Published:Updated:

என் ஊர்!

நந்தன் நடந்த பாதையில் நான் நடக்க வேண்டும்!

##~##

''ஊர் என்பது வெறும் குடியிருக்கும் பிரதேசம் மட்டுமல்ல; ஒவ்வொரு  மனிதனுக்குமான வரலாற்று வடிவங்களை  வடித்துத் தருவது. ஊர் என்ற உயிர் உள்ள இயங்குதளம் மட்டுமே மனிதர்களின் மொத்த ரகசியங்களையும் அறிந்து இருக்கும்'' என்று கவித்துவமாகத் தொடங்கி, தன் ஊரான சிதம்பரம்பற்றிய நினைவு களைப் பகிர்ந்துகொள்கிறார் கடலோரப் பாதுகாப்பு வாழ்வுரிமை இயக்க ஒருங்கி ணைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு.

''காவிரியின் கிளை நதியான கொள்ளி டத்தின் சதுப்பு நிலங்கள் நிறைந்த நகரம் சிதம்பரம். 1873-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பழமைவாய்ந்த  நகராட்சி இது. ஒரு காலத் தில் தில்லை மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதாலும் புலிகள் அதிகம் வசித்த பகுதி என்பதாலும் இவ்வூர் பெரும்புலியூர் என்றும் தில்லை என்றும் அழைக்கப்படுகிறது.

என் ஊர்!

சிதம்பரம் என்றதும் கோயில், அண்ணா மலைப் பல்கலைக்கழகம் என்கிற இரண்டு சிறப்புக்களே எல்லோருக்கும் நினைவில் வரும். ஆனால், எங்கள் ஊரில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கும் மேற்பட்டகோயில் கள் உள்ளன. ஆனால், எனக்கு எங்கள் ஊர், இயக்கம் சார்ந்த போராட்டங்கள் ஊடாகவே நினைவில் படிமமாக எழுந்து நிற்கிறது. 1982-ல் ஆறுமுக நாவலர் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தபோதுதான், நடராஜர் ஆலயம் வழியாகத் தினமும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஐந்து ஆண்டுகள் கீழ வீதியில் நுழைந்து, மேல வீதி கோபுரம் வழியாகச் செல்வதும், கோயிலின் ஒவ்வொரு பக்கமும் அலைந்து திரிந்ததும் நடந்தது. நாவலர் பள்ளியில்தான் எனக்கு இந்திய மாணவர் சங்கம் அறிமுகம் ஆனது. ஏழாம் வகுப்பு படித்தபோது 50 காசு கொடுத்து மாணவர் சங்கத்தில் உறுப்பினர் ஆனது இன்னும் நினைவில் நிற்கிறது.

எங்கள் பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்டும் குடிநீர் வசதியும் கோரி நடந்த போராட்டம் என்னை மிகவும் ஈர்த்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் எங்கள் பள்ளி மட்டுமல்லாது மற்ற பள்ளிகளிலும் அடிப்படை பிரச்னைகளுக்காகப் போராடி போராட்டங்களில் பங்குகொண்டோம். 1989-ல் பள்ளியின் இந்திய மாணவர் சங்கத்தில் தலைவராக இருந்த நான், படிப் படியாக 1997-ல் மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக உயர்ந்தேன்.

என் ஊர்!

எஸ்.எஃப்.ஐ. சார்பில் நன்கொடை வாங்கும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக 'அடாக்’ (ஆன்டி டொனேஷன் ஆக்ஷன் கமிட்டி) என்ற போராட்டக் குழுவை உருவாக்கினோம். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நாவரசு படுகொலை  சம்பவம் நடந்தபோது நான் மாணவர் அமைப் பின் மாவட்டச் செய லாளர். ஜான் டேவிட் சிதம்பரம் நீதிமன்றம் வந்தபோது எல்லாம் மாணவர்களைத் திரட்டிக் கடுமையான போராட்டங்களை நடத்தி னோம். ஜான் டேவிட்டுக்காக சிதம்பரத் தில் எந்த வழக்கறிஞரும் வாதாட முன் வராதபோது, சிதம்பரத்தின் பிரபல வழக்கறிஞர் மறைந்த வெங்கட்ராமன் ஆஜர் ஆனார். அவரை அதில் இருந்து பின்வாங்கச்சொல்லி இயக்கம் நடத்தி னோம். அவரும் அப்படியே செய்தார். அநேகமாக எங்கள் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, சிதம்பரம், பரங்கிப் பேட்டை எனப் பல சிறைகளுக்குச் சென்று இருக்கிறேன். பல்வேறு வகையான போராட் டங்களைப் பதிவுசெய்ய இந்தப் பக்கங்கள் போதாது.

நந்தவனத்திலும், ஆயிரங்கால் மண்டபத்திலும், சிவகங்கை குளக் கரையிலும், பாண்டியன் கோயில் நிழலிலும் விளையாடிய, தேர்வுக்காகப் படித்த எனது ஊரில் உள்ள தில்லையம்பலவன நடராஜர் ஆலயத் துக்கும் எனக்குமான கணக்கு ஒன்று தீர்க்கப்படாமல் உள்ளது.

நந்தன் வருகை தந்த ஒரே காரணத்துக்காக அடைக்கப்பட்ட தெற்கு ரத வீதியின் நேர் எதிரில் உள்ள அடைக்கப்பட்ட பாதை திறக்கப்படவேண்டும். அந்த வழியே எனது பாட்டன் நந்தன் நடந்த பாதை யில் நான் நடக்க வேண்டும். அதற்கான இயக்கம் மேலெழுந்து வருகிறது. பெருமலையை உடைக்கத் துவங்கி உள்ளோம். உடையும். உடைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது!''

- படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு