##~##

டித்தட்டு மக்களுக்கான வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர். வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது  பழங்குடி மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் மற்றும் கோவை குண்டு வெடிப்பில் அப்பாவிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு எதிராக வாதாடியவர். தனது சொந்த ஊரான பவானி குறித்த நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார் மோகன்.

''காவிரியும் பவானியும் இங்கே கூடுவதாலேயே இந்த ஆற்றுப் பகுதிக்குக் கூடுதுறை என்று பெயர். பவானிக்குத் தெற்கே பெருமாள் மலை, வடக்கே ஊராட்சிக் கோடை மலை என மலையும் ஆறுகளும் சூழ தீபகற்பம்போல அமைந்த ஊர் இது. பவானிக்குப் பல பெருமைகள் இருக்கின்றன. குறிப்பாக ஜமக்காளம்! ஒரு காலத்தில் பவானி ஜமக்காளம் விரிக்கப்படாத ஐரோப்பிய நாடுகளே இல்லை. அவை தரமாக இருப்பதோடு, கலைநுட்பமும் மிகுந்து இருக்கும். இந்த ஜமக்காளங்களில் இருக்கும் ஓவியங்கள் வெறுமனே பெயின்ட்டாக இல்லாமல் நூல் நெய்தலுடன் இருப்பது தனிச் சிறப்பு.

என் ஊர்!

பவானி ஒரு புண்ணியஸ்தலம். காசி, ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக இறந்தவர்களுக்கு இங்குதான் திதி செய்வார்கள். பவானியின் சங்கமேஸ்வரர் ஆலயம் வெகு பிரபலம். இந்தியா முழுவதும் இருந்து வருடம் முழுக்க இந்த ஆலயத்தைத் தரிசிக்க வருகிறார்கள். 1800-களில் ஆங்கிலேயர் ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பவானிதான் தலைமையிடம். அந்தக் காலத்தில் கட்டிய ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட புராதனக் கட்டடங்கள் இன்றும் பவானியில் உண்டு!

காவிரிக் கரையில் இருந்த மீனவர் தெருவில்தான் எனது 20 ஆண்டுகால வாழ்க்கை கழிந்தது. காவிரி என் தாய். காலை கண் விழித்ததும் முதலில் பார்ப்பது அவளைத்தான். தினம் என்னைப் பல வேளை குளிப்பாட்டி உற்சாகம் ஊட்டி யவள் அவள். காவிரியின் கரையோர மணல்வெளியில்தான் எழுத்துக்களை எழுதிப் பழகினேன். ஓடிக் குதித்து விளை யாடித் தீர்த்தேன். தனிமையில் பேசித் திரிந்ததும் அவளிடம்தான். காவிரித் தாய்க்கும் எனக்கும் அப்படி ஓர் உறவு!

என் ஊர்!

அந்தக் காலத்தில் தோழர்கள் ஜீவானந்தம், தா.பாண்டியன், பாலதண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி, கல்யாணசுந்தரம் ஆகியோர் அடிக்கடி என் வீட்டுக்கு வருவார்கள். அவர்களின் எளிமைதான் என்னை முழுமையாக்கியது. ஒருமுறை கே.டி.கே.தங்கமணி பவானிக்கு வந்தபோது, நள்ளிரவு மணி 2. அந்த நேரத்தில் யாரையும் எழுப்பித் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக, பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்கி விட்டார். இரவு வந்துவிடுவேன் என்றவர் காணவில்லையே என்று மறுநாள் பேருந்து நிலையத்துக்குச் சென்று பார்த்தபோது எனக்குப் பேரதிர்ச்சி. 'அதனால என்னப்பா? வீடு இல்லாத ஏழைகள் எத்தனையோ பேர் நெதமும் இப்படித் தானே படுத்துத் தூங்குறாங்க!’ என்றார். அதன் பிறகு அவர் மீதான மதிப்பு பல மடங்கு கூடியது!

ஆனால், இன்றைக்கு பவானி பரிதாபமாக இருக்கிறது. உலகமயமாக்கல் பிரச்னையில் பெரும் நிறுவனங்களுடன் சந்தைப்படுத்துதலில் போட்டியிட முடியாமல் பவானியின் ஜமக்காளத் தொழில் படுத்துவிட்டது. ஜவுளித் தொழிலுக்கு எனத் தொழில்நுட்பக் கல்லூரி களைத் துவக்கியதுபோல ஜமக்காளத் துறை யிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளை அரசு துவக்கி, இந்தத் தொழிலைக் காப்பாற்ற முன்வர வேண்டும். பவானிசாகர் பகுதிகளில் உள்ள காகித ஆலைக் கழிவுகள், சத்தியமங்கலம் சர்க்கரை ஆலைக் கழிவுகள் காவிரியில் கலக்கப் பட்டு தண்ணீர் விஷமாகி வருகிறது. ஆற்றங் கரையில் குப்பை கொட்டப்படுகிறது. இவை எல்லாம் வேதனை தரும் விஷயங்கள். அதற்காகப் பிறந்த மண்ணை மறக்க முடியுமா? உலகின் எந்த மூலைக்குச் சென்று வந்தாலும், என் மண்ணில் கால்வைக்கும்போது கிடைக்கும் மன நிறைவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை!''

சந்திப்பு: கி.ச.திலீபன், படங்கள்:க.தனசேகரன்

என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு