Published:Updated:

என் ஊர்!

தமிழ்ப் பால் ஊட்டிய தாய் மதுரை!

##~##

''உருது என் தாய். தமிழ் என் காதலி! அதனால் பட்டப் படிப்பில் தமிழ் படித்தேன். தமிழ் மேல் எனக்கு ஏற்பட்ட தீராக் காதலுக்கு வைகை ஆற்றங்கரையும் மதுரை மண்ணும்தான் முக்கியக் காரணங்கள்!'' - மனதின் அடி ஆழத்தில் இருந்து வார்த்தைகளைக் கோத்து நயமாகப் பேசுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். மரபு மகுடியாலும் புதுக்கவிதை புல்லாங்குழலாலும் வாசகனை மயக்கும் கவிதைக்காரர் மதுரை புகழ் பாடுகிறார்...

 ''வைகைக் கரையில் இருக்கும் கீழச் சந்தைப்பேட்டையில் பிறந்தேன். தவழ்ந்து, நடை பழகி, படித்துப் பட்டம் பெற்று, கவிதை எழுதி, இலக்கியம் செய்து என சுமார் 23 ஆண்டு காலம் அங்கே வாழ்ந்து இருக்கிறேன்.  

ஆற்றங்கரையில் இருந்து நடக்கும் தொலைவில் வீடு. தினமும் குளியல் ஆற்றில்தான். அப்போது எப்போதும் ஆற்றில் நீர் இருக்கும். ஆற்றங்கரைக்கு எதிரே அந்தப் பக்கம் தெப்பக்குளம். அதன் மைய மண்டபம் எனக்கு மிகவும் பிடித்த இடம். அந்த மண்டபத்தில் தவம் செய்வதுபோன்று அமர்ந்துவிடுவேன்.

என் ஊர்!

அரசு தொடக்கப் பள்ளியிலும், சௌராஷ்டிரா பள்ளியிலும், தியாகராசர் கல்லூரியிலும் கல்வி கற்றேன். தியாகராசர் கல்லூரியில் நான் படித்த காலத்தை 'பொற்காலம்’ எனலாம். ராசமாணிக்கனார், இலக்குவனார், அ.கி.பரந்தாமனார் போன்ற புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் இருந்த காலம் அது. எங்கள் தெருவில் கம்யூனிஸ்ட், திரா விடர் வாசக சாலை இருந்தன. பொது வுடைமை உணர்வுகளையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் என்னுள் வளர்த்தவை அந்த வாசக சாலைகள்தான்.

என் ஊர்!

எங்கள் தெருவை ஒட்டியே தலித் மக்கள் வாழும் பகுதி. அதனை அடுத்து உருது முஸ்லிம்கள் வசித்தார்கள். அங்கே 'கவ்வாலி’ என்ற புகழ்பெற்ற உருது இசை அமைப்புகொண்ட சூஃபி பாடல்களைப் பாடுவார்கள். என் ஆன்மிக நாட்டத்துக் கும் கவிதைத் திறனுக்கும் இந்த கவ்வாலி தான் அடிப்படை.

மதுரையில் எல்லா திரையரங்குகளிலும் இந்திப் படங்கள் திரையிடுவார்கள். பேர் தான் இந்திப் படம். ஆனால் வசனங்கள், பாடல்கள் முதற்கொண்டு அனைத்துமே உருதுதான்.  'சாஹிர்’, 'ஹமர்’ போன்ற மேதைகள் இசையமைத்த திரைப்படங் களை அங்கு நான் கண்டுகளித்துஇருக்கிறேன். சிந்தாமணி தியேட்டரில் திரையிடப்பட்ட நௌஷாத் இசையமைப் பில் வெளிவந்த 'ஷபாப்’ படத்தைப் பார்த்த நாட்கள் இன்றும் நெஞ்சில் நினைவுச் சுருளாகப் பொதிந்து இருக்கிறது.  திரைப்படம் பார்க்க முடியாத நாட்களில் தியேட்டருக்குப் பக்கத்தில் நின்று பாடல் களைக் கேட்பேன்.

அப்போது 'மதுரை எழுத்தாளர் மன்றம்’ என்று ஓர் அமைப்பு இருந்தது. ஆண்டுதோறும் அந்த மன்றம் நடத்தும் இலக்கிய விழா வுக்குப் பணம் கொடுத்து, டிக்கெட் வாங்கி மக்கள் வந்து செல்வார்கள். அப்படியான விழா ஒன்றில்தான் கலைஞர் எனக்கு அறிமுகம் ஆனார்.

டவுன்ஹால் ரோட்டில் 'காலேஜ் ஹவுஸ்’ காபி எனக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று. கல்லூரி முடிந்தவுடன் வாசக சாலைக்குச் சென்றுவிட்டு, வடகோபுர வாசலில் உள்ள 'அசல் நாகப்பட்டினம் அல்வா’ கடையில் அல்வா வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே நான், கவிஞர் மீரா, அவ்வை நடராசன் மூன்று பேரும் சென்ட்ரல் டாக்கீஸ் வரை வருவோம்.

என் ஊர்!

எங்கள் தெரு பள்ளிவாசலுக்கு எதிரே இருந்த பத்து நோன்புச் சாவடி வாசலில் அமர்ந்து நண்பர்களுடன் இலக்கியம் பேசுவோம். மதுரை மீனாட்சி கோயிலில் நடைபெற்ற வாரியார் இலக்கியக் கூட்டங்கள், திலகர் திடல்  அரசியல் கூட்டங்கள் அனைத்துக்கும் செல்வோம். பின் நாட்களில் நான் பேராசிரியர் வேலை கிடைத்து வாணியம்பாடிக்கு வந்து விட்டேன். சுமார் 30 வருடங்கள் அங்குதான் ஜீவிதம். தற்போது சென்னை. ஆனால், இப்போதும் நினைவின் அடுக்குகளில் மதுரை தூசி படிந்துகிடக்கிறது. தமிழ்ப் பால் ஊட்டி என்னை வளர்த்த தாய் மதுரைதான் என்று சொன்னால் அதுவே உண்மை!''

- ந.வினோத்குமார், படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஜெ.தான்யராஜு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு