமுரளி கிருஷ்ணா சிஷ்யை. ஐந்தாவது படிக்கும்போதே தேசிய விருது, அப்துல் கலாம் முன் ராஷ்ட்ரபதி பவனில் இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இப்போஇந்த வாய்ப்பு. ஸ்டெல்லா மாரிஸ்ல பி.ஏ. எகனாமிக்ஸ் படிக்கிறேன்!'' - இது கீ-போர்டு ஜனனி.

எம்.எஸ் - 95

வயலின் நந்தினி, ''மாயவரம் சிஸ்டர்ஸ் உமா-கீதாவில், உமா என் அம்மா. அவங்க தான் என் வயலின் குருவும். பாட்டும் நல்லாப் பாடுவேன். என் அஞ்சு வயசுல எம்.எஸ். அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கப் போயிருந்தேன். அப்ப ஒரு ஏழைப் பெண் உதவி கேட்டு வந்திருந்தாங்க. அம்மா எதையும் யோசிக்காம தன் கையில போட்டு  இருந்த நாலு தங்க வளையல்களைக் கழட் டிக் கொடுத்தாங்க. ஏழைகளுக்கு எப்பவும் தன்னால் முடிஞ்சதைக் காட்டிலும் அதிகப் படியாவே செய்வார் எம்.எஸ். அம்மா!'' எனச் சிலாகிக்கிறார்.

''எம்.எஸ். அம்மா பிறந்த நட்சத்திரத்தி லேயே நானும் பிறந்ததால் எனக்கு சுப லட்சுமினு பேர் வெச்சாங்க. இந்த நிகழ்ச்சிக் காக எம்.எஸ். தன் குரு ஜி.என்.பாலசுப்பிர மணியத்துடன் நடிச்ச 'சகுந்தலா’ படப் பாடலைப் பாடப்போறேன்!'' என்று உள்ளம் உருகுகிறார் சுபஸ்ரீ.

எம்.எஸ் - 95

வயலின் லால்குடி ஜெயராமனின் சிஷ்யை சரஸ்வதி பிரபு எம்.எஸ்-ஸிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். ''பள்ளி மாணவியாக எம்.எஸ். அம்மாவைப் பேட்டி எடுத்திருக்கேன். எளிமையும் பக்தியும் அவங்களிடம் எனக்குப் பிடிச்ச விஷயம். 'எதுவும் யோசிக்க வேணாம். கடவுளை நினைச்சாலே ஆத்மார்த்தமா பாட்டு வரும்’னு அம்மா சொன்னது இப்பவும் என் காதுகள்ல கேட்டுக் கிட்டே இருக்கு!'' - நெக்குருகிப் பேசுகிறார் சைக்காலஜிஸ்ட் சரஸ்வதி.

''நான் பெங்களூரு ஐ.ஐ.எம்.ல. எம்.பி.ஏ., முடிச்சிருந்தாலும் பாட்டு மேல் அவ்வளவு கிரேஸ். பெர்ஃபெக்ஷன், ட்ரெடிஷன்னா அது எம்.எஸ். அம்மாதான். அவங்களோட 'கிரிதர கோபால’ ஒண்ணு போதும் எனக்கு. நாள் பூரா சாப்பாடு தண்ணி தேவை இல்லை!'' - மனம் உருகுகிறார் மானஸி பிரசாத்.

''எம்.எஸ். சுருதிப் பெட்டி தந்து ஆசீர் வதித்த பொண்ணு நான்!'' என்று கண் சிமிட்டுகிறார் ஸ்மிதா மகாதேவ். ''ஹைத ராபாத் சிஸ்டர்ஸ் லலிதா, ஹரிப்ரியா தான் என் குரு. என் ஒன்பதாவது வயதில் ஆசீர்வாதம் வாங்க எம்.எஸ் -ஸைப் பார்க்கப்போனேன். ஒரு சுருதிப் பெட்டி தந்து, எப்படிப் பொறுமையா சாதகம் பண்ணணும், கச்சேரி செய்ய ணும்னு சொல்லித் தந்தாங்க. அவங்க பேச்சில் அவ்வளவு கனிவு!''

''ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ், பத்மா சாண்டில்யன், கே.என்.சசிகிரண். இவங்க எல்லாருமே என் குரு. உடம்பு முடியா மல் இருந்த நிலையில்கூட டி.கே.பட்டம்மாள் எனக்கு பாபநாசம் சிவன், தண்ட பாணி தேசிகரின் பாடல்களைச் சொல்லித் தந்தாங்க.  'பிருந்தா வனத்தில் கண்ணன்’ங்கிற 'மீரா’ படப் பாடல்கள்தான் என் ஃபேவரைட். எம்.எஸ். அம்மாவை நேரில் பார்த்தது இல்லை என்ற குறையை அவங்க பாடல்களைப் பாடுவதன் மூலம் தீர்த்துக்கப்போறேன்!''- நெகிழ்கிறார் சைந்தவி.

காற்றினில் கலக்கட்டும் கீதம்!  

- க.நாகப்பன், படங்கள்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு